Published:Updated:

``அனுராக் மேஜிக், மண்ட்டோ வரலாறு, பத்மாவத் சர்ச்சை... 2018-ன் பாலிவுட் படங்கள்!'' - #2018Rewind

``அனுராக் மேஜிக், மண்ட்டோ வரலாறு, பத்மாவத் சர்ச்சை... 2018-ன் பாலிவுட் படங்கள்!'' - #2018Rewind
``அனுராக் மேஜிக், மண்ட்டோ வரலாறு, பத்மாவத் சர்ச்சை... 2018-ன் பாலிவுட் படங்கள்!'' - #2018Rewind

2018-ம் ஆண்டு வெளிவந்த சிறந்த பாலிவுட் படங்கள் ஒரு பார்வை. 

ரொமான்டிக், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என எல்லா ஜானர்களிலும் நம்மை திருப்திப்படுத்தும் பாலிவுட் படங்கள் இந்த ஆண்டும் அதைச் செய்யத் தவறவில்லை. 2018-ம் ஆண்டில் இதுவரை வெளியான சிறந்த பாலிவுட் படங்களின் பட்டியல் இதோ...

பத்மாவத்:

சிங்கள இளவரசி, ராஜஸ்தான் ராணி மற்றும் சித்தூர் மக்களின் குலதெய்வமாக விளங்கும் `பத்மாவதி' பற்றிய திரைப்படம் `பத்மாவத்.’ 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாலிக் முகமது ஜெய்சி என்பவரால் எழுதப்பட்ட புனைவுக் கதை இது. படமாக எடுக்கும்போது, ராஜ புத்திர வம்சத்தினரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இப்படத்துக்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். படத்தில் பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனின் ஆடை, கதாபாத்திரங்களின் வசனங்கள், படத்தின் சில காட்சிகள்... என சில மாற்றங்கள் செய்த பிறகே படம் வெளியானது. ராஜா ரத்தன் சிங்காக ஷாஹித் கபூர், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங், மெஹ்ருனிஸாவாக அதிதி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். ரத்தன் சிங்குக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் போர் மூண்ட நிலையில், ரத்தன் சிங் படையினர், போரில் வெற்றி பெற முடியாத நிலையை எண்ணி, அவர்களின் தலையை அவர்களே வாளால் வெட்டிக்கொண்டு மாய்ந்தனர். அது தெரிந்த பின்பு, சித்தூர் பெண்களின் கற்பு நிலை கருதி, ராணி பத்மாவதி தலைமையில் பெண்கள் அனைவரும் கூட்டாகத் தீக்குளித்து மாய்ந்தனர் என்பது இயல் கதை. இதில், சில மாற்றங்கள் செய்து, அழகும் பிரமாண்டமுமாய் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கிய படம் இது. 

பேட் மேன்:

இந்தியாவின் பல கிராமங்களில் இன்றும் மாதவிடாய் நாள்களில் நாப்கின் உபயோகிக்காத நிலை இருக்கிறது. இதன் விலை ஒரு முக்கியக் காரணம். எனவே, மலிவு விலையில் நாப்கின்கள் கொடுப்பதற்கும், அதைத் தயாரிக்கும் இயந்திரத்தைப் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கண்டுபிடித்து, பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய கதைதான், 'பேட் மேன்'. லக்ஷ்மிகாந்த் சௌஹான் (அக்ஷய் குமார்) தான் தயாரித்த முதல் நாப்கினைத் தன் மனைவி காயத்ரியிடம் (ராதிகா ஆப்தே) உபயோகிப்பதற்காகக் கொடுக்கிறார். அது அவருக்குப் பயனளிக்காத நிலையில், அடுத்தடுத்து அவர் தயாரிக்கும் நாப்கின்களை பரிசோதிக்க மறுக்கிறார். அதன்பின், தன்னைத் தானே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் லக்ஷ்மி, பல பிரச்னைகளை சந்திக்கிறார். அதனால், அவர் வசிக்கும் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறார். பிறகு எப்படி நாப்கின் தயாரிப்பதில் வெற்றி பெறுகிறார் என்பதைச் சொல்லும் எமோஷனல் படைப்பு இந்த `பேட் மேன்.’ 

பரி: 

அமானுஷ்ய சக்தி கொண்ட மனிதர்களைத் தேடிப்பிடித்து கொலை செய்கிறார் காசிம் அலி (ராஜாத் கபூர்). அவரிடமிருந்து தப்பிப் பிழைத்த ஒரு பெண்ணுக்கு நேரும் பிரச்னைகள்தான் `பரி.' ருக்ஸானா (அனுஷ்கா ஷர்மா) தன் தாயை இழந்து அடர்ந்த காட்டில் தனியாக வாழும் பெண். சைத்தானின் சக்தி ருக்ஸானாவுக்கு இருப்பதால், இவரைக் கொலை செய்வதற்காகக் காசிம் திட்டமிடுகிறார். இவர் பிடியிலிருந்து தப்பும் ருக்ஸானாவுக்கு இறுதிக்கட்டம் எப்படியிருக்கிறது என்பதை ரத்தமும் சதையுமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர் ப்ரோஸித் ராய். அமானுஷ்ய மனிதர்கள் மற்றும் அவர்களின் செயல்கள் ஏற்கெனவே பல படங்களில் காட்டப்பட்டிருந்தாலும் 'பரி'யில் அவர்களை பற்றிக் கூறியிருக்கும் வரலாற்றுக் கதை புதிதாக இருந்தது. அதனால், திகில் படங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது 'பரி'.  

ராஸி:

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே உளவு பார்ப்பது குறித்த பல படங்கள் வந்திருந்தாலும், 'ராஸி' சற்று வித்தியாசப்பட்டது. காரணம், செஹ்மத் கானாக வரும் அலியா பட், தன் மண வாழ்க்கையைப் பணயம் வைத்து பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராகத் தீட்டும் திட்டங்களை வெளியே கொண்டுவரும் காட்சிகள்தாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தில் பிறந்தவர் செஹ்மத் கான். இவரை சிறு வயதிலிருந்தே உளவு பார்ப்பதற்காகப் பயிற்சி கொடுத்து பாகிஸ்தான் ஆர்மியான இக்பால் செய்யதுக்குத் திருமணம் செய்து கொடுக்கின்றனர். இறுதியில் செஹ்மத் உளவாளி எனும் உண்மை தெரிய வருகிறது. பின் என்ன நடக்கிறது என்பதை திக் திக் நிமிடங்களுடன் கூறும் த்ரில்லர் 'ராஸி'. 

சஞ்சு: 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறுதான் 'சஞ்சு'. கதையில் சஞ்சய் தத்தின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ரன்பீர் கபூர், மனிஷா கொய்ராலா, சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா, விக்கி கௌஷல் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். சஞ்சய் தத்தின் உடல் மொழிகளை அப்படியே திரையில் பிரதிபலித்த ரன்பீர் கபூரின் நடிப்பைப் பற்றி இந்த வருட விருது விழாக்கள் கூறும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'து படியா' பாடல் இந்த வருடத்தின் டாப் ஹிட் பாடல்களுள் ஒன்று. 'சஞ்சய் ஒரு தீவிரவாதி. அவர் வீட்டில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து ஏற்றிய வண்டி நின்றது' என்று சஞ்சய் குறித்து வெளியான செய்திகளுக்கு விளக்கம் இப்படத்தில் இருக்கிறது.      

கோல்ட்:

1936-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியா விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த காலத்தில், இந்தியா இரண்டாக உடைகிறது; இந்திய ஹாக்கி அணியும் இரண்டாக உடைகிறது. இந்நிலையில், இந்திய அணிகளுக்குள் இருக்கும் பகையையும் பிரிட்டிஷின் பகையையும் இந்திய ஹாக்கி அணியின் மேனேஜரான தபன் தாஸ் எப்படி சரி செய்கிறார் என்பதே கதை. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் படங்களில் வரும் வெற்றி தோல்விகளுக்கு இடையேயான போட்டி, பொறாமை என்பதைத் தாண்டி சுதந்திரத்துக்கு முன் நிலவிய காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது கதையும் கதாபாத்திரங்களும்! 1948-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வென்ற கதையில் கொஞ்சம் கற்பனையையும் திணித்து திறம்பட படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ரீமா கக்தி.   

மன்மர்ஸியான்: 

பாலிவுட்டில் தனக்கென தனி பாணியில் சினிமாக்களை உருவாக்கிவரும் அனுராக் காஷ்யப்பின் இந்த வருடக் காதல் படைப்பு, 'மன்மர்ஸியான்'. ஆரம்பத்தில் சமீர் ஷர்மா இயக்கிக்கொண்டிருந்த இப்படம், சில பிரச்னைகளால் அனுராக் கைக்கு வந்தது. இதனாலோ என்னவோ, அனுராக்கின் மேஜிக்கைப் படம் முழுக்க ரசிக்கக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம். தஸ்தாவஸ்கி காலத்திலிருந்தே முக்கோணக் காதல் கதைக்குக் பழக்கப்பட்ட இந்திய சினிமாவுக்கு, 'மன்மர்ஸியான்' புதிதல்ல. இருந்தும், இப்படத்தின் வெற்றிக்குக் காரணம், காதாபாத்திரங்களும் அவை பேசிய யதார்த்தங்களும்தான்.  

மண்ட்டோ:

சாதத் ஹசன் மண்ட்டோ எனும் உருது எழுத்தாளரின் பயோபிக் படம், `மண்ட்டோ.’ இவர் ஒரு இந்தோ - பாகிஸ்தானி. காஷ்மீர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியமர்த்தப்பட்டு அந்நாட்டைச் சேர்ந்தவராக மாற்றப்படுகிறார். 1933-ம் ஆண்டிலிருந்து எழுச்சிமிகு கவிதைகள், பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கட்டுரைகள், சிறுகதைகள் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். ஓர் எழுத்தாளராக மண்ட்டோவைக் கொண்டாட ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அழகான காவியமாக்கியிருக்கிறார் இயக்குநர் நந்திதா தாஸ். 

தும்பாட்: 

குழந்தைகளுக்குச் சொல்லும் சாதாரண நீதிக்கதையை டார்க் ஹாரர் படமாக மாற்றியமைப்பதில் வெற்றிகண்டிருக்கிறது, `தும்பாட்'. மஹாராஷ்டிராவிலிருக்கும் கோயில் ஒன்றில் புதையலைத் திருடி பணக்கார வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒருவன், இறுதியில் என்னவாகிறான் என்பதை ஹாரர் கதையாகக் கூறுகிறது 'தும்பாட்'. மூன்று காலகட்டமாக விரியும் இத்திரைப்படம், அந்தந்த காலகட்டத்தின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசத் தவறவில்லை. குறிப்பாகக் கதைக்களம், கதை மாந்தர்கள், தும்பாடில் சொல்லப்படும் கதைகள் மற்றும் அதன் ஒளிப்பதிவு ஆகியவைதாம் மற்ற ஹாரர் படங்களிலிருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இதில் நாயகனாக நடித்திருக்கும் சோகம் ஷா படத்தையும் தயாரித்திருக்கிறார். 

பிஹு :

வெளியாவதற்கு முன்பே பல விருதுகள் பெற்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிஸ்ட்ரி டிராமா. 90 நிமிடங்கள் ஓடும் இக்கதையில் ஒற்றைக் கதாபாத்திரமான பிஹு, அவளது செயல்கள் மூலம் நம்மை ஆச்சர்யப்படுத்தவும், அச்சுறுத்தவும் செய்கிறாள். பிஹு வீட்டில் தனியாக இருக்கும் அந்த ஒருநாள் அவளுக்கு எப்படி நகர்கிறது, அவளது செயல்கள் நிலைமையை எப்படித் தலைகீழாக்குகிறது என்பதைக் கவனிக்கத்தக்க விதத்தில் கூறியிருக்கிறார் இயக்குநர் வினோத் கப்ரி. 

அந்தாதுன் :

பார்வையற்ற (?) ஒருவனைச் சுற்றி நடக்கும் மர்டர் மிஸ்ட்ரி கதைதான், 'அந்தாதுன்'. லண்டனில் பியானோ கலைஞனாக வேண்டும் என்று தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் ஒருவன், எதிர்பாராவிதமாக ஒரு கொலைக்குச் சாட்சியாகிறான். பின்பு அவனுக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதைத் த்ரில்லராகச் சொல்லியிருக்கும் படம் இது. படத்தில் இசைக்குப் பெரும் பங்கு இருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு