
வெளியே வீரம்... உள்ளே வெள்ளந்தி... ‘தூக்குதுரை’ அஜித் - எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’
`` படத்தை ஆரம்பிக்கும்போதே ஒரு ஜாலியான எமோஷனலான திருவிழாப் படமாதான் இருக்கணும்னு அஜித்சார், தயாரிப்பாளர் தியாகராஜன், நான் மூணுபேரும் முடிவு பண்ணிதான் இறங்கினோம். தேனி மாவட்டத்துல கொடுவிலார்பட்டி கிராமத்துல நடக்கிற கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழற மனுஷங்களோட உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’ ” - செம உற்சாகத்தில் ஆரம்பிக்கிறார் சிவா.

“ ‘விஸ்வாசம்’ டைட்டில் காரணம் சொல்லுங்க...”
“விஸ்வாசம் இருக்கும்வரைதான் எந்த உறவும் நீடிக்கமுடியும். நாம நம்புறவங்க மேல பாசமா இருக்கமோ இல்லையோ விஸ்வாசமா இருக்கணும். அதுதான் டைட்டிலின் அடிப்படை”
“ ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?”
“ஊஹூம், ஒரே ஒரு வேஷம்தான். முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித் சார். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதகளம் செய்றார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள்கிளப்புறார். இதுல அஜித் சார் முதல்முறையா மதுரை ஸ்லாங்குல பேசி அசத்தியிருக்காரு. அஜித் சாருக்கு சந்திரன்னு ஒருத்தர் மதுரை ஸ்லாங் சொல்லிக் கொடுத்தார். ஒரு கிராமத்து ஆளு எப்படி இருப்பாரோ அதே உடல்மொழி, பேசுற விதம், துறுதுறுப்பு, துள்ளல்னு பக்கவா தன்னைத் தயார் படுத்திக்கிட்டுப் பண்ணியிருக்கார். ஏற்கெனவே இயக்கிய படங்கள்ல நான் பார்க்காத ஒரு வித்தியாசமான நடிப்பை ‘விஸ்வாசம்’ படத்துல அவரிடம் பார்த்தேன். `அசோக்ராஜ், கல்யாண், பிருந்தா’ன்னு மூன்று நடன இயக்குநர்கள் நடனம் அமைச்சிருக்காங்க. டான்ஸிலும் பட்டையக் கிளப்பியிருக்கார்!”

“ ‘விஸ்வாசம்’ படத்தோட டெக்னிஷியன்கள் பற்றிச் சொல்லுங்க...”
“ஒளிப்பதிவாளர் வெற்றியை எனக்கு 22 வருஷமா தெரியும். வெற்றிகிட்ட ஒரு விஷயத்த சொல்லிட்டா அது பக்கவா முடிஞ்சிடும். விஸ்வாசம் படத்துல வில்லேஜ், சிட்டின்னு ரெண்டு டோன் இருக்கும். ஆர்ட் டைரக்டர் மிலனும் சூப்பரா வொர்க் பண்ணியிருக்கார். என் எல்லாப் படங்களுக்கும் என்கூடச் சேர்ந்து கதை எழுதின ஆதி நாராயணன் இந்தப் படத்திலும் இருக்கார். ‘காலா’ மணிகண்டன், சந்திரன், ‘இரும்புத்திரை’ படத்துக்கு எழுதின பாக்யராஜ் - சபரி இவங்க எல்லோரும் சேர்ந்து வசனங்களை எழுதினோம். படத்தோட வசனங்கள் பவர்ஃபுல்லா இருக்கும்.’’
“சோலோ பர்ஃபாமென்ஸ் காட்டி சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிற நயன்தாராவுக்கு இதில் என்ன கதாபாத்திரம்?”
``என்னைப்போலவே நயன்தாராவும் அஜித் சாரோட நான்காவது முறையா சேர்ந்து பணியாற்றும் படம் இது. அவங்க நடிப்புக்குத் தீனிபோடுற மாதிரியான ஒரு கதாபாத்திரமாக நிரஞ்சனா ரோல் இருக்கும். ‘வீரம்’ படத்துல கோப்பெரும்தேவி கேரக்டர் எப்படி வித்தியாசமா பேசப்பட்டுதோ அதுபோல ‘விஸ்வாசம்’ படத்துல வர நிரஞ்சனா ரோலும் பவர்ஃபுல்லான கதாபாத்திரமா இருக்கும்.’’
“கோவை சரளா, விவேக், தம்பிராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர்னு ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இருக்காங்களே?”

``எங்க ஷூட்டிங் ஸ்பாட்ல தம்பி ராமையா சார்தான் எங்களுக்கு எனர்ஜி டானிக். அஜித் சாருக்குத் தாய்மாமன் கதாபாத்திரத்தில படம் முழுக்க வர்றாரு. ‘விஸ்வாசம்’படத்தோட இரண்டாம் பாதியில விவேக் சிட்டி போர்ஷன்ல இருக்காரு. இவர்கூட கோவை சரளா அம்மாவும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. ரோபோ சங்கர் முழுநீளக் கேரக்டர் ஒண்ணு பண்ணியிருக்காரு. இப்போ டிரெண்டிங்ல இருக்கும் யோகிபாபுவும் இருக்காரு. அவர் வர்ற இடமெல்லாம் செம ரகளையா இருக்கும்.
ஏற்கெனவே ‘வீரம்’ பொங்கலுக்கு வந்த வெற்றிப்படம். அந்தப் படத்தைக்காட்டிலும் சிறந்ததா, பொழுதுபோக்கா இந்தப்படமும் வந்திருக்கு. தியாகராஜன் சார் ரொம்ப தன்மையான தயாரிப்பாளர். என்ன தேவையோ அதை மிகச்சரியா பண்ணிக்கொடுத்தார். இனியும் அவர் தயாரிப்புல நிறைய படங்கள் பண்ணுவேன்.”
‘வீரம்’ தேவிஸ்ரீ பிரசாத், ‘வேதாளம்’ அனிருத், இப்போது இமான்?

“இமான் சாரோட பெரிய ரசிகன் நான். அவர்கிட்ட உயிர உருக்குற மெலடியும் இருக்கும். அதே நேரத்துல பக்கா நாட்டுபுறப் பாட்டும் இருக்கும். இந்தக் கதைக்கு அவர்தான் செட் ஆவாருன்னு நான் ஃபிக்ஸ் பண்ணிட்டுதான் தயாரிப்பாளருக்குச் சொன்னேன். அவருக்கும் ரொம்பப் பிடிச்சுப்போக, எங்க கூட்டணியில் இமான் சேர்ந்தாரு. படத்துல மொத்தம் அஞ்சு பாட்டு இருக்கு. எல்லா ஸ்டைல்லேயும் பாடல்கள் போட்டிருக்காரு. பக்கா மாஸா இரண்டு சாங்ஸ் இருக்கு, அது பட்டையக் கிளப்பும். எல்லாருக்கும் பிடிக்குற மாதிரி ஒரு ஆல்பமா வந்திருக்கு. விவேகா, அருண் பாரதி, தாமரை ஆகியோர் பாடல்களை எழுதியிருக்காங்க.”
“உங்க படங்களில் ஸ்டன்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுப்பீங்களே... திலிப் சுப்பராயன் எப்படி பண்ணிருக்கார்?”
“மொத்தம் அஞ்சு ஃபைட் சீக்குவன்ஸ் இருக்கு. மழையில நடக்குற ஒரு ஸ்டன்ட் காட்சியை எடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டோம். படத்துல வரும் எல்லா சண்டைக்காட்சிக்குப் பின்னாடியும் ஒரு எமோஷனல் விஷயம் இருக்கும்.”

“ ‘விவேகம்’ படத்துக்கு வந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிட்டீங்க?”
“ எல்லாவிதமான விமர்சனத்தையும் தாங்கிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் எனக்கு இருக்குன்னு நம்புறேன். ஒரு படத்துக்கு நூறு சதவிகித உழைப்பைக் கொடுக்கிறதுதான் என்னோட வேலை, மத்தபடி எல்லாமே கடவுள் கையிலதான் இருக்கு. ஒரு படம் வெற்றியோ, தோல்வியோ, அந்தப்பட ரிசல்ட் பத்தி நான் என்னோட மைண்டுல ஏத்திக்குறதே இல்ல.”
சின்னப் புன்னகை சிந்துகிறார் சிவா.
எம்.குணா, அலாவுதீன் ஹுசைன்
‘இயக்குநர் சிவாவிடம் நீங்கள் விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்’ என்று சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தோம். ஆனந்தவிகடன் வாசகர்கள் அனுப்பிய நூற்றுக்கணக்கான கேள்விகளில், தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கான பதில்கள் இதோ...
twitter.com/FrankMartin_44
“தல அஜித்துடன் தொடர்ந்து இணையும் உங்களுக்கு, தளபதி படத்தை இயக்கும் ஐடியா இருக்கிறதா?”
“விஜய்சாரை ஸ்கூல் படிக்கும்போதிருந்தே எனக்கு ரொம்ப நல்லா தெரியும் எங்கப்பாவும், விஜய்சார் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ‘வேதாளம்’ படத்துக்கு முன்னாடி நானும் விஜய் சாரும் சந்திச்சுப் பேசியிருக்கோம்.கண்டிப்பா அவரை வச்சு ஒரு படம் இயக்கணும்னு ஆசை இருக்கு. சீக்கிரமா அது நடக்கும்னு நம்பறேன்!”
twitter.com/rahumath_offl :
“வழக்கமாக எல்லா சிவா படங்களிலும் குடும்ப சென்டிமென்ட் தூக்கலாக இருக்கிறதே?”
“நாம எவ்வளவு சம்பாதிச்சாலும், எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், நம்ம மனசுல இருக்குறது நம்ம குடும்பம் மட்டும்தான். இதை நான் நம்புறேன். அதுதான் காரணம்!”
twitter.com/KarthiAjithFan -
“ ‘V’ ல ஆரம்பிச்சு ‘M’ ல முடியுற மாதிரியே பட டைட்டில்கள் ரகசியம் என்ன?”
‘`வீரம்’ படத்துக்கு முதன்முறையா டைட்டில் சொல்லும்போது, `வீரம்’னு ஒரு படமே தமிழ்ல வரலையா’ன்னு ஆச்சர்யப்பட்டார் அஜித் சார். அப்படித்தான் அது அமைஞ்சுது. ‘வேதாளம்’ வேற ஒரு கதைக்காக வெச்ச தலைப்பு. அந்தப் படத்துக்குத் தலைப்பு சரியா இருந்ததனால அந்தத் தலைப்பே வெச்சிட்டோம். எதுவுமே திட்டமிட்டு வைக்கலை. தற்செயலா நடந்ததுதான்.”
twitter.com/saravanan7511 :
“தனது ரசிகர்கள் பற்றி அஜித் என்ன சொல்வார்?”
“ ‘ஒவ்வொரு ரசிகரும் தன்னோட சொந்த வாழ்க்கையில் தன்னோட கனவுகள் கைகூடி சந்தோஷமா இருக்கணும். அவங்க குடும்பங்கள சந்தோஷமா பாத்துக்கணும்னு’தான் எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாரு. படம் எடுக்குறோம், அவங்களுக்குப் பிடிச்சிருந்தா பாத்து சந்தோஷப்படட்டும். அவங்க நேரத்த அவங்க குடும்பத்துக்குச் செலவு செஞ்சா போதும்”னு சொல்லிட்டே இருப்பார். சில ரசிகர்கள் அவர் கார்ல போறத பார்த்தா பின்னாடியே துரத்துவாங்க. இவரு பதறிடுவாரு. அப்படி ஒருமுறை நாங்க காரில் போனபோது அஜித்சாரைப் பார்த்துட்டு ஆர்வத்துல பைக்கிலே துரத்திக்கிட்டே வந்தார் ஒரு ரசிகர். எங்க பின்னாடியே வந்த அந்தத் தம்பி கீழே விழுந்து லேசா அடிப்பட, பதறிப்போய் காரிலிருந்து இறங்கி ஆறுதல் சொன்னார். அதுக்கப்புறம். தன்னாலதான் இப்படி ஆச்சுன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. ரசிகர்கள் மேல தனி அக்கறை வெச்சிருக்கார் அஜித்.”
twitter.com/Surviva_Siva -
“இதுவரை நீங்கள் ட்விட்டர் பக்கம் வராதது ஏன்?”
“எனக்கு நேரம் இல்லை. ட்விட்டர் மட்டுமில்ல, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் இப்படி எந்த சோஷியல் மீடியா எடுத்தாலும். ஒண்ணு தொட்டு ஒண்ணு போயி பார்த்துக்கிட்டே இருக்கணும். ஓடிக்கிட்டே இருக்கோம், நேரமின்மைதான் காரணம்.”
twitter.com/RavikumarMGR
அடுத்தும் அஜீத்தை வச்சே படமெடுக்க வாய்ப்பு வந்தா என்ன டைட்டில் வைப்பீங்க?
“நான் இயக்கப்போகும் அடுத்த படம் அஜித்சார் படம் இல்லை. என்னோட அடுத்த படத்தை வெளியேதான் பண்றேன். அதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு.”