Published:Updated:

``அப்பா டிரான்ஸ்ஃபர் வாங்கினார்; அம்மா வேலையை ரிசைன் பண்ணிட்டாங்க!" - `சரிகமப' வர்ஷா

``அப்பா டிரான்ஸ்ஃபர் வாங்கினார்; அம்மா வேலையை ரிசைன் பண்ணிட்டாங்க!" - `சரிகமப' வர்ஷா
``அப்பா டிரான்ஸ்ஃபர் வாங்கினார்; அம்மா வேலையை ரிசைன் பண்ணிட்டாங்க!" - `சரிகமப' வர்ஷா

"தமிழ் நிகழ்ச்சியில பாட ஆரம்பிச்ச பிறகுதான், நல்ல அடையாளம் கிடைச்சது. தமிழ் மக்கள் கொடுக்கும் வரவேற்பும் அன்பும் ரொம்பப் பெரிசு."

ஜீ தமிழ் சேனல் `சரிகமப' நிகழ்ச்சியின் வெற்றியாளர் வர்ஷா. தற்போது பின்னணிப் பாடகியானவர், உள்ளூர், வெளியூர் கச்சேரிகளில் பிஸியாகப் பாடிவருகிறார். தன் இசைப் பயணம் குறித்து மகிழ்ச்சியாகப் பேசுகிறார், வர்ஷா.

`` `சரிகமப' நிகழ்ச்சி உங்க வாழ்க்கையில எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு?"

`` `சரிகமப' நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்பு, மலையாளம், இந்தி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பாடினேன். ஆனா, தமிழ் நிகழ்ச்சியில பாட ஆரம்பிச்ச பிறகுதான், நல்ல அடையாளம் கிடைச்சது. தமிழ் மக்கள் கொடுக்கும் வரவேற்பும் அன்பும் ரொம்பப் பெரிசு. `சரிகமப' நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரானேன். பிறகு பின்னணிப் பாடகியாகவும் வாய்ப்புகள் வருது. `மெர்சல்' படத்தின் மலையாள வெர்ஷன்ல, `ஆளப்போறான் தமிழன்' பாடல்ல லேடி போர்ஷன்ல பாடினேன். தவிர ஜிப்ரான், தினா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களுக்கும் பாடினேன். 2018-ம் ஆண்டு என் மியூசிக் கரியர் மிகச் சிறப்பானதாக அமைஞ்சது." 

``படிப்பு என்னாச்சு?"

`` `சரிகமப' நிகழ்ச்சியில பாடிட்டு இருந்தப்போ, காலேஜ் போக முடியாம நிறைய லீவு எடுப்பேன். ஆனா, என் காலேஜ் நிர்வாகம் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. சிரமம் இல்லாம, போட்டியாளராகப் பாடினேன். அப்போ, எதிர்காலத்துல நிறைய கச்சேரி வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்க்கவே இல்லை. ஆனா, நடந்துச்சு. ஸோ, இப்போ ரெகுலரா காலேஜ் போக முடியலை... படிப்பை கரஸ்ல மாத்திட்டேன். மேலும், விஸ்காம் கோர்ஸ்ல இருந்து, இப்போ பி.காம்., கோர்ஸ்ல மாறிட்டேன். என் காலேஜ் நிர்வாகம் மற்றும் சக ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப உதவுறாங்க. படிப்பு முக்கியம்தான். கரஸ்ல படிச்சு, நிச்சயம் டிகிரி முடிச்சுடுவேன்."

``வெளியூர் நிகழ்ச்சிகளில் பாடும் அனுபவம்..."

``கடந்த ஆறு மாதத்துல நிறைய வெளியூர், வெளிநாட்டுக் கச்சேரிகளில் பாடிட்டேன். லண்டன், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குப் போய் பாடினேன். வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஆர்வமாப் பார்க்கிறாங்க. என் பாடலைக் கேட்டு ரசிச்சு, ரொம்பவே வாழ்த்துறாங்க. பெருமையா இருக்கு. பெரிய பாடகர்களும் என் வெளியூர் கச்சேரிகளுக்கு உதவி செய்றாங்க. நிறைய டிராவல் போறதால சந்தோஷமா இருக்கு." 

``ரமணியம்மாள் உடனான இசைப் பயணம் பற்றி..."

`` `சரிகமப' நிகழ்ச்சியில நாங்க இருவரும் போட்டியாளர்களாக இருந்த போதிலிருந்து எங்க நட்பு தொடருது. அடிக்கடி நாங்க சந்திப்போம். அவங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா, எங்கிட்ட கேட்பாங்க. ரமணியம்மாள் மற்றும் நான் இருவரும் சேர்ந்து நிறைய கச்சேரியில கலந்துகிட்டுப் பாடுறோம். இசை கற்றுக்கொள்ளவும், பாடவும் வயது ஒரு தடையில்லை என்பதுக்கு, ரமணி அம்மா சிறந்த உதாரணம். அவங்க குழந்தையைப் போல குணம் கொண்டவங்க. என் தாத்தா பாடகராக ஆசைப்பட்டு, அது நிறைவேறலை. அதனால தாத்தாவுக்கு வருத்தமுண்டு. இருந்தாலும், இசை ஆர்வத்துல 84 வயசுலயும் என் தாத்தா நல்லா பாடுவார். அதனால, ரமணி அம்மாவைப் பார்க்கிறபோதெல்லாம் என் தாத்தாவின் நினைவு எனக்கு வரும்."

``பெற்றோர்களின் பங்களிப்பு பற்றி..." 

``எங்களுடைய பூர்வீகம், கேரளா. அங்கதான் பெற்றோர் வேலை செய்துட்டு இருந்தாங்க. `சரிகமப' நிகழ்ச்சியில போட்டியாளராக இருந்தபோது, என் மியூசிக் கரியருக்காக அப்பா சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தார். வேலை செய்துகிட்டே, எனக்கான எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்துகொடுத்தார். இப்போதும் நான் மியூசிக் கத்துக்கிறேன். கூடவே வெளியூர் கச்சேரிகளிலும் பாடுறதால, எனக்கு உதவியா இருக்க அம்மா வேலையிலிருந்து விலகிட்டாங்க. எனக்காகப் பெற்றோர் ரொம்ப சப்போர்ட் பண்றதால, நெகிழ்ச்சியா இருக்கு. இனி எப்போதும் சென்னையிலயே வசிக்கத் திட்டமிட்டிருக்கேன்" என்று புன்னகைக்கிறார், வர்ஷா.

அடுத்த கட்டுரைக்கு