Published:Updated:

தன்மானம் அவமானம் வெகுமானம்

தன்மானம் அவமானம் வெகுமானம்
பிரீமியம் ஸ்டோரி
தன்மானம் அவமானம் வெகுமானம்

தன்மானம் அவமானம் வெகுமானம்

தன்மானம் அவமானம் வெகுமானம்

தன்மானம் அவமானம் வெகுமானம்

Published:Updated:
தன்மானம் அவமானம் வெகுமானம்
பிரீமியம் ஸ்டோரி
தன்மானம் அவமானம் வெகுமானம்

தன்மானம்

இரண்டு க்ளைமாக்ஸ்கள் பற்றிச் சொல்லவேண்டும். இரண்டுமே என் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் விடப்பட்ட சவால்களாக அமைந்தவை. 

தன்மானம் அவமானம் வெகுமானம்

முதலாவது `மயங்குகிறாள் ஒரு மாது.’ என் இயக்கத்தில் வெளிவந்த முக்கியமான படங்களில் ஒன்று. படத்தின் க்ளைமாக்ஸ் வித்தியாசமானது.

படத்தின் நாயகி சுஜாதா, க்ளைமாக்ஸில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார்.  ‘கல்யாணத்துக்கு முன்பே நான் கெட்டுப்போனவள்; என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று  கணவன் முத்துராமன் மடியில் விழுந்து கதறி அழுவாள். அப்போது முத்துராமனோ, ‘நான் உன்னைப் பெண் பார்க்க வந்தப்போவே, இந்த உண்மை தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்’ என்று சொல்லி, சுஜாதாவின் உயிரைக் காப்பாற்றுவார். எனக்கு அந்த முடிவு பிடித்திருந்தது. ஆனால், அந்தக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட க்ளைமாக்ஸை யாருமே விரும்பமாட்டார்கள் என்பது எனக்குமே தெரிந்திருந்தாலும், ‘படத்தின் க்ளைமாக்ஸை யார் சொன்னாலும் மாற்றமாட்டேன்’ என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.

இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த சிலர், அந்த முடிவைக் கேட்டு, தலைதெறிக்க ஓடினார்கள். ‘எங்க மாமா’, ‘எங்கம்மா சபதம்’ ஆகிய படங்களைத் தயாரித்த பாஸ்கருக்கு, இந்தக் கதை பிடித்துவிட்டது. நான் ஏற்கெனவே சொன்ன ‘முடிவை மாற்றமாட்டேன்’ நிபந்தனையோடு படத்தைத் தொடங்கினோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரீ-ரெக்கார்டிங் செய்ய தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. விநியோகஸ்தர் ஒருவரிடம் படத்தைக் காட்டிப் பணம் கேட்டோம்.

தன்மானம் அவமானம் வெகுமானம்

விநியோகஸ்தர் கட்டுக்கட்டாகப் பணத்தை எடுத்து டேபிளில் வைத்தார், ‘பணத்தை எடுத்துக்கோங்க. ஆனா, க்ளைமாக்ஸ்ல சுஜாதா சாகணும். அப்போதான், படம் ஓடும். இல்லைனா படுதோல்விதான்’ என்றார். தயாரிப்பாளர் பாஸ்கரும்கூட, ‘சார், க்ளைமாக்ஸை மாத்திடலாமா’ என்று பின்வாங்கினார். ஆனால், நான் விடாப்பிடியாக நின்றேன்.

படம் வெளியானது. க்ளைமாக்ஸ் காட்சிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு. தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த அந்த விநியோகஸ்தர், என்னிடம் ஓடிவந்து, என் இரு கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டார். ‘சார், நீங்க ஜெயிச்சுட்டீங்க; நான் தோத்துட்டேன்’ என அவர் நெகிழ்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டார்.

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின்போதும்  இதேமாதிரியான பிரச்னை எழுந்தது. படத்தின் க்ளைமாக்ஸில் ரஜினி இறந்துவிடுவார். பிறகு, அவரையே தெய்வமாகக் கும்பிட்டு வாழ்கிறார் சுமித்ரா எனப் படம் முடியும். இது சினிமாவின் முக்கியப்புள்ளிகள் பலருக்கும் பிடிக்கவில்லை. `ரஜினி இறப்பதுபோன்ற காட்சியை மாற்றிவிட்டு, சுமித்ராவுடன் சேர்ந்து வாழ்வதுபோல் எடுத்தால்தான் நன்றாக இருக்கும்’ எனச் சொன்னார்கள். அப்போது, படத்தை கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் அழைத்து, ப்ரிவியூ ஷோ ஒன்றுக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், யார் சொன்னாலும், படத்தின் க்ளைமாக்ஸை மாற்றக்கூடாது என்பது என் எண்ணம். படத்தைப் பார்த்த முதியவர்கள், நடுத்தர வயதினர் அனைவரும், ‘ரஜினியை சாகடிக்கக் கூடாது’ என்றார்கள். கல்லூரி மாணவர்கள் என் முடிவை ஏற்றுக்கொண்டு, ‘அதுதான் சரி’ என்றார்கள். அப்படி ஒரு க்ளைமாக்ஸ்தான், ரஜினி ஹீரோவாக நடிக்க அச்சாரம் போட்டது.

அவமானம் :

ஏ.சி.திருலோகசந்தரிடம் ஏவி.எம் தயாரித்த ‘வீரத்திருமகன்’ தொடங்கி, அனைத்துப் படங்களிலும் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். சினிமாத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டேன். பிறகு, தனியாக சினிமா இயக்கும் எண்ணம் வந்தது.

அப்போதெல்லாம் சென்னையில் அடிக்கடி தெலுங்குப் படங்களைத் திரையிடுவார்கள். அதன்மூலம் விஜயவாடாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகமானார். ‘எனக்குத் தெரிந்த ஒரு பணக்காரர் இருக்கிறார். புகையிலை வியாபாரியான அவர், தமிழ்ப்படம் ஒன்றைத் தயாரிக்க ஆசைப்படுகிறார். அவரிடம் கதை சொல்லுங்கள், நீங்களே டைரக்‌ஷன் செய்யுங்கள்’ என்று சொல்லி, அந்த நபரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கதை சொன்னதும் தயாரிப்பாளருக்குப் பிடித்துவிட்டது. ஆபீஸ் போடப்பட்டது, கதை விவாதம் பரபரப்பாக நடந்தது. நான் இயக்குநராக அறிமுகமாகப்போகும் படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. உற்சாகத்தில் இருந்த நான், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடம் ‘நான் இயக்குநர் ஆகிவிட்டேன்’ எனச் சொல்லி, சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன்.

தயாரிப்பாளரிடம், ‘சார், ஸ்கிரிப்ட் ரெடி. நல்ல நாள்ல பூஜை போட்டுடலாம்’ என்றேன். அவரும், ‘இந்த வாரம் பணத்தை பேங்க்ல போட்டுறேன். நீங்க அடுத்த வாரம் ஷூட்டிங் போயிடலாம்’ என்றார். பூஜை போடும் நாள் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. தயாரிப்பாளரும் வரவில்லை. படத்தைத் தொடங்க வேண்டும். எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும்.

எனக்கு அந்தத் தயாரிப்பாளரை அறிமுகப்படுத்திய விஜயவாடா நண்பருக்குக் கலக்கத்தோடு போன் செய்து பேசினேன். ‘முத்துராமன், அவர் பெரிய பணக்காரர் மாதிரி நம்மகிட்ட நடிச்சிருக்கார். உண்மையிலேயே அவரிடம் பணமே இல்லை. குதிரை ரேஸ் வெறியர். சென்னை, குதிரை ரேஸில் பந்தயம் கட்டியிருக்கார். ஜெயிச்சா கிடைக்கிற 10 லட்சம் ரூபாயில் படமெடுக்கலாம்னு நினைச்சிருக்கார்’ என அவர் சொல்லிக்கொண்டே போக, எனக்கு மயக்கமே  வந்துவிட்டது. ஆயிரம் கனவுகளோடு ஆரம்பித்த முதல் படம் இப்படி ஆனது. `இனி என் சினிமா நண்பர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?!’ என்ற அவமானத்தில் எனக்கு அழுகையே வந்துவிட்டது. முதல் படம் இப்படி ஆகிவிட்டால் அடுத்த படம் கிடைப்பது சிரமம். ஆனால் அந்த அவமானத்தால் துவண்டுவிடவில்லை. என் முயற்சிகளைக் கைவிடவில்லை. இது முடிவல்ல என்பதை நினைத்துக்கொண்டு தொடர்ந்து போராடி என் முதல் படத்தை இயக்கினேன்.

வெகுமானம் 

‘முரட்டுக்காளை’ படத்துக்குப் பிறகு ரஜினி பெரிய ஆக்‌ஷன் ஹீரோ ஆகிவிட்டார். அந்தச் சமயத்தில் பஞ்சு அண்ணன் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தின் கதையை ரஜினிக்குச் சொன்னார். இதுவரை பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினிக்கு வித்தியாசமான படமாக அமையும்; குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்’ என்றார். நான் ரஜினியிடம் கதை சொன்னபோது, ‘ரொம்ப எமோஷனலாக இருக்கே... சரிப்பட்டு வருமா சார்?’ என்று யோசித்துவிட்டு, அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டு நடித்தார். ஐந்து நாள்கள் ஷூட்டிங் வந்தவர், ‘சார் எனக்கு லாஜிக் இடிக்கிற மாதிரி இருக்கே... ஒரு அண்ணன், தம்பிகளுக்கு நிறைய செய்யும்போது அவனோட தம்பிகள் எப்படி அவனுக்குத் துரோகம் பண்ணுவாங்க. என்னால, இந்தக் கதையை ஏத்துக்க முடியல’ என்று அப்செட் ஆகிவிட்டார். பஞ்சு அண்ணனைப் பார்த்து, ரஜினியின் வருத்தங்களைச் சொன்னேன். அவர் ரஜினியிடம், ‘நான் எங்க குடும்பத்தில் மூத்தவன். நாங்க பட்ட கஷ்டநஷ்டங்களைத்தான் படமாக்கப்போறோம்’ என்றார். ரஜினிக்குத் திருப்தியில்லை. இறுதியாக, ‘சரி... 5000 அடி படம் பிடிப்போம். அதற்குப் பிறகு, படத்தைப் போட்டுப் பார்ப்போம். சரியா இல்லைனா, விட்றலாம்!’ என்றார். இது ரஜினிக்குப் பிடித்திருந்தது. நாங்கள் படமாக்கிய 5000 அடியைத் திரையில் பார்த்த ரஜினிக்கு சர்ப்ரைஸ். எழுந்து நின்று கைதட்டியவர், என்னையும் பஞ்சு அண்ணனையும் கட்டிப் பிடித்துப் பாராட்டினார். ‘நல்லவேளை... இப்படி ஒரு நல்ல படத்தை நான் மிஸ் பண்ணப் பார்த்தேன்’ என நெகிழ்ந்தார். முக்கியமாக, இந்தப் படத்துக்கு அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது ரஜினிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது எனக்கும் கிடைத்தது.

தன்மானம் அவமானம் வெகுமானம்

வேறொரு படத்தின் ஷூட்டிங் இடைவேளையில், ‘சார், ஸ்ரீராகவேந்திரர் உருவம் அடிக்கடி என் கனவுல வரும். என்னைப் பார்த்து, நீ பெரிய ஆளா வருவன்னு சொல்வார். நீங்க அவரோட வரலாற்றைப் படமா பண்ணணும். அதில், ராகவேந்திரரா நான் நடிக்கணும்’னு சொன்னார், ரஜினிகாந்த். அப்போ, ‘கொஞ்சநாள் போகட்டும்’னு சொல்லிட்டேன். பிறகு ஒருநாள், `சார், நான் முடிவு பண்ணிட்டேன். என் 100-வது படம் ஸ்ரீராகவேந்திரர்தான். தயாரிக்கிறதுக்கு கேபி சார் ஓகே சொல்லிட்டார். நீங்கதான் இயக்கணும்’னு சொன்னார். ‘ரஜினி, நீ இப்போ ஆக்‌ஷன் ஹீரோவா கலக்கிக்கிட்டு இருக்க. ரசிகர்களும் அதை ரசிக்கிறாங்க. இந்தச் சமயத்துல காவி உடை போட்டுக்கிட்டு, சாதுவா வந்தா, எப்படி ஏத்துப்பாங்க. தவிர, இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெறுவதும் கடினம்’னு சொன்னேன். உன்னை அறிமுகப்படுத்திய கேபி சாருக்கு நஷ்டம் வந்தா, நல்லாவா இருக்கும். தவிர, நான் சுயமரியாதை இயக்கப் பின்னணி கொண்டவன். என்னால் புராணப் படத்தை இயக்க முடியாது என்ற பயமும் இருக்கு என, மூன்று காரணத்தை முன் வைத்தேன். அவர் எழுந்து போய்விட்டார். மறுநாள் கேபி சாரிடமிருந்து அழைப்பு. நேரில் சந்தித்தேன். ‘ரஜினி எங்க நிறுவனத்தில் நடிப்பதே பெருமை! எல்லா ஜானரிலும் படம் பண்ணியிருக்க; இதையும் ஒரு ஜானரா நினைச்சு இந்தப் படத்தைப் பண்ணு’ன்னு சொல்லிட்டார், கேபி சார். ‘ஸ்ரீராகவேந்திரர்’ திரைப்படம் கமர்ஷியல் ரீதியாகத் தோல்வி அடைந்தது என்றாலும், நற்பெயரைச் சம்பாதித்தார், ரஜினி. ஸ்ரீராகவேந்திரரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், சென்னைத் திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கிறார்கள். அவர்களை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது, என் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘எங்களுக்கு மனசு கஷ்டமா இருந்ததுனா, மந்த்ராலயம் போவோம். இப்போ உங்க படத்தைப் பார்த்தாலே, ராகவேந்திரர் எங்க வீட்டுக்கே வந்தமாதிரி உணர்றோம்!’ எனச் சொன்னார்கள். ஓர் இயக்குநராக பெருமையாக உணர்ந்த தருணம் அது.

எம்.குணா - படங்கள்: க.பாலாஜி