Published:Updated:

`இந்தியாவின் வறுமையை எத்தனை நாளைக்குத்தான் விற்பீர்கள்?’ - ஆஸ்கர் விருது தேர்வு குறித்து அனுபம் கெர்

`இந்தியாவின் வறுமையை எத்தனை நாளைக்குத்தான் விற்பீர்கள்?’ - ஆஸ்கர் விருது தேர்வு குறித்து அனுபம் கெர்
`இந்தியாவின் வறுமையை எத்தனை நாளைக்குத்தான் விற்பீர்கள்?’ - ஆஸ்கர் விருது தேர்வு குறித்து அனுபம் கெர்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய  `தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய் தத். இதில் மன்மோகன் சிங் -ஆக அனுபம் கெர் நடித்திருக்கிறார். 

அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூரும், பிரியங்கா காந்தியாக அஹானாவும் (Aahana) நடித்திருக்கிறார்கள். அதேபோல், மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் கண்ணா நடித்திருக்கிறார்.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றப் பின்னர், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டது, அணு ஆயுத ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  `தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்களை வைத்துத்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கற்பனையானவை என பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்திருந்தது. படத்தில் மன்மோகன் சிங் -ஆக நடித்துள்ள அனுபம் கெர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அனுபவ நடிகர். இவர் இரண்டு தேசிய விருதுகளையும் 8 ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். 

இந்த நிலையில், அனுபம் கெர் தனியார் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ஆஸ்கர் விருது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர்,``எத்தனை காலத்துக்குத்தான் ஆஸ்கரில் இந்தியாவின் ஏழ்மையை விற்பனை செய்வீர்கள்?. இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இந்தியாவின் பின்தங்கிய நிலை, பின்தங்கிய வகுப்புநிலை, இந்தியாவில் நிலவும் வர்க்க வேறுபாடு, இந்தியாவில் இருக்கும் யானை, குரங்கு முதலியவற்றை ஆஸ்கரில் விற்பீர்கள். 

`தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற இந்தப் படம் இந்தியாவின் நவீன அரசியல் குறித்து பேசுகிறது. இயக்குநரும் நடிகர்களுக்கும் இந்தப் படத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இது போன்ற படங்களை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.