Published:Updated:

88 வயதிலும் நடிகராக க்ளின்ட் ஈஸ்ட்வுட் செம... ஆனால் இயக்குநராக? #TheMule படம் எப்படி?

கார்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
88 வயதிலும் நடிகராக க்ளின்ட் ஈஸ்ட்வுட் செம... ஆனால் இயக்குநராக? #TheMule படம் எப்படி?
88 வயதிலும் நடிகராக க்ளின்ட் ஈஸ்ட்வுட் செம... ஆனால் இயக்குநராக? #TheMule படம் எப்படி?

க்ளின்ட் ஈஸ்ட்வுட் `தி ம்யூல்' படத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஆனால், இது உண்மைக்கு அருகில் நிற்கும் ஒரு சினிமாவா? #TheMule

முன்னாள் போர் வீரரும் தோட்டக்கலை நிபுணருமான ஏர்ல் ஸ்டோனுக்கு குடும்பம் என்றுமே விருப்பமான ஒன்றாக இருந்ததில்லை. குடும்பமும் இவரைப் பெரிதாக எதற்கும் கண்டுகொள்வதில்லை. பணத்தேவைக்காக மெக்ஸிகன் போதைக் கும்பலுக்கு, தன் காரில் போதைப் பொருள் கடத்த ஆரம்பிக்கிறார். கடத்தல் ஏர்லை எங்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் 'தி ம்யூல்' திரைப்படம். #TheMule

ம்யூலாக 88 வயது இயக்குநரும் நடிகருமான க்ளின்ட் ஈஸ்ட்வுட். மனைவி, மகள் என அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு கதாபாத்திரம். என் வாழ்க்கை என் விருப்பப்படிதான் இருக்கும் என நினைக்கும் ஒரு மனிதரின் வாழ்வு. மகளின் எந்தவொரு விழாவுக்கும் செல்லாத ஒருவர், முதல் முறையாக வேறு வழியின்றி பேத்தியின் திருமண நிகழ்வுகளுக்கு வருவது, அப்போது ஏற்படும் புறக்கணிப்பு, அதன்பின் அவர் செய்யும் கடத்தல் என விரிகிறது கதை. கடந்த சில ஆண்டுகளாக இயக்கத்தில் மட்டும் ஆர்வம் காட்டிவந்த க்ளின்ட் ஈஸ்ட்வுட் மீண்டும் இப்படத்தில் நடித்திருக்கிறார். ``ரொம்ப பேசாத, அதான் இந்த வயசுல எங்களுக்கு வேலை பார்க்கற’’ எனச் சொல்லும் நபர்களிடம், அடுத்த சில நிமிடங்களிலேயே, ``இதுக எனக்குக் கீழதான் வேலை பாக்குதுக’’ எனக் கேசுவலாகச் சொல்வதும், இறுதிக் காட்சிகளில் மனைவி மேரியுடன் பேசுவதும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு. நாம் என்ன கடத்துகிறோம் என்பதை அறிந்ததும், கொடுக்கும் பதற்றம், அதற்குப் பின் தன் வாழ்வில் எல்லாம் சரியாகிவிட்டது என ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக்கொள்வது என க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் இத்தனை ஆண்டுக்கால அனுபவம் அவரின் நடிப்பில் மிளிர்கிறது.

'எ ஸ்டார் ஈஸ் பார்ன்' படத்தில் அல்ட்டி பெர்ஃபாமன்ஸ் கொடுத்த பிராட்லி கூப்பர், இதில் ஏர்ல் ஸ்டோனும் அவர் வேலை செய்யும் குழுவையும் பிடிக்கும் அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் மேரியாக வரும் டியானா வெஸ்ட். அவருக்கு எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வசனமும் செம. படத்தின் இறுதிக்காட்சிகளில் அவர் பேசும், ``You are the love of my life and the pain of my life’’ வசனம் படத்தில் அவருக்கும் ஏர்ல் ஸ்டோனுக்கும் இடையே இருக்கும் எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறது.

ஷார்ட் ஃபிலிமாக எடுக்க வேண்டிய 'சல்லி'யை (Sully) சற்றே நீட்டி முழக்கி எடுத்ததற்குப் பின், உண்மைச் சம்பவத்தை வைத்து `15:17 டு பாரிஸ்' படத்தை அந்நிகழ்வில் பங்குபெற்றவர்களை வைத்தே வித்தியாசமானதொரு திரைப்படமாக எடுத்திருந்தார். 'சல்லி' படமாவது தேசப்பற்றை ஊற்றுவதால், விமர்சகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. பாரிஸ் படத்தையெல்லாம் ஒரு பெரிய மனிதர் ஏதோ எடுத்திருக்கிறார் நிலையில்தான் கடக்க வேண்டியிருந்தது.

பாரிஸ் படத்துடன் ஒப்பிட்டால் `தி ம்யூல்' எவ்வளவோ மேல் என்பதுதான் இப்படத்தின் ஒரே ஆறுதல். படம் ஏர்ல் ஸ்டோன் என்பவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நியூ யார்க் டைம்ஸ் இதழில் இது ஒரு கட்டுரையாக வந்திருந்தது. புனைவு என்கிற பெயரில் அதை என்னனென்னமோ செய்து வைத்திருக்கிறார்கள். குடும்பக் காட்சிகள் அட்டகாசமாக வந்திருந்தாலும், படத்தின் மையக் கருவான போதைக் கடத்தல் காட்சிகள் ஏனோ அமெச்சூர் சினிமாபோல் அதீத செயற்கைத்தனத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவரிடம் என்ன நம்பிக்கையில் பொருள் கொடுக்கப்படுகிறது என்பது பற்றிய காட்சிகள் முதல் கடத்தலில்கூட இடம்பெறவில்லை.

படத்தில் வரும் நிறவெறி தொடர்பான காட்சிக்குச் சிலர் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்கள். ஒரு 90 வயது முதியவர் பேசும் அக்காட்சி படத்தில் பெரிதாக உறுத்தவில்லை. பிக்னிக் போவதுபோல், ஒவ்வொரு முறையும் கடத்தலுக்குச் செல்லும் காட்சிகள்தான் அலுப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் ஏர்ல் ஸ்டோனின் நீதிமன்றக் காட்சிகளையும் நல்லவர் பிம்பம் வர வேண்டி மாற்றியிருக்கிறார்கள்.

க்ளின்ட் ஈஸ்ட்வுட் படம் என்பது அவரது எல்லாப் படங்களுக்குமான விசிட்டிங் கார்டு. அதன் மேல் இருக்கும் பிம்பத்தை அவரே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் முயற்சியில் இருக்கிறார் என்பதுதான் வருத்தமான விஷயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு