Published:Updated:

``உறவுகளைத் தேடி ஒரு பயணம்!" - `யோமெடின்' படம் எப்படி? #yomeddine

``உறவுகளைத் தேடி ஒரு பயணம்!" - `யோமெடின்' படம் எப்படி? #yomeddine
``உறவுகளைத் தேடி ஒரு பயணம்!" - `யோமெடின்' படம் எப்படி? #yomeddine

``உறவுகளைத் தேடி ஒரு பயணம்!" - `யோமெடின்' படம் எப்படி? #yomeddine

தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவன், பேஸ்ஹே. சிறுவயதிலிருந்தே தொழுநோயாளிகள் வாழும் காலனி ஒன்றில் வசிக்கிறான். குப்பைகளிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்து விற்று, அதன்மூலம் தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறான். தனது மனைவி மறைவுக்குப் பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்குப் பிடிக்கவில்லை. இழந்த தனது குடும்பத்தினரைச் சந்திக்கப் புறப்படுகிறான். ஒரு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருள்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கிப் பயணத்தை மேற்கொள்கிறான். அப்போது, ஒபாமா என்ற ஆதரவற்ற சிறுவன் பேஸ்ஹேவுடன் இணைந்துகொள்கிறான். பயணத்தில் நிகழும் சம்பவங்கள், பேஸ்ஹே தனது குடும்பத்தினரைத் தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான், `யோமெடின்' படத்தின் மீதிக்கதை.

எகிப்தின் நிலப்பரப்பு, மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை குறுக்கு வெட்டுத் தோற்றத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் பாலைவனம், வெயில், பிரமிடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. பேஸ்ஹே கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராடி கேமல் (Rady Gamal) படத்துக்குப் பெரும் பலம். உண்மையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரை நடிக்க வைத்திருப்பது, படத்துடனான நெருக்கத்தைக் கூட்டுகிறது. எந்தக் காட்சியிலும் அவர் நடிப்பது போன்றே தெரியவில்லை. மனிதன் எதார்த்தமான நடிப்பில் மிரட்டியுள்ளார். தொழுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முகத்தை, தன் சகோதரன் பார்க்கக் கூடாது என எண்ணி கூனிக் குறுகும்போதும், டிக்கெட் பரிசோதகர் தாக்கும்போது, `ஐ எம் எ ஹியூமன்' என வெடித்துக் கதறும்போதும், அப்பாவியான சிரிப்பிலும், தந்தையுடனான இறுதிக்காட்சியில் தன்னையே அறியாமல் அழுவதுமாக உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பால் ஈர்க்கிறார். இவருக்கு இணையாக டஃப் கொடுத்து நடித்திருக்கிறார், உடன் பயணிக்கும் சிறுவன் ஒபாமா (அஹ்மத் அப்தல் ஹஃபிஸ்).

ஒபாமாவின் குறும்புத்தனங்கள் பயணத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. `இதை மாட்டிக்கோ, யாரும் உன்னைப் பார்த்து முகம் சுழிக்க மாட்டாங்க' என்றபடி, தானே உருவாக்கிய முகத்திரையாலான தொப்பி ஒன்றை பேஸ்ஹேவுக்குக் கொடுப்பது, இறுதியில் `உன் உடம்புல இருக்கிறது வெறும் தழும்புகள்தான் நோயில்ல!' என ஆறுதல் கூறுவதுமாக கவனம் பெறுகிறார், சிறுவன் ஒபாமா. இருவரின் பயணத்தில் நம்மையே அறியாமல் அவர்களுடன் பயணிக்கத் தொடங்குகிறோம். வழியெங்கும் அவர்களுக்கிடையிலான அன்பு நிரம்பிக்கிடக்கிறது. ஓரிடத்தில் ஒபாமாவுக்குத் தலையில் அடிபட்டு, அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பேஸ்ஹேவிடம், `நீங்கள் பையனுக்கு என்ன உறவு?' என நர்ஸ் கேட்கிறார். அப்போது சற்றும் தயங்காமல், `அப்பா' எனக் கூறும் காட்சி கிளாஸிக்! அவர்கள் பயணத்தின் வழியே நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளாய் ஒரு நாவலை வாசித்த அனுபவத்தைத் தருகிறது, 'யோமெடின்'. தொழுநோயாளி ஒருவரைச் சமூகம் எப்படி அணுகுகிறது, அவனுக்கு உதவ முன்வருபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பயணத்தினூடே சொல்கிறார், இயக்குநர் அபுபக்கர் ஷாவ்கி (Abu Bakr Shawky).

படத்தின் இறுதியில் பேஸ்ஹே, தான் அதுவரை அணிந்திருந்த முகத்திரையைத் தூக்கியெறியும் காட்சி அப்லாஸ் அள்ளுகிறது. நடுவே படத்துடன் பயணிக்கும் காமெடிக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கொப்பளங்களும், தழும்புகளுமாக இருக்கும் பேஸ்ஹேவைத் தொடக்கத்தில் பார்க்கத் தயங்கி, படம் முடியும் போது நம்மையே மறந்து அவரை ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். இறுதியில் அவருக்கு வைக்கப்படும் துணிச்சலான க்ளோஸப் ஷாட் மூலம் அதை உறுதி செய்கிறார், இயக்குநர். காட்சிகளின் சூழலை உணர்வுகளாகக் கடத்துவதில் பின்னணி இசைக்கு முக்கியப் பங்குண்டு. அது நம்மைப் படத்துடன் எமோஷனலாக கனெக்ட் செய்ய பெரும் உதவி புரிகிறது. அதேபோல வசனம் இல்லாத காட்சிகளின் வெற்றிடத்தை நிரப்பிவிடுகிறது, ஒளிப்பதிவு. கேமரா வழியே நகர்கிறது கதை. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஷாட்ஸ் அழகோ அழகு!   

'யோமெடின்' என்பதற்கு அரபு மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் (Judgement day) என்று பொருள். இவ்வுலகத்தில் என்ன குறைகளுடன் மனிதன் இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்படும் அந்நாளில் இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் கலைப் படைப்புதான், இந்த `யோமெடின்'.  

அடுத்த கட்டுரைக்கு