Published:Updated:

யேசுதாஸ்... மலையாள மண் ஈன்ற ராக தேவன்! #HBDYesudas

முத்துக்குமரன் மு
யேசுதாஸ்... மலையாள மண் ஈன்ற ராக தேவன்! #HBDYesudas
யேசுதாஸ்... மலையாள மண் ஈன்ற ராக தேவன்! #HBDYesudas

மொபைலின் சாங்க்ஸ் லிஸ்ட், லேப்டாப், ஐபாட்... என எங்கும் நிறைந்து, நம்மில் பலரது இரவுகளுக்குத் துணையாக வந்து தலை நீவிக் கொடுக்கும் பாடல்களுள் தவிர்க்க இயலாதது, யேசுதாஸ் ஹிட்ஸ்! கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும் சின்னச் சின்ன ஸ்வரங்களும்கூட சொக்க வைத்துச் சூனிய வெளிகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும் குரல், கட்டசேரி ஜோசஃப் யேசுதாஸுக்கு! மலையாள மண் ஈன்று கொடுத்த ராகதேவன், இவர்!

1940-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி கேரளத்தின் கொச்சியில் தாய் எலிசபெத் ஜோசப்புக்கும், மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகருமான தந்தை ஆகஸ்டின் ஜோசப்புக்கும் பிறந்தவர், கட்டசேரி ஜோசஃப் யேசுதாஸ். ஐந்து வயதிலேயே பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட இவர், அவரது தந்தையிடமே இசையைக் கற்றார். பிறகு, ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் இசைப்பயிற்சி பெற்றார். உயர்கல்விக்காகச் சேர்ந்த திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் செம்மங்குடி சீனிவாசய்யர் மற்றும் செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் அறிமுகம் கிடைத்தது.

சினிமா பாடகராக இவர் கால் பதித்தது, 1960-களில் கே.எஸ்.ஆண்டனி இயக்கிய `கால்பாடுகள்’ என்ற மலையாளப் படத்தில்தான். 1964-ல் எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வந்த `பொம்மை’க்காக `நீயும் பொம்மை, நானும் பொம்மை' எனப் பாடி, தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். இவர் குரலை தமிழில் வெளியிடுவதில் `பொம்மை’யை, 1963-ல் வந்த `கொஞ்சும் குமரி’ படம் முந்திக்கொண்டது. செம்பை வைத்தியநாத பாகவதர், இயக்குநர் எஸ்.பாலசந்தரிடம் யேசுதாஸை அறிமுகம் செய்து, வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததாகச் சொல்கின்றனர். 1970-களில் இந்தியில் இவர் குரலில் பாடி வெளிவந்த முதல் படம், `சோடிசி பாத்’. ஆனால், இந்திக்கு இவர் முதலில் ஸ்ருதி சேர்த்தது, `ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ படத்தில்தான். 

மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, துளு, வங்கமொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், இந்தி, ரஷ்ய மொழி, அரேபிய மொழி, மலாய், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் அதிகமான திரையிசைப் பாடல்களுக்குத் தனது குரலால் உயிர் சேர்த்துள்ளார். கேரளத்தில் 25 முறை, தமிழகத்தில் 5 முறை, ஆந்திரத்தில் 4 முறை, கர்நாடகத்தில், மேற்குவங்கத்தில் அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து சிறந்த பாடகருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு மாநில அரசு விருதுகளை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். 1992-ல் சங்கீத் நாடக அகாடமி விருது, சென்னைத் தமிழிசை சங்கத்தின் `இசைப்பேரறிஞர்’ விருது, 1975-ல் பத்மஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷன், 2017-ல் பத்ம விபூஷன், சாகித்ய அகாடமி, 2002-ல் `சங்கீத கலாசிகாமணி’, 2003-ல் `வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது' எனப் பொழுதெல்லாம் விருதுகள் வாங்கிக் குவித்து வருகிறார். 1989-ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 2003-ல் கேரளப் பல்கலைக்கழகமும், 2009-ல் மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும் இவருக்கு `கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளன.

சிறந்த பின்னணிப் பாடல்களுக்காக இவர் பெற்ற `தேசிய விருது’ பட்டியல் நிரம்பி வழிகின்றது. 1972-ல் `அச்சனும் பப்பையும்’ மலையாளப் படத்தின் `மனுஷ்யன் மதங்களே' பாடல், 1973-ல் `காயத்ரி’ மலையாளப் படத்தின் `பத்ம தீர்த்தமே உணரு' பாடல், 1976-ல் `சிட்சோர்’ இந்திப் படத்தின் `பாஷி கொரி தேரா காவோன் படா' பாடல், 1982-ல் `மேகசந்தேசம்’ தெலுங்குப் படத்தின் `ஆகாச தேசனா ஆஷதா மாசனா' பாடல், 1987-ல் `உன்னிகேலே ஒரு கதா பறையம்' மலையாளப் பாடல், 1991-ல் `பாரதம்’ மற்றும் 1993-ல் `சோபனம்’ என்ற மலையாளப் படங்களின் அனைத்துப் பாடல்கள்... என இப்பாடல்களுக்குப் பின்னணி பாடியதற்காக மொத்தம் 8 தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார்.

`உரிமைக்குரல்’ படத்தில் `விழியே கதையெழுது' என ஒலிக்கவிதையாக உருப்பெருக்கிப் பாடி உள்ளம் எங்கும் காதல் பெருகச்செய்தார். `டாக்டர் சிவா’வில் `மலரே குறிஞ்சி மலரே' எனக் குரலில் இன்னிசையை மலரச் செய்தார். எம்.ஜி.ஆர் நடித்த `பல்லாண்டு வாழ்க’ படத்தில் `ஒன்றே குலமென்று' உயர்ந்த சொற்களை உச்சரித்த தொனிகளில் கவனம் ஈர்த்தார். `அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் `தெய்வம் தந்த வீடு' கண்டு அதனுள் குடிபுகுந்தார். அலைபாயும் `அதிசய ராகம்’ கேட்டு `பூவே செம்பூவே’கூட மொட்டவிழ்ந்து புன்னகைக்கும்.

`தென்பாண்டித்தமிழே’ வரிகளாய் அவர் வாசல் வந்து நிற்கும். இசைக்குரல் தவழுவதாலே, அந்த இடமெங்கும் வீசுகின்ற `பூங்காற்று புதிதானது’ அகாரங்களில் மயங்கி மலையடிவாரச் சாலைகளில் பயணிக்கும்போது, `செந்தாழம்பூவில்’ அமர்ந்துண்ண `கல்யாண தேன்நிலா’ காத்துக் கிடப்பதைக் காணும்போதெல்லாம் `தென்றல் வந்து என்னைத் தொடும்’தானே! மெலடியில் இத்தனை செய்தவர், அந்தச் சாயலை உடைத்து, `தண்ணித்தொட்டி தேடிவந்த கன்றுக்குட்டி’களாய் ரசிகர்களைத் துள்ளச்செய்தார். இளையராஜா - யேசுதாஸ் காம்பினேஷன் என்றும் கிளாசிக்தான்! `அம்மா என்றழைக்காத' உயிருண்டா என்ன!

பாடகராகவும் யேசுதாஸாகவும் வேறுபாத்திரங்களாகவும் படங்களில் நடித்துள்ளார். பிறப்பால் கிறிஸ்தவர் என்றாலும், இந்துமதக் கடவுளர்கள் மீது மிகுந்த ஈடுபாடுடையவர். சபரிமலையின் அத்தாழ பூஜையில் ஒழிக்கப்பட்டுவந்து பின்னர், தற்போது இரவு நடைசாத்தப்படும்முன் இவரது குரலில் ஒலிக்கும் ஹரிவராசனத்துக்குத்தான் ஐயப்பனும் சயனிக்கிறான். இவர், பக்திப் பாடல் தொகுப்புகளை அதிகம் வெளியிட்டுள்ளார். `காயம்குளம் கொச்சுன்னி’ மலையாளப் படத்தில் இஸ்லாமியர் வேடமணிந்து `நல்ல சுருமா’ எனப் பாடி நடித்துள்ளார். அட, இசைக்கு ஏது மதமும் மொழியும்! சாட்சியாய் ஓங்கி ஒலியுயர்த்திக் குரலெடுக்க, கேட்போர் மேனி சிலிர்த்திடுமாறு வந்து விழுகின்றன, இந்தக் கந்தர்வக்குரலோனின் சாகித்ய சங்கதிகள்!

பிறந்தநாள் வாழ்த்துகள்!