Published:Updated:

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

Published:Updated:
ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

லெனின் எம். சிவம் திரைப்பட இயக்குநர். கனடாவில் வசிக்கும்  இலங்கைத் தமிழர். ஈழ சினிமாவின் நம்பிக்கையான திரைமுகம். அவரது சமீபத்திய படமான ‘ரூபா’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்தித்தேன். சினிமா, போர், காதல், ஈழ இலக்கியம் என உரையாடியதிலிருந்து...

‘ரூபா’ படம் பற்றி... 

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

புலம்பெயர்ந்த 19 வயது திருநங்கை ரூபாவுக்கும், 2 பிள்ளைகளுக்குத் தகப்பனான ஆண்டனிக்கும் இடையிலான காதல்தான் திரைப்படம்.  ஆண்டனியாக எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்துள்ளார். கோகுல் தன்னைத் திருநங்கையாக உணர்ந்து ரூபாவாக மாறியபின் தன் வீட்டால் வெளியேற்றப்படுகிறாள். அதன்பிறகு ‘லோக்கல் பிசினஸ் மேன்’ ஆண்டனியுடன் காதல் வயப்படுகிறாள். ரூபாவின் காதல், வலி, துயரம் என அனைத்தும் உங்களை உலுக்கும்.

திருநங்கையின் காதலை பதிவு செய்யும் எண்ணம் எப்படி உருவானது?

“ஈழத்துத் திருநங்கைகளில் யாரையாவது தெரியுமா?” என ஒருமுறை கேட்டார் எழுத்தாளர் ஷோபா சக்தி. அதன்பிறகு நான் நிறைய ஈழத்துத் திருநங்கைகளைச் சந்தித்தேன். அந்தச் சமயத்தில்தான் அவர் எழுதி, பதிப்பிக்காத ‘ரூபா’ சிறுகதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பிறகு, அந்தக்கதைதான் `ரூபா’ திரைப்படமாக உருவானது. காதல் என்பது ‘பால்’ என்ற எல்லையையும் கடந்தது. காதலை ஆண்-பெண் பாலினங்களுக்கு  மட்டுமானது என்ற கட்டமைப்பை ‘ரூபா’ உடைக்கும்.

திரைப்பட விழாக்களில் அதிகம் கலந்துகொள்பவர் நீங்கள்,  சமகாலத் தமிழ்ப்படங்கள் எப்படி இருக்கின்றன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

நான் தமிழ் சினிமாவைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். விசாரணை, மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வடசென்னை என   ஆரோக்கியமான பாதையில் தமிழ் சினிமா பயணிக்கிறது.இந்தத் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும்  வெற்றி பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது. மாற்று சினிமாக்களுக்கான காலம் தமிழில் உருவாகியுள்ளது என நான் நம்புகிறேன்.

ஈழ இலக்கியங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஈழ இலக்கியங்கள் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளன. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி தொடங்கி பல இலக்கியவாதிகள் பெருமைகொள்ளத்தக்க வகையில்  பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.  இலக்கியத்தை ஒப்பிடுகையில் நாங்கள் குறைந்த பங்களிப்பே செலுத்தியுள்ளோம். ஈழ இலக்கியங்கள் தனக்கான இடத்தைத் தக்கவைத்ததுபோல, ஈழத்து சினிமாவும் எதிர்காலத்தில் நிறைய வரும்.

இலங்கையிலுள்ள மலையகத் தமிழர் குறித்துப் பதிவுகள் பெரிதாக இல்லையே?

இலங்கையில் எப்போதும் பிரச்னைகளைச் சுமந்துகொண்டே இருக்கும் தேசம். மலையகத் தமிழர் மட்டுமல்ல. யாழ்ப்பாணத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் பிரச்னைகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மலையகத் தமிழர்கள் பற்றி, தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் நிறைய உரையாடுகிறார்கள். அவர்களுக்கான பொருளாதார மீட்பு பற்றிய பேச்சுகள் எழுகின்றன. அவர்களின் வாழ்வு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உள்ளது. 

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

மலையகத் தமிழர்களிலிருந்து நிறைய எழுத்தாளர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய திரைப்படப் பதிவுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால்,  திட்டமிட்டுப் புறக்கணிக்கவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களில் தற்போது உருவாகிவரும் கலைஞர்கள் அதை நிச்சயம் செய்வார்கள் என நம்புகிறேன். தமிழ்நாட்டிலுள்ள படைப்பாளர்கள் கூட அதைச் செய்யலாம்.

உங்கள் படைப்புகளின் சாரம் என்று  எதைக்  கருதுகிறீர்கள்?

என்னை பாதித்தவற்றைத்தான் நான் படமாக்குகிறேன். வெறுமனே பத்து வெற்றிப் படங்களைப் பார்த்து அதைப்போலவே  ஒரு படத்தைக் கொடுக்க முடியாது. அது கலையும் அல்ல. எனது ‘1999’ திரைப்படம்,   டொரன்டோவில் நான் பார்த்த இரண்டு தமிழ் கேங்ஸ்டர்களைப் பற்றியது. அந்தப் படத்தில் நான் நேரடியாகப் பார்த்த பிரச்னைகளைப் படமாக்கினேன். ‘எ கன் அண்டு எ ரிங்’ ( A Gun and A Ring) திரைப்படம்  போர் பற்றியது. ஒரு தேசத்தில் போர் நடக்கிறது. போர் மாறலாம். நாம் தப்பித்து வெளியேறலாம். ஆனால் அந்தப் போர் நமக்குள் ஏற்படுத்திய வடு, சவப்பெட்டிக்குள் போகுமட்டும் மறையாது. சொல்லப்போனால் ஈழப்போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது. அதைத்தான் படமாக்கினேன்.  

ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!

தமிழ் சினிமாவில் ஈழப் போர் குறித்த படைப்புகள் வராதது குறித்த ஆதங்கம் உள்ளதா?

 நிச்சயமாக! பிரமாண்டமான தமிழ்த் திரைப்பட உலகிலிருந்து  ஈழப்போர் குறித்து படங்கள் வரவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால், அப்படிப் படம் எடுப்பதில் உள்ள சிக்கல் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு பெரும்பாலான படங்கள் வியாபார நோக்கத்தில் எடுக்கப்படுபவை.  போர் குறித்த படங்கள் வருமானம் ஈட்டித் தருவதற்கான வாய்ப்பு குறைவுதான். அரசியல் ரீதியாகவும் அழுத்தங்கள் இருக்கும். ஆனால், நாங்கள் 1960 களிலிருந்தே மாற்று சினிமாக்களைக் கொண்டு வர முயன்றுவருகிறோம். ஆனால் எங்களுக்கான வாய்ப்புகள் தாமதமாகவே கிடைத்தன. எனது ‘1999’ படம் ஈழத்து  சினிமாக்களில் திரைப்படவிழாக்களில் கலந்துகொண்ட முதல் திரைப்படம். 2010-க்குப் பிறகுதான் ஈழத்து சினிமாக்கள் காத்திரமாக வரத் தொடங்கியிருக்கின்றன. தற்போது கோடம்பாக்கத்திலிருந்து வரும் படங்களைவிட, அதிகமாக எங்கள் படங்கள் திரைப்பட விழாக்களுக்குச் செல்கின்றன. எங்கள் திரைப்படங்களின் வீச்சு அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன். எங்கள் மக்களிடமும் எங்கள் படைப்புகளுக்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள். புலம்பெயர்ந்த மக்கள்  வசிக்கும் பகுதிகளில் எங்கள் படங்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிணன. எங்கள் சிரமங்களை எம் மக்கள் புரிந்துகொண்டு, ஒட்டுமொத்த மக்களின் குரலாக எங்கள் படைப்பைப் பார்க்கிறார்கள்.    எனது அடுத்த திரைப்படம்கூட போர் சம்பந்தப்பட்டதுதான். தமிழ்ப் பையனுக்கும் சிங்களப் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் கதை. 1983-ல் ‘பிளாக் ஜூலை’ எனச் சொல்லப்படும் காலகட்டத்தில் நிகழ்வது. போரும் காதலும் பற்றிப் பேச இன்னும் நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன்.

படங்களுக்கான தணிக்கை மற்றும் திரைப்படங்கள் தடை செய்யப்படுவது, இவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கருத்துச் சுதந்திரம் மிக முக்கியம். கனடாவில் அதற்கான ‘ஸ்பேஸ்’ இருப்பதாகவே நான் நினைக்கிறேன். தனி மனிதனின் கருத்துச் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. வன்முறை அதிகமாக உள்ளது எனத் தணிக்கை செய்வது வேறு. ஆனால் ஒருவனின் கருத்துக்குத் தணிக்கை விதிப்பது தவறு. அந்தக் கருத்து தேவையா, இல்லையா என மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சக்தி தமிழ்ச்செல்வன் - படம்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism