Published:Updated:

ரஜினி ரசிகனால், ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியே செய்திருக்கும் தரமான சம்பவம்! பேட்ட விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ரஜினி ரசிகனால், ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியே செய்திருக்கும் தரமான சம்பவம்! பேட்ட விமர்சனம்
ரஜினி ரசிகனால், ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியே செய்திருக்கும் தரமான சம்பவம்! பேட்ட விமர்சனம்

ரஜினி, இந்த ஒற்றை மந்திரம்தான் `பேட்ட'யின் எட்டுத்திக்கும். `பாட்ஷா' ஃபார்மூலா திரைக்கதை, `அண்ணாமலை'யின் டைட்டில் கார்டு, `குரு சிஷ்யன்' குறும்புகள், `தம்பிக்கு எந்த ஊரு' அழும்புகள், `பில்லா'வின் பிஸ்டல் விளையாட்டென ஒட்டுமொத்தமாய் நம் பால்யத்துக்குள் சென்று வந்த உணர்வு. நன்றி கார்த்திக் சுப்புராஜ்! இப்படி ஒரு கண்ணில் வெகுளித்தனமும் இன்னொரு கண்ணில் வெறித்தனமும் கொண்ட ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாள்கள் ஆகின்றன!

ரஜினியை அணுஅணுவாய் ரசித்து லயித்த உடல்மொழிகளையும் வசன உச்சரிப்புகளையும் ஸ்டைல்களையும் மொத்தமாய்க் கலந்து காளி (எ) பேட்ட வேலன் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்கள். மரண மாஸ், வெறித்தனம் போன்ற பதங்களின் அசல் பொருளை படம்காட்டி விளக்கியிருக்கிறார் ரஜினி. முனீஸ்காந்திடம் `ஹே நோ' எனக் கொஞ்சும் பாணியில் பேசி கலாய்ப்பதாகட்டும், `ஹே நீங்களும் வந்துட்டீங்களா' என அடியாட்களிடம் லந்து கொடுப்பதாகட்டும், `கொலை காண்டுல இருக்கேன்' என எள்ளலாய் எச்சரிக்கை கொடுப்பதாகட்டும், வின்டேஜ் ரஜினி இஸ் பேக்! இந்த ரஜினியின் `பேட்ட'யிலும் தனியாய்த் தெரிகிறார் விஜய் சேதுபதி. அலட்டாமல் நடித்துக்கொடுப்பதில்தான் ஜித்து ஜில்லாடி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார், இந்த நடிப்பு கில்லாடி. நமஸ்தே நவாசுதீன் சித்திக், நல்வரவு. மெஷின்கன்களின் தோட்டாக்கள் தெறித்து உடலைத் துளைத்துக்கொண்டிருக்கும் கொடூரமான ஷூட் அவுட்டை அவிழ்த்துவிட்டு, பீடி புகைத்தபடி வேடிக்கை பார்க்குமிடம் `மரண மாஸ்' நவாஸ்! மாலிக்காக சசிக்குமார். அந்த `பாட்ஷா'வுக்கு அன்வர் பாட்ஷா, இந்த `பேட்ட'-க்கு மாலிக்.

படத்தில் சிம்ரனுக்கு உண்மையிலேயே இளமை திரும்பிவிட்டது. `ப்ரியமானவளே' காலத்து சிம்ரன், டைம் டிராவல் செய்துவந்து நடித்ததுபோல் இருக்கிறது. ரஜினிக்கு ஜோடி என்பதைவிட த்ரிஷாவுக்கு வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை. மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சனந்த், இயக்குநர் மகேந்திரன், குரு சோமசுந்தரம், மணிகண்டன் ஆர்.ஆச்சாரி, விவேக் பிரசன்னா, தீபக் பரமேஷ்வர், சின்னி ஜெயந்த் எனப் படத்தில் நிறைய நட்சத்திரங்கள். எல்லாம் சூப்பர் நட்சத்திரத்தின் பேரொளியால் மங்கலாக மாறியிருக்கின்றன.

முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காக இன்ச் இன்ச்சாய் இழைத்து, செதுக்கப்பட்டிருக்கும் படம். அவர்களுக்கு இது சிறப்பான, தரமான சம்பவம். பனி போர்த்திய மலைவாசஸ்தளத்திலிருந்து, அனல் அடிக்கும் மதுரைக்குச் சென்று, அங்கிருந்து உத்தரபிரதேசத்திற்குச் செல்லும் `ரோலர் கோஸ்டர்' விஷுவல். ரேடியோவில் `மலர்ந்து மலராத' பாடலோடு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, அடியாட்களுக்காகக் காத்திருக்கும் காட்சி, இழவு வீட்டில் இன்னொரு மரணத்தை நிகழ்த்த ஜஸ்ட் லைக் தட் முடிவு செய்யும் காட்சியென `மாஸ் மொமன்ட்கள்' படத்தில் எக்கச்சக்கம்.

படத்தின் வசனங்களில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் `ப்ளாக் காமெடி லைனர்கள்' படத்துக்குப் பெரும் பலம். அதை ரஜினி பேசும்போது இன்னமும் பட்டாசாய் இருக்கிறது. திருவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம் போல் இருக்கிறது. லைட்டிங்கில் வண்ணங்கள் விளையாடுகிறது. அப்படியே அள்ளிப்பூசிக்கொள்ளச் சொல்கிறது. விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு, மாஸ் கூட்டியிருப்பதைப் போல் ஓடும் நேரத்தையும் குறைத்திருக்கலாம். பாடல்கள் ஆல்ரெடி ஆல்பம் வெளியானபோதே ஹிட்டடித்துவிட்டன. ஜித்து தீம், சிங்கார் சிங் தீம் எனப் பின்னணி இசையில் அதிர வைக்கிறார் அனிருத். ரஜினிக்காக அவர் போட்டிருக்கும் பின்னணி இசையில் தெறிக்கிறார். `ஃபேன் பாய்' தெரிகிறார்.

மிக எளிதாகக் கணித்துவிடக் கூடிய திரைக்கதை, எத்தனை ரஜினி படம் பார்த்திருப்போம்! கணித்து விடக்கூடிய ட்விஸ்ட்களை வைத்து மூன்று மணி நேரம் திரைக்கதை அமைத்ததில், மூளை அலுப்படையத் தொடங்குகிறது. ரஜினி படத்தில் லாஜிக்கைவிட மேஜிக்தான் ஆக்கிரமித்திருக்கும். ஆனால், இது `கார்த்திக் சுப்புராஜ் படம்' என்பதால் லாஜிக் மீறல்களைப் பற்றியும் பேசவேண்டியிருக்கிறது. படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் எந்தக் காலகட்டத்தில் நடக்கின்றன என்பது பெரும் குழப்பமாய் இருக்கிறது. `குழப்பங்கள் இருந்தால் ஒரு பாடல் எதையாவது ஒலிக்கவிட்டு 5 நிமிடங்கள் நடனமாடினால் போதும்' எனப் படத்தில் மருத்துவம் சொல்கிறார் ரஜினி. அப்படிச் செய்தும் இந்தக் குழப்பம் மட்டும் தீரவில்லை.

ரஜினி மிசாவில் கைதானவர் என்கிறார்கள், அப்படியென்றால் படத்தில் அவர் வயதுதான் என்ன? 20 வருடங்களுக்கு முன் எங்கு ஆன்டனா இல்லாத நோக்கியா போன் புழக்கத்தில் இருந்தது? ஒருவித வின்டேஜ் லுக்தான், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டைல். ஆனால், அதுவே இந்தப் படத்திற்கு `டீட்டெயிலிங்' எனும் ஏரியாவில் பெரும் பாதகமாய் அமைந்திருக்கிறது. ரஜினியின் கதாபாத்திரத்தைத் தவிர, மற்ற பாத்திரங்களின் வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். முக்கியமாய் ஜித்து கதாபாத்திரத்தில்...

`பேட்ட' எனும் ஸ்வீட் பாக்ஸ் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கானது. ஒரே `பாட்ஷா', ஒரே `படையப்பா', ஒரே `சிவாஜி'. இது 'பேட்ட'!