Published:Updated:

என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி

என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி
பிரீமியம் ஸ்டோரி
என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி

என் காதல் சொல்ல வந்தேன்

என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி

என் காதல் சொல்ல வந்தேன்

Published:Updated:
என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி
பிரீமியம் ஸ்டோரி
என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி

‘‘சின்ன வயதிலிருந்தே எனக்கு விஜய் டான்ஸ்னா உசுரு. அடுத்து, ‘ட்வின்ஸ்’ ஆக அஜித் நடித்த ‘வாலி’ எனக்கு ரொம்பவும் பிடித்த படம். அதனாலோ என்னவோ,  11-ம் வகுப்பு படிக்கும்போது, எனக்கு சீனியரான ட்வின் பிரதர்ஸ் மேல் என்னையும் அறியாமல் ஒருவித ஈர்ப்பு வந்து பாடாப்படுத்தியது. என் வகுப்பை அவர்கள் கடந்து செல்லும்போதெல்லாம் அவர்களுக்கே தெரியாமல் ஓரமாக வந்து நின்று நிறைய நாள்கள் சைட் அடித்திருக்கிறேன்!’’- கண்கள் சிமிட்டிப் பேசும் நடிகை அதுல்யா ரவி, அசல் கோயம்புத்தூர் பொண்ணு!

அரசுப் பள்ளி, விவேகம் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா இன்ஜினீயரிங் காலேஜ் என கோவையில் ஒரு ரவுண்டு வந்தவர், சென்னை வந்து எம்.டெக் படித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் படிப்பை நிறைவு செய்தவர், இப்போது முழு நேர நடிகையாகிவிட்டார்.

‘‘அப்பா, அம்மா, தம்பி என்று அழகான குடும்பம். அரசுப் பள்ளி யூனிஃபார்ம் அணிந்துகொண்டு, சைக்கிளிலேயே பள்ளிக்கூடம் போய்வர வேண்டும் என்பதுதான் என் சின்ன வயது ஆசை. இந்த ஆசைக்காகவே ஆறாம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டார் அப்பா. ஆங்கில வழிக் கல்வியில், மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளி அது. அதனால் காதல், கனவு என்று பெரிதாக எதுவும் இல்லாமல் போனது. 

என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி

11-ம் வகுப்புக்காக வீட்டைவிட்டு வெளியில் வந்து ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்ததுதான் புதிய உலகத்துக்கான கதவுகளைத் திறந்துவைத்தது. அப்போதுதான் எனக்கு சீனியரான அந்த ட்வின் பிரதர்ஸைப் பார்த்தேன்!

ப்ளஸ் டூ-வில் ஒருவர் ஏ செக்‌ஷன்; இன்னொருவர் பி செக்‌ஷன். ஒரே டிசைனில் நேர்த்தியாக உடையணிந்து, ஒன்றாகவே வருவதும் போவதுமாக இருப்பார்கள். யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டார்கள். அவர்களது இந்தக் குணம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

இடைவேளையின்போது வகுப்பை விட்டு இந்த இரட்டையர் வெளியில் வருவதற்கு முன்பாகவே, அவர்களை சைட் அடிப்பதற்காக நான் முதல் ஆளாக வகுப்பறை வாசலில் வந்து காத்து நிற்பேன். ‘அண்ணா’ என்று சகஜமாகப் பேசிப் பழகினாலும்கூட, அவர்கள் மீது எனக்கிருந்த ஈர்ப்பானது ஒருதலைக் காதலாகவே மாறிப்போனது.

அடுத்த வருடம் நான் 12-ம் வகுப்பு வரும்போது... அந்த ட்வின்ஸ், படிப்பை முடித்துவிட்டு ஸ்கூலுக்கே டாட்டா காட்டிப் பிரிந்து சென்றதுதான் என் வாழ்க்கையின் முதல் காதல் சோகம். அதை ஈடுகட்டும்விதமாக அந்த வருடமே புதிதாகக் கணக்கு வாத்தியார் ஒருவர் ‘செம்ம்ம்ம்ம அழகா’ வந்து சேர்ந்தார். வயதில் சிறியவர்களான எங்களிடம்கூட ‘வாங்க, போங்க’ என்று மரியாதையாகத்தான் பேசுவார். ‘என்னங்க... ஹோம் வொர்க் பண்ணுனீங்களாங்க...’ என்ற ராகத்துடனான அவரது பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

பள்ளியில் பாடம் எடுத்து முடித்த பிறகும் கூட, ஹாஸ்டல் ஸ்டூடன்ட்ஸுக்காக ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பார். அவர், என்ன பாடம் நடத்துகிறார் என்பதையெல்லாம் நான் ஒருநாளும் கவனித்ததில்லை. எப்படிப் பாடம் நடத்துகிறார் என்று அவரை மட்டுமே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன். கைகள் இரண்டையும் பின்புறம் உள்ள டெஸ்க்கில் மடக்கி வைத்தபடி ‘தெனாவெட்டு லுக்’கில் நான் அவரை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்ததை அவர் ஒருநாள் கவனித்து விட்டார்.

‘என்னங்க... ரவுடி சொர்ணாக்கா மாதிரி உட்கார்ந்து, என்னையே பார்த்துக்கிட்டிருக்கீங்க...’ என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்டேவிட்டார். ‘இப்படி பச்சையாக சைட் அடித்து மாட்டிக் கொண்டோமே’ என்று அசடுவழிந்தது தனிக் கதை. ‘டீன்ஏஜ் வயது, வெட்கமறியாது’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, என் கடமையைத் தொடர்ந்தேன். ஆனால், அன்றிலிருந்து என்னை ‘சொர்ணாக்கா சொர்ணாக்கா...’ என்று கிண்டலாக அழைக்க ஆரம்பித்துவிட்டார் நம்ம கணக்கு வாத்தியார்.

ப்ளஸ் டூ படித்து முடிக்கும்போது இந்தக் காதலுக்கும் ஓர் அதிர்ச்சி செய்தி வந்துசேர்ந்தது. பப்ளிக் எக்ஸாமுக்கு இன்னும் ஒருவார கால இடைவெளிதான் இருக்கிறது. திடீரென ஒருநாள் வகுப்புக்கு வந்து, அனைவருக்கும் இன்விடேஷன் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆமாம்... அவருடைய திருமண அழைப்பிதழ்தான் அது. என் கையிலும் அழைப்பிதழ் ஒன்றைத் தந்து ‘எக்ஸாமெல்லாம் முடிந்த பிறகுதான் கல்யாணம். அதனால் கட்டாயம் வந்துவிட வேண்டும்’ என்று கட்டளையாகவே சொன்னார். எனக்கோ உலகமே காலடியில் நழுவிப்போனது மாதிரி கிறுகிறுத்தது. ‘என்ன சார் திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க. மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு சார்’ என்று அவரிடமே வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். ‘என்ன சொர்ணாக்கா இப்படிச் சொல்றீங்க?’ என்று அவரும் குழம்பி நின்றார். ‘போங்க சார்...’ என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டேன்.

என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி

சினிமாவில், சூறைக்காற்றோடு சுனாமியடித்து எரிமலையெல்லாம் வெடிக்குமே... அவையெல்லாமே அந்த நாளில், எனக்குள்ளும் நிகழ்ந்தன. இன்னமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த சோகத்தை என்னவென்று சொல்வது? இருவருமே காதலித்து இடையிலேயே பிரியநேரிட்டால், அது ப்ரேக் அப்!  வெறுமனே ஒன்சைடா சைட் மட்டுமே அடித்துக்கொண்டிருந்த காதலிலும் பிரிவு என்றால், அதை ‘காதல் தோல்வி’ என்றுதானே சொல்ல வேண்டும்!’’ என்று சிறியதொரு பெருமூச்செறிந்தவரிடம், ‘ அதுல்யா, படிப்பில் எப்படி...’ என்றோம்

‘‘கண்ணாடி போட்ட ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட் நான் கிடையாது. ஸ்கூலை கட் அடிக்கிற பொண்ணும் கிடையாது. ஸ்கூல், காலேஜ்னு எங்கேயுமே ரவுடி செட் ஒன்றை உருவாக்கிக்கொள்வேன். பரீட்சைக்கு முந்தைய இரண்டு நாள்கள் மட்டுமே விடிய விடிய உட்கார்ந்து படித்து, 95-க்குக் குறையாமல் மார்க் வாங்கிவிடுவேன். ப்ளஸ் டூ தமிழ்ப் பாடத்தில் 196 மார்க். கணக்குப் பாடத்தில் மட்டும் 192. கணக்கு வாத்தியாருக்கு மட்டும் கல்யாணம் ஆகாமலிருந்திருந்தால் நிச்சயம் சென்டம் வாங்கியிருப்பேன்.

எந்நேரமும் ஃப்ரெண்ட்ஸோடு நான் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘நீ ஒழுங்கா உட்கார்ந்து படிச்சால், நிச்சயம் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியும்’ என்று டீச்சர் ஒருத்தர் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார்.

காலேஜில்கூட, கல்ச்சுரல் டீமில்தான் நான் ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன். டான்ஸ் ரொம்பவும் பிடிக்கும். எந்தப் பயிற்சி வகுப்பிலும் சேராமல், நானாகவே ஆடிப் பயிற்சி எடுத்துக்கொண்டு மேடையேறினேன்’’ என்று கண்கள் விரியக் கதைக்கும் அதுல்யா, நடிகர் விஜய்யின் நடனத்துக்கு அடிமை.

‘‘காலேஜ் வாழ்க்கைக்கு வந்தபிறகு, நானும் என் நெருங்கிய தோழி ஒருத்தியும் கூட்டு சேர்ந்து, சீனியர் ஒருவரை சைட் அடித்தோம். இதற்காக, ‘ஆளுக்கொரு மாதம் சைட் அடிக்கலாம்’ என்று எழுதப்படாத ஓர் ஒப்பந்தத்தை எங்களுக்குள் போட்டுவைத்துக் கொண்டோம். அதன்படி, எங்களை ‘அவர்’ க்ராஸ் செய்யும்போதெல்லாம், வேண்டுமென்றே என் பெயரை சத்தமாகச் சொல்லி அழைப்பாள் அந்தத் தோழி. அவரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு டெக்னிக். அடுத்த மாதம் முழுவதும், அவளது பெயரை நான் உரக்கச் சொல்லி அழைக்க வேண்டும். எங்களவரின் கவனத்தை எங்கள் பக்கம் திரும்பவைக்க முயற்சியை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தோம். ஏனோ கடைசிவரை அவர் யார் பக்கமும் திரும்பாமல் போயே போய்விட்டார்.

இப்படி நான் காதலித்த கதைகள் அல்லாமல், என்னைக் காதலித்தவரின் கதையையும் சொல்ல வேண்டுமே. ப்ளஸ் டூ படிக்கும்போது, தோழி ஒருத்தி என்னிடம் புதிய பேனா ஒன்றைத் தந்து, ‘அந்த சீனியர் அண்ணாதான் இந்தப் பேனாவை உன்னிடம் கொடுக்கச் சொன்னார். இந்தப் பேனாவை வைத்துதான் நீ எக்ஸாம் எழுத வேண்டுமாம்’ என்றாள். நானும்கூட சீரியஸ்னெஸ் புரியாமல், ‘அடடா... நாம எக்ஸாம் எழுதுறதுக்காகவே புதுசா பேனாவெல்லாம் வாங்கித் தந்து வாழ்த்துகிறாரே...’ என்ற குஷியில் அந்தப் பேனாவிலேயே எக்ஸாமும் எழுதி முடித்தேன். என்னுடைய இந்தச் செயலை, ‘அந்த அண்ணா’ அவருடைய காதலை நான் ஏற்றுக்கொண்ட தற்கான சமிக்‌ஞையாக எடுத்துக்கொண்டு என்னிடம் பேச முயல, ‘அய்யோ அண்ணா... நா அப்படியெல்லாம் நினைக்கலை’ என்று நான் பின்வாங்க... கோபத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளிலெல்லாம் என்னை வறுத்தெடுத்துவிட்டுப் போய்விட்டார் அந்த ‘அண்ணா’!

என்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க? - அதுல்யா ரவி

இந்த காமெடிக் காதல்களுக்கிடையே, கல்லூரியில் உடன் படித்த நண்பர் ஒருவரோடு சீரியஸாகக் காதல் கொண்டேன். அவரும் அளவற்ற அன்போடே பழகினார். ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் நீடித்த அந்தக் காதல், திடீரென ஒருகட்டத்தில் புரிதலின்மையால் உடைந்துபோனது. இருவருமே மனமொத்து பிரிந்துவிட்டோம்.

தாய்மையுணர்வு பெண்ணுக்கே உரியது என்பதுபோல, தன்னை நம்பிவரும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஆண்களிடத்தில் மேலோங்கியிருப்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்தக் குணாம்சத்தைத்தான் ஆணுக்கான அடையாளமாகவும் நான் நினைக்கிறேன். மற்றபடி, சிக்ஸ்பேக் வைத்துக்கொள்வதும் சாகசங்கள் புரிவதும் மட்டுமே ஆண்மையின் அடையாளங்கள் என்று நினைத்துக் கொள்பவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.

காதலியோ, மனைவியோ... யாராக இருந்தாலும் அவர்களுக்கான சுதந்திரத்தை இடையூறு செய்யாத ஆண்தான் நல்லதொரு துணையாக இருக்க முடியும்’ என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், பெண்ணின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் அவளது மனம் வெறுக்காத வகையில் நடந்து கொள்வதும்தானே உண்மையான ஆண்மை!’’

- அசத்தலான பஞ்ச் வைத்து நிறைவுசெய்கிறார் அதுல்யா ரவி!

காதல் வரி
`ஜீன்ஸ்' படத்தில் `ஹைர ஹைர ஹைரப்பா...' பாடலில் வரும் ‘இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும் அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது’

காதல் படம்

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் வரும் சூர்யா - பூமிகா காதல் காட்சிகள், மனதுக்கு ரொம்பவும் நெருக்கமானவை.

பிடித்த நடிகர்
பக்கத்து வீட்டுப் பையன் லுக்கில் உள்ள மாநிற ஆண்களைப் பிடிக்கும். உதாரணமா நடிகர் விஜய் சேதுபதி!

-  த.கதிரவன்,  படங்கள் : க.பாலாஜி