Published:Updated:

நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி

நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி
பிரீமியம் ஸ்டோரி
நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி

சிஸ்டர்ஸ்

நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி

சிஸ்டர்ஸ்

Published:Updated:
நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி
பிரீமியம் ஸ்டோரி
நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் சினிமாவில் தனது ரீ-என்ட்ரியை ஆரம்பிக்கிறார் ரித்விகா. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தன் அமைதியையும் ஆரவாரமற்ற அணுகுமுறையையுமே ஆயுதங்களாக்கி, டைட்டில் ஜெயித்தவர். அவை போட்டிக்காக அவர் பயன்படுத்திய `ஸ்ட்ராட்டஜி' என்று பலராலும் விமர்சிக்கப் பட்டாலும், ரித்விகாவின் இயல்பே அதுதான் என்பது அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ரித்விகாவை அவரைவிடவும் அதிகம் புரிந்து வைத்திருப்பவர் அவரின் அக்கா ஜானகி. சென்னையின் பிரபல மருத்துவமனையில் ஹெச்.ஆர் பிரிவில் வேலை பார்க்கிற ஜானகி, தன் பாசப் பிணைப்பைப் பகிர்கிறார்.

‘`நாங்க ரொம்ப சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. பஸ்லதான் போவோம். அப்போ பக்கத்துல இருக்கிறவங்களுடைய கையையே பார்ப்போம். அந்தக் கை கொஞ்சம் கலரா இருந்துட்டா அவ்வளவுதான்... ‘பாருடி... எவ்வளவு கலரா இருக்காங்க’னு நான் சொல்வேன். ரித்விகாவோ, ‘அதெல்லாம் ஒரு விஷயமே இல்லக்கா. நம்ம கலர்தான்க்கா நம்ம ஸ்பெஷலே. இதுக்காக நாம பெருமைதான் படணும்’னு சொல்வா. ரித்விகாவின் கலரை வெச்சுக் கலாய்ச்சவங்களுக்கெல்லாம் தன் நடிப்புத் திறமையாலும், டப்பிங் தேவைப்படாத சொந்தக் குரலில் பேசறது மூலமாகவும் பதிலடி கொடுத்தாள். சினிமாவுக்கு வந்த பிறகும்கூட அவளுக்குத் தன் ஸ்கின் கலர் பத்தின வருத்தம் கிடையாது. சருமத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணும்னு நினைப்பாளே தவிர, எப்படியாவது கலராயிடணும்னு நினைச்சதே இல்லை’’ - ரித்விகா அரிதாரமற்றவர் என்பதற்கு அக்காவின் அறிமுக உரையே போதும்..

நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி

‘`ரித்விகாவுக்காக நான் ரொம்ப எமோஷனல் ஆன டைம்னா, பிக் பாஸ் ஃபைனல் ரவுண்டுதான். அவ அதிகம் பேச மாட்டா. யார்கூடவும் சண்டை போட மாட்டா. ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே ஒவ்வொரு நாளும் அவ எப்படி சமாளிக்கப் போறானு பயந்துட்டேதான் இருந்தேன். ‘ராணி மகாராணி’ டாஸ்க் நடந்தபோது தாங்க முடியலை. இப்பக்கூட பேசாம, சண்டை போடாம இருக்காளேனு அவமேல கோபம் வந்தது. நாமினேஷன்ல வெளியில வந்துட்டாகூட ஓகேனு நினைச்சேன்.  எல்லாத்தையும் தாண்டி அவ டைட்டில் வின் பண்ணிட்டா. எங்க குடும்பத்துல எல்லோருக்குமே அதுதான் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம். அவளால நானும் ஓவர்நைட்டுல பாப்புலராயிட்டேன்.

‘இப்போ கல்யாணம் வேண்டாம். நிறைய நடிச்சிட்டு, வாழ்க்கையில செட்டிலான பிறகு கல்யாணம் பண்ணிக்கோ போதும்’னு அவளுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கேன். வீட்டுல இன்னும் அவளுடைய கல்யாணப் பேச்சைக்கூட ஆரம்பிக்கலை. ஆனா, அதுக்குள்ள அவ கல்யாணம் எப்படி நடக்கணும், அதுக்கு யாரெல்லாம் என்ன டிரஸ் போடணும், எப்படி ஹேர் ஸடைல் பண்ணணும் என்கிற வரைக்கும் பிளான் பண்ணி வெச்சிட்டேன். அவளுடைய கல்யாண வாழ்க்கை ரொம்ப சூப்பரா அமையணும். என் தங்கை எனக்கு அவ்வளவு ஸ்பெஷல்.’’

அன்பைச் சொல்வதில் அக்காவுக்குச் சளைத்த வரில்லை ரித்விகா.

‘`அக்கா என்னைவிட ரெண்டு வயசுதான் பெரியவங்க. ஆனா, என் வாழ்க்கையில அவங்க வெறும் அக்காவா மட்டுமில்லாம, அம்மாவா, அப்பாவா, தோழியா, ஆசானா... இப்படி எல்லாமாகவும் இருக்கிறவங்கனு சொல்லலாம். நாங்க குழந்தைங்களா இருந்தபோ அப்பா சில வருஷங்கள் வெளிநாட்டில் இருந்தார். என்னையும் அக்காவையும் காலையில அம்மா ஸ்கூலுக்குக் கூட்டிட்டு வந்துவிடுவாங்க. சாயந்திரம் அக்காதான் என் கைப்பிடிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. லஞ்ச் டைம்ல என் டிஃபன் பாக்ஸைத் திறந்துகொடுக்கிறதுலேருந்து ஒவ்வொரு விஷயத்துலயும் என்னைப் பார்த்துப்பாங்க. ஹோம்வொர்க்கில் ஹெல்ப் பண்ணுவாங்க. அக்கா என்னைவிட சூப்பரா படிப்பாங்க. வீட்டுக்குள்ளே அக்காதான் எனக்கு மேத்ஸ் டீச்சர்.

சின்ன வயசுல எனக்குப் பெருக்கலும் வகுத்தலும் வரவே வராது. அக்கா சொல்லிக்கொடுத்த முறையில படிச்சதால தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் எந்த வாய்ப்பாட்டையும் விரல்விட்டு எண்ணாம சொல்ற அளவுக்கு எக்ஸ்பெர்ட் ஆயிட்டேன். இங்கிலீஷ் டீச்சரும் அவங்கதான். இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் எழுதக் கத்துக்கொடுத்தாங்க. சின்ன வயசுல நானும் அக்காவும் நிறைய சண்டை போட்டிருக்கோம். அப்பா ஃபாரின்லேருந்து எங்களுக்கு டிரஸ் அனுப்புவார். ஆளுக்கொரு கலர்ல அனுப்பியிருப்பார். ஆனா, ரெண்டு பேரும் ஒரே கலர் கேட்டு அடிச்சிப்போம்.’

 ரெண்டு பேரும் பெண்களா பிறந்துட்டதால, பார்க்கிறவங்க எல்லாரும், ‘பசங்க இல்லையா... ஏதாவது அவசரம்னா என்ன செய்வீங்க’னு கேட்டிருக்காங்க. பெண்கள் சுயசார்போடு வாழணும்னு நினைக்கிறவங்க அக்கா. ‘நமக்குப் பொருளாதார சுதந்திரம் இருக்கணும். பேங்க் பேலன்ஸ் இருக்கணும். கார் ஓட்டக் கத்துக்கணும். வீட்டுல ஏதோ எமர்ஜென்சின்னா யார்கிட்டயும் உதவி கேட்டு நிற்க வேண்டாம். நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்’னு அக்கா அடிக்கடி சொல்வாங்க. `பசங்க ஓட்டினாதான் கார் ஓடுமா?'னு பதிலடி கொடுப்பாங்க.

நடிக்கப்போறேன்னு சொன்னதும் அக்காதான் முழுசா சப்போர்ட் பண்ணினாங்க. ‘நம்ம குடும்பத்துல யாருமே கலைத்துறையில இல்லை. என்னை மாதிரி நீயும் வேலைக்குத்தான் போகணுமா வித்தியாசமா ஏதாவது பண்ணு’னு என்கரேஜ் பண்ணினாங்க.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகுதான் எனக்கு பாலா சார் மூலமா ‘பரதேசி’ படத்துல முதல் வாய்ப்பு வந்தது. அக்காவுக்கு சினிமாவைப் பத்தி எதுவும் தெரியாது. ஆனா, அவங்க சொன்ன விஷயங்கள், பல வருஷ சினிமா அனுபவம் உள்ளவங்களுடைய அட்வைஸ் மாதிரி இருக்கும். ‘டைரக்டருக்கு மரியாதை கொடு... எதிர்த்துப் பேசாதே... எந்த சீன்லயும் சட்டுனு திருப்தியாயிடாதே. உன்னால உன் அதிகபட்ச நடிப்பைக் கொடுக்க முடியுமானு பாரு. உன் பெஸ்ட்டை கொடுக்க முயற்சி செய்’னு சொன்னாங்க.

நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்! - ரித்விகா - ஜானகி

நடிகையாயிட்டேன். ஆனா, நான் எதிர்பார்த்தபடி நல்ல படங்கள் நிறைய வரலை. நல்ல வாய்ப்புகள் வருமானு நான் சோர்ந்துபோய் உட்காரும்போதெல்லாம் என்னை அரவணைச்சு, தைரியம் சொல்றவங்க அக்காதான். போராட்டமான காலகட்டத்துல என்கூடவே இருந்திருக்காங்க. ‘போராடாம எந்த வெற்றியும் கிடைக்காது. எந்தப் பின்னணியும் இல்லாம புதிய துறைக்குள்ளே கால் பதிக்கிறதும், அங்கே ஜெயிக்கிறதும் சாதாரண காரியமில்லை. ஆனா, மனசுவிட்டுப் போயிடாதே... உன்னால முடியும்’னு சொல்வாங்க.

என் கரியரில் ஓர் இடைவெளி வந்த டைம் அது... டி.வி சீரியல்ல நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கொஞ்சம் பொறுமையா இரு. உனக்கு சினிமாவிலேயே நல்ல வாய்ப்புகள் வரும். சீரியல்ஸ்ல எப்போ வேணா நடிக்கலாம்’னு சொன்னவங்க அக்காதான். காத்திருந்தேன்... பிக் பாஸ் வந்தது. இப்போ நல்ல நல்ல படங்கள் பண்றேன். அக்கா பேச்சைக் கேட்டதால என் வாழ்க்கை அடுத்தடுத்து உயரத்துக்குப் போயிட்டிருக்கு. லவ் யூ அக்கா...’’ - ஜானு புகழ் பாடுகிற ரித்விகா, ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருந்தபோது அடிக்கடி அக்காவையும் அவர் குழந்தையையும் நினைவுகூர்ந்திருக்கிறார்.

‘`பிக் பாஸ் சீசன் ஒன்னின் வைல்டு கார்டுக்கு என்னைக் கூப்பிட்டாங்க, ஆனா, போக முடியலை. அடுத்த சீசனுக்குக் கூப்பிட்டபோது, ‘அவ்வளவு நாளெல்லாம் உன்னைப் பார்க்காம இருக்க முடியாது. சீக்கிரம் வந்துடு’னு சொல்லி அனுப்பினாங்க அக்கா. பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போன பிறகுதான் அக்காவை நான் எவ்வளவு மிஸ் பண்றேன்னு தெரிஞ்சது. `மூணே வாரத்துல வெளியில வந்துடு'னு சொன்ன அதே அக்கா, நான் டைட்டில் வின் பண்ணணும்னு வேண்டிக்கிட்டே இருந்தாங்களாம்.

அக்கா கல்யாணத்துக்குப் பிறகு அவங்களை மிஸ் பண்ண ஆரம்பிச்சேன். நாங்க பேசின, சிரிச்ச, ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சுக்கிட்ட நாள்களை மறக்கவே முடியாது. அக்காவும் நானும் பெரும்பாலான நேரம் ஒண்ணாவே இருந்திருக்கோம். ராத்திரி ஒண்ணா, ஒரே ரூம்லதான் தூங்குவோம். சினிமாவிலேருந்து, கிரிக்கெட் மேட்ச் வரை எல்லாத்தையும் பேசுவோம். அரசியலை அலசுவோம். அக்காவுக்குனு ஒரு குடும்பம், குழந்தைனு ஆயிடுச்சு. வேலைக்கும் போயிட்டு, குழந்தையையும் பார்த்துக்கிட்டு, கூட்டுக்குடும்பத்துல அனுசரிச்சு வாழறதைப் பார்க்கிறபோது, `நேத்துவரைக்கும் என்கூட விளையாடினவங்களா இவங்க'னு தோணும். நாளுக்கு நாள் அவங்க மேல மரியாதை கூடுது.’’ - ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் ரித்விகா முடிக்க, ‘பெஸ்ட் சிஸ்டர்’ டைட்டில் ஜெயித்தவர் போல மலர்ந்து சிரிக்கிறார் அக்கா!

-  ஆர்.வைதேகி,  படங்கள் : வள்ளிசௌத்திரி.ஆ