Published:Updated:

`உன் சினிமா வாழ்க்கையே பாழாகிவிடும்!’ - பாலியல் புகாரில் சிக்கிய ராஜ்குமார் ஹிரானி

`உன் சினிமா வாழ்க்கையே பாழாகிவிடும்!’ - பாலியல் புகாரில் சிக்கிய ராஜ்குமார் ஹிரானி
`உன் சினிமா வாழ்க்கையே பாழாகிவிடும்!’ - பாலியல் புகாரில் சிக்கிய ராஜ்குமார் ஹிரானி

`உன் சினிமா வாழ்க்கையே பாழாகிவிடும்!’ - பாலியல் புகாரில் சிக்கிய ராஜ்குமார் ஹிரானி

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மீது, பெண் உதவி இயக்குநர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 


`முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’, `3 இடியட்ஸ்’, `சஞ்சு’ உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. பாலிவுட் நடிகர் `சஞ்சய் தத்’ நடிப்பில் இவர் இயக்கிய `முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படம் தமிழில் கமல் நடிப்பில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ்’ படம்தான் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படம். இந்நிலையில், ராஜ்குமார் ஹிரானி மீது சஞ்சு படத்தில் அவரின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 6 மாதகாலம், ராஜ்குமார் ஹிரானியால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளரான வினோத் சோப்ரா, அவரின் மனைவியான அனுபமா சோப்ரா, படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் அபிஜத் ஜோஷி உள்ளிட்டோருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். ராஜ்குமார் ஹிரானி தனது வழக்கறிஞர் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவரின் வழக்கறிஞர் தேசாய், ``இயக்குநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு என்பது முற்றிலும் பொய், வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்’ என விளக்கமளித்துள்ளார். மேலும் அந்தப் பெண் அனுப்பியுள்ள இ-மெயிலில், `2018-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி, ஹிரானி தனது வீடு மற்றும் அலுவலகத்தில் பாலியல் ரீதியாகப் துன்புறுத்தினார். அப்போது நான் கூறிய வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவில் உள்ளன. நான் அவரிடம், `சார் இது தவறான விஷயம். இந்த அதிகார கட்டமைப்பின்படி நீங்கள் என்னைவிட உயர்ந்த அதிகாரத்தில் இருக்கிறீர்கள். நான் வெறும் உதவி இயக்குநர்தான். என்னால் முழுமையாக என்னை வெளிப்படுத்த முடியாது’ என்றேன்.

அன்றிலிருந்து ஆறுமாதங்கள் என்னால் சரிவர செயல்பட முடியவில்லை. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என் வேலை என்னிடமிருந்து பறிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு போராடி வேலைபார்த்தேன். அதைப் பற்றியே எந்நேரமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். பாதியில் விலகினால் மீண்டும் இதே துறையில் என்னால் பயணிக்க முடியாது. காரணம் ஒருமுறை ஹிரானி, `என் விருப்பதுக்கு மாறாக நீ நடக்க முயன்றால் உன் சினிமா வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படும்’ என்று மிரட்டினார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ராஜ்குமார் ஹிரானி பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த இ-மெயில் தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளரான வினோத் சோப்ரா எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவரின் மனைவி அனுபமா சோப்ரா அந்தப் பெண் இ-மெயில் அனுப்பியிருப்பதை உறுதிசெய்துள்ளார்.

அவர் கூறுகையில், ``எனக்கு இந்தப் புகார் கிடைத்தது. இதில் என் ஆதரவை அந்தப் பெண்ணுக்கு வழங்கியிருக்கிறேன். இருப்பினும், இதில் எது உண்மை என்பதை அறிய சட்ட அமைப்பு இருக்கிறது. நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று அந்தப் பெண்ணிடம் கூறினேன். அவள் இரண்டு நாள்கள் எங்கள் வீட்டில் தங்கினாள். அவளிடம் நான் இந்தப் பிரச்னை தொடர்பாக யாரைத் தொடர்புகொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினேன். இந்தப் பிரச்னையை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து யோசிக்க கால அவகாசம் வேண்டுமென்று அவள் என்னிடம் கூறினாள். அவள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவளுக்கு ஆதரவாக இருப்போம்” என்றார். சஞ்சு படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் அபிஜத் ஜோஷி பேசுகையில், `அந்தப் பெண்ணின் பிரச்னையைக் காதுகொடுத்து கேட்பது என் கடமை. அவளுக்கு துணை நிற்பேன். மேலும், அறம் தவறமாட்டேன்” என்று கூறியுள்ளார். இந்தச் சர்ச்சையின் எதிரொலியாக பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ரா இயக்கத்தில் பிப்ரவரி 1-ம் தேதி வெளிவரவிருக்கும் `எக் லட்கிகோ தேகாதோ யேசா லகா’ (Ek Ladki Ko Dekha Toh Aisa Laga) படத்தின் போஸ்டரிலிருந்து ஹிரானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்குமார் ஹிரானி என்பது குறிப்பிடத்தக்கது.


 

அடுத்த கட்டுரைக்கு