Published:Updated:

இயக்குநர் மகளை ஏமாற்றியதாக வழக்கு பதிவு! -கைதாவாரா ஆறுமுகசாமி மருமகன்?

இயக்குநர் மகளை ஏமாற்றியதாக வழக்கு பதிவு! -கைதாவாரா ஆறுமுகசாமி மருமகன்?
இயக்குநர் மகளை ஏமாற்றியதாக வழக்கு பதிவு! -கைதாவாரா ஆறுமுகசாமி மருமகன்?

இயக்குநர் மகளை ஏமாற்றியதாக வழக்கு பதிவு! -கைதாவாரா ஆறுமுகசாமி மருமகன்?

ரஜினி, ஸ்ரீப்ரியா நடிப்பில் 1978-ல் வெளியான படம் பைரவி. படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர். `ஆஸ்கார் மூவிஸ்' பாஸ்கர் என்றால் கோலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். `சூலம்’, `தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ கார்த்திக் நடித்த `சக்ரவர்த்தி', விஜய் நடித்த 'விஷ்ணு' உள்ளிட்ட சில படங்களின் தயாரிப்பாளரும் இவரே. கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள். இந்தக் குடும்பத்துக்குள் சமீபத்தில் நடந்த ஒரு வில்லங்கம் தற்போது புகாராகப் போலீஸ் ஸ்டேஷனை எட்டியுள்ளது.

பாஸ்கர் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் நம்மிடம் பேசினார்கள்.

``பாஸ்கரோட ஒரே பொண்ணு ஜானகிப்ரியா. கோவையைச் சேர்ந்த ஆனந்த் மகராஜன்ங்கிறவருக்குத் திருமணம் செய்து கொடுத்தாங்க. ஆனந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்துல மர்மம் இருக்கான்னு விசாரிச்சிட்டிருக்கிற, `ஆறுமுகசாமி கமிஷன்' தலைவர் ஆறுமுகசாமியின் சகோதரி மகன். ஆறுமுகசாமி தலைமையில்தான் ஆனந்த் - ஜானகிப்ரியா கல்யாணம் நடந்தது. ஆரம்பத்துல ஒழுங்காதான் இருந்தார் ஆனந்த். போகப்போக அவரது நடவடிக்கைகள் சரியில்லை. ஜானகிப்ரியாவின் சகோதரருக்கு வாழ்க்கைப்பட்டு, அந்த வீட்டுக்கு மருமகளா வந்த பிரியதர்ஷினியுடன் நெருக்கமாப் பழகத் தொடங்கினார். அதாவது தங்கை முறைப் பெண்ணுடன் தவறான நோக்கத்துடன் பழகத் தொடங்கினார். ரெண்டு பேரையுமே வீட்டுல இருந்த பெரியவங்க கண்டிச்சும், இந்தத் தொடர்பு நிற்கலை. ஒருகட்டத்துல எல்லை மீறிப் போனதோட விளைவு, இன்னைக்கு விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்திடுச்சு. இப்ப ஆனந்த், ப்ரியதர்ஷினி ரெண்டு பேரும் திடீர்னு எங்கேயோ தலைமறைவாகிட்டாங்க' என்கிறார்கள் இவர்கள்.

இது குறித்து கடந்த (2018) அக்டோபர் மாதம் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஜானகிப்ரியா புகார் அளிக்க புகாரைப் பெற ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாம் காவல்துறை. தொடர் முயற்சிக்குப் பிறகு புகார் ஏற்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள ராயப்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசித்ராவிடம் பேசினோம்.

``நான் இந்த ஸ்டேஷனுக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. புகார் வந்தபோது இங்க மஞ்சுளாங்கிறவங்கதான் இன்ஸ்பெக்டரா இருந்தாங்க. ஆனாலும் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க. இந்த வழக்குல மேற்கொண்டு என்ன நடவடிக்கைங்கிறதை இப்ப என்னால சொல்ல முடியாது. கேஸ் ஹிஸ்டரி பார்க்கணும்' என்கிறார் இவர்.

''மகளிர் ஆணையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்' என்கிற ரீதியில் சென்ற ஒருவித அழுத்தம் காரணமாகவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகச் சொல்கிற பாஸ்கர் குடும்பத்தின் உறவினர்கள், ஆனந்த் கைது செய்யப்படாதது குறித்தும் இப்படி அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்கள்.

`ஆனந்த் கைது செய்யப்படாத பின்னணியில என்ன காரணம் இருக்கும்னு பெரிசா யூகிக்கத் தேவையில்லை. 'தாய்மாமன் பாதுகாப்புலதான் பத்திரமா எங்கேயோ இருக்கலாம்'னுதான் எங்களுக்கு நினைக்கத் தோணுது. இந்தப் பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வராமத் தடுக்க தொடக்கத்துல நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனா 'அதிகாரம் இருக்கு; நம்மை யார் என்ன செய்வாங்கன்னு பார்த்துக்கலாம்'ங்கிற மனப்பான்மையில சிலர் இருந்தாங்க. வேற வழியில்லாமத்தான் புகார் தர்ற முடிவுக்கு வந்தோம். நேர்மையான போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் வாங்கித் தருவாங்கன்னு நம்பறோம்'.

ஜெயலலிதா மரணத்தில் பதுங்கியிருக்கும் மர்மங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முன், தன் மருமகன் மீதான புகாரில் தன் பெயரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிற விவகாரத்திலும் தெளிவான தீர்ப்பைத் தருவாரா ஆறுமுகசாமி?

பொறுத்திருந்து பார்ப்போம்.


 

அடுத்த கட்டுரைக்கு