Published:Updated:

ராமராக, கிருஷ்ணராக என்.டி.ஆர். சரி... அந்த ஒரு டஜன் கேமியோக்கள் ? - எப்படியிருக்கிறது `கதாநாயகுடு'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராமராக, கிருஷ்ணராக என்.டி.ஆர். சரி... அந்த ஒரு டஜன் கேமியோக்கள் ? - எப்படியிருக்கிறது `கதாநாயகுடு'
ராமராக, கிருஷ்ணராக என்.டி.ஆர். சரி... அந்த ஒரு டஜன் கேமியோக்கள் ? - எப்படியிருக்கிறது `கதாநாயகுடு'

சிறுவயது நடிகைகளுடன் வயதுக்கு மீறி நடிப்பதை வீட்டில் இருக்கும் பெண்களே விரும்பவில்லை என ஒரு தென்னிந்திய சூப்பர்ஸ்டாரின் நடிப்பை சுயவிமர்சனம் செய்யவும் கதாநாயகுடு தவறவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என்.டி.ராமாராவ் இல்லாத தெலுகு சினிமா என ஒன்று இல்லை. தெலுகு சினிமா பார்த்த யாரும் என்.டி.ஆர் இல்லாத ஒரு சினிமா உலகத்தைக் கற்பனை கூட செய்ய முடியாது. தெலுகு ரசிகர்கள் மொட்டையடித்துக்கொண்டு என்.டி.ராமாராவின் வீட்டின் முன் நிற்பார்கள். என்.டி.ராமராவ் கிருஷ்ணராக வீட்டுப் பால்கனியில் கையசைக்கப் பரவச நிலையில் பக்தர்கள்/ ரசிகர்கள் கலைந்து செல்வார்கள். இந்தக் கதையை நம்மில் பலர் கேட்டிருக்கலாம். இதெல்லாம் சரியான லுல்லாயி எனக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், இதெல்லாம் நிகழ்ந்த உண்மை என அதை டிஜிட்டலில் திரைப்படமாகச் சொல்கிறது ராமாராவின் பயோபிக்கான என்.டி.ஆர் கதாநாயகுடு.


அரசு வேலையில் இருக்கும் என்.டி.ஆர், அதிலிருக்கும் ஊழலைச் சகித்துக்கொள்ள முடியாமல், எல்.வி பிரசாத்தின் அழைப்பிதழை ஏற்று சினிமாவுக்குச் செல்கிறார். பாதாள பைரவியில் ஆரம்பிக்கும் ராமாராவுக்கு அடுத்து இறங்குமுகமே இல்லை. சினிமாவில் ராமாராவுக்கு எல்லாமே தானாக நடக்கிறது. தெரு நாடகம் போட்டால் கூட, மூட்டையில்தான் வசூல் குவிகிறது. தன்னுடன் அறையைப் பகிர்ந்துகொண்ட நபர்களுக்குத் தன் முதல் தயாரிப்பில் வாய்ப்புத் தருவது, தன்னை ராமராக வழிபடும் ஏழைக் குடும்பத்தில் சாப்பிடுவது, மகன் இறந்ததை மறைத்து காமெடிக் காட்சியில் நடித்துக் கொடுப்பது, எனப் படம் முழுக்கவே ராமாராவின் பிம்பம் தெய்வம் மனுஷ ரூபமாகவே கட்டமைக்கப்படுகிறது. என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கை தகவல்களாகப் படம் நெடுகிலும் சொல்லப்படுகிறது. என்.டி.ஆரின் திரையுலக என்ட்ரி, தெலுகு சினிமாவில் அவர் கொடிகட்டிப் பறந்த காலம், அரசியல் கட்சி அறிவிப்பு என அடுத்தடுத்து கால வரிசையில் நகரும் திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு.

என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா. ரைமிங் பஞ்ச்களுக்கும், மாஸ் என்டெர்டெய்னர்களுக்கும் மட்டுமே பழக்கப்பட்ட பாலகிருஷ்ணாவின் சமீபத்திய ஆகச்சிறந்த பெர்ஃபாமன்ஸ் இதுதான். வயது ஏற ஏற ஹேர் ஸ்டைல், பேசும் தொனி எனப் பலவற்றை மாற்றி, அட பாலய்யாவா இது என வியக்க வைக்கிறார். அதிலும் கிருஷ்ணராக மேக் அப் செய்துகொண்டு வரும் அக்காட்சியில் செட்டிலிருக்கும் நபர்களின் ரியாக்ஷன் மெர்சல் கூஸ் பம்ப். வெள்ளத்தின் கோரப்படியில் சிக்கிக்கொள்ளும் போது நிலைகுலைந்து போகும் காட்சிகளில் மிளிர்கிறது பாலகிருஷ்ணாவின் அனுபவ நடிப்பு. ஆச்சர்யப்பட்டுக் கொண்டே இருக்கையில் ``தமிழ்நாட்டில் எமெர்ஜென்சியாக இருக்கலாம், ஆனால் எனக்கு இது அர்ஜென்ஸி" என ராமராவ் கர்ஜிக்கும்போது அய்யய்யோ என ஷாக் அடிக்க வைக்கிறார் பாலய்யா. பயோபிக்லயும் பஞ்சா பாலய்யா.


 

என்.டி.ஆரின் மனைவியாக வித்யாபாலன், சகோதரராக ராஜா, நாகி ரெட்டியாக பிரகாஷ் ராஜ் எனப் பல தெரிந்த முகங்கள். கேமியோக்களில் நித்யா மேனன் தொடங்கி ஹன்சிகா, ஸ்ரேயா, ரகுல் ப்ரீத் சிங், ஷாலினி பாண்டே பூனம் பஜ்வா, மஞ்சிமா மோகன், ப்ரனிதா என ஒட்டுமொத்த நடிகை பட்டாளமே நடித்திருக்கிறார்கள். நாசர், பிரம்மாநந்தம், ரானா டகுபதி என ஆண்களின் கேமியோ பட்டியலும் ஒன்றும் சளைத்ததற்கு இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் கேமியோக்கள் வந்துகொண்டே இருப்பதால், ஏற்கெனவே துதி தூக்கலாகப் பாடும் இந்த பயோபிக் பார்ப்பவர்களை சோர்வடைய வைக்கிறது.

என்டிஆர் – ஏ.என்.ஆர் (நாக்கேஷ்வர ராவ்) இடையேயான நட்புக் காட்சிகளில் தெலுகு சினிமாவின் ப்ளாக் அண்டு வொய்ட் காலங்களை அழகாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் கிருஷ். என் டி ஆரின் மகனாக அவரது பேரன் ; நாகேஸ்வர ராவாக அவரது பேரன் சுமந்த் என நாஸ்டால்ஜியா கனெக்ட் படம் நெடுகிலும் தொடர்கிறது. சிறுவயது நடிகைகளுடன் வயதுக்கு மீறி நடிப்பதை வீட்டில் இருக்கும் பெண்களே விரும்பவில்லை என ஒரு தென்னிந்திய சூப்பர்ஸ்டாரின் நடிப்பை சுயவிமர்சனம் செய்யவும் கதாநாயகுடு தவறவில்லை.ஞான சேகரின் ஒளிப்பதிவும், கீரவாணியின் இசையும் இந்த பயோபிக்கு படத்துக்கு பலம் சேர்க்கின்றது. மணிகர்னிகா, கதாநாயுகுடு, மகாநாயகுடு என இந்தாண்டு முழுக்க இயக்குநர் கிருஷின் பட்டியலில் பயோபிக்குகள்தான். திரையரங்கில் என்.டி.ஆரை காணும் ரசிகர்கள், அவருக்கு ஆரத்தி காட்டி வழிப்படுவதும், கடவுகளாக பாவிப்பதுமான காட்சிகளில் தெலுகு சினிமா ரசிகர்களைக் கோடிட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்.

நம்ம தேசத்துக்காக, நம்ம ஜனங்களுக்காக, நம்ம பிராந்தியத்துக்காக நாம ஆரம்பிக்கும் பார்ட்டி தெலுகு தேசம் பார்ட்டி என இன்டர்வெல்லுக்கான அதிர்வுகளுடன் முதல் பாகம் முடிய அடுத்த பாகமான அரசியல் சதுரங்க மகாநாயுகுடு விரைவில் வெளியாக இருக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் பலர் அதில் இருப்பார்கள் என்பதால், அதற்கான கவுன்ட் டவுன் ஆரம்பமாகியுள்ளது. அதிலாவது சற்று சுவாரஸ்யமான திரைக்கதை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு