Published:Updated:

’யார் அந்த விஜய் சேதுபதி’ முதல் `மக்கள் செல்வன்’ வரை..! #HBDVijaySethupathi

விகடன் விமர்சனக்குழு
’யார் அந்த விஜய் சேதுபதி’ முதல் `மக்கள் செல்வன்’ வரை..! #HBDVijaySethupathi
’யார் அந்த விஜய் சேதுபதி’ முதல் `மக்கள் செல்வன்’ வரை..! #HBDVijaySethupathi

`தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன், அப்படத்தைப் பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். இந்தப் பதிவு சமீப நாள்களுக்கு முன் செம டிரெண்ட் ஆனது. இப்போது மீம்களில் `புதுப்பேட்டை’ படத்தில் அவரின் நிலையைக் கண்டு ஆச்சர்யப்படும் ரசிகர்கள், அப்போது அவரைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை. குறும்பட இயக்குநர்களும் அப்போதைய குறிப்பிட்ட குறும்பட பார்வையாளர்களும் தவிர மற்றவர்கள் கேட்கத்தான் செய்தார்கள், யார் அந்த விஜய் சேதுபதி

ஒரு கதை சொல்லட்டா சார்..! 

`இனிமேல் சினிமாவுக்கு முயற்சி செய்ய மாட்டேன்' என்று தன் மனைவியிடம் சத்தியம் செய்கிறார். என் மனைவியிடமும் என் குடும்பத்துடன் என்னைவிட யார் அக்கறை செலுத்தப்போகிறார்கள் என்று தன் சத்தியத்தை ஆறுதல்படுத்திக்கொண்டு பயணிக்கிறார். 'நான் இப்போது நடிகனானாலும் என்னை உச்சாணி கொம்பிளா வைக்கப்போகிறார்கள்' என்ற சினிமாவின் சூழலை அறிந்திருந்தார். ஆனால், அதை நோக்கிய பயணத்தைத் தளர்த்தியதில்லை. சிறுசிறு வேடங்களுடன் நண்பர்களின் குறும்படங்கள் ஆசுவாசப்படுத்துகின்றன. இடையில் ஓர் திரைப்படத்துக்கான தேர்வில் கலந்துகொண்டு வாய்ப்பில்லாமல் வெளியேறுகிறார். ஆனால், பிறகு அதே இயக்குநர்களின் அடுத்த படத்தில் முதன்மை பாத்திரமாகிறார். அதில் `ஒரு கதை சொல்லட்டா சார்' என்று அமைதியைக் கலைக்கும் புன்னகையுடன் பேசும் 'வேதா'வின் இடைப்பட்ட கதைகள் திறமைகளுக்கான வெகுமதி. 

`என்னாச்சு..!’ 

கள்ளிக்காட்டு தாயிற்கும் வெம்மைக் காட்டு சூழலுக்கும் மகனாகக் கிராமத்து இளைஞன் வேடம். தாடி வைத்துக்கொண்டு, வாரப்படாத முடியும் ஒப்பனையில்லாத முகமுமான தோற்றம். கிட்டத்தட்ட நாம் நேரில் பார்க்கும் விஜய் சேதுபதி போல்தான் இருந்தான் 'தென்மேற்குப் பருவக்காற்று' நாயகன் முருகையன். படத்தின் பிரதானம் கார் என்றாலும் தானும் காரின்மீதான பேரீர்ப்புக்கு துணை நின்றான் 'பண்ணையாரும் பத்மினியும்' பரட்டைத் தலை முருகேசன். இரண்டு படங்களும் நாயக பிம்பங்களைத் தவிர்த்து கதைக்கேற்ற பாத்திரத்தைப் பெற்றிருந்தன. இது ஒருபுறம் இருக்க டீ-சர்ட்டும் க்ளீன் ஷேவுமாக மற்றொரு படம் முழுவதும் முகத்தில் ஏதோ ஓர் அறிமாயையுடன் நடித்திருப்பார். இவருக்கு எவ்வளவோ பிராண்ட் அடையாளங்கள் இருந்தாலும், முதலும் முதன்மையானதுமாக இருப்பது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் `என்னாச்சு...’ மாடுலேஷன்தான். இதைப் படம் முழுக்க செய்தாலும் அந்தந்த காட்சிக்கேற்ற இயல்பையும் நகைப்பையும் கொடுத்ததே தவிர, சலிக்கவில்லை. இதே மந்திர மனநிலையோடுதான் அன்று கேள்வி கேட்டவர்கள் எட்டு வருடத்துக்குப் பிறகு, கேட்கிறோம் `என்னாச்சு..!'

நானும் ரௌடிதான் ! 

தமிழில் மாஸ் ஹீரோ சப்ஜக்ட் என்றால் ரௌடியிஸம் மிரட்டலாக இருக்கும். ஆனால், இவர் கையாண்டதெல்லாம் வெறும் 'நானும் ரௌடிதான்' ரகங்கள். 'ல்லவ் பெயிலியியர், பீல் ஆயிட்டன், ஆப் சரக் கடைட்சா கூல் ஆயிருவேன்' என்று அடிவாங்கிய பாவமான முகத்தோடு சிரிக்க வைக்கும் சுமார் மூஞ்சி ஒருபுறம் என்றால், 'இல்லங்க, ரௌடிக்கிட்ட கூட்டிட்டு போன்னு சொன்னீங்கள்லே, நானும் ரௌடிதான்... பயப்புடாதீங்க, யாருக்கும் தெரியாம பண்ணிக்கிட்டு இருக்கோம், உங்களுக்கு எதுவானாலும் Discount-ல பண்ணிக்கலாம்' என்று ரௌவுடியிசத்தைக் கனிவாக அணுகும் பாண்டி மறுபுறம். இதுபோல், விஜய் சேதுபதி படங்களில் அதிகம் பொருந்திப்போவதே முரண்பட்ட காமெடி காட்சிகள்தான் (Black Comedy). காதலும் கடந்துபோகும் படத்தில், ஆரம்ப சண்டை காட்சியில் அனைவரிடமும் அடிவாங்கிவிட்டு எதுவும் நடக்காததுபோல் கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு செல்வதாகட்டும், சூது கவ்வும் படத்தில் ஆட்டோவில் செல்லும்போது வேகத்தடையில் ரெக்கார்டரை இழந்துவிட்டு முழி பிதுங்குவதாகட்டும், தனித்துவமான உடல்மொழியுடன் சிரிக்க வைத்திருப்பார். ஆக, விஜய் சேதுபதி என்னும் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியதில் இந்த 'கேங்ஸ்டெர்' பாத்திரங்களே முக்கியப்பங்கு வகிக்கின்றன. 

`ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான் !’ 

இரண்டு பேர் மட்டும்தான். இரவுக்காட்சி வேறு, பார்வையாளனின் மொத்த பார்வையையும் தங்கள் மீது கொண்டதாக `96 படத்தின் இரண்டாம் பாகம். Are you vergin Ram? என்று த்ரிஷா கேட்கும்போது வெட்கமும் கூச்சமுமாக முகம் சுழிப்பதாகட்டும், தான் கல்லூரிக்கு வந்த விஷயத்தைச் சொல்வதற்கு 'நான் வந்தேன் ஜானு' என்று நடந்ததைச் செல்வதாகட்டும் முகத்தில் அழகு ஈர்ப்புகளைப் பெற்றிருப்பார். விஜய் சேதுபதிக்கு அவரது படங்களிலேயே ரொம்ப பிடித்த படம் `ஆரஞ்சு மிட்டாய்.’ தந்தையின் ஆற்றாமைக்காக கிழவனாக நடித்த தோற்றம், ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான் என்று சீதக்காதி வரை ஆயிரம் வலிகளைப் பேசியது. இதைத் தொடர்ந்து 'சூப்பர் டீலக்ஸ் சில்பா' பாத்திரத்தில் 'பெண்மையை' உணர்ந்ததாகத் தன் கலையின் நோக்கை வெளிப்படுத்தியிருப்பார். 

`ஆண்டவன் கட்டளை !' 

விஜய் சேதுபதியின் வளர்ச்சிக்குக் காரணம் திறமையா அதிஷ்ட்டமா என்று பலமுறை கேட்கப்பட்டுள்ளது. 'நான் என்னை நம்ப வேண்டும். என்னைப் பற்றிய புரிதலும் நம்பிக்கையுமே என்னைப் பற்றிய வெற்றிக்குக் காரணமாக அமையும். என்னுடைய ஒவ்வொரு வெற்றியையும் எனக்கும் என் மனதுக்கும் இடைப்பட்ட போராட்டமாக உணர்கிறேன்' என்கிறார் விஜய் சேதுபதி. இதுபோன்ற இவரின் புரிதல்தான் இவரிடம் ஏதோ ஒன்று உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினி வரை ஆச்சர்யப்பட வைக்கிறது. 'பேனர் வைக்கிறன்னு கைக்கால உடச்சுக்கிட்டின்னா வீட்ல என்ன சொல்லுவாங்க, சினிமாக்காரனுக்காக இப்படி செய்றான்னு திட்ட மாட்டாங்க, எனக்கு பழைய சோறுதான் புடிச்சிருக்கு, அவங்க கேட்குறாங்க முத்தம் கொடுக்கிறேன் போன்ற அணுகுமுறைகள் மக்களை விஜய் சேதுபதியுடன் நெருக்கமாகப் பொருத்தி பார்க்கிறது. மேலும், சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்த பார்வையிலும் மக்களின் பக்கத்திலிருந்தே அணுகுகிறார். இவையனைத்தும் விஜய் சேதுபதியை ரசிகன் என்ற நிலையைக் கடந்து அனைவராலும் விருப்பதுக்குறியரவாரக வைத்துள்ளது. 

ஒரு நிகழ்ச்சியில் நீங்க எப்போதும் ரொம்ப சிம்பிளாவே இருக்கீங்க என்று விஜய் சேதுபதியிடம் கேட்பார்கள். அதற்கு அவர், 'நான் கெத்தாதான் இருக்கேன்' என்பார். அதுதான் விஜய் சேதுபதி என்னும் மேஜிக்கும் கூட...