புத்தாண்டு துள்ளல் பார்ட்டிகளில் இந்த முறை டாப் ஆர்டரில் அசத்தியது 'என் ஃப்ரெண்டபோல யாரு மச்சான்...’தான். 2011-ன் கடைசி ஓவரில் 'நண்பன்’ களம் இறங்கி இருந்தாலும் அத்தனையையும் ஸ்வீட் சிக்ஸர்களாக அடித்து நொறுக்கி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். கோவையில் இந்தப் படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் ''ஹாரிஸ் மேட் இட்'' என்று ஷங்கர் சொன்னபோது, அழுத்தமாகத் தலை அசைத்து ஆமோதித்தார் விஜய்!

கோவையில் 'நண்பன்'!
##~##

என்ன சென்டிமென்ட்டோ தெரியவில்லை... 'வேலாயுதம்’ இசை வெளியீட்டு விழாவை மண் மணக்க மதுரையில் நடத்திய விஜய், 'நண்பன்’ சி.டி-யை கோவையில் கொண்டாட்டமாக வெளியிட வைத்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து சில மின்னல்கள் இங்கே...

காட்டுல மான்... ஆகாயம்னா வான்... இதுதான் நான்!

''ஆக்ச்சுவலா 'த்ரீ இடியட்ஸ்’லயே என்னை நடிக்கச் சொல்லி அமீர் கான் கேட்டார். அக்ரிமென்ட் பேசிட்டு இருக்கிறப்பவே 'உங்க பேர் அமீர் கான்! காட்டுல இருக்கு மான், ஆகாயம்னா வான், இதுதான் நான்’ அப்படினு ஒரு கவிதை சொன்னேன். என்ன நினைச்சாரோ தெரியலை 'டொக்’னு போனைக் கட் பண்ணிட்டார். இந்த செகண்ட் வரைக்கும் எனக்கு போன் பண்ணவே இல்லை. 'த்ரீ இடியட்ஸ’ல நடிக் காட்டியும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்து இருக்கிறதுல சந்தோஷம்...'' என்று செம மொக்கையுடன் பதறடித்தார் மிர்ச்சி சிவா.

நண்பேன்டா!  

வெளுத்த ஜீன்ஸ், வெள்ளைச் சட்டைக்கு மேல் கறுப்பு நிற ஷார்ட் கட் வெயிஸ்ட் என்று செம கூல் காஸ்ட்யூமில் விஜய் நடந்து வந்தபோது கூட்டத்தில் செம ஆரவாரம். 'நண்பன்’ விஜய்யின் நண்பர்களான ஜீவாவும் ஸ்ரீகாந்த்தும் ஆளுக்கொரு பக்கமாக ஷங்கரின் இடுப்பை வளைத்துக் கலகலக்க ஆரம்பித்தார்கள்.    

'ஷாக்காயிடுவார்!’  

கோவையில் 'நண்பன்'!

விஜய்க்கு நிகராக ஃப்ளாஷ் வெளிச் சத்தில் மிதந்தார் எஸ்.ஜே.சூர்யா. 'ஹேய்! விஜய் ஷாக்காகிடப் போறாருப்பா. எனக்கெதுக்கு இவ்ளோ போட்டோ?’ என்று எஸ்.ஜே. மிரள... 'என் பையன் இதைப் பார்த்தா சந்தோஷப்படுவான்’ என்று அவருடைய தோளைத் தட்டினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

'ரொம்ப தேங்க்ஸ் குரு!’  

மண்ணின் மைந்தன் என்பதால் அம்மா, பாட்டி என்று குடும்பத்தோடு வந்திருந்தார் சத்யன். 'சத்யனோட ஆக்டிங் கேரியர்ல 'நண்பனுக்கு முன், பின்’ அப்படினு பேச்சு வரும். ரொம்ப சமர்த்தா பெர்ஃபார்ம் செஞ்சு இருக்கார்’ என்று விஜய் பேச, சத்யன் 'ரொம்ப தேங்க்ஸ் குரு!’ என்று பரவசப்பட்டார்.

சின்னத் தம்பி பெரிய தம்பி!  

சத்யராஜும், பிரபுவும் அருகருகே அமர்ந்து இருக்க... 'சின்னத் தம்பி பெரிய தம்பியை ரீ-மேக் பண்ணட்டுமா? அக்ரிமென்ட்ல கையெழுத்துப் போட்டீங்கன்னா, அப்படியே பொள்ளாச்சிப் பக்கத்துல ஷூட்டிங் போயிடலாங்ணா’ என்று மனோபாலா கலாய்க்க... இருவரும் கெக்கே பிக்கேவெனச் சிரித்தனர்!

புனேவில் பூத்த நண்பன்!  

''நண்பனை நான் இயக்கியதே விபத்துபோல அமைந்ததுதான். 'எந்திரன்’ படப்பிடிப்புக்காக புனே போனோம். ஒரு நெடுஞ்சாலையில் படப் பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. டென்ஷனுடன் 'பேக்-அப்’ சொல்லிட்டு, ஒரு தியேட்டருக்குப் போய் 'த்ரீ இடியட்ஸ்’ பார்த்தேன். முதல் 15 நிமிடங்களுக்கு நான் படத்துடன் ஒட்டவே இல்லை. ஆனால், அதுக்கு அப்புறம் அப்படியே இம்ப்ரெஸ் ஆகிட்டேன். அப்பவே, தமிழ் ரசிகர்களுக்காக இப்படி ஒரு படம் பண்ணியே ஆகணும்னு முடிவு செய்தேன். டெக்னிக்கலான எந்திரனுக்குப் பிறகு என்னை ரொம்ப ரிலாக்ஸா நகர்த்திச் சென்றது 'நண்பன்’தான். எனக்கு வசதியான ஒரு டீம் அமைஞ்சதும் சந்தோஷம்'' என்று நெகிழ்ந்தார் ஷங்கர்.

ஷங்கருக்கு டார்ச்சர்!    

''ஷங்கர் சார்கூட நான் வேலை பார்த்த ஒவ்வொரு ஷெட்யூலுமே கோல்டன் டைம்ஸ். நிறையக் கத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் ரொம்பக் கலகலப்பா போகும். நாங்க மூணு பேரும் (ஸ்ரீகாந்த், ஜீவா, விஜய்) கொடுத்த டார்ச்சரை எப்படித்தான் ஷங்கர் சார் தாங்கிட்டாரோ தெரியலை. அதிலும் ஜீவா ஓவர் குறும்பு. சார்ஜே குறையாத பேட்டரி அவர்'' என்று விஜய் சொல்ல... கீழே உட்கார்ந்து இருந்த ஜீவாவின் மனைவிக்குச் சிரிப்பு தாங்கவில்லை!

கோவையில் 'நண்பன்'!

- எஸ்.ஷக்தி
படங்கள்: சே.பாலநாக அபிஷேக், கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு