Published:Updated:

`` `சிகை' படத்துக்காக, அந்த முடிவை நான்தான் எடுத்தேன்!" - கதிர்

`` `சிகை' படத்துக்காக, அந்த முடிவை நான்தான் எடுத்தேன்!" - கதிர்
`` `சிகை' படத்துக்காக, அந்த முடிவை நான்தான் எடுத்தேன்!" - கதிர்

`விஜய் 63' படத்தில் நடிகர் கதிர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அந்தப் படம் குறித்தும் அவரின் நடிப்பில் வெளியான 'சிகை' படம் குறித்தும் பேசுகிறார்.

`சர்கார்' படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அட்லி இயக்கவிருக்கும் இப்படத்துக்கு, டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க `பரியேறும் பெருமாள்' படத்தின் நாயகன் கதிர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இப்படம் குறித்த தகவல்களுக்காகக் கதிரிடம் பேசினேன்.  

``ஒரு நடிகரா, விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட பழகிய பிறகு, அவருடைய கேரக்டரும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. சிறந்த மனிதர். நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கிறவர். அவரை எப்போதும் தூரத்திலிருந்து ரசிக்கும் ரசிகன் நான். இதுவரை இப்படி இருந்த சூழல்ல, அவர்கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது, எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. இந்த மொமென்ட்டை வாழ்க்கையில மறக்கவே முடியாது.

இயக்குநர் அட்லி அண்ணா எனக்கு நல்ல நண்பர். என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. என் சினிமா வளர்ச்சியைப் பற்றி அடிக்கடி பேசுற நபர். நல்ல படங்களில் நான் நடிக்கும்போது, கூப்பிட்டுப் பாராட்டுவார். அவரிடமிருந்து அழைப்பு வந்தப்போ, பெர்சனலா பேசத்தான் கூப்பிடுறார்னு நினைச்சேன். `விஜய் சார் படத்துல உனக்கும் ஒரு ரோல் இருக்கு'னு சொன்னப்போ, அந்த அதிர்ச்சியில இருந்து நான் மீண்டு வர்றதுக்குள்ள, மொத்தக் கதையையும், படத்துல என்னுடைய கேரக்டர் பற்றியும் பேசினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. ஏன்னா, ஏதோ வந்துட்டுப் போற மாதிரியான கேரக்டரை அவர் எனக்குக் கொடுக்கலை: படத்துல முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். கதையைச் சொன்னதுமே, ஓகே சொல்லிட்டேன். விஜய் அண்ணா படத்துல நடிக்கணும்ங்கிறது என் நெடுநாள் ஆசை. அது நடக்கப்போகுது. இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கு?!" என்றவர், தொடர்ந்தார்.

``விஜய் சேதுபதி அண்ணா சினிமாவுல என் நலம் விரும்பி. எல்லா விஷயத்தையும் அவர்கிட்ட பகிர்ந்துக்குவேன். `தளபதி 63' படத்துல கமிட் ஆனதும், அவருக்கு போன் பண்ணிச் சொன்னேன். `சூப்பர்டா தம்பி. நல்ல முடிவு. கண்டிப்பா உனக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கும்'னு பாராட்டினார். புஷ்கர் - காயத்ரி அவங்களும் பாசிட்டிவா பேசுனாங்க. எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுத்தி இருக்கிற எல்லோருக்குமே விஜய் அண்ணா படத்துல நான் நடிக்கிறது குறித்து செம சந்தோஷம். சீக்கிரமே ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகப்போகுது. பட பூஜை அப்போ விஜய் அண்ணாவைப் பார்த்துப் பேசுறதுக்காக, வெயிட்டிங்!" என்றவரிடம், 'சிகை' படம் குறித்தும் கேள்வி எழுப்பினோம். 

`` `சிகை' படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ண முடியாமப் போன வருத்தம் இருக்கா?"  

``இல்லை. இந்தப் படத்தைத் தயாரிச்சது, எங்க அப்பாதான். படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தது, நான். `பரியேறும் பெருமாள்' ரிலீஸூக்குப் பிறகுதான், எனக்கு இந்த ஐடியா தோணுச்சு. ஏன்னா, இந்தப் படம் கன்டென்ட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தவிர, இது டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கான படம்தான். மசாலா, ஃபன் எதுவுமே இந்தப் படத்துல இருக்காது. தியேட்டர் மூடுக்கு இந்தப் படம் நேரெதிரா இருக்கும். அதனாலதான், இந்த முடிவை எடுத்தேன். தியேட்டருக்காக ரெடியான ஒரு படம், டிஜிட்டல்ல வெளியாவது இதுதான் முதல்முறை! அதனால, ஒரு நல்ல தொடக்கத்தை ஆரம்பிச்சு வெச்சிருக்கிறதை நினைச்சுப் பெருமைப்படுறேன். `சிகை' படத்தைப் பார்த்து, பல நல்ல கதைகளை டிஜிட்டல்ல படமா பண்ண பலரும் முன்வருவாங்கனு நம்புறேன். எதிர்காலத்துல டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கு மக்கள்கிட்ட அதிக வரவேற்பு கிடைக்கும்னு நான் தீர்க்கமா நம்புறேன். 

தவிர, இந்தப் படத்தை மக்கள் பார்த்தா போதும்னுதான் எனக்குத் தோணுச்சு. ஏன்னா, ஆடியன்ஸுக்காகத்தான் நாங்க நடிக்கிறோம். படமும் உருவாகுது. விருதுக்காக நாங்க நடிக்கலை. ஒரு நடிகனுக்கு மக்களுடைய பாராட்டுதான் முதல்ல முக்கியம். அந்த வகையில, `சிகை' டிஜிட்டல்ல ரிலீஸ் ஆனது, எனக்கு சந்தோஷம்தான். வெளிநாடுகள்ல இதெல்லாம் சாதாரண விஷயம். தவிர, வருமான ரீதியாகவும் `சிகை' எனக்கு லாபத்தைத்தான் கொடுத்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்." 

அடுத்த கட்டுரைக்கு