Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த படம் - மேற்குத் தொடர்ச்சி மலை

கா
ய்த்த கைகளும் வியர்த்த உடல்களுமாக விரவிக்கிடக்கும் உழைக்கும் வர்க்கத்தின் ஒரே கனவு ‘காணி நிலம்.’ அந்தக் கனவை முதலாளித்துவம் எப்படிக் கானல் நீராக்கிப் பொசுக்குகிறது என்பதை உரக்கச் சொல்லியது மேற்குத் தொடர்ச்சி மலை. இந்த மலைத்தொடர்ச்சியின் ஒவ்வொரு முகடும் ஒவ்வொரு கதை சுமந்து நின்றது. கிறுக்குக் கிழவி, வனகாளி, சுமை தூக்கும் கிழவர் என அந்தக் கதைமாந்தர்கள்தாம் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மெருகேற்றுகிறார்கள்; கனம் கூட்டுகிறார்கள். டைட்டில் கார்டில் கோடங்கிபட்டி பொன்னுத்தாயி, தேவாரம் சொர்ணம் எனக் குறிஞ்சிப்பரப்பின் எளிய மனிதர்கள் இடம்பெற்றதெல்லாம் அரிதாய்ப் பூக்கும் குறிஞ்சிப் பூ. 

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

மலைக்கும் வீட்டிற்குமாக ஏறி இறங்கும் ரங்கசாமியோடு உரையாடிக்கொண்டே நடைபோட்ட அதே தமிழ்ச்சமூகம்தான் இறுதிக்காட்சியில் தளர்ந்துபோய் அமர்ந்திருக்கும் அவன் முதுகின் பின்னே தங்களின் கண்ணீரை ஒளித்துவைத்தது. குளுமையும் கொண்டாட்டமுமாக நம் பார்வையில் படும் தூரத்து மலையின் மற்றொரு பக்கத்தில் வலிநிறைந்த வாழ்வியலும் இருக்கிறது என்பதை சினிமா எனும் உலகப்பொதுமொழியில் சொன்னவகையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது ‘மேற்குத் தொடர்ச்சி மலை.’

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த இயக்குநர் -  மாரி செல்வராஜ் - பரியேறும் பெருமாள்

கோ
லிவுட் வரைந்து வைத்திருந்த ஏராளமான விதிகளை ‘பரியேறும் பெருமாள்’ வழி அடித்து நொறுக்கினார் மாரி. கல்வி நிலையத் தீண்டாமையை திரைவிலக்கிப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்தான் பரியன். ‘ஞானத்தங்கமே’ என உருக்கும் குரலுக்கு ஆடும் செல்வராஜ் போன்ற பாத்திரப் படைப்பைத் தமிழ்சினிமா இதற்கு முன் கண்டதில்லை. கதாபாத்திரங்களை, வசனங்களை எழுதிய விதத்தில் மாரிக்குள் இருந்த தேர்ந்த எழுத்தாளர் வெளிப்பட்டார். அவற்றையெல்லாம் படமாக்கிய விதத்திலும் தன் பாய்ச்சலைக்காட்டத் தவறவில்லை மாரி. மிகநேர்த்தியாக ‘நீங்க நீங்களா இருக்கிறவரைக்கும், நான் நாயாதான் இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்கே எதுவுமே மாறாது’ எனப் படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் சுயவிசாரணைக்குட்படுத்தியது. ஆணவக்கொலை, தேவதைக் கதை, ஆங்கில அறிவிற்கான அளவீடுகள் எனப் படம் பேசிய கதைகளும் களங்களும் ஏராளம். சாதிப்பாகுபாடுகளுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற பரியன் தமிழ்சினிமாவுக்கு அடையாளம் காட்டியது, தவிர்க்கவே முடியாத ஓர் ஆகச்சிறந்த படைப்பாளியை!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த நடிகர்-  தனுஷ் - வடசென்னை, மாரி-2

தின்பருவத்து இளமைத்துள்ளல், காதலிக்காகக் கத்தியெடுக்கும்போது நிகழும் தேக உதறல், தனது நிலத்தைக் காக்கப் போராடும் இளைஞனின் மிடுக்கு என ‘வடசென்னை’யில் தனுஷ் கடத்தியது பிசிரில்லாத அபார நடிப்பு. “மெஷ்னு திர்டிட்டு பெரிய இது மாதிரி பேசினுக்குற”, “ண்ணா, ண்ணா ஷாலா போய்டலாணா”, “இது நம்ம ஊருக்கா. நம்மதான் இத பார்த்துக்கணும்” எனக் காலகட்டத்திற்கு ஏற்றபடியெல்லாம் ஏறி இறங்கின அவர் குரலாற்றல்... அவ்வளவு வித்தியாசங்கள். முதல்முறை பெட் மேட்ச் ஆடுகையில் கூட்டத்தைக் கண்டு அடையும் மிரட்சி, பிற்பாதியில் கூட்டத்தையே ஒற்றை ஆளாய் வெட்டிச்சாய்க்கும் வீரம், கல்யாண மண்டபத்தில் பகடைக்காயாக உருட்டப்படும்போது கண்களில் வெளிப்படுத்துகிற அந்த மரண பீதி... இன்னும் எத்தனை எத்தனையோ பாவனைகளை மைக்ரோநொடிகளில் கடத்தி அசரடித்தது தனுஷின் முகம். க்ளாஸ் மட்டுமல்ல, மாரி-2வில் மாஸ் முகம் காட்டி மகிழவைத்தார். கதைக்கு என்ன தேவையோ அதைக் காட்சிக்கு ஏற்ப வெளிப்படுத்தி பிரமிப்பூட்டும் தனுஷ் தமிழ்சினிமாவின் ராஜராஜன்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த நடிகை - த்ரிஷா - 96

ருண்ட வராண்டாவில் நிழல் உருவமாக த்ரிஷா இறங்கி வரும் முதல் காட்சியில் மொத்தத் தமிழகமும் சிலிர்த்து எழுந்தது. எஞ்சிய காதலையும் தேடலையும் தேக்கி வைத்து ராமுக்காக அலைபாயும் ஜானுவின் கண்களில் தங்களைத் தொலைத்தவர் எத்தனையோ கோடி! ‘இன்னுமாடா...?’ என ஒருபக்கம் குறும்பு காட்டி, ‘சத்தியமா அன்னிக்கு உன்ன பாக்கலடா’ எனக் கண்ணீரைக் கொட்டி... த்ரிஷா 96-ல் வெளிப்படுத்தியதெல்லாம் அசலான எமோஷனல் சுனாமி. ‘சந்தோஷமா இருக்கேனான்னு தெரில, ஆனா, நிம்மதியா இருக்கேன்’ என த்ரிஷா நெகிழும் காட்சியில் படம் பார்த்த அத்தனை ஜானுக்களும் தங்களைப் பொருத்திக்கொண்டார்கள். கடந்தகாலத்தை நினைவுகூரும் த்ரிஷாவின் சோகச் சிரிப்பில் தங்களின் ஜானுவைக் கண்டெடுத்தார்கள் நாஸ்டால்ஜிக் ராம்கள். இறுதியாக விடைபெற்றுக்கொள்ளும் விமான நிலையத்தின் கண்ணாடிச் சுவர் உடைத்தது ஏகப்பட்ட இதயங்களை. பிரிவின் தீராத வலியையும், குற்றவுணர்வின் பெருந்துயரத்தையும் தன் சின்னச்சின்னக் கண்ணசைவுகளில் காட்டி வியக்க வைத்த த்ரிஷாவை... இல்லை இல்லை... ஜானுவைத் தமிழ்சினிமா என்றென்றும் கொண்டாடும்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த இசையமைப்பாளர்-  சந்தோஷ் நாராயணன்

வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா


றைகள் அதிரும் புளியங்குளமோ, புரட்சி முழங்கும் தாராவியோ, கானாவால் கலகலக்கும் வடசென்னையோ... தமிழ்சினிமாவெங்கும் பரவியிருந்தது சந்தோஷின் இசை. `பரியேறும் பெருமாளில்’ ரயிலின் வரவை ‘தடதட’க்கும் தண்டவாள அதிர்வாக நம் மனங்களுக்குள் கடத்தியவர், `காலா’வில் கறுப்பர் நகரத்து ராப்பையும் `வடசென்னை’யில் மத்திய சிறையின் சோககீதத்தையும் விருந்துவைத்து வியக்கவைத்தார். அன்புவின் எழுச்சியை ‘கிங் ஆஃப் தி ஸீ’தான் முரசு கொட்டி அறிவித்தது. பரியனின் உள்ளக்குமுறலை ‘நான் யார்’ உரத்துச் சொல்லியது. ஹரிதாதாவின் ஆழ்மனம் அந்தப் பின்னணி இசையிலேயே புரிந்தது. ‘கருப்பி என் கருப்பி’, இயலாமையின் ஒப்பாரி என்றால், ‘வா ரயில் விட போலாம் வா’ சமத்துவத்திற்கான மென்தூது. ‘வாடி என் தங்கச்சிலை’ பழுத்த காதலின் நறுமணம் என்றால், `கண்ணம்மா’ இறந்துபோன காதலின் மூச்சுக்காற்று. மாரியப்பன், சிந்தை ரவி, ப்ரித்திகா எனத் தன் எண்ணத்திற்கு உயிர்கொடுக்கத் தேர்ந்தெடுக்கும் குரல்கள் எல்லாம் மண்ணின் குரல்கள். களம் எதுவாக இருந்தாலும் கச்சிதமான இசை தந்து கலங்கடித்த இசை அரக்கன் சந்தோஷ் நாராயணன்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த வில்லன் - நானா படேகர் - காலா

பா
ர்வையிலேயே அவ்வளவு குரூரம். கத்தியில்லை ரத்தமில்லை, ஆனாலும் அவ்வளவு மிரட்டல். தாராவியை மட்டுமல்ல தமிழ்சினிமாவையே நடுங்க வைத்த டெரர் வில்லன் `ஹரிதாதா.’ சத்தமில்லாமல் நிற்கும் காட்சிகளிலும் வில்லத்தன வெரைட்டி காட்டியது நானா படேகரின் சிம்பிள் முகம். ‘பரிசுத்தமான’ வெள்ளை உடை, க்ளீன் ஷேவ், தங்க நிற ஃபிரேமில் கண்ணாடி என, கையெடுத்துக் கும்பிடவைக்கும் தோற்றம். வசனங்களும் மிகக் குறைவு. ஆனால், பார்ப்பவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு மட்டும் டன்கணக்கில் மண்டவேண்டும். அதைத் தன் நடிப்பு அனுபவத்தால் செம்மையாகச் செய்துமுடித்தார் நானா. அதிகாரத்தின் மூலம் நல்லதையே செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஹரிதேவ் அபயங்கராக நானா காட்டியது அசலான அதிகார முகம்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த வில்லி - வரலட்சுமி 

சண்டக்கோழி-2, சர்கார்


கோ
லிவுட் வில்லிகள் பட்டியலில் கெத்து வரவு வரலட்சுமி. விஷால், விஜய் என முன்னணி ஹீரோக்களோடு சண்டை போட்ட கோமளவல்லி. சண்டக்கோழி-2வில் ஆக்ரோஷ முகம் காட்டியவர், சர்காரில் புத்திசாலிப் ‘பாப்பா’வாக அச்சமூட்டினார். ஒருபடத்தில் பழிக்குப் பழி வாங்கத் துரத்தித் திரியும் வெறி, மற்றொரு படத்தில் அப்பாவையே போட்டுத்தள்ளும் அதிகார போதை என இரட்டைக்குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்தார். கிராமம், மாடர்ன் என இருவேறு களம். லுக், உடல்மொழி, பேச்சுவழக்கு என அதற்காக இருவேறு அவதாரங்களாக உருப்பெற்று நின்ற வரலட்சுமி, இந்த ஆண்டு காட்டியது மெர்சல் வில்லத்தனம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த குணச்சித்திர நடிகர்
 
அமீர் - வடசென்னை


“ரா
ஜன்தான் அவங்களுக்கு எம்.ஜி.ஆர், ரஜினி எல்லாமே.” வெற்றி மாறனின் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்திருந்தார் அமீர். ஓர் அதிநாயகனை, ஒரு தலைவனை, நாயகனுக்கே முன்மாதிரியைத் தன் இயல்பான நடிப்பால் அவ்வளவு அச்சாக வார்த்திருந்தார் அமீர். மக்களை அப்புறப்படுத்த வந்த காவல் அதிகாரிகளை ராஜன் அடிக்கும் அடியில் நமக்கும் சிலிர்த்தது. சந்திராவைக் கண்டு காதலில் கிறங்கும்போதெல்லாம் நம் உதடு சிரித்தது. அவரைக் கத்தியால் குத்திக் கிழித்தபோது எல்லோர்க்கும் வலித்தது. “தவ்லூண்டு ஆங்கர்தான் அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது” என்பதை நிரூபிக்கும் வகையில், தோன்றியது குறைந்த காட்சிகளில்தான் என்றாலும், காலத்துக்கும் நிலைத்து நிற்கிற கதாபாத்திரமாக அதை மாற்றியது அமீர் மேஜிக். அந்த அடர்தாடி, தூக்கிவிட்ட காலர், மடித்துவிட்ட சட்டை, கூலிங்கிளாஸ், எம்.ஜி.ஆர் மோதிரம், தடியான தங்கச்சங்கிலி, வீரநடை என அமீர் ‘வடசென்னை’யில் காட்டியது அக்மார்க் `ராஜபாட்டை!’

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த குணச்சித்திர நடிகை

ஈஸ்வரி ராவ் - காலா


‘இ
ந்த செல்வி இல்லன்னா உன் அப்பன் இல்ல’ என, `காலா’ படத்தில் ஒரு வசனம் வரும். உண்மைதான். முரட்டுக் காலாவை வாஞ்சையும் வெகுளித்தனமுமாகத் தூக்கிச் சுமந்தவர் செல்வி (அ) ஈஸ்வரி. கலகம் செய்யும் குடும்பத்தை இறுக்கிப் பிடிக்கும் அன்பின் பாலம். தன்னைச் சார்ந்துள்ள எல்லாரையும் சமாளிக்கும் அந்த அறிமுகக் காட்சி, ஹீரோவுக்கு இணையான ஹீரோயினிசம். சரீனாவை எதிர்நோக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் மருகுவதும், ‘எனக்கும்தான் பெருமாளுன்னா இஷ்டம். நானும் போயிப் பாத்துட்டு வாரேன்’ என அதை வெளிக்காட்டுவதுமாக முதிர்ச்சியின் முத்திரை மிளிர்ந்தது திரையில்... ஈஸ்வரி, 2018-ல் கோலிவுட் கண்டடைந்த பாசக்கார காட்மதர்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு

கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்


கோ
கோவில் நயன்தாராவுடன் யோகிபாபு ஆடிய ரொமான்டிக் ஆட்டம், கல்யாண வயது வந்த சிங்கிள் அங்கிள்களின் எவர்கிரீன் ஆன்த்தம். சீரியஸாக நகரும் கதைப்போக்கில் ‘கோகோன்னா இந்தச் சாக்லேட் செய்வாங்களே அந்தப் பவுடரா?’ தொடங்கி, ‘ஆமா ஷிம்லாவுக்கு டூர் போறீங்க, இதுல நான் வேற!’ என யோகிபாபு அள்ளிவீசிய ஒன்லைனர்கள் ஒவ்வொன்றும் தியேட்டர்களைச் சிதறடித்தன. பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்தாக பரியனை புரிந்துகொண்ட உற்ற நண்பனாகவும் கலங்கவைத்தார்.சாதாரண வசனங்களையும் கூட மேலும் மேலும் ரசிக்க வைக்கிற ஒன்றாக மாற்றிக் காட்டியது அவரது அலட்டலில்லாத மேனரிசம். யோகிபாபு, தமிழர்களின் காமெடி டைமை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கும் கலகல ஒண்டிப்புலி!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த நகைச்சுவை நடிகை

ரேவதி - குலேபகாவலி


‘நா
யகி டு குணச்சித்திர நடிகை’ ஆகிவிட்ட ரேவதிக்கு, பல வருடங்களுக்குப் பிறகு நகைச்சுவை வேடம். சோகமாகக் கதை சொல்லிவிட்டு, காரைத் திருடும் பலே கில்லாடி மாஷாவாக சிரிப்பு ஷோ நடத்தினார் ரேவதி. அவர் ஓட்டும் ப்ளாஷ்பேக்கிற்கு முதலில் ‘உச்’ கொட்டி, கடைசியில் ‘அட ச்சை’ என ஏமாந்துபோய் கைதட்டினார்கள் மக்கள். பொக்கிஷம் தேடும் கண்ணாமூச்சி ஆட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் சிரிப்புமூட்டினார் சீனியர் செல்வி! ‘ஆண் பாவம்’, ‘மகளிர் மட்டும்’ படங்களுக்குப் பின்னர் இது ரேவதிக்கு அரங்கேற்ற வேளை 2.0! சிரிப்பிலும், நடிப்பிலும் நம்மைக் கொள்ளையடித்தார் இந்தக் கள்ளச் சிரிப்பழகி.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த அறிமுக இயக்குநர்  - லெனின் பாரதி

மேற்குத் தொடர்ச்சி மலை


றிமுக இயக்குநர்களுக்கு லெனின் பாரதி போட்டுக்காட்டியது புதிய பாதை. அசலான கிராமத்து மனிதர்களை வைத்தே ஓர் அற்புதமான உலகத்தரப் படைப்பை உருவாக்கிட முடியும் என நம்பிக்கை விதைகளைத் தூவிய அசாத்திய கலைஞன் லெனின். உழைக்கும் வர்க்கத்துக்காகத் தோளோடு தோள் நிற்கும் தோழர் சாக்கோ, ரங்கசாமி மேல் பாசம் பொழியும் கங்காணி என இவர் உருவாக்கியது எளிய மனிதர்களின் பேரன்பிலான உலகம். எந்தச்  சட்டங்களுக்கும் அடங்காத ஒரு திரைமொழியை, சமரசமில்லாத வலிமையான அரசியல் முன்னெடுப்பை, வணிகக் கலப்படங்களுக்குட்படாத ஒரு கலைப் படைப்பை எளிய மக்களும் வரவேற்றுக் கொண்டாடும் விதமாக இயக்கியதில் லெனின் காட்டியது தமிழ்சினிமாவிற்கான நம்பிக்கை வெளிச்சம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த அறிமுக நடிகர் 

ஆதித்யா பாஸ்கர் - 96


னந்த விகடனில் வந்த புகைப்படம்தான் ஆதித்யாவின் போர்ட்ஃபோலியோ. `96’ பார்த்துத் தன் ஜானுவை நினைத்த பலருக்குள்ளும் ராமாகப் புகுந்து வெளிப்பட்டதில் இருக்கிறது ஆதித்யாவின் வெற்றி. “நான்தான் அது”, “நான் இப்படித்தான் இருந்தேன்” என எண்ணிய எல்லா ஆண்களின் நினைவலைகளுக்கும் ஹோலோகிராம் உருவம் கொடுத்திருந்தார் ஆதித்யா. த்ரிஷா சொல்லும் பொய்க்கதையில், கண்கள் நிறைய காதலுடன் வரும் ஆதித்யாவைப் பார்த்து கௌரி மட்டுமல்ல, எல்லோருமே கிறங்கித்தான் போனார்கள். விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி அளவிற்கு ஒரு நடிகர் தனித்துத் தெரிவதும், அதுவும் தன் முதல் படத்திலேயே நிகழ்வதும் பெரும் சாதனை. வகுப்பின் நடுபெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்த மௌனமான இன்ட்ரோவெர்ட்டாக இந்தக் குட்டி சேதுபதி கவர்ந்திழுத்தது கோடி இதயங்களை! 

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த அறிமுக நடிகை 

ரைஸா வில்சன் - பியார் பிரேமா காதல்


பி
க்பாஸ் பொண்ணு `பியார் பிரேமா காதல்’ல காட்டியது பட்டையைக் கிளப்பும் பக்காமாஸ்.  நம்காலத்து இளம்பெண்களின் பிரதிநிதியாக ரைஸாவுக்கென்றே அளவெடுத்துத் தைத்த பக்கா ஃபிட் கதாபாத்திரம் சிந்துஜா. ஹரீஷ் கல்யாணுடன் காதல் கொஞ்சும் காட்சிகளில், தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயத்தில் அம்புகள் பாய்ந்தன. அதே ரைஸா கோபப்பட்டுக் கெட்டவார்த்தைகள் உதிர்க்கும் காட்சிகளில் தெறித்து ஓடியது அதே படை. மென்மையான காதலியாகவும், வலிமையான இளம் பெண்ணாகவும் இரண்டு உணர்வுகளையும் சிறப்பாகக் கடத்தியது ரைஸாவின் சிம்பிள் நடிப்பு!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த குழந்தை நட்சத்திரம்

தித்யா பாண்டே - லக்ஷ்மி


டத்தின் டைட்டில் ரோலான லக்ஷ்மி ஒரு டான்ஸர். எனவே முதன்மைக் கதாபாத்திரத்தின் கனத்தையும் தாங்கவேண்டும், நடனத்திலும் ஒருகை பார்க்கவேண்டும். இரண்டையும் திறம்படச் செய்தார் தித்யா. மொழி தெரியாத இந்த க்யூட் பேபிதான் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பட்டாசாக வெடித்தது. காமெடி, சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களிலும் கதகளி ஆடின அந்தக் குட்டிக்கால்கள். அதிலும் ‘மொராக்கா’ பாடலுக்கு, இந்த ஜூனியர் பிரபுதேவி போட்ட ஆட்டம் பள்ளி கல்லூரிகளில் எதிரொலித்த சூப்பர்ஹிட் ஆட்டம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த ஒளிப்பதிவு

நீரவ் ஷா -  2.0 


3டி
கேமராவில் எடுக்கப்படும் முதல் இந்தியப் படம். முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸ்களால் மாற்றப்பட இருக்கும் கற்பனையான களம். நடிகர்களின் உடலமைப்பில் இருந்து அனைத்துமே அவுட்புட்டில் வேறாக இருக்கும்.  எல்லாவற்றையும் கணித்து, ஷாட்களைப் பதிவு செய்ய வேண்டும். முன்மாதிரிகள் அற்ற இக்களத்தில் சவால்களை எதிர்கொண்டு... தான் ஒரு சின்சியர் ‘சிம்டாங்காரன்’ என நிரூபித்திருந்தார் நீரவ் ஷா. பக்ஷிராஜன் கதாபாத்திரத்தின் முடிவில் தொடங்கும் அந்த ஆரம்பக் காட்சி நீரவ் ஷாவின் உழைப்பிற்கான சிம்பிள் சாம்பிள். சின்னச் சின்னக் காட்சிகளிலும் தெறித்த பிரமாண்டம் நீரவ் ஷாவின் அடையாளம்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த படத்தொகுப்பு 

ஷான் லோகேஷ்  - ராட்சசன்


ருணின் அறைச்சுவரில் ஒட்டியிருக்கும் செய்திகளை வெட்டிய கத்தரியைவிட, ஷான் லோகேஷின் கத்தரி இன்னும் அதிகம் உழைத்திருந்தது. `ராட்சசனை’ப் பார்த்துக் கதிகலங்கிப்போக, காட்சிகளிலிருந்த கூர்மையும் ஒரு காரணம். அருண் வாழ்க்கையிலுள்ள சினிமாப் பயணங்களை, வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் உணர்வு மாறாமல் சுருங்கச்சொல்லி விளங்கவைத்ததில் ஷான் லோகேஷின் பங்கு அளப்பரியது. இதயத்துடிப்பைக் கூட்டும் ஸ்லோ மோஷன்களாகட்டும், பரபரக்கவைக்கும் சேஸிங் காட்சிகளாகட்டும் அதன் தன்மை பொறுத்து, தன் வித்தையைத் தளர்த்தியும் இறுக்கியும் பிடித்தார். கேள்விகள் நிறைந்த ஒரு சைக்கோ த்ரில்லர் திரைக்கதை, அதைக் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் திரைப்படமாக வார்த்தெடுத்த `ராட்சசன்’களில், ஷான் லோகேஷ் மிக முக்கியமானவர்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த கதை 
 
மாரி செல்வராஜ்  - பரியேறும் பெருமாள்


`ப
ரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல், மேல ஒரு கோடு’ - படத்தின் ஒரு வரிக்கதை இதுதான். இதன் பின்னால் இரண்டரை மணிநேர சினிமாவாக விரிந்தது பல தலைமுறைகளின் கசப்பு நிறைந்த வாழ்க்கை. தண்டவாளத்தில் தலை சிதறிக்கிடக்கும் கருப்பி, தீண்டாமையின் கொடூரக் குறியீடு. இரண்டாயிரம் ஆண்டுக்கால வலியை இரண்டு டீ கிளாஸ்கள் வழியே சொன்னபோது நீர்க்கோலமிட்டன கண்கள். ‘நான் இங்கதான் இருப்பேன், ஆசைப்பட்டதைத்தான் படிப்பேன்’ எனப் பரியன் வெளிப்படுத்தியது கனத்த அரசியல் முழக்கம். ‘எது அவசியம்னு தெரிஞ்சு பேய் மாதிரி படிச்சேன்’ - கல்வியே சமூக விடுதலைக்கான சாவி எனத் தீர்க்கமாகத் தீர்ப்பெழுதியது மாரிசெல்வராஜின் பேனா. ‘நான் யார்’ எனக் கேள்வியாக எழுந்து, அதன் பதில் உமிழும் வெறுப்பைக் கடந்து, மாற்றத்தை உறுதியாக முன்னெடுத்து... இப்படிப் பல தளங்களிலும் பயணித்தது பரியனின் கதை.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த திரைக்கதை

வெற்றி மாறன் -  வடசென்னை


ன்பு - ராஜன் - சந்திரா - நால்வர்... தன் கணவனை துரோகத்தால் வீழ்த்திய நான்கு காய்களை, பழிக்குப்பழி சுண்டாடிக் குழிக்குள் கவிழ்க்கும் மனைவியின் கதை. அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தெறிக்கும் ரத்தவேட்கையைக் கண்ணாடியாய்ப் பிரதிபலிப்பதில் தனித்து நிற்கிறது திரைக்கதை. பாதியில் முடிந்துபோகும் ‘ராஜனின் கதை’யை முழுதாய் எழுதி முடிக்க சந்திராவுக்கு ராஜன்தான் தேவைப்படுகிறான். ஆனால், அவன் அவனாக இல்லை. அன்புவாக இருக்கிறான். கேரம், காதல், அரசியல், எதிரிகள் என ராஜனுக்கும் அன்புவுக்குமான ஒற்றுமைகளை காட்சிகளின் வழி விளக்கி, அதில் உலகமயமாக்கல், ராஜீவ் படுகொலை, எம்.ஜி.ஆர் மறைவு போன்ற அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்களைப் புகுத்தி, நான்-லீனியர் வடிவத்தில் மிரட்டலாய் `திரைக்கதை’ப் பாடமெடுத்தது `வடசென்னை.’

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த வசனம்

பா.இரஞ்சித், மகிழ்நன் பா.ம, ஆதவன் தீட்சண்யா - காலா


‘க்
யாரே செட்டிங்கா?’ என வேங்கையன் மகன் டீசரில் பற்றவைத்த நெருப்பு கண்டங்கள்தாண்டி சுட்டது. ‘கொடி பிடிக்கவும் தெரியும், திருப்பியடிக்கவும் தெரியும்’ எனக் கழுத்து நரம்பு புடைக்க `புயல்’ சொன்னபோது பால் பேதமில்லாமல் கரங்கள் தட்டின. ‘சாகுறதுக்குள்ள கால் நீட்டிப் படுக்க ஒரு வீடு வேணும்’ என எளியவர்களின் வலி சுமந்து வந்து விழுந்தன வார்த்தைகள். ‘உன் நினைவுகள்ல இருக்குற சரீனாவா மட்டும் நான் இருந்தா போதும்’ என்ற ஒற்றை வரி, முடிந்துபோன காதல் அத்தியாயத்திற்கு எழுதப்பட்ட பேரழகான அணிந்துரை. ‘மண்ணை, மக்களைப் புரிஞ்சுக்காம புத்தகம் மட்டும் படிச்சுப் புரட்சி பண்ணமுடியாது’ என மேட்டிமைத்தனத்திற்கும் விழுந்தன அடிகள். மண்ணின் குரலாக ஒலித்தது ‘மாத்துறதா இருந்தா இங்கே இருந்து மாத்து’ என்ற கோபம். ‘நிலம் உனக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை’ என, விளிம்புநிலை மக்களைக் கறையாக நினைத்துக் கழுவி எறிய முயன்ற அதிகாரத்தின் கோர முகத்தோடு காட்சிக்குக் காட்சி சண்டை செய்தன இரஞ்சித், மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா கூட்டணியின் வீரியமிக்க வசனங்கள். சமரசமற்ற படைப்புத்திறனுக்கு ‘காலா’வின் எழுத்து காலத்திற்குமான சாட்சியம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த கலை இயக்கம்

ஜாக்கி 
- வடசென்னை


லை இயக்கத்தின் வழி காலப்பயணம் நிகழ்த்திக் காட்டினார் ஜாக்கி. ராஜன் காலத்திலிருந்த ஊருக்கும் அன்பு காலத்திலிருக்கும் ஊருக்கும் குடிசை ஓடுகளை வைத்தே வித்தியாசம் காட்டினார். ஃப்ரேமின் ஏதோவொரு மூலையில் சின்னதாய்த் தெரியும் சுவரொட்டிகளில் ஆரம்பித்து, வீட்டிலிருக்கும் கேரம் போர்டுகள், பவுடர், தேங்காய் எண்ணெய் டப்பாக்கள்வரை சிறுசிறு விஷயங்களைக்கூட அவ்வளவு நுணுக்கமாய்ச் செதுக்கியிருந்தார்.  ஏன், குப்பைகளில்கூட டீட்டெயிலிங் காட்டியிருந்தார். பெரிய சிறைக்கட்டடங்களாக இருக்கட்டும், சிறிய பேன்சி ஸ்டோராக இருக்கட்டும், செயற்கைத்தனம் துளியும் தெரியாததில் மின்னியது ஜாக்கியின்் அபார உழைப்பு. அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ற பொருள்களைச் சேகரித்து, மறு உருவாக்கம் செய்து, கதைக்கேற்ற இடத்தில் கச்சிதமாய்ப் பொருத்திய ஜாக்கியின் வியர்வையில், `வடசென்னை’ உயிர் பெற்றது.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த ஒப்பனை 

பானு, ஏ.ஆர்.அப்துல் ரஸாக், லெகசி FX -  2.0


மு
தல் பாகத்தைவிட வசீகரன் ரஜினிக்குக் கொஞ்சம் மெச்சூர்ட் வேடம். சிட்டிக்கும் அப்டேட்டட் லுக். ரெட்சிப் ரஜினி இன்னமும் ஸ்டைலாக இருக்க வேண்டும். சுட்டியான 3.0வின் துறுதுறுப்பும் தெரியவேண்டும். இறுதியாக, இவை எல்லாமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பொருந்திப்போக வேண்டும். இந்த சவால்கள் ஒருபக்கம் இருக்க, அக்‌ஷய்குமாருக்கு முற்றிலுமாக வேறு ஒரு வில்லத்தன கெட்டப். எல்லாவற்றையும் கவர் செய்து சிக்ஸ் அடித்தது 2.0வின் ஒப்பனைக்குழு. ரெட்சிப் ரஜினிக்கு ஸ்டைலிஷ் கிருதா, கறுப்பு கூலிங் கிளாஸ் என்றால், குட்டி 3.0வுக்கு ஸ்பைக் முடி, அதில் சிவப்பு நிற கலரிங்... நமக்குள் இருக்கும் ரஜினி ரசிகனுக்கு செம தீனி! அக்‌ஷய் குமாரின் ராஜாளி ஹாலிவுட் கற்பனைக்கும் எட்டாத கெட்டப். ஒப்பனை ஒவ்வொன்றிலும் டெக்னிக்கலாக மிரட்டிய 2.0 குழு தொட்ட உயரம் பறவைகளுக்கும் அப்பாற்பட்டது!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த சண்டைப்பயிற்சி 

திலீப் சுப்பராயன்   -
வடசென்னை, காலா, செக்கச்சிவந்த வானம்


போ
ட்டியின் முதல் மூன்று இடங்களையும் பிடித்த ஒற்றை அதிரடி, திலீப் சுப்பராயன். `வடசென்னை’யில் சாமியானாவுக்குள் நடக்கும் சண்டைக்காட்சி நம் அட்ரினலினை ஏகத்துக்கும் சுரக்கச் செய்தது. இருளின் ஏகாதிபத்தியத்தில் நடக்கும் மற்றொரு சண்டைக்காட்சி, நம்மை அச்சத்தில் ஆழ்த்தியது. படத்தில் வீசப்பட்ட கத்திவீச்சுகளுக்கு நம் உள்ளங்கால்கள் கூசிப்போயின. ‘காலா’வில் கையில் குடையோடு கொட்டும் மழையில் கரிகாலன் ஆடும் ராவண ஆட்டம், இடிமுழுக்கம். எரிந்துகொண்டிருக்கும் தாராவியில் கட்டவிழ்க்கப்படும் கலவரக்காட்சி, பல நிஜ ஆவணங்களின் நிழல் நகல். `செக்கச்சிவந்த வான’த்தை மேன்மேலும் சிவக்க வைத்ததும் இவர்தான். அரவிந்த்சாமியின் அலட்டலான உடல்மொழி, சிம்புவிடம் நிரம்பிவழிந்த எனர்ஜி, அருண் விஜய்யிடம் தென்பட்ட வன்மம் என வெளுத்துக்கட்டினார் திலீப். மாஸ், க்ளாஸ் என எல்லா ஏரியாக்களிலும் திலீப்பிற்குக் கிடைத்தது ஃபர்ஸ்ட் ரேங்க்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த நடன இயக்கம்

ஜானி - குலேபகாவலி


பி
ரபுதேவா ஆட இன்னும் என்ன மிச்சமிருக்கிறது? இருக்கிறது என அவரின் பபிள்கம் பாடியை வைத்து வித்தை காட்டினார் ஜானி. இரண்டு மாஸ்டர்களும் சேர்ந்து தமிழர் திருநாளுக்கு ‘குலேபா’வை கலர்ஃபுல் தோரணமாக்கித் தொங்கவிட்டார்கள். நூற்றுக்கணக்கான டான்ஸர்கள், வெவ்வேறு நடன அசைவுகள்... ஒரு க்ரூப் வெளியேற, இன்னொரு க்ரூப் என ஃப்ரேமிற்குள் ஏகப்பட்ட பேர் வந்துபோவார்கள், இவர்களுக்கு நடுவே பிரபுதேவா. இத்தனை கலாட்டாக்களையும் ‘கட்’ இல்லாத ஒரு நிமிட ஷாட்டாகக் கொண்டாடித் தீர்த்திருப்பார் ஜானி. சின்னப் பிசிருக்குக்கூட இடம் தராத அந்த மெனக்கெடல் அபாரம். பிரபுதேவாவின் உடல்மொழியில் வழக்கத்திற்கும் அதிகமாகத் தெரியும் அந்த எக்ஸ்ட்ரா குறும்பு, ஜானி மாஸ்டர் ஸ்பெஷல்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த ஆடை வடிவமைப்பு

ஏகா லகானி - செக்கச்சிவந்த வானம்


ராளமான ஸ்டார்கள் நடிக்கும் கதை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், ஒவ்வொரு ஃப்ளேவர், அதை ஒரே கலருக்குள் கொண்டுவர வேண்டும். சவாலை சிம்பிளாகச் செய்துமுடித்தார் ஏகா லகானி. ‘செக்கச்சிவந்த வான’த்தின் வானிலை மாற்றங்களுக்கு ஏகா லகானியின் ஆடைகளும் கைகொடுத்தன. மூத்த மகனிடமிருக்கும் முதிர்ச்சியை அரவிந்த்சாமியின் ஆடைகளிலும், ஆடம்பர வாழ்க்கையை அருண்விஜய்யின் ஆடைகளிலும், கடைக்குட்டிகளிடம் எப்போதும் எஞ்சி நிற்கும் குழந்தைத்தனத்தை சிம்புவின் ஆடைகளிலும் காட்டி நம்மை அவர்களோடு பயணிக்கவைத்தார். விஜய் சேதுபதியின் ஆடைகளில் தெரியும் வெறுமை, ஜோதிகாவின் சேலை செலக்‌ஷன், விசேஷங்களின்போது ஜொலிக்கும் ஆடைகள் என எல்லா இடங்களிலும் அவர் கொட்டிய உழைப்பு படத்திற்கே சிறப்பு.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ்

ஷங்கர், வி.ஸ்ரீநிவாஸ் மோகன்
- 2.0


தொ
ழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் மாறிவரும் யுகம். அதைச் சரியாகப் பயன்படுத்தி இதற்கு முன் இந்திய சினிமாவின் எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு VFX காட்சிகளால் நம்மைத் திக்குமுக்காடச் செய்தது 2.0! கொஞ்சம் மிஸ்ஸானாலும், ‘எல்லாம் பொம்மை போங்குப்பா’ எனச் சலிப்பைக் காட்டுவான் ரசிகன். அவனை ஒரு செகண்ட்கூட பார்வையைத் திருப்பவிடாமல் இறுக்கிப் பிடித்ததில் வெற்றி பெற்றது ஷங்கர் - ஸ்ரீநிவாஸ் கூட்டணி. பறக்கும் மொபைல்கள், அறை முழுக்க டாலடிக்கும் ஸ்கிரீன்கள், பிரமாண்டக் கழுகு, 2.0 சிட்டி, 3.0 சுட்டி, பறவை மனிதன் என அவர்கள் படைத்த விஷுவல் விருந்தைக் கண்கள் நிறைய உண்டு நிறைந்தன மனங்கள். இந்திய சினிமா என்பது வெறும் இந்தி சினிமா மட்டுமல்ல என டெக்னாலஜியில் விண்ணைத் தொட்டு ‘குக்க்...கூ’ சொன்னது ஷங்கர் அண்ட் கோ.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த பாடலாசிரியர் -  கார்த்திக் நேத்தா

‘அந்தாதி’, ‘காதலே காதலே’, ‘Life Of Ram’ - 96

வர் பேனா உதிர்த்த வரிகளைக் கோடி முறை உச்சரித்துச் சிலிர்த்தது தமிழகம். கோவிந்த் வஸந்தா மீட்டிய வயலின் நரம்புகளினூடே உயிர்க்காற்றைச் சுமந்து ஓடி, பிரேமம் கொண்ட மனங்களின் தனிப்பெருந்துணையாகியது ‘காதலே காதலே’. ‘விண்மீனின் மெகந்தி’, ‘ஆன்மாவின் புலரி’, ‘தெய்வீக எதிரி’ என அந்தாதியில் வார்த்தைக்கு வார்த்தை விரவியிருந்த காதல் எப்போதோ உலர்ந்து நிறமிழந்துபோன சருகிற்கு மீண்டும் ஒளிச்சேர்க்கையூட்டியது. வாழ்வைக் கொண்டாடும் பாடல்கள் தமிழ்வெளியில் மிகக் குறைவு. அவ்வெற்றிடத்தைப் புதுவெள்ளமாய்ப் பாய்ந்துவந்து நிறைத்தது ‘Life of Ram’ பாடல். உண்மையில், அது ராமின் வாழ்வியல் மட்டுமல்ல. ஆறு நிமிடப் பாடலின் ஏதோ ஒரு நுண்விநாடியில் உங்களின் வாழ்க்கையும் நிகழ்படமாய் வந்துபோகும். ‘இருகாலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போகும் அடடா’ என குகைக்குள் ஊறும் ஊற்றாய் அழகியல் புதைத்து வருடிச் சென்றன வரிகள். கார்த்திக் நேத்தா - பின்னிரவுப் பொழுதுகளைத் தன்வசமாக்கி ஏகாந்தம் பரிசளித்த கலைஞன்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த பின்னணிப் பாடகர்  - அந்தோணி தாசன்

‘சொடக்கு மேல’ - தானா சேர்ந்த கூட்டம்

சி
ல பாடல்களைக் கேட்கும்போது மட்டும்தான் பாடலின் காட்சிகளையும் மீறி, பாடியவரின் முகம் நமக்குக் கண்முன் வந்துபோகும். அந்த வரிசையில் லேட்டஸ்ட் என்ட்ரி அந்தோணி தாசன். ‘சொடக்கு மேல’ பாடல் 2018-ம் ஆண்டுக்கான பர்ஃபெக்ட் எனர்ஜி பூஸ்டர். சூடான ஆட்டோ மீட்டர் போல் எங்கும் எதற்கும் நிற்காமல் வெரட்டி வெரட்டி ஹைபிட்ச்சில் எகிறும் பாடல். வரிகளையும் கடந்து பாடல்களின் இடையே இவர் கொடுக்கும் சில விசேஷ ஒலிகளுக்காகவே ஆயிரக்கணக்கில் ஃபாலோ பண்ணுகிறது கூட்டம். கோலிவுட்டின் கொண்டாட்ட ஊற்று இந்த ஃபோக் மார்லே!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த பின்னணிப் பாடகி  

சின்மயி -  96

ந்த ஆண்டு எட்டுத்திக்கிலும் ஒலித்த குரல் சின்மயினுடையது. ‘கொஞ்சும் பூரணமே வா’ என காதலால் கசிந்துருகி அவர் கிசுகிசுத்தபோது மயங்கியது தமிழகம். என்றோ கடந்துபோன வசந்தகாலத்தை நினைத்து மருகும் அவர் குரலில் கரைந்தார்கள் காதல் குடிகொண்டவர்கள். மெல்லிய குறுகுறுப்போடு இவர் குரல் சிந்திய தாபங்களில் ராம்களும் ஜானுக்களும் மானசீகமாகக் கைகோத்துக்கொண்டார்கள். ‘இரவிங்கு...’ பாடலை இவர் குரலில் கேட்டவர்களைச் சூழ்ந்தது தனிமை. ஏக்கம், பிரிவு, மகிழ்ச்சி என உணர்வுகளைக் குரல் வழியே கொட்டிய வித்தகி சின்மயி.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த தயாரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை  -
விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்


சி
னிமாவில் எடுத்ததை சினிமாவிற்காகவே திருப்பிக்கொடுக்கும் கதாநாயகர்கள் மிகக் குறைவு. அதிலும் கமர்ஷியல் வரையறைகளுக்குட்படாத ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ மாதிரியான மாற்றுசினிமாவை எடுப்பதற்கு, பணத்தைப் பொருட்டாக மதிக்காத அசாத்திய துணிச்சலும் சினிமா மீதான தீராத காதலும் தேவை. இரண்டும் நிறையவே இருந்தது விஜய் சேதுபதியிடம். பொருளாதாரச் சிக்கல்கள் தொடர்ந்தாலும், ‘அதெல்லாம் விடமுடியாது’ என விடாப்பிடியாக நல்ல சினிமாவின் பக்கம் நின்று வேண்டியதைக் கொடுத்ததால்தான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ சாத்தியமானது. அப்படத்தின் அத்தனை பெருமைகளுக்கும் அவர் கைகாட்டுவது இயக்குநரையே என்றாலும் அதற்கான உரம் வி.சே போட்டதுதான்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த படக்குழு  - 96

பு
ள்ளினங்களின் கீச்கீச் ஒலியோடு தொடங்கும் ஒன்றரை நிமிட டீசரில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது படக்குழு. நரை வந்தபின்னும் புவியின் போக்கில் கொண்டாடித் திரியும் புகைப்படக் கலைஞனாக விஜய் சேதுபதி. ஒற்றைப் பார்வையில் மொத்தமாகக் காதலைக் கடத்தும் தங்கமீனாக த்ரிஷா. இவர்களின் க்ளோனிங் மினியேச்சர்களாக ஆதித்யாவும் கெளரியும். நால்வரும் நமக்குக் கொடுத்தது காலத்திற்கும் நிற்கும் வேலன்டைன் வாழ்த்து அட்டை. ஜனகராஜ், கவிதாலயா கிருஷ்ணன், நியாத்தி, தேவதர்ஷினி, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ் என சின்னச் சின்ன கேரக்டர்கள்கூட கவனம் ஈர்த்தனர். கோவிந்த் வஸந்தாவின் வயலின் வயர்களில் மாட்டி மீளவிரும்பாமல் மூழ்கிக் கிடந்தன பல்லாயிரம் நெஞ்சங்கள். முன்னும் பின்னுமாய் விரியும் காதல் அத்தியாயங்களுக்கு அழகு சேர்த்தன ஜெயராஜு - சண்முகசுந்தரம் இணையின் கவித்துவ ஃப்ரேம்களும் கோவிந்தராஜின் படத்தொகுப்பும்! காஸ்ட்யூம்கள் ட்ரெண்ட்செட்டராகின. குட்டிக் குட்டி ஹைக்கூக்களாக விரிந்த காட்சியமைப்புகளில் எழுத்தாளராக, இயக்குநராக ஒளிர்ந்தார் பிரேம். 96 படக்குழு உருவாக்கியது எல்லாருக்குமான காதல் டைரி!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

அதிக கவனம் ஈர்த்த படம் - ​2.0

‘இ
ந்த நம்பர் ஒன், நம்பர் டு எல்லாம் பாப்பா விளையாட்டு, ஐ யம் த ஒன்லி ஒன், சூப்பர் ஒன், நோ கம்பேரிசன்’ எனச் சொல்லி அடித்தது 2.0. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பட விளம்பரத்துக்காக 100 அடி உயர ராட்சத பலூனைப் பறக்க விட்டது முதல் வெளியான ஒரே வாரத்துக்குள் 500 கோடி கலக்‌ஷன் அள்ளியது வரை எல்லாமே ராஜாளிப் பாய்ச்சல். துபாயில் ஆடியோ லாஞ்ச், அமெரிக்காவில் பின்னணி இசை எனப் படத்தின் புரொமோஷன்கள் வெளிநாட்டில் நடக்க, ஹாலிவுட் டெக்னீஷியன்கள் விஷுவல் எபெக்ட் வேலைகளுக்காக சென்னை மண்ணைத் தொட்டனர். அரபு நாட்டில் வெளியாகும் முதல் இந்தியப் படம், 50,000 சீனத் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் முதல் இந்தியப் படம் எனப் புதிய வெளிகளை இந்தியக் கனவுத் தொழிற்சாலைக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது 2.0. திருட்டு டொரென்ட்கள் காலத்திலும் திரை அனுபவத்திற்காகவே தியேட்டருக்கு ரசிகனை அழைத்து வந்தது ஷங்கர் மற்றும் குழுவின் அசாத்திய உழைப்பு!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்

கடைக்குட்டி சிங்கம்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சீரியல்களின் முன் செட்டிலாகிவிட்ட தலைமுறையையும், இணையத்தோடு உறவாடும் இந்தத் தலைமுறையையும் ஒருசேர இழுத்துவந்து திரையரங்குகளில் நிறுத்தியது கடைக்குட்டி சிங்கம். அக்கா, மாமா, சித்தி என ரசிகர்கள் திரைகளில் கண்டது தங்களது உறவுமுறைகளை. முகம் சுளிக்க வைக்கும் காமெடியோ, ரத்தம் தெறிக்கும் வன்முறையோ இல்லாத கலர்ஃபுல் கொண்டாட்டமென்பதால் திருவிழாப்போலக் கூடியது கூட்டம். புலம்பி, வெடித்து, உருகி, கடைசியில் உறவுகள் இறுக்கியணைத்துச் சிரித்ததைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் தங்களின் உறவுகளுக்குப் போன் செய்ய எண் தேடினார்கள். அதுதான் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி. கமர்ஷியல் ஏரியாவில் கடைக்குட்டி சிங்கம், தனிக்காட்டு ராஜா!