Published:Updated:

``கதை சொல்லும் அழகுக்காகவே இதைப் பார்க்கவேண்டும்!" - #TheBalladOfBusterScruggs ஒரு பார்வை!

வெஸ்டர்ன் சினிமா ரசிகர்களுக்கு, நெட்ஃபிளிக்ஸில் கோயென் சகோதரர்களின் விருந்து. #TheBalladOfBusterScruggs

``கதை சொல்லும் அழகுக்காகவே இதைப் பார்க்கவேண்டும்!" - #TheBalladOfBusterScruggs ஒரு பார்வை!
``கதை சொல்லும் அழகுக்காகவே இதைப் பார்க்கவேண்டும்!" - #TheBalladOfBusterScruggs ஒரு பார்வை!

மெரிக்காவில் சுமாராக 1860-லிருந்து 1910-வரை மேற்குப் பகுதியில் சட்டம், ஒழுங்கு இல்லாத நிலையில் எல்லை ஊரில் (frontier town) வாழும் மக்களையும், அவர்களது போராட்டங்களையும் பற்றிய படங்களே வெஸ்டர்ன். பெரும்பாலும் அவை நாடோடியாகச் சுழல் துப்பாக்கியுடன் குதிரைமேல் செல்லும் மேய்ப்பாளன் (cowboy) பற்றியவை. ரயில் பாதை வந்து நாகரிகம் எல்லை ஊருக்குள் நுழையும்போது, மேய்ப்பாளன் ஊரை விட்டு இன்னும் மேற்கே செல்வான். கோயென் சகோதரர்களான ஜோயெல் கோயெனும், ஈதன் கோயெனும் எடுத்த `நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்' 1980-ல் நடந்தாலும், வெஸ்டர்னுக்கான அம்சங்கள் இருப்பதால், அதைப் புதிய வெஸ்டர்ன் என்கிறார்கள். 2010-ல் அவர்கள் எடுத்த `ட்ரூ க்ரிட்' பழங்காலத்தில் நடப்பதால், அதுதான் அவர்களின் முதல் வெஸ்டர்ன். அதுகூட ஒரு பழைய படத்தின் ரீமேக். தற்போது அவர்கள், 25 வருடங்களுக்கு முன்னால் எழுதிய சிறுகதைகளுடன், ஜாக் லண்டனின் சிறுகதை ஒன்றையும் சேர்த்து `தி பேலட் ஆஃப் பஸ்டர் ஸ்க்ரக்ஸ்' என்ற வெஸ்டர்ன் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆறு கதைகளின் திரட்டான இந்தப் படத்தில் ஒவ்வொரு கதையும் பச்சை வண்ண அட்டைகொண்ட, பைண்ட் செய்யப்பட்ட படங்கள் அடங்கிய ஒரு பழைய புத்தகத்தைக் காண்பித்த பின், அத்தியாயங்களாக விரிகிறது.

படத்தின் பெயரைத் தாங்கிய முதல் கதை `பாடும் மேய்ப்பாளன்' வகையைக் (Singing Cowboy genre) கலாய்க்கிறது. தேடப்படுகிற சட்ட விரோதி பஸ்டர் ஸ்க்ரக்ஸாக, டிம் ப்ளேக் நெல்ஸன் நடித்துள்ளார். ஒண்டிக்கு ஒண்டியாகக் சுடும் போட்டியில் அதிவேகமாகச் சுழல் துப்பாக்கியை எடுத்து எதிரியைச் சுடுவதில் வல்லவன், பஸ்டர் ஸ்க்ரக்ஸ். அவனுக்குச் சவாலாக `தி கிட்' என்பவன் மௌத் ஆர்கனில் சோகமான பாட்டை வாசித்துக்கொண்டு, குதிரைமேல் அந்த எல்லை ஊருக்குள் நுழைகிறான். அதீதமாகக் கலாய்த்து படத்தில் நடக்கும் கொலைகளிலிருந்து நம்மை விலகச் செய்து, புராதன காலத்து மேற்குப் பகுதியில் சாவுதான் நிச்சயம் என்ற வழக்கமான கருத்தைப் படம் வலியுறுத்துகிறது. கூடவே, பஸ்டர் பாடும் கதைப் பாடலைக் (ballad) கொண்டாடவும் செய்கிறது. `வென் எ கௌபாய் ட்ரேட்ஸ் ஹிஸ் ஸ்பர்ஸ் ஃபர் விங்ஸ்' (“When A Cowboy Trades His Spurs For Wings”) என்ற பாடல், ஆஸ்கர் 2019க்குப் பரிந்துரைக்கப்பட்ட ஷார்ட் லிஸ்டில் இருக்கிறது. இறுதிப் பட்டியலில் இது இருக்குமா என்பது வரும் 22-ம் தேதி தெரிந்துவிடும்.

ஒரு வங்கிக் கொள்ளைக்காரன் பற்றிய அடுத்த அத்தியாயமான `நியர் அல்கடோன்'ஸும் உம் சாவு பற்றியது. வங்கிக் கொள்ளையிலிருந்து தப்பிப்பவன், அவன் செய்யாத கால்நடைத் திருட்டுக்காக மாட்டிக் கொள்ளும் முரண்பாடு இதில் இழையோடுகிறது. 

சற்று உருக்கமான மூன்றாவது பிரிவு, `மீல் டிக்கெட்', வண்டி வகையைச் (wagon type) சேர்ந்தது. ஒரு வயதான கேளிக்கைக்காரன், கை கால் இல்லாத ஹாரிஸன் என்ற கலைஞனை ஊர் ஊராகத் தன் வண்டியில் கூட்டிக்கொண்டு போய், கவிதைகள் சொல்ல வைத்துப் பணம் பண்ணுகிறான். ஷெல்லி, ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் கவிதைகளையும், லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரையையும், பைபிளிலிருந்து கேன்&ஏபில் கதையையும் ஏற்ற இறக்கத்துடன் ஹாரிஸன் அழகாகச் சொல்லிக் காண்பிக்கிறான். மலையடிவாரத்தை நோக்கி தொலைதூரத்தில் இருக்கும் ஊர்களுக்குப் போகப் போக, அவனைக் கேட்க வருகிறவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். கேளிக்கைக்காரன் அவனுக்குப் பதிலாக கூட்டல் கழித்தல் போட்டுக் காட்டும் கோழி ஒன்றை வாங்கிப் போடுகிறான், கரடு முரடான மேற்குப் பகுதியில் கலாசாரத்துக்கு இடமில்லை என்று!

நான்காவது பிரிவான `ஆல் கோல்ட் காய்ன்'-ல் தங்கம் தேடுபவராக பாடகர் மற்றும் இசையமைப்பாளரான, டாம் வெய்ட்ஸ் நடித்துள்ளார். சாவு நிச்சயம் என்ற கருத்துக்கு மாற்று (counterpoint) மேற்கே பரந்து கிடைக்கும் இயற்கையின் அழகு என்பதை வலியுறுத்துகிறது இந்த அத்தியாயம். அந்தத் தங்கம் தேடும் வயோதிகர், கன்னிப் பள்ளத்தாக்கில் தங்கக் கட்டிகளைக் கண்டெடுக்கும்போது, அவரைப் பின் தொடர்ந்து வந்திருந்த இளைஞன் அவரிடமிருந்து தங்கத்தைப் பறிக்க முயற்சி செய்கிறான்.    

`தி கேல் ஹு காட் ரேட்டில்ட்' வண்டித் தொடர் (wagon train type) வகையைச் சேர்ந்தது. ஆலிஸ் லாங்கபாவ் (ஸோ கஸான்), ஆரெகான் செல்லும் வழியில் அவளுடைய அண்ணனை காலராவினால் இழக்கிறாள். வண்டித் தொடரின் தலைவர்களில் ஒருவனான பில்லி (பில் ஹெக்) ஆலிசைப் பிடித்துப் போய், மேட் என்ற வேலைக்காரனுக்கு ஆலிஸின் அண்ணன் கொடுக்க வேண்டிய பணத்தை தான் கொடுப்பதாகச் சொல்லி, ஆலிஸிடம் திருமணம் செய்து கொள்ளக் கோருகிறான். படத்திலேயே நீளமான இந்தப் பிரிவு, காதல் கவிதையாக விரிந்து ஆறு கதைகளிலேயே மிகச் சிறந்ததாக மின்னுகிறது. நாடோடியான பில்லி ஆலிஸை மணந்துகொண்டு, ஆரெகனில் குடியேறி ஹோம்ஸ்டெட் சட்டம் மூலம் தம்பதிகளுக்குக் கிடைக்கக் கூடிய 640 ஏக்கரில் வீடு கட்ட ஆசைப்படுகிறான். படத்திலுள்ள ஒரு குறை, பூர்வீக அமெரிக்கர்களை எப்போதும்போல கொடியவர்களாக இரண்டு பிரிவுகளில் காட்டியிருப்பது.

கடைசி அத்தியாயமான `தி மார்டல் ரிமைன்ஸ்', ஸ்டேஜ்கோச் வகையில் சாதாரணமாக ஆரம்பித்து, அதிமானுடமாக (supernatural) மாறுகிறது. வண்டியில் ஐந்து பயணிகள். ஆங்கிலேயர் (ஜோஞ்ஜோ ஓ'நீல்), ஐரிஷ்காரர் (ப்ரெண்டன் க்லீசன்), பிரெஞ்சுக்காரர் (ஸால் ருபிநெக்), ஒரு வயதான பெண்மணி (டைன் டேலி) மற்றும் வேட்டைக்காரர் (செல்ஸி ராஸ்). இவர்களில் கடைசி மூவரிடையே பேச்சு வார்த்தை சூடு பிடித்து, பெண்மணிக்குக் காக்கா வலிப்பு உண்டாகிறது. அதனால், பிரெஞ்சுக்காரர் வண்டியை நிறுத்த முயற்சி செய்யும்போது ஆங்கிலேயர் சொல்கிறார், `வண்டிக்காரன் இலக்கைச் சேரும் வரை வண்டியை நிறுத்தமாட்டான்' என்று. அப்போதுதான் தெரியவருகிறது, அது சாதாரண ஸ்டேஜ்கோச் இல்லை. அது பேய் வண்டி!

1921-ல் விக்டர் ஹஸ்த்ரோம் (Victor Sjöström) எடுத்த ஸ்வீடிஷ் படமான `ஃபேண்டம் கேரெஜ்' ஞாபகத்துக்கு வருகிறது. ஆங்கிலேயர் வண்டிக்கு மேலே வைத்திருக்கும் பிணத்தை அவரும் ஐரிஷ்காரரும் எடுத்துக்கொண்டு போகும் சரக்கு என்று சொல்கிறார். அவர்கள் இருவரும் தங்களை ஆன்மாக்களை அறுவடை செய்பவர்களாகச் சொல்லிக்கொள்கிறார்கள். பழுத்து விட்டதாகத் (ripe) தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் உதவி செய்பவர்களாம். இதைக் கேட்டு மற்ற மூவரும் நிலை கொள்ளாமல், வண்டி ஃபோர்ட் மார்கனில் ஒரு மர்மமான ஹோட்டலை வந்தடைந்ததும் தங்களுக்கு என்ன ஆகுமோ என்று பதை பதைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ப்ரூனோ டெல்பொன்னெல், அமெரிக்காவின் மேற்குப் பகுதி பற்றிய தொன்மத்தை (myth) உருவாக்கிய சமவெளிகளையும், பாலைவனங்களையும் அருமையாக டிஜிட்டலில் எடுத்திருக்கிறார். டெல்பொன்னெல், `அமெலி' என்ற 2001-ம் வருட பிரெஞ்சுப் படத்தில் அவருடைய ஒளிப்பதிவுக்காக பெயர் பெற்றவர். இந்த வெஸ்டர்னை ஃபிலிமில் எடுத்திருந்தால், செலவு எகிறியிருக்கும். கோயென் சகோதரர்கள் நெட்ஃபிளிக்ஸின் நிதியை நாடியதன் காரணம், ஸ்டுடியோக்கள் மார்வெல் காமிக் அல்லது பிரமாண்டமான ஆக்ஷன் படங்களில் கருத்தாக இருப்பதால்தான். நெட்ஃபிளிக்ஸ் நிதியினால் வெஸ்டர்னின் பாரம்பர்யமான அம்சங்களை மாற்றும் திருத்தவாத (revisionist) வெஸ்டர்ன் சாத்தியம். ஆனால், கோயென் சகோதரர்களின் படம் கிளாசிக் முறையில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. வெனிஸில் 2018-ல் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்ற இந்தப் படம், கிளாசிக் வெஸ்டர்னின் பின்னால் போனாலும், கதை சொல்லும் அழகுக்காகவே இதைப் பார்க்க வேண்டும்!