Published:Updated:

’’ ‘மருத நாயகம்’ கெட்டப் கமல்... மேக்கப் இல்லாத நாகர்ஜுனா!" போட்டோகிராபர் சந்தோஷ் ராஜ்

"கங்குலி நாங்க எடுத்த போட்டோஸைப் பார்த்துட்டு, ’அதைவிட இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’னு சொன்னார். இது என்னால மறக்க முடியாத நிகழ்வு."

’’ ‘மருத நாயகம்’ கெட்டப் கமல்... மேக்கப் இல்லாத நாகர்ஜுனா!"  போட்டோகிராபர் சந்தோஷ் ராஜ்
’’ ‘மருத நாயகம்’ கெட்டப் கமல்... மேக்கப் இல்லாத நாகர்ஜுனா!" போட்டோகிராபர் சந்தோஷ் ராஜ்

டந்த 18 வருடங்களாக போட்டோகிராபி துறையில் பயணித்து வருகிறார் சந்தோஷ் ராஜ். விளம்பரங்களுக்கு போட்டோஷூட் செய்து வருபவர், பல வருடங்களாக செலிபிரிட்டிகளையும் போட்டோஷூட் செய்து வருகிறார்.

இவர் கடந்த வந்தப் பாதையில் அவரால் மறக்கமுடியாத சில போட்டோக்களும் அதனுடைய நினைவுகளும் இதோ...

சிவக்குமார்:

சிவக்குமார் சார் அவரோட பெயிண்டிங் கலெக்‌ஷனை எல்லாம் ஒரு புத்தகமாகப் போட்டு ரிலீஸ் பண்ணியிருந்தார். அந்தப் புத்தகம் சம்பந்தமாக ஒரு போட்டோஷூட் எடுக்கணும்னு அவர் வீட்டுக்கு போயிருந்தேன். ’இசைக்கருவிகளை பேக் க்ரவுண்டில் வைத்துப் போட்டோ எடுக்கணும்’னு அவர்கிட்ட சொன்னதும், ’அப்போ பெசண்ட் நகர்ல இருக்கிற சூர்யா வீட்டுக்குப் போகலாம்’னு என்னை அழைச்சுட்டு போனார். அங்க போனதும், எந்த லைட்டிங்கும் செட் பண்ணாம, ஒரு ஜன்னல்கிட்ட அவரை நிக்க வெச்சு, நேச்சுரல் லைட்ல எடுத்தப் போட்டோதான் இது. இந்தப் போட்டோ அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

கே.பாக்யராஜ்:

பொதுவா நடிகர்களையோ மாடல்களையோ போட்டோ எடுக்குறது கஷ்டமா இருக்காது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு எடுக்கும் போது அவங்களை போஸ் பண்ண வைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும். பாக்யராஜ் சாரைப் போட்டோ எடுக்கப் போறதுக்கு முன்னாடியும் அந்த நினைப்போடத்தான் போனேன். ஆனால், அவர் ஒரு மாடலுக்கு நிகரா போஸ் பண்ணினார். இந்தப் போட்டோவில் அவருக்கு பக்கத்துல ஒரு போட்டோகிராபர் போட்டோ எடுக்குற மாதிரி சிலை இருக்கும். அந்தச் சிலை எடுக்குற போட்டோவுக்கு அவர் போஸ் கொடுக்குற மாதிரி எடுத்தப் போட்டோதான் இது. இந்த ஷூட் முழுக்கவே இப்படிப் பல நல்ல ஷாட்ஸ் இருக்கு.

டிரம்ஸ் சிவமணி:

என்னோட நண்பர் ஒருத்தர் ஹோட்டல் ஒண்ணு திறந்தார். அதைத் திறந்து வைக்க டிரம்ஸ் சிவமணிதான் வந்திருந்தார். அவர் எந்த விஷயத்தைப் பண்ணினாலும் இசையோடுதான் பண்ணுவார். அதனால ரிப்பனை கட் பண்ணும் போது, ’நான் டிரம்ஸ் வாசிக்கணும்’னு சொன்னார். ’இங்க எப்படி வாசிக்க முடியும்’னு நண்பர் கேட்டதும், ’ஹோட்டலுக்குள்ள இருந்து ஒரு தட்டும் ரெண்டு ஸ்பூனும் கொண்டுவாங்க’னு சொன்னார். அதில் கொஞ்ச நேரம் வாசிச்சப் பிறகுதான் ரிப்பனை கட் பண்ணினார். இந்தச் சம்பவம் என் மைண்டுக்குள்ளேயே இருந்துச்சு. அதை இந்த ஷூட்டப்போ அவர்கிட்டச் சொல்லி, அதே மாதிரி ஒரு போட்டோ எடுத்தேன். ஹோட்டல் திறந்தப்போ அவர் எப்படி ஃபீல் பண்ணி வாசிச்சாரோ அதே மாதிரி ஃபீல் பண்ண வெச்சு எடுத்தப் போட்டோதான் இது.

சமுத்திரக்கனி:

’விசாரணை’ படத்துக்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது கிடைச்ச சமயத்தில் எடுத்த போட்டோதான் இது. செம பிஸியான ஷெடியூல்லதான் இந்த ஷூட் நடந்தது. சமுத்திரக்கனியோட ஆஃபிஸ்லதான் இந்த ஷூட்டைப் பண்ணினோம். ’விசாரணை’ படத்தோட போஸ்டர்களில் ஜெயில் சம்பந்தமான எதாவது ஒரு விஷயம் இருக்கும். அதே மாதிரி இந்த ஷூட் எடுக்கணும்னு, சமுத்திரக்கனியைச் சுற்றி கம்பிகள் இருக்குற மாதிரி இந்த போட்டோவை எடுத்தேன்.

சந்தானம்:

’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தோட ஷூட்டிங்கில் எடுத்த போட்டோதான் இது. ஆனால், படத்துக்காக எடுத்தது இல்லை. இந்தப் படத்தில் சந்தானத்தோட காஸ்டியூமே வித்தியாசமா இருக்கும். அதுனால படத்தோட மூடுலேயே இந்த போட்டோஷூட் இருக்கணும்னு ஒரு நாள் முழுக்க ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில இருந்து இந்த போட்டோஸை எடுத்தோம். 

ரம்யா நம்பீசன்:

’சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதியும் ரம்யாவும் கணவன் - மனைவியா நடிச்சிருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் இந்தப் படத்தில் கெமிஸ்ட்ரி செமையா வொர்க்-அவுட்டாகி இருக்கும். நிறைய பேர், ’எங்களுக்கு இப்படி ஒரு மனைவி வரணும்’னு மீம்ஸ் எல்லாம் போட்டாங்க. அந்தச் சமயத்தில் எடுத்த போட்டோஷூட்தான் இது. ‘எனக்கு சேதுபதி லுக்கில் இருந்து வித்தியாசமா ஒரு ஷூட் பண்ணணும்’னு ரம்யா சொன்னாங்க. அதுனால நிறைய லுக்ல அவங்களைப் போட்டோ எடுத்தேன். அதுல இந்த ப்ளேசர் லுக் செமையா ரீச்சாச்சு.

செஃப் தாமு:

செஃப் தாமு கிராமத்து சமையல்கிற ஒரு கேம்ப்பைன் பண்ணினார். அது சம்பந்தமா ஒரு ஷூட் எடுக்கலாம்னு ப்ளான் பண்ணும் போது, கிராமத்துக்கே போய் எடுக்கலாம்னு பார்த்தோம். ஆனா, தாமு சாருக்கு நேரமே இல்லை. அதுனால, என்னோட ஸ்டுடியோவிலேயே இந்த ஷூட்டை எடுத்தோம். கிராமத்துச் சமையலுக்கு என்னென்ன யூஸ் பண்ணுவாங்களோ அதையெல்லாம் தேடித்தேடி சேகரிச்சோம். ஆட்டு உரல், அம்மி, குத்து உரல்னு எல்லாமே கிடைச்சது. ஆனால், திருகல் மட்டும் சென்னையில இல்லை. அப்பறம் வெளியூர்ல இருந்து வர வெச்சு இதை செட் பண்ணினோம். தாமு சார் பார்த்து செம ஷாக்காகிட்டார். ’கிராமத்துக்கே போன மாதிரி இருந்துச்சு’னு சொன்னார். இந்த போட்டோவும் செம ஹிட்டாச்சு.

கங்குலி:

கொல்கத்தாவில் கங்குலி சாரோட வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஸ்டுடியோவில் எடுத்த போட்டோ இது. முதலில், ’யார் போட்டோகிராபர் அவர் எடுத்த போட்டோஸை அனுப்புங்க’னு கங்குலி சார் கேட்டிருப்பார் போல. என்னுடைய க்ளிக்ஸை எல்லாம் அனுப்புனேன். அதைப் பார்த்துட்டு போட்டோ எடுக்க வரச்சொன்னார். மொத்தம் அஞ்சு காஸ்டியூம்ஸ் மாத்தி போட்டோஸ் எடுத்தோம். எல்லாத்துக்கும் ரொம்ப அழகா ஒத்துழைச்சார். நாங்க போட்டோஷூட் எடுத்ததுக்கு ஒரு வாரம் முன்னாடிதான் ஒரு விளம்பரத்துக்காக வேற ஒரு கம்பெனி போட்டோஸ் எடுத்திருக்காங்க. நாங்க எடுத்த போட்டோஸைப் பார்த்துட்டு, ’அதைவிட இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’னு சொன்னார். இது என்னால மறக்க முடியாத நிகழ்வு.

கமல்ஹாசன்:

’மருதநாயகம்’ படத்தோட ஷூட்டிங்கிற்காக கமல் சார் அவரோட கெட்டப்பை மாத்திட்டு இருந்த சமயத்தில் எடுத்த போட்டோதான் இது. அவரோட லுக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த லுக்கிற்கு கமல் சார் ப்ளாக் அண்டு ப்ளாக்ல காஸ்டியூம் போட்டா நல்லாயிருக்கும்னு அவர்கிட்ட சொன்னேன். அவரும் செருப்பு முதற்கொண்டு கருப்புலேயே போட்டு வந்தார். ’ஹேராம்’ படத்துல அவர் யூஸ் பண்ணுன புல்லட் பைக், அவரோட ஆஃபிஸ்ல இருந்துச்சு. அதை அவருக்கு பின்னாடி நிக்க வெச்சுட்டு, இந்தப் போட்டோவை எடுத்தேன். இணையத்தில் ஒரு வருஷத்துல அதிகமா டவுன்லோடு பண்ணுன போட்டோஸில், இந்த போட்டோவும் ஒண்ணு.

நாகார்ஜுனா:

இந்தப் போட்டோவில் நாகார்ஜுனா எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் அவரது வீட்டிலும் இருப்பார். இந்தப் போட்டோஷூட்டில் அவர் கொஞ்சம்கூட மேக்கப் போடலை. காஸ்டியூம்ஸ் மட்டும் மாத்திட்டு எடுத்தப் போட்டோ இது. அதுமட்டுமில்லாம, செம எனர்ஜியான ஆள். அவரோட வேலைப் பார்த்தா, அந்த எனர்ஜி நமக்கும் வந்திடும். கெத்துப் பார்க்காம பழக்கூடிய ஆள். நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு மனிதராகவும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.