Published:Updated:

#WhyCheatIndia... அதேதான் நாங்களும் கேக்கறோம்... ஒய் சீட் ஆடியன்ஸ்?

#WhyCheatIndia... அதேதான் நாங்களும் கேக்கறோம்... ஒய் சீட் ஆடியன்ஸ்?
#WhyCheatIndia... அதேதான் நாங்களும் கேக்கறோம்... ஒய் சீட் ஆடியன்ஸ்?

நம் நாட்டில் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் தகிடுதத்தங்களை படம் பிடித்து காட்டியிருக்கிறது `ஒய் சீட் இந்தியா'. படம் பார்த்து மக்கள் விழித்துக்கொள்வார்கள் எனப் படக்குழு நம்பியிருக்கும். ஆனால், பார்க்கும்போது நமக்கு கண்ணைத்தான் கட்டுகிறது!

இந்தியாவில், நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் `நுழைவு தேர்வழுத்தம்' உத்தரபிரதேச மாநிலத்தில்தான் வலுவாகக் காணப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, படத்தின் களமாக உ.பி-யையே தேர்வு செய்திருக்கிறார்கள். கதை நிகழும் காலம் 1998. சிசிடிவி, ஸ்மார்ட்போன்கள் புழங்கும் இந்தக் காலம், சீட்டிங் கதைக்குச் சரி வராது என்பதால் தானாக கூட்டத்தைச் சேர்த்து பின்னோக்கி நகர்ந்திருக்கிறார்கள் போலும்! இது ஒரு காமெடி-டிராமா சினிமாவென ஆன்லைன் தளங்களில், விளம்பரங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். முடிந்தால் அந்த காமெடிங்கற வார்த்தையை மட்டும் தூக்கிவிடவும்.

ராகேஷ் சிங் எனும் ராக்கி (இம்ரான் ஹாஷ்மி), சிறுவயதில் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தவர். இதுதான் அவரது ஃப்ளாஷ்பேக். இதனால் இந்த நுழைவுத் தேர்வு சிஸ்டமே சரியில்லை என ஒரு கட்டத்தில் காண்டாகும் ராக்கி, மாணவ சமுதாயத்தை மோசடி செய்தாவது தேர்வில் தேர்ச்சி பெற வைக்கும் வேலையில் இறங்குகிறார். மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் வாங்கிவிட்டு, சில குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுகிறார். திறமையான மாணவர்களை தேர்வுக்குத் தயார்படுத்துவது, போலி சான்றிதழ்கள் ஏற்பாடு செய்வது என எல்லா வேலைகளையும் மாய்ந்து மாய்ந்து பார்க்கிறார். அதில் சுமாராக படிக்கும் மாணவர்களுக்குப் பதிலாக சூப்பராக படிக்கும் மாணவர்களை ஆள்மாறாட்டம் செய்து வசூல்ராஜாவாகவும் வலம் வருகிறார்.

அப்படி சூப்பராக படிக்கும் மாணவன் ஒருவன் ராக்கியிடம் சிக்கிக்கொள்கிறான். அவன் சட்டு (ஸ்னிகாதீப் சாட்டர்ஜீ). இரவு கருங்காப்பி எல்லாம் போட்டுக்கொடுத்து பரீட்சைக்குப் படிக்கவைக்கும் சாதாரண இந்திய மிடில் க்ளாஸ் குடும்பம் அவனுடையது. சட்டுவுக்கு நுர்புர் (ஷ்ரேயா தன்வந்திரி) என்றொரு அக்காவும் இருக்கிறாள். ராக்கியின் வலையில் எலியாகச் சிக்கிக்கொண்ட சட்டு என்னவாகிறான், ராக்கியின் மீது காதலில் விழும் நுர்புர் என்னவாகிறாள், ராக்கியே என்னவாகிறான், வேறு யார் யாரெல்லாம் என்னென்ன ஆனார்கள் என ஆத்து ஆத்தென ஆத்தி படத்தை முடித்துவிடுகிறார்கள்.

இம்ரான் ஹாஸ்மி அழகாய் நடித்திருக்கிறார். எப்போதும்போல அந்த இயல்பான நடிப்பு அவருக்குக் கைகொடுத்திருக்கிறது. அவரின் டிரேட்மார்க்(!) கிஸ்ஸிங் சீனும் படத்தில் இருக்கிறது. சட்டுவாக நடித்திருக்கும் ஸ்னிகாதீப், பார்ப்பதற்கு அம்மாஞ்சியாய் இருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்துக்கு நல்ல தேர்வு. நமக்கும் அவரைப் பார்த்தாலே அழுகை பீரிட்டு வருகிறது! ஷ்ரேயா தன்வந்திரிக்கு இந்த படத்தில் டபுள் ரோல். அதாவது, உ.பி-யின் ரூரல் லுக்கில் முற்பாதியிலும், மும்பையின் அர்பன் லுக்கில் பிற்பாதியிலும் வருகிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகவே செய்துள்ளனர்.

படத்தில், வீட்டுக்குள் அமர்ந்து பேசுகிறார்கள். அதை முடித்துவிட்டு மொட்டை மாடியில் நின்று பேசுகிறார்கள். அதை முடித்துவிட்டு டீக்கடையில் நின்று பேசுகிறார்கள், அப்புறம் ஹோட்டலில், அப்புறம் பாரில், அப்புறம் காலேஜில், அப்புறம் போலீஸ் ஸ்டேஷனில், அப்புறம்... இப்படியாக, படம் முழுக்க பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அதுவும் சட்சட்டென செய்து முடித்து கதையை நகர்த்த வேண்டிய விஷயங்களைக்கூட ஜவ்வாக இழுக்கிறார்கள். நமக்கும் ஒரு ஹிந்தி சீரியல் பார்த்த ஃபீலில் கண்ணை கட்டுகிறது. `காமெடி-டிராமா' என்று ஜானரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நுழைவுத் தேர்வு பிரச்னைகள் என்ற நல்ல கதைக்களத்தையும் பிடித்திருக்கிறார்கள். அதில் என்னென்னவோ செய்திருக்கலாமே! ஆனால், பரபரப்பு, சட்டங்கள் குறித்து வலுவான கேள்விகளை எழுப்புவது என்று எதையுமே செய்யாமல் மக்களை சீட் செய்திருக்கிறார்கள் படக்குழுவினர். ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என எதுவும் `வாவ்' சொல்லவைக்கும் அளவிலும் இல்லை. இறுதிக்காட்சியில் மட்டும் கொஞ்சம் எமோஷனை அழகாகத் தாங்கியிருக்கிறார்கள். நமக்கும் நிம்மதி பெருமூச்சு வருகிறது!

சென்சார் போர்டு கேட்டுகொண்டதற்காக, 'சீட் இந்தியா' என்று இருந்த படத்தின் பெயரை `ஒய் சீட் இந்தியா' என்று மாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர்களும் `ஒய்' எனச் சொல்லவில்லை. நாங்களும் `ஒய்' எனக் கேட்கவில்லை!

அடுத்த கட்டுரைக்கு