Published:Updated:

ரஜினிக்காக வாழும் ராயல்ராஜு; எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் சக்கரவர்த்தி... 'மரண மாஸ்' ரசிகர்களின் கதைகள்!

ரஜினிக்காக வாழும் ராயல்ராஜு; எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் சக்கரவர்த்தி... 'மரண மாஸ்' ரசிகர்களின் கதைகள்!
ரஜினிக்காக வாழும் ராயல்ராஜு; எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் சக்கரவர்த்தி... 'மரண மாஸ்' ரசிகர்களின் கதைகள்!

எம்.ஜி.ஆர் எடுக்காமல் விட்டுச்சென்ற படங்களை எடுக்க முயன்றுவருகிறார். இதுமட்டுமல்ல, `இப்போதுள்ள அ.தி.மு.க தலைமை எம்.ஜி.ஆரை மறந்துவிட்டது' என மனதுள் புழுங்கிக்கொண்டிருக்கும் ரசிகர்களை ஒன்றிணைக்க, ஓர் இயக்கத்தைத் தொடங்கி தன் வருமானத்தையெல்லாம் அதற்கே செலவழித்துவருகிறார்.

ஜினி திரைப்படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம், அவரின் திரைப்படங்கள் வெற்றிபெற, அவரின் ரசிகர்கள் பலரும் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அவர்களில் ஒருவர்தான் திருச்சி ராயல்ராஜு. ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, குடும்பத்துடன் விரதமிருந்து 39 தீச்சட்டிகள் எடுத்தவர், ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும்போதும், பறவைக் காவடி, விமானக் காவடி, கத்தியால் அலகு குத்துதல் என விதவிதமாக பிரார்த்தனைகளை செய்வது இவரது ஸ்டைல்.

“தலைவா தலைமை ஏற்க வா! தமிழகத்தின் நடமாடும் ராணுவமே! தமிழகத்தின் நல்ல நேரம் இனிதான் ஆரம்பம், மக்களாட்சி மலரட்டும் இனி உனது ஆட்சி உதிக்கட்டும்!" என ரஜினியை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டிப் பரபரப்பை உண்டாக்கியவர்.

தற்போது திருச்சி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளரான ராயல்ராஜுவை நேரில் சந்தித்தோம்…

“தலைவர் நடித்த குப்பத்துராஜாவைப் பார்த்தபோது எனக்கு வயது 14. அவரது ஸ்டைல் ரொம்பவும் பிடித்துபோனது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு இனம்புரியாத பாசம் உண்டானது. ஒரு கட்டத்தில் படிப்பு வராத நிலையில்,வேலைக்குப் போன நான், கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து, தலைவரை நேரில் பார்க்க ஆசைப்பட்டேன். கையில் இருந்த 30 ரூபாய் எடுத்துக்கொண்டு திருச்சி திருவானைக்காவல் டோல்பூத்தில் நிற்கும் லாரிக்கு 10 ரூபாய் கட்டணமாக கொடுத்து முதன்முதலில் கிளம்பிச் சென்று தலைவரைப் பார்த்துவிட்டு வந்தேன். சில வருடங்கள் கழித்து, எனது நண்பர்களுடன் சைக்கிளில் திருச்சியில் இருந்து சென்னை சென்று தலைவரை சந்தித்தோம். எங்கள் சைக்கிள் பயணத்தைக் கேட்ட தலைவர், இப்படியெல்லாம் செய்யாதீங்க எனச் சத்தம் போட்டார். உங்களை முன்னேற்றும் வழிகளைப் பாருங்கள் என்றதுடன், வழிச்செலவுக்கு 500 ரூபாய் கொடுத்தனுப்பினார். அவ்வளவு பணத்தை முதன்முதலில் பார்த்தது அதுதான் முதல் முறை. இதுவரை 500 தடவைக்கும் மேல் தலைவரை பார்த்திருக்கிறேன். எனக்குப் பிடித்த தலைவரை, எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பித்தது. தலைவர் மீது எனக்கிருந்த பாசம் பக்தியானது.

தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும், ஒருமாதம் விரதமிருந்து, கோயிலுக்கு 39 தீச்சட்டி எடுத்தோம். அதேபோல் தலைவரின் படங்கள் வெளியாகும்போதெல்லாம், அவரின் படங்கள் வெற்றியடைய வேண்டி, விரதமிருந்து பிரமாண்டமான அலகு குத்தி வேண்டுதல் செய்துகொள்வேன். இத்தனை முறை அலகு குத்தியுள்ளேன். ஆனால் என் உடம்பில் சின்ன வடு கூட இல்லை என்பதுதான் அதிசயம். அனைத்துக்கும் தலைவர் மீதான பக்திதான் காரணம். வீட்டுக்கு பெருசா எதையும் செய்ததில்லை. ஆனால் எனக்குப் பீடி, தம்மு, குடி என எந்தப் பழக்கமும் இல்லை. அதனால் குடும்பத்தார், நான் எதைச் செய்தாலும் தலைவரின் பெயருக்கு புகழ் சேர்க்கும் விதமாகவே செய்வேன் என என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அதுதான் எனக்கு பலம். அதனால் எங்களால் ஆன உதவிகளைத் தொடர்ந்து செய்கிறோம். “பேட்ட” படத்தின் 25வது நாளுக்குப் பிரமாண்டமாக தீ சட்டி எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். அரசியலாக இருந்தாலும், ஆன்மிகமாக இருந்தாலும் தலைவர் ஆரோக்கியமாகச் செயல்படவேண்டும். எதையும் ரஜினிக்காக இழப்போம். ஆனால் எதற்காகவும் ரஜினிக்காக இழக்க மாட்டோம்” என்கிறார் உற்சாகத்தோடு.

தான் நேசிக்கும் நடிகர் மறைந்து பல வருடம் கடந்த பிறகும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடல், பொருள், ஆவி அனைத்தும் அவரே என வாழ்ந்துவருபவர் சக்கரவர்த்தி. மதுரையில் `எம்.ஜி.ஆர். சக்கரவர்த்தி' என்றால், தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. சுருள் முடி, அரும்பு மீசை, குளிர்க் கண்ணாடி சகிதமாக எம்.ஜி.ஆர். போலவே இருக்கிறார். 

``நான் வேஷம் போடவில்லை. இயற்கையில் என் தோற்றமே புரட்சித்தலைவர்போல் அமைந்தது, நான் செய்த பாக்கியம்'' என்று பெருமிதத்துடன் கூறும் சக்கரவர்த்தி, ``இந்தத் தோற்றமே என்னுடைய அரசியல் வளர்ச்சிக்குத் தடையாகவும் அமைந்துவிட்டது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படவில்லை'' என்று உற்சாகமாகப் பேசுகிறார். 

ஒரு ரசிகன், தன் அபிமான நடிகருக்காக என்னவெல்லாம் செய்வான்? பச்சை குத்திக்கொள்வான், ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொள்வான். அவரைப்போன்றே உடை அணிவான். படம் வெளியாகும்போது  போஸ்டர் அடிப்பான், கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வான். பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குவான். ஆனால் சக்கரவர்த்தியோ, ஒரு படி அல்ல பல படிகள் மேலே சென்று சிந்திப்பவர்.  எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்து, திரைப்படம் எடுத்து நஷ்டமடைந்தார். ஆனாலும், எம்.ஜி.ஆர் எடுக்காமல் விட்டுச்சென்ற படங்களை எடுக்க முயன்றுவருகிறார். இதுமட்டுமல்ல, `இப்போதுள்ள அ.தி.மு.க தலைமை எம்.ஜி.ஆரை மறந்துவிட்டது' என மனதுள் புழுங்கிக்கொண்டிருக்கும் ரசிகர்களை ஒன்றிணைக்க, ஓர் இயக்கத்தைத் தொடங்கி தன் வருமானத்தையெல்லாம் அதற்கே செலவழித்துவருகிறார்.

எம்.ஜி.ஆர். சக்கரவர்த்தியைச் சந்தித்துப் பேசினோம்,

``பூர்வீகம் சிவகாசி பக்கம் என்றாலும், மதுரையில் செட்டிலான குடும்பம் எங்களுடையது. நான் கெமிக்கல் பிசினஸ் செய்கிறேன். `கூண்டுக்கிளி'தான் எம்.ஜி.ஆர். நடித்து நான் பார்த்த முதல் படம். அதிலிருந்து அவர் மீது எனக்கு பெரும் ஆர்வம். மாணவனாக இருந்த காலங்களில் புரட்சித்தலைவர் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். அப்போதே என் உருவ அமைப்பு எம்.ஜி.ஆர் போல் இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள். அதனால் எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது.

எம்.ஜி.ஆர். படத்தையோ, அவர் நடிப்பையோ யாராவது குறை சொன்னால், கடுமையாகச் சண்டைபோடுவேன். மதுரைக்கு வரும்போது புரட்சித்தலைவரை நிகழ்ச்சிகளில் பார்த்தேனே தவிர, அருகில் சென்று பேசச் சந்தர்ப்பம் அமையவில்லை. அதோடு அ.தி.மு.க-விலும் தீவிரமாகச் செயல்பட்டேன். எவ்வளவுதான் செலவுசெய்தாலும், இங்கு உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் எந்தப் பொறுப்பையும் எனக்குத் தரவில்லை. புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகும் அதேதான் தொடர்ந்தது. அவர் படம், பெயரைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். இதைப் பார்த்து என் மனம் வேதனையடைந்தது. நான் கட்சிக் கூட்டங்களுக்குப் போனால் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. என் தோற்றமே இப்படித்தான் என்றாலும், எம்.ஜி.ஆரைப் போல் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒருமுறை ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ் கார்டன் சென்றபோது, என் தோற்றத்தைப் பார்த்து அனுமதிக்கவில்லை. இப்படி கட்சி நிர்வாகிகள் முதல் சசிகலா, ஜெயலலிதா வரை என்னை ஒதுக்கினார்கள். எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பால், அவர் இப்போதும் நடித்துக்கொண்டிருப்பதுபோன்ற ஓர் உணர்வை ஏற்படுத்த நானே `சக்கரவர்த்தி திருமகன்' என்ற படம் எடுத்து வெளியிட்டேன். ஆனால், அதற்குத் தியேட்டர்கள் கிடைக்க அ.தி.மு.க அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இவ்வளவு ஏன் அந்தப் படத்தை ஜெயா டிவி-யில் ஒளிபரப்பக்கூட விரும்பவில்லை. ஆனால், இப்போது அதை இன்னொருவர் மூலம் வாங்கி முடக்கிவைத்துள்ளனர்.

தலைவருக்காகத் தயாரித்த அந்தப் படத்தால் மதுரையில் முக்கிய இடத்தில் இருந்த கமர்ஷியல் காம்ப்ளெக்ஸையே விற்றேன். அடுத்து தலைவர் தொடங்கி நடிக்காமல்விட்ட படங்களைத் தயாரித்து மக்களை ரசிக்கவைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி பெரும்பாலானோர் சம்பாதித்துவரும் காலத்தில், நான் தலைவருக்காக சொத்துகளை இழந்து அவர் மீது நேசமாக இருக்கிறேன். இதனால் குடும்பத்திலும் டார்ச்சர்தான். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப்போல் உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நாடு முழுவதும் பரவியுள்ளார்கள். அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து உண்மையான எம்.ஜி.ஆர். அரசைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் என் லட்சியம்'' என்கிறார். 

உண்மையிலேயே ஆச்சர்யமான ரசிகராகவே வாழ்ந்துவருகிறார் சக்கரவர்த்தி.

அடுத்த கட்டுரைக்கு