Published:Updated:

"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு..." - வெங்கல் ராவ் ஷேரிங்ஸ்

"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு..." - வெங்கல் ராவ் ஷேரிங்ஸ்
"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு..." - வெங்கல் ராவ் ஷேரிங்ஸ்

"வடிவேலு சாருக்கு எனக்குப் பிடித்த விஷயமே, 'ஏ ராவு உனக்குத் தமிழ் நல்லா தெரியலனாலும் ரியாக்‌ஷன் நல்லா வருதுனு சொல்லுவாரு. ராவுக்கு ரெண்டு டயலாக் போதும், அவருக்கு ரியாக்‌ஷன் போதும்னு வாய்ப்பு கொடுப்பாரு. மூக்குல பஞ்சு வச்சு பஸ்ல உட்கார வைனு அவருதான் சொன்னாரு. என்ன சீன் இதுனு ஆரம்பத்துல கவலைப்பட்டேன். அதுக்கப்புறமா அதுக்கு வந்த ரெஸ்பான்ஸ் என்ன மெரல வச்சுடுச்சுங்க. அதான் சினிமா!"

'வைகைப் புயல்' வடிவேலுடன் இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான நடிகர், வெங்கல் ராவ். மொட்டை ராவ் எனச் சொன்னால் திரையுலகினர் அனைவருக்கும் இவர் முகம் ஞாபகத்துக்கு வரும். ஃபைட் மாஸ்டர், நகைச்சுவை நடிகர் என இரண்டு கரியரைக் கடந்து வந்திருக்கும் இவர், தற்போது 'ஜிமிக்கி கம்மல்' என்கிற சீரியல் மூலமாக சின்னதிரைக்கு வந்திருக்கிறார். தன் சினிமா வாழ்க்கையில் சுமார் 25 வருடத்தை ஃபைட் மாஸ்டராக இருந்து கடத்தியவர். 'நீ மட்டும்' படம் முதல் நகைச்சுவை நடிகரானார். தன்னுடைய சினிமா பயணம் முதல் தற்போதைய வறுமை நிலை வரை அவர் வாய்ஸ்லேயே கேட்போம்.  

''பார்க்கிறதுக்கு மூணு மணிநேர படம் மாதிரி தெரிஞ்சாலும், சினிமா ரொம்போ ரொம்போ கஷ்டங்க. ஆந்திராவுல பொறந்தங்க நானு. என்கூடோ அக்கா, அண்ணன், தம்பி பொறந்தாங்க. அப்பா சின்ன வயசுலயே எறந்து போயிட்டாரு. அப்போ, கோயில் திருவிழாவுல கம்பு சுத்துற வேல பார்க்க ஆரம்புச்சேன். அதிலேயே ஃபைட் மாதிரியான சீக்குவென்ஸ்லாம் பண்ணுவாங்க. அதுல எப்டியோ போய்ட்டேன். ஒருநாள் எங்க அம்மா, 'டேய் அப்பா எறந்து போயிடுச்சு. இப்படித் திருவிழா அது இதுனு சுத்த ஆரம்பிச்சா குடும்பத்த எப்படிக் காப்பத்தறது? ஒனக்கு எப்பிடி சோறுபோடறது'னு சொல்லுது. நான் நெறைய சாப்பிடுவேங்க. நான் சாப்பிட ஆரம்பிச்சா என் குடும்பத்துல யாருக்கும் சோறு பத்தாதுங்க. அதுக்காகவாவது சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். 

கம்பு சுத்துன மாஸ்டரு ஆந்திராவுல இருந்து மெட்ராஸூக்கு வந்துட்டாரு. அதனால நானும் வந்துட்டேன். ஃபைட்டர் சங்கத்துல யூனியன் கார்டு வாங்கப்போறேன். கொம்பு ஃபைட் தெரியுமா, யான் ஃபைட் தெரியுமானு கேட்கிறாங்க. அப்போ எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. அதனாலயே புரியாம ஒன்பது வருடமா சுத்திக்கிட்டே இருக்குறேன். அப்படி ஒருவாட்டி எங்களை மாதிரி ஃபைட் சம்பந்தமான 150 பேருக்கு டெஸ்டிங் பண்றாங்கோ. அது மூலமாக, செலக்டு பண்ணலாம்னு சொல்றாங்கோ. இதுல பாஸ் ஆவுனும். லெட்டர் கொடுத்துட்டுப் போனு சொல்றாங்க. தமிழ் தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட தெளிவா கேட்டேன். நான் கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு, ஃபைட் மாஸ்டர் யூனியன்ல 500 ரூபாய் கட்டி கார்டு வாங்கச் சொன்னாங்கோ. அந்தக் காசு இல்லாமே அக்கா, மாமாவுக்குப் போன் பண்ணிக் கேட்டேன். அந்தப் பணத்தை அனுப்பி வச்சாங்க. ஒரு ரசீது தர்றேன். பத்திரமா வச்சுக்க. சம்பாதிச்சு கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக் கடனை அடை'னு யூனியல இருக்கவங்க சொன்னாங்க.  அப்படி ஆரம்பிச்சது என் ஃபைட் மாஸ்டர் பயணம். ஜூடோ மாஸ்டர், தியாகராஜா மாஸ்டர்னு பத்து மாஸ்டர்கிட்ட வேலை பார்த்துட்டேன். 150 ரூபாய்ல இருந்து, இப்போ 2000 ரூபாய் வரை வந்திருக்கு ஃபைட் மஸ்டர் சம்பளம்." என்பவர், தான் நடிகனான கதையைப் பகிர்கிறார். 

''ஆந்திராவுல இருந்து வந்தப்போ ஃபைட்டு, டயலாக்கு எல்லாம் கத்துக்கிட்டுத்தான் மெட்ராஸூக்கு வந்தேன். சினிமா டெக்னிக்கு இங்க வந்துதான் கத்துக்கிட்டேன். அது பாணி இல்ல. இதுதான் பாணினு புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். டிரெயின் ஃபைட், கப்பல் ஃபைட், குதிரை ஃபைட் எனப் பண்ணி பண்ணி என் இரண்டு கால் முட்டியும் போயிடுச்சு. என்னை மாதிரி பல ஃபைட்டருங்களுக்கு கை, காலு போயிடுச்சு. எங்களுக்கு இன்சூரன்ஸும் இல்ல. இப்போவும் இல்ல. செத்தா மட்டும்தான் உதவித் தொகை கொடுக்குறாங்க. சொந்த பந்தம் எல்லாம் என்ன படத்துல ஃபைட்டரா நடிக்க வைக்கச் சொல்லி ஒருபக்கம் பிரசரு கொடுக்கறா. புரிஞ்சுக்க மட்றா. சினிமாகாரரு எத்தனையோ பேரு கஷ்டபடுறா. ஆந்திரா, தெலுங்கு, ஒரிஷா, இங்கிலீஷ்ல கூட வாய்ப்பு கிடைச்சு நல்லா வந்துட்டாங்க. தமிழ்நாட்டுலதான் நாங்க இப்போ துட்டு இல்லாம கஷ்டபட்டுட்டு இருக்கோம். அம்மா, அப்பாக்கு எப்படிச் சோறு போடுறது? சினிமா என்பது தாய் மாதிரி. கடலில் இருந்து கூட்டிட்டு வரும். கரை சேர்ந்துடுச்சுனா சரி, கடலையே விட்டுட்டா முழுகிடுற மாதிரிதான் சினிமா. சினிமானா கஷ்டம். கடைசி வரைக்கும் சோறுகூட இல்லாமபோனவங்களும் இருக்காங்க" என்றவர்,

"ஃபைட்டரா 25 வருடம். அப்படியே என் இடுப்பு எல்லாம் கண்டமாயிபோச்சு. இனிமே இதைப் பண்ண முடியாதுனு முடிவுக்கு வந்தேன். ஆந்திராவுக்கே போயிறலாம்னு இருந்தேன். ஒருநாள் ஏவிஎம் ஸ்டூடியோவுலே ஒரு ஷூட்டிங் நடக்குது. 'என்னால முடியல ஐயா. கஷ்டமா இருக்குது. காமெடி ஏதாவது கொடுங்கோ; இல்லனா நான் ஆந்திராவுக்கே போயிடுறேன்'னு சொல்லிட்டேன். என் நிலமையைப் பார்த்து அவரு எனக்கு வாய்ப்புக் கொடுத்தாரு. அது எப்படினா, படத்துல அவரு பேசிட்டு வுட்டாச்சுனா, நான் ஸ்டார்ட் பண்ணிருவேன். நிறைய சோலோ பிட்டு கொடுத்தார். அவர் மூலமா நன் இப்போ சோறு சாப்பிடுறேன். ஆண்டவன் எப்படி இருப்பாருனு தெரியாதும்மா... எனக்கு அவருதான் ஆண்டவரு. அவருடைய குழந்தைங்க, பேரப் புள்ளைக நல்லா இருக்கணும்மா." என்றவருக்கு, 'கட்டுமரக்காரன்' படத்தில் முதல் வாய்ப்பு வந்தும் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். 

'' 'நீ மட்டும்' என்ற படம். அதுல இரு சீன். பஸ்ல இருந்து இறங்கும்போது, வடிவேலு 'அண்ணா கொஞ்சம் இறங்குங்க'னு சொல்வாரு. 'பீடி கொடுங்க'னு கேட்பேன். 'போனி ஆகட்டும் தரேன்'னு சொல்லிடுவாரு. சாயங்காலம் வரைக்கு பீடிக்காக அந்த பெட்டிக் கடை கிட்டயே நின்னுட்டு இருப்பேன். என்ன சீன் இதுனு எனக்கு ஆரம்பத்துல வருத்தம். ஆனா அது செம்ம ஹிட். அதே மாதிரிதான், தலைமேல் கையை வச்சு எடுத்துட்டா, குரல்வளையைக் கடிக்கிற சீன். அந்த சீனைப் பார்த்துட்டு பாராட்டி டெல்லி, பாம்பேல இருக்கிறவங்க எல்லாம் கூப்பிட்டுப் பேசுனாங்க. ஒரு பஸ்ல போகும்போது செத்த பொணமா நடிச்சதும், உனக்கும் வேண்டாம், எனக்கு வேண்டாம் ஆற்ரூபாய் டயலாக்... எல்லாம் செம்ம ஹிட்! அவரு புண்ணியம்தான் நான் இப்போ வாழ்றது. என் அப்பா, அம்மாவை அடுத்து வடிவேல்தான் எனக்கு தெய்வம். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் அவருகூட போயிடுச்சு. அவரு சொல்லி மத்த படங்களும் பண்ணிட்டேன். 'அவரு ரெண்டு அம்பது, இவரு ரெண்டு அம்பது.. ஆக மொத்தம் பத்து ரூபாய்... அடிடா மச்சா சியர்ஸூ' அவர்கூட நடிச்சதுல எனக்குப் பிடிச்ச டயலாக்!'' எனச் சிரிக்கிறார், வெங்கல் ராவ். 

'இத்தனை வருடமா, தமிழ் கத்துக்கலையா?' என்றால், "தமிழ் கலந்து தெலுங்கு பேசினதுதான் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. தெளிவான தமிழ்ல்ல பேசிச்சானா, எனக்கு சோறே கிடைச்சிருக்காது. இப்போ தமிழ்நாட்டுல இருக்க ஜனங்கோ நான் தெலுங்கு வாடையோடு பேசினாதான் ரசிக்கிறாங்க'' என்கிறார். அவரிடம், 'மொட்டை' ரகசியமும் கேட்டேன்.  

''சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், ராம்கினு பெரிய பெரிய ஆள்களோடு ஃபைட் பண்ணிட்டு இருக்கும்போதே எனக்கு மண்டையில முடி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. இனிமே எதுக்கு இதுனு முழுக்க எடுத்துட்டேன். 25 வருடமா இந்த கெட்டப்போட இருக்கேன். ஆந்திரா, கர்நாடகா, கன்னடா, ஒரிசா, ஹிந்தி, இங்கிலீஷூ, தமிழு என எல்லா லாங்குவேஜூல இருக்கவங்களும் என்னை தெரிஞ்சுக்குதுனா, அதுக்குக் காரணம் இந்த மொட்டைதான். நிறைய பேர் விக் போடுங்கனு நடிக்கும்போது சொல்லும். 'வேண்டாம் தெய்வமே, இந்த வெயில்ல விக் போட்டு நடிச்சா தாங்கமுடியுமா?'னு சொல்லிடுவேன்." என்றவர், வடிவேலுவுடனான உறவைப் பகிர்கிறார்.

"வடிவேலு சாருக்கு எனக்குப் பிடித்த விஷயமே, 'ஏ ராவு உனக்குத் தமிழ் நல்லா தெரியலனாலும் ரியாக்‌ஷன் நல்லா வருதுனு சொல்லுவாரு. ராவுக்கு ரெண்டு டயலாக் போதும், அவருக்கு ரியாக்‌ஷன் போதும்னு வாய்ப்பு கொடுப்பாரு. மூக்குல பஞ்சு வச்சு பஸ்ல உட்கார வைனு அவருதான் சொன்னாரு. என்ன சீன் இதுனு ஆரம்பத்துல கவலைப்பட்டேன். அதுக்கப்புறமா அதுக்கு வந்த ரெஸ்பான்ஸ் என்ன மெரல வச்சுடுச்சுங்க. அதான் சினிமா! 'தலைநகரம்' படத்துல ஒரு ஜெயில் சீன் வரும். குறுகுறுனு பார்க்கணும், ராரா சரசுக்கு ராரா..'னு சொல்லிட்டு ரியாக்‌ஷன் கொடுக்கணும். 'யார்ரா நீ மலைக்குரங்கு மாதிரி'னு அவர் என்னைப் பார்த்து டயலாக் சொல்லணும். 'நானும் ஜெயிலுக்குப் போறேன்'னு வடிவேலு சாருக்கு தனி டிராக் இருக்கும். பிரகாஷ் சாருக்கு தனி டிராக் இருக்கும். அப்படி எனக்கும் தனியா கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷங்க. அப்போகூட பத்துநாள் ஃபைட்டுக்குப் போயிருந்தாலாச்சும் துட்டு வருமே, இந்த ஒரு சீனுக்கு இரண்டு வாரமா எடுக்குறாங்களேனு கவலைப்பட்டேன். சூப்பர் ஹிட்டுங்க அது. 'நமக்கு காமெடி வொர்க் அவுட் ஆகிடுச்சுடா'னு தொடர்ந்து எனக்கு வாய்ப்பு வந்துடுச்சு. இந்த சீனுனா அது ராவ்வுக்குத்தான்னு வடிவேலு சாரு முடிவு பண்ணிடுவாரு. அப்படித்தான் போண்டா மணி, சுப்புராஜூ, விஜய் கணேஷு, கிங்காங், பாபா ரமேஷ்னு ஒவ்வொருத்தருக்கும் வடிவேலு ஐயாதான் டயலாக், சீன் எல்லாம் சொல்லுவாரு" என்றவரிடம், வாழ்க்கையின் லட்சியம் குறித்துக் கேட்டால், 

"சென்னையில வாடகை வீட்டுலதான் இருக்கேன். இதுக்குமேல காரு, பங்களாலாம் கேட்கல. மூணு வேலை சாப்பாடு, அடிப்படை தேவைக்கு என்ன தேவையோ அதுக்கு சம்பாதிச்சா போதும். எனக்கு ஒரு பையன், பொண்ணுங்க. பையன் இறந்துடுச்சு. பொண்ண பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க வச்சு ஒரு எடத்துல கட்டி வச்சேன். பொண்ண கட்டிக் கொடுத்த எடம் சரியில்ல. இப்போ கிட்டத்தட்ட இருபத்து எட்டு வருடமா என் பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தி, பேரன் வரைக்கும் நான் தான் சோறு போட்டுட்டு இருக்கேன். பேரன் பேத்தி இரண்டு பேரையும் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சுட்டேன். என் பேத்திக்கு 25 பவுன் போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். நல்லா இருக்காங்க. பேரன் வேலை தேடிட்டு இருக்காங்க. ஆந்திராவுல வீடு கட்டிட்டேன். அதனால கடனாகிடுச்சு. அதைக் கட்டத்தான் இப்போ இன்னும் தீவிரமா உழைச்சுட்டு இருக்கேன். எவ்வளவு  கஷ்டப்படுறமோ அவ்வளவு நல்லது கிடைக்கும். 

எனக்கு எத்தனையோ சீரியல் வாய்ப்பு வந்தது நான் போகல. இப்போ படங்கள் இல்லை. அதனால, சன் லைஃப் சேனல்ல 'ஜிமிக்கி கம்மல்' சீரியல் பண்றேன். 'நான் இதுவரைக்கும் சீரியல் பண்ணது இல்லயே சார்'னு சொன்னேன். 'வாங்க சார் பாத்துக்கலாம்'னு நடிக்க வச்சிட்டு இருக்காங்க. ஹீரோவோட அப்பா ரோல் எனுக்கு. லெஃப்ட், ரைட்டு கை மாதிரிதான் சினிமா, சீரியல் இரண்டும். நல்ல சீரியல் ஓடும். மக்களுக்குப் புடிக்கலனா ஓடாது. லேடீஸ் குரூப்புக்குப் புடிச்சிடுச்சுனா போதும், செம்ம ஹிட். அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வந்துக்கூட பார்ப்பாங்க. ஆனா, சீரியல் கஷ்டம். ஒருநாள் முழுக்க இருந்தே ஆகணும். ஃபைட்டு, காமெடி, சீரியல் எல்லாமே கஷ்டம்தான். நடிகர் சங்கத்துல கார்டு வாங்கிட்டேன். நல்லது கெட்டது, அரிசி, பருப்பு, துணி மணி எல்லாம் குடுங்கறாங்க" என்றவரிடம், கடைசியாக வடிவேலுவை சந்தித்த அனுபவம் கேட்டேன். 

"ரெண்டு வாரத்துக்கு முன்னாடிகூட பார்த்துட்டுதான் வந்தேன். அவர்கூட பேசிட்டு, டீ குடிச்சி வந்தேன். மறுபடியும் சாரு வந்தா பார்க்கணும். ஏன்னா, வேலை இருந்தப்போ என்னைப் பார்க்க வந்தாங்க; இப்போ வர்றதில்லனு அவரு நினைச்சுடக்கூடாதுல" என்றவர், தொடர்ந்தார்.

''என் பேத்தியை ராமராஜன் சார் ஒரு முறை அவர் படத்துல நடிக்க வைக்கக் கூப்பிட்டாரு. என் கூட்டத்துல யாரும் வேண்டாம் சார். இந்த சினிமா உலகமே வேண்டாம். நான் ஒருத்தனே போதும்னு சொல்லி மறுத்துட்டேன். என் கொள்ளுப் பேரப் புள்ளைக, 'தாத்தா பொம்மக்காரு, சைக்கிளு, ஃபிளைட்டு எல்லாம் வாங்கிட்டு வா'னு சொல்லிருக்குங்க. வாங்கிட்டுப் போகணும். போயிட்டு வரட்டுமாம்மா..." என தி.நகர் கிளம்புகிறார், பொறுப்பான தாத்தா வெங்கல் ராவ். 

அடுத்த கட்டுரைக்கு