Published:Updated:

ஒரு டஜன் கேரக்டர்களுக்கும் கிளைக் கதைகளுக்கும் நடுவே ஒரு மெஸேஜ்! ராதிகா ஆப்தேவின் #Bombairiya படம் எப்படி?

ஒரு டஜன் கேரக்டர்களுக்கும் கிளைக் கதைகளுக்கும் நடுவே ஒரு மெஸேஜ்! ராதிகா ஆப்தேவின் #Bombairiya படம் எப்படி?
ஒரு டஜன் கேரக்டர்களுக்கும் கிளைக் கதைகளுக்கும் நடுவே ஒரு மெஸேஜ்! ராதிகா ஆப்தேவின் #Bombairiya படம் எப்படி?

மும்பையில் வாழும் பாலிவுட் நடிகர் ஒருவரின் மக்கள் தொடர்பு ஏஜென்ட்டுக்கும், அதே மும்பையில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் ஒரு கொலையின் சாட்சிக்கும் இடையிலான ஜாலியான ஒரு நாள் கதை. #Bombairiya படம் எப்படி?

மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகரம். இந்தியாவின் மற்ற மாநகரங்களைப் போல மும்பை மக்கள் தொகையில் பெரியது. பாலிவுட் ஸ்டார்கள் முதல் ஏழைக் குடிசை வாழ் மக்கள் வரை பலரையும் உள்ளடக்கியது. எல்லா நகரங்களிலும் ஒவ்வொருவரின் வாழ்வும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும். தனித்தனியே வாழ்வதாக நினைக்கும் மக்கள், ஒரு சமூகத்தில் ஒவ்வொருவரோடும் ஏதோ ஒரு வகையில், அவரவர் உழைப்புக்கும், உற்பத்திக்கும் இடையிலான உறவுகளோடு வாழ்கிறோம். 'பம்பாய்ரியா' - மும்பையில் வாழும் பாலிவுட் நடிகர் ஒருவரின் மக்கள் தொடர்பு ஏஜென்ட் ராதிகா ஆப்தே. அவருக்கும் அதே மும்பையில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் ஒரு கொலையின் சாட்சிக்கும் இடையிலான ஜாலியான ஒரு நாள் கதை இது. 

பாலிவுட் நடிகரின் மக்கள் தொடர்பு ஏஜென்ட் மேக்னா. ஒரு நாள் காலையில் சாலையில் ஏற்படும் சிறு விபத்தில், அவரது செல்போன் திருடப்படுகிறது. செல்போனைத் திருடியவனுக்கு ஒரு கிளைக்கதை இருக்கிறது. இவர்கள் இருவர் மட்டுமல்லாமல், பாலிவுட் ஹீரோ, அவரது அரசியல்வாதி மனைவி, மேக்னாவின் செல்போன் திருட்டுப் போனதால் அவளுக்கு உதவும் ஹீரோ, திருடனைத் தேடும் சிபிஐ அதிகாரி, சிபிஐ அதிகாரியைத் தேடும் போலீஸ், உயர்தர சிறையில் இருந்தபடியே உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதி, ஐந்தாண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கு, நேரலையில் நடந்துகொண்டிருக்கும் ரேடியோ ப்ரோகிராம்.. என நீண்டு ஒவ்வொருவரையும் பிணைக்கும் கதை. இறுதியாக இந்தியாவில் குற்ற வழக்குகளின் சாட்சிகளுக்கு உள்ள பாதுகாப்பின்மை பற்றி ஒரு மெசேஜ். இதுதான் 'பம்பாய்ரியா'.

பதற்றத்திலேயே திரியும் மேக்னாவாக ராதிகா ஆப்தே. நெட்ப்ளிக்ஸ், இன்டிபென்டன்ட் மூவிஸ், அறிமுக இயக்குநர் என வெரைட்டியான திரைப்படங்களில் நடித்தாலும், ராதிகாவின் நடிப்பு அனைத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் செல்போனுக்காகவும், அதில் இருக்கும் பலான வீடியோ வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் பதற்றமாக இருக்கும் ராதிகா ஆப்தே க்ளைமாக்ஸில் திடீரென மிகப்பெரிய வழக்கை 'ஜஸ்ட் லைக் தட்' முடிக்க முயல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!

ராதிகாவுக்கு உதவும் ஹீரோவாக அக்‌ஷய் ஓபராய், பாலிவுட் நடிகராக ரவி கிஷன், திருடனாக சித்தாந்த் கபூர், ஜெயிலில் இருக்கும் அரசியல்வாதியாக ஆதில் ஹுசைன் என ஒரு பட்டாளமே இருந்தாலும் ராதிகா ஆப்தேவை நம்பிதான் முழுப்படமும் பயணிக்கிறது. மற்றவர்கள் அனைவரையும் கதையை நகர்த்த மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் பியா சுகன்யா. வேகமாகத் தொடங்கும் கதையில், நடுவில் சில காமெடி சீன்கள் சிரிக்க வைக்கின்றன.  

மும்பை நகரம் பற்றிய படம் என்பதை டைட்டிலும், மும்பையின் சில பிரபலமான இடங்களும் மட்டுமே நினைவூட்டுகின்றன. கார்த்திக் கணேஷின் ஒளிப்பதிவுதான் இதற்காக இறங்கி வேலை செய்திருக்கிறது. 108 நிமிடங்கள் மட்டுமே ஓடும் படம் என்றாலும், டஜன் கணக்கில் கேரக்டர்களை வைத்து, கதையைக் கச்சிதமாக தொகுத்திருக்கிறார் அந்தாரா லாஹிரி. சில இடங்களில் மட்டும் ஹைலைட்டாக அமைகிறது ஆர்கோ ப்ராவோ முகர்ஜி - அம்ஜத் நதீம் கூட்டணியின் பின்னணி இசை. 

இத்தனை நடிகர்களை வைத்து, ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு கதையையும் நோக்கத்தையும் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது. இத்தகைய ஹைபர்லிங்க் கதைகளைத் திரையில் காண்பது குறைவு. ஆனால், இங்கே நெருடலாக அனைவரும் இந்தப் புள்ளியில்தான் இணையப் போகிறார்கள் என்பதைப் பார்வையாளர்களாலேயே எளிதாக யூகிக்க முடிகிறது. இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் சேர்த்திருக்கலாமே? அதுவும் அனைவரும் இணைந்து, ஒரே காட்சியில் ஒரே முடிவுக்கு வருவதெல்லாம் நம்மூர் மெகா சீரியலைப் பார்த்த உணர்வையே அளிக்கின்றன. 

இந்தியாவில் குற்ற வழக்குகளில் சாட்சி சொல்பவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது பேசப்பட வேண்டிய விஷயம். ஆனால் இப்படியான சிக்கலான கதையில், மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காகத் திணிக்கப்பட்டதாக இருக்கிறது இந்தக் கருத்து. அந்த முக்கியமான மெஸேஜ் குறித்து இன்னும் வலுவான காட்சிகளைச் சேர்த்திருக்கலாமே?

நெட்ப்ளிக்ஸில் ஒவ்வொரு சீரிஸிலும் ராதிகா ஆப்தேவை பதற்றமாக ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டவர்களுக்கு 'பம்பாய்ரியா' அதே உணர்வைதான் அளிக்கும். என்ன, இங்கே ஓட்டத்தில் கொஞ்சம் வேகமும் குறைவு, வலுவில்லாத காட்சிகளால் பதற்றமும் குறைவு!

அடுத்த கட்டுரைக்கு