பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதி திரட்டுவதற்காக, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மும்பையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த மாரத்தானில், நடிகை காஜல் அகர்வால் கலந்துகொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல், “ இது என்னுடைய இரண்டாவது மும்பை மாரத்தான். இதில், 10 கிலோ மீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் கடந்துள்ளேன். கடந்த ஆண்டை விட 8 நிமிடம் குறைவான நேரத்தில் இலக்கை எட்டியுள்ளேன். 2019-ம் ஆண்டுக்கான இலக்குகள், பொறுமை, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் கவனம்செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு, 21 கிலோ மீட்டரை இலக்காக வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பழங்குடி கிராமத்தினருக்கு உதவும் பொருட்டு, தனியார் தொண்டு நிறுவனத்தால் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடுசெய்யப்பட்டது. அவர்களுக்கு தனது வாழ்த்துகளை காஜல் தெரிவித்துள்ளார்.