Published:Updated:

``நான் சாக்லேட் பாய் இல்லை!" நிவின் பாலியின் மாஸ் அவதாரம் ஈர்க்கிறதா? #Mikhael படம் எப்படி?

``நான் சாக்லேட் பாய் இல்லை!" நிவின் பாலியின் மாஸ் அவதாரம் ஈர்க்கிறதா? #Mikhael படம் எப்படி?
``நான் சாக்லேட் பாய் இல்லை!" நிவின் பாலியின் மாஸ் அவதாரம் ஈர்க்கிறதா? #Mikhael படம் எப்படி?

பிற உயிர்களைக் காக்க வேண்டிய டாக்டர் ஒருவரை, சூழ்நிலை கத்தியைத் தூக்க வைக்கிறது. சாதாரண மைக்கேல் பழிவாங்கும் தேவதூதனாக ஆக்ஷன் அவதாரம் எடுத்தால் அதுவே #Mikhael.

வரிசையாகக் கொலைகள். இரண்டு கேங்களிலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்ள இடையில் இன்னொருவன் இருக்கிறான் என்று தெரிகிறது. `பாவத்தின் சம்பளம் மரணம்' எனத் தன்னை #Mikhael எனும் தேவதூதனாகப் பாவித்து டாக்டர் மைக்கேல் (நிவின் பாலி) கொலைகளை நிகழ்த்துகிறான். ஏன்? எதற்கு? திரையில் விரிகிறது ஃப்ளாஷ்பேக்.

எல்லாம் வழக்கமான பழிவாங்கல் கதைதான். ஆனால் பழிவாங்கியதோடு நிற்காமல் கொலைப் பட்டியல் நீள்கிறது. படமும் நீள்கிறது. எல்லாச் சம்பிரதாயங்களும் முடிய இரண்டரை மணி நேரங்கள் ஆகின்றன. உபயம்: படம் நெடுக மாஸ் ஏற்றுகிறேன் என எல்லோருக்கும் வைத்த ஸ்லோமோஷன் ஷாட்களும், படத்தின் நீளத்தை விடவும் நெடு நேரம் ஒலிக்கும் பின்னணி இசையும்தான்.

மைக்கேலாக நிவின் பாலி. தொடர் தோல்வி அல்லது சுமாரான படங்கள் என்று வரும்போது அனைத்து முன்னணி நடிகர்களும் கையில் எடுக்கும் முதல் ஆயுதத்தை மனிதரும் எடுத்திருக்கிறார். மாஸ் ஏற்றும் ஆக்ஷன் படம். இங்கே கொஞ்சமே கொஞ்சம் த்ரில்லும் சேர்த்திருக்கிறார்கள். வழக்கத்துக்கு மாறாகச் சற்றே பருமனாக இருக்கிறார். ஆனால், ஃப்ளாஷ்பேக்கில் வரும் கல்லூரிப் பருவத்தில்கூட அப்படியே வருவதுதான் உறுத்துகிறது.

தங்கையிடம் அம்மாஞ்சியாக இருந்துவிட்டு சீனியர்களிடமும் வில்லன்களிடமும் வேறு ஒரு ஆல்டர் ஈகோ காட்டுவது சிறப்பாகப் பொருந்திப் போயிருக்கிறது. அது மட்டுமன்றி தான் சாக்லேட் பாய் மட்டும் இல்லை என்று ஆக்ஷன் காட்சிகளில் நிரூபித்து இருக்கிறார். ஆனால், நமக்கு என்னவோ அந்த அப்பாவியான கலகல நிவின் பாலிதான் மனதில் நிற்கிறார். நிவின் பாலியின் தங்கையாக வரும் ஜென்னி கதாபாத்திரம் கதையில் மிக முக்கியமான ஒன்று. நல்லவேளையாக அதிலும் கிளிஷேக்களைச் செருகாமல், தைரியமாகத் தவறுகளை எதிர்த்து நிற்கும் பெண்ணாகக் காட்டியிருப்பது ஆறுதல். 

மஞ்சிமா மோகன் படத்தில் இருக்கிறார் அவ்வளவே! இறுதியில் நிவின் பாலி தன் குடும்பத்தை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பாதுகாப்பான இடம் வேண்டுமே... அதற்கு மஞ்சிமா வீடு சரியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே அவர் பாத்திரம் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதுபோல! அதுபோக படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள். ஏன், போலீஸ் அதிகாரியிலேயேகூட ஒரு வில்லன் இருக்கிறார். இவர்களில் ஒரு சிலரை குறைத்திருந்தாளுமே கதையின் போக்கில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை.

முக்கியமான போலீஸ் அதிகாரியாக வரும் ஜே.டி.சக்கரவர்த்தி மற்றும் அவரின் உதவியாளர் சூரஜ் வெஞ்சரமூட் கவனம் ஈர்க்கின்றனர். ஆனால், தன் உயர் அதிகாரியே தவறு செய்தாலும் எதிர்க்கும் சூரஜ், ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்த பத்தாவது நிமிடமே அணி மாறிவிடுவது எல்லாம் என்ன லாஜிக்கோ!

கொடூர வில்லனாக நடிகர் சித்திக். பாடல்கள் பாடிக்கொண்டே திட்டம்போட்டுக் கொல்லும் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். அவர் அத்தனை மிரட்டலான வகையில் நிவின் பாலியின் குடும்பத்தைப் பின்தொடர்ந்து வந்து வார்னிங் செய்துவிட்டுச் சென்ற பிறகும், அதே காட்சியின் நீட்சியாக கிறிஸ்துமஸ் கேக் வாங்க தன் தாயை நிவின் பாலி கடையில் ட்ராப் செய்துவிட்டுப் போவதெல்லாம் இந்த உலகத்தில் யாருமே செய்ய மாட்டார்கள். பாஸ், அவன் கொன்றுவேனு மிரட்டியிருக்கான். உங்களுக்குப் புரிஞ்சதா இல்லையா? என்னமோ போங்க நிவின் பாலி! என்னமோ போங்க டைரக்டர் சார்!

மற்றொரு முக்கிய வில்லனாக உன்னி முகுந்த். சமாதானம் பேச வந்த இடத்தில் வதம் செய்வது, அடுத்தவரை மிரட்ட அவர்கள் வீட்டில் ஷார்ட்ஸுடன் ஷவரில் குளிப்பது, மிரட்டுவதற்காகவே வந்துவிட்டு, சரி வந்துவிட்டோமே என உடல் உறுப்புத் தானத்துக்குக் கையொப்பம் இட்டுச் செல்வது என `ஏன்னா இப்படி?' எனக் கேட்க வைக்கும் குழப்பமான பாத்திரம்தான். ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரின் மகனாக வரும் வில்லன் பாத்திரங்கள், பெரிய சண்டை நடக்கையில் குறுக்கே வரும் `கலகலப்பு' மனோபாலாவை ஏனோ நினைவூட்டுகின்றன.

``நான் அடைமழையிலேயே நனைய மாட்டேன். பனித்துளியிலயா நனையப்போறேன்?", ``இதைவிட ஹைய்யர் டோசேஜ் மருந்தை உனக்குச் சீக்கிரமே எழுதித் தரேன்!" எனப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் பன்ச் பேசுகின்றன. எல்லோருக்கும் பில்டப் பின்னணி இசையை வாரி இறைத்திருக்கிறார் கோபி சுந்தர். பெரும்பாலும் டார்க் டோன், மழை சம்பந்தப்பட்ட காட்சிகள், ஸ்லோமோஷன் காட்சிகள் என ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்தின் மாஸ் மீட்டரை உச்சத்திலேயே வைக்க முயற்சி செய்கின்றன. வழக்கமான கதைதான் அதற்குப் பிடி கொடுக்கவில்லை.

நான்-லீனியர் திரைக்கதை படத்தின் பலம் என்றாலும் தேவையில்லாத காட்சிகள், பில்ட் அப் ஷாட்கள் போன்றவற்றுக்கு இன்னுமே தாராளமாகக் கத்திரி போட்டிருக்கலாம். இருந்தும் பாலியல் ரீதியாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது அவர்களுக்கு மனரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தம் என்று பதிவு செய்ததற்காகவும், இயற்பியல் விதிகளை அவ்வப்போது கேள்வி கேட்டாலும் நிவின் பாலியின் கம்பேக் ஆக்ஷன் அவதாரத்திற்காகவும் நம் பாப்கார்ன்களைச் சிதறவிடுவதில் தவறில்லை. வெல்கம் பேக் நிவின், அரை மனதுடன்!

அடுத்த கட்டுரைக்கு