Published:Updated:

’’120 டூ 60 கிலோ... சந்தோஷமா இருக்கு!" - பாடகி ரம்யா

’’120 டூ 60 கிலோ... சந்தோஷமா இருக்கு!" - பாடகி ரம்யா
’’120 டூ 60 கிலோ... சந்தோஷமா இருக்கு!" - பாடகி ரம்யா

"சோஷியல் மீடியாவுல `10 இயர் சேலஞ்ச்'னு என் இரண்டு காலகட்ட போட்டோஸை பதிவிட்டதும், லைக்ஸ், கமென்ட்ஸ் மற்றும் போன் கால்னு நிறைய பாராட்டுகள் கிடைச்சுது."

மூக வலைதளங்களில் `#10YearChallenge' வைரலாகியுள்ளது. இதில் பின்னணிப் பாடகி என்.எஸ்.கே.ரம்யாவும் தனது பத்து வருட சேலஞ்ச் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதற்குக் கிடைத்த வரவேற்பு, ரம்யாவை உற்சாகப்படுத்தியுள்ளது. இது குறித்து அவரிடம் பேசினோம்.

`` '10 இயர் சேலஞ்ச்'ல உங்க புகைப்படத்தைப் பதிவிட்டதற்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ் பற்றி..."

``சந்தோஷமா இருக்கு. கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி ரொம்ப உடல்பருமனோடு இருந்தேன். அப்போ, 120 கிலோவுக்கும் அதிகமா என் உடல் எடை இருந்துச்சு. அதனால, உடல்நிலை ரொம்பப் பாதிக்கப்பட்டுச்சு. எனவே, உடல் எடையைக் குறைக்கத் தீர்க்கமா முடிவெடுத்தேன். ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சேன். எல்லோரையும்போல நானும் ரெகுலரா ஜிம் போகச் சோம்பல்படுவேன். ஒருகட்டத்துல பொறுப்பா தினமும் ஜிம் போக ஆரம்பிச்சேன். பல வருஷமா தினமும் மூணு மணிநேரம் தவறாம உடற்பயிற்சி செய்றேன். ஆனா, உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தாம, பிடிச்ச உணவுகளைத் திருப்தியாச் சாப்பிடுவேன். ரொம்பக் கஷ்டப்பட்டு, என் உடல் எடையைக் குறைச்சேன். இப்போ 60 ப்ளஸ் உடல் எடையில இருக்கேன். 

உடல் எடையைக் குறைச்சது, பெரிய விஷயமா தெரியலை. ஏன்னா, இது சில மாதங்கள்ல சாத்தியமாகிடலை. பல வருட உடற்பயிற்சியின் பலன்தான். நான் பத்து வருஷத்தைவிட இப்போ ரொம்ப இளமையா இருக்கிறதாப் பலரும் சொல்றாங்க. அதைவிட, இப்போ உடலளவிலும் மனதளவில் ஆரோக்கியமா இருக்கேன். அதனால என் வேலையில நிறைவா கவனம் செலுத்த முடியுது. குறிப்பா, சோஷியல் மீடியாவுல `10 இயர் சேலஞ்ச்'னு என் இரண்டு காலகட்ட போட்டோஸை பதிவிட்டதும், லைக்ஸ், கமென்ட்ஸ் மற்றும் போன் கால்னு நிறைய பாராட்டுகள் கிடைச்சுது. `நீ ஃபிட்னஸ் ட்ரெயினராகிடு'னு என் தோழி கீர்த்தி சாந்தனு உட்பட பலரும் சொன்னாங்க. அதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், அதைகேட்டு சந்தோஷமா சிரிச்சேன்."

`` `பிக் பாஸ்'க்குப் பிறகு உங்க லைஃப் எப்படி மாற்றமடைந்திருக்கு?"

``என்னைப் பற்றி மக்கள் புரிஞ்சுக்க  `பிக் பாஸ்' நிகழ்ச்சி நல்ல வாய்ப்பாக அமைஞ்சது. சீக்கிரமே நான் எலிமினேட்டானாலும், என் குணத்தை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. சோஷியல் மீடியா மற்றும் வெளியிடங்கள்ல மக்கள் என்னைப் பாராட்டிப் பேசினாங்க. இதுக்கு மேல என்ன வேணும்? உண்மையா, மனதளவிலும் மக்கள் மத்தியிலும் எனக்கு நல்ல மாற்றம் கிடைக்கணும்னுதான் அந்நிகழ்ச்சிக்குப் போனேன். இரண்டுமே கிடைச்சுது. குறிப்பா, `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆக்டிங் வாய்ப்புகள் நிறைய வருது. ஆனா, அதில் எனக்குப் பெரிசா ஈடுபாடு இல்லை. எனக்கு இசைத்துறைதான் நல்லா தெரியும். அதில் வேலை செய்யவே எனக்கு அதிக விருப்பம். அதனால ஆக்டிங் வாய்ப்புகளை உடனே தவிர்த்துடுறேன்."

`` `பிக் பாஸ்' போட்டியாளர்களுடனான நட்பு பற்றி..."

``அந்நிகழ்ச்சியில யார் எப்படி இருந்தாலும், ஃபைனலுக்குப் பிறகு எல்லோரும் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். நான் சகப் போட்டியாளர்கள் எல்லோர்கூடவும் நல்ல நட்புடன் இருக்கேன். வைஷ்ணவி, ஜனனி ஐயர், மும்தாஜ், ஐஸ்வர்யா உட்பட பலரையும் அடிக்கடி மீட் பண்ணுவேன். அவங்களோடு வெளியூர், வெளிநாடுகளுக்கு ட்ரிப் போறேன். புதிய நண்பர்கள் கிடைச்சதில் மகிழ்ச்சி."

``இசைப் பயணம் எப்படிப் போகுது?"

``நல்லா போகுது. நல்ல புராஜெக்ட்ஸ்ல பாடியிருக்கிறேன். இப்போக்கூட நான் பாடியிருக்கிற ஒரு தெலுங்குப் பட இசை வெளியீட்டு விழாவுக்குத்தான் போயிட்டு இருக்கேன்." 

``ஹேர்ஸ்டைல் மாத்திட்டீங்களா?"

``இல்லை! இன்னும் அதே ஹேர் ஸ்டைல்லதான் இருக்கேன். இப்போ இந்த ஹேர் ஸ்டைல்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. என்னைப் போலவே `பிக் பாஸ்' போட்டியாளர்கள் வைஷ்ணவி மற்றும் நித்யா ஆகியோரும் ஹேர் கட் பண்ணி, ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்காங்க." 

அடுத்த கட்டுரைக்கு