Published:Updated:

`` `சின்ன மச்சான்' பாட்டு ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு!" - நிக்கி கல்ராணி

``நடிப்பு ஒரு கடல் மாதிரி. எத்தனை படங்கள்ல நடிச்சாலும் கத்துக்கிறதுக்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கும். எனக்கு முழுக்க கிராமத்துப் பொண்ணா ஒரு தமிழ்ப் படத்துல நடிச்சிடணும்னு ஆசை!" - நடிகை நிக்கி கல்ராணி

`` `சின்ன மச்சான்' பாட்டு ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு!" - நிக்கி கல்ராணி
`` `சின்ன மச்சான்' பாட்டு ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு!" - நிக்கி கல்ராணி

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து, தனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொண்டவர், நிக்கி கல்ராணி. 2018-ல் `கலகலப்பு 2', `பக்கா' படங்களைத் தொடர்ந்து, `சார்லி சாப்ளின் 2' ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. ``நடிப்பு ஒரு கடல் மாதிரி. எத்தனை படங்கள்ல நடிச்சாலும் கத்துக்கிறதுக்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கும். எனக்கு முழுக்க கிராமத்துப் பொண்ணா ஒரு தமிழ்ப் படத்துல நடிச்சிடணும்னு ஆசை. ஆனா, நிறைய மாடர்னான கதைகள்தான் எனக்கு வருது. இந்த வருடம் அந்த ஆசை நிறைவேறணும்!" படபடவெனப் பேச ஆரம்பிக்கிறார், நிக்கி கல்ராணி.  

``உங்களுக்குத் தாய் மொழி கன்னடம். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்கிறப்போ, மொழி சார்ந்த சவாலை எப்படி எதிர்கொள்றீங்க?" 

`` `1983' மலையாளப் படம் மூலமாதான் நான் சினிமாவுக்கு அறிமுகமானேன். அப்போ எனக்குத் துளியும் மலையாளம் தெரியாது. `டார்லிங்' மூலமா தமிழ்ல அறிமுகமாகும்போது, தமிழ் தெரியாது. தொடர்ந்து தமிழ்ப் படங்கள்ல நடிக்கிறது அதிகமாகிடுச்சு. வீட்டுக்கு போன் பேசுற நேரம் தவிர, மத்த நேரமெல்லாம் தமிழ்தான் என் காதுல விழுந்துக்கிட்டே இருக்கும். அதனால தமிழை ஈஸியா கத்துக்கிட்டேன். மலையாளமும் கிட்டத்தட்ட தமிழ் மாதிரிதான்னு சொன்னாங்க. ஈஸியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, உச்சரிப்பு சரியா வரலை. அதனால, மலையாளப் படங்கள்ல நடிக்கும்போது மட்டும் `ப்ராம்ப்ட்' வாங்கிப் பேசுவேன். தெலுங்கு, தமிழ்ல வசனங்களை மனப்பாடம் பண்ணிப் பேசுவேன்." 

``நடிக்கிற நேரம் தவிர்த்து, மத்த டைம்ல  வீட்ல எப்படி?" 

``சினிமா ஷூட்டிங்ல இருக்கிற மாதிரிதான், வீட்டுலேயும் துறுதுறுனு இருப்பேன். வீட்ல நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். அதுகூட விளையாடுறதுதான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர். தவிர, சமையல்ல எனக்கு ஆர்வம் அதிகம். நண்பர்கள் வீட்டுக்கு வந்தா, அவங்ககூட சேர்ந்து சமைப்பேன். பொங்கல் அன்னைக்குக்கூட வீட்ல வெண் பொங்கலும், சக்கரைப் பொங்கலும் நான்தான் செஞ்சேன். நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் வீட்டுல இருக்கவே விரும்புவேன்." 

`` `சார்லி சாப்ளின் 2' படம் பற்றி?" 

``இந்தப் படத்துல கமிட் ஆனதும் முதல் வேலையா `சார்லி சாப்ளின்' படத்தைப் பார்த்தேன். சூப்பர் ஹிட் ஆன இந்தப் படம், ஆறு மொழிகள்ல ரீமேக் ஆனதா கேள்விப்பட்டேன். இது, `சார்லி சாப்ளின்' படத்தோட தொடர்ச்சி இல்லை. முழுக்க முழுக்க வேற கதை. கும்பகோணம், பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம். நல்ல ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமா வந்திருக்கு."

``பிரபு, பிரபுதேவா ஆகிய சீனியர் நடிகர்களோட நடிச்ச அனுபவம்?"  

``பிரபு சார் என் அப்பாவா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் அதிகம். சார் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட். என்ன கேரக்டரா இருந்தாலும் ஈஸியா நடிக்கிறவர். நான் நடிக்கும்போது ஏதாவது தப்பு பண்ணா, அதைச் சுட்டிக் காட்டுவார்.  அதைச் சரி செய்ய அவரே நடிச்சும் காட்டுவார். நான் டான்ஸ், ஆக்டிங் ரெண்டுலேயும் கொஞ்சம் வீக்தான். என்னை டான்ஸ் ஆட வைக்கிறதுக்குள்ள பிரபுதேவா மாஸ்டர் ஒரு வழி ஆகிட்டார். 'சின்ன மச்சான்' பாட்டுக்கு டான்ஸ் ஆடுறப்போ கீழே விழுந்துட்டேன். வெயில்ல கண்டாங்கிச் சேலையைக் கட்டிக்கிட்டு, செருப்பு இல்லாம ஆடுறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஒரு ஸ்டெப்பை நாலு தடவை சொல்லிக் கொடுத்தாதான், நான் ஒழுங்கா ஆடுவேன். பிரபுதேவா மாஸ்டர் பொறுமைசாலி; என்னை நல்லா ஆட வெச்சுட்டார்."  

``படத்துல இருக்கிற இன்னொரு இந்தி ஹீரோயின் எப்படி?" 

``அதா ஷர்மா நடிப்பைக் கமென்ட் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. படத்துல அவங்க சைக்காலஜி படிக்கிற பொண்ணா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு மனசுல தோணுறதை யோசிக்காம செய்ற கதாபாத்திரம். அதனால வர்ற பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கிறாங்கனு படத்துல பார்க்கும்போது, செம காமெடியா இருக்கும். இந்தப் படத்துக்காக தமிழ் கத்துக்கிட்டாங்க. தமிழ்ப் படங்கள் அதிகமாப் பார்க்கிறதாவும், தொடர்ந்து பல தமிழ்ப் படங்கள்ல நடிக்க ஆசைப்படுறதாவும் சொன்னாங்க. இந்தியில அதா ஷர்மாவுக்குத் தனி ஃபேன் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. தமிழிலும் அது கிடைக்கணும்னு வாழ்த்துறேன்." 

``ஹோம்லி, மாடர்ன்... எந்த கேரக்டர்ல நடிக்கிறதை வசதியா உணர்றீங்க?" 

``சில படங்கள்ல தாவணி, சேலை கட்டி நடிச்சிருக்கேன். அது கமர்ஷியல் படங்கள். அதுல எனக்கு மேக்அப் இருக்கும். அதெல்லாம் இல்லாம, ஒரு கிராமத்துப் பொண்ணா நான் நடிச்சதில்லை. மாடர்ன் கதாபாத்திரங்கள் எனக்கு செட் ஆகுறதுனால, அதிகமா அந்த மாதிரி கதைகள் வருது. இப்போ இருக்கிற பொண்ணுங்களுக்கு ஃபேஷன் சென்ஸ் அதிகம். இடத்துக்குத் தகுந்த மாதிரி வெஸ்டர்ன், டிரெடிஷனல் டிரெஸ் பண்றாங்க. அந்த மாதிரி, என் காஸ்டியூம்களும் பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி என்னை மாத்தணும். ஏன்னா, எனக்கு அல்ட்ரா மாடர்ன் உடைகள் பிடிக்காது."

``ஆரம்பத்துல அதிகமான படங்கள்ல நடிச்சீங்க. இப்போ பட வாய்ப்புகள் குறைஞ்சுட்டதா உணர்றீங்களா?"

``வாய்ப்புகள் குறைஞ்சிருக்குனு சொல்றதைவிட, நான் செலக்ட் பண்ணி நடிக்க ஆரம்பிச்சுட்டேன்னு சொல்லலாம். ஒரு கதையைக் கேட்கும்போது, இந்தப் படத்துல நான் நடிச்சா எப்படி இருக்கும்னு ஒரு ஆடியன்ஸா யோசிப்பேன். எனக்கு வெரைட்டியா நடிக்கணும்னு ஆசை. அதனால, செலக்ட் பண்ணி நடிக்கிறேன்." 

``ஜீவா உடன் நடிச்ச `கீ' படம் என்னாச்சு?"  

``ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ரிலீஸுக்கு லேட் ஆகுறதுக்கு என்ன காரணம்னு தயாரிப்பாளார்கிட்டதான் கேட்கணும். ரசிகர்கள் மாதிரி, நானும் இந்தப் படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு காத்திருக்கேன்."