சினிமா
Published:Updated:

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

பெற்றோரின் ஆசையைக் குழந்தைகள்மேல் திணிக்கக் கூடாது என மாஸ் ஹீரோ வழியாக மெசேஜ் சொல்கிறது விஸ்வாசம். 

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

தேனி வட்டாரத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் வெண்தாடி வேந்தன் தூக்குதுரை. பிரிந்து போன அவரின் மனைவியும் மகளும் ஊர்த் திருவிழாவிற்கு வரவேண்டும் என தூக்குதுரையின் குடும்பம் ஆசைப்பட, அவர்களைத் தேடி மும்பை பயணமாகிறார் துரை. மும்பையில் அவர் கால் வைக்கும் நேரத்தில் அவர் மகளின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது. அந்த அபாயத்திலிருந்து மகளைக் காப்பாற்றி, மடித்துக்கட்டிய வேட்டியோடு வில்லனை அடித்துவிரட்டி இறுதியாக, பாடமும் எடுக்கிறார் தூக்குதுரை.

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்சில ஆண்டுகளாக இறுக்கமான அஜித்தையே பார்த்துவந்த நமக்கு ‘தூக்குதுரை’ ஃப்ரெஷ்ஷான பிரியாணி. கலர் சட்டையில் கேலியும் வெள்ளை சட்டையில் பாசமுமாக  டபுள் டமாக்கா அஜித். வட்டார வழக்கில் அசத்துகிறார். ‘அடிச்சுத்தூக்கு’ பாடலுக்கு டப்பாங்குத்து குத்துகிறார். ‘விஸ்வாசம்’ முழுக்கவே அவரின் மாஸ் மசாலாத் தூறல்கள்தான்!

நிரஞ்சனாவாக நயன்தாரா. காதலும் கோபமும் சமவிகிதம் காட்டி, அஜித்துக்குக்  ‘கை கொடுத்திருக்கிறார்.’ மகளாக வரும் அனிகா செம பொருத்தம். ஏற்கெனவே இந்த அப்பா - மகள் இணையைப் பார்த்தி ருப்பதால் எளிதாகப் பொருத்திக்கொள்ள முடிகிறது.

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

கூட்டுக்குடும்பம் பற்றிய படம் என்பதால் எந்நேரமும் ஃப்ரேமில் பத்துப் பேராவது வந்து போகிறார்கள். வந்து மட்டுமே போகிறார்கள். ரோபோ சங்கர் - தம்பி ராமையா- விவேக் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.

இமான் இசை வழக்கம்போல என்றாலும், சித் ஸ்ரீராம் குரலில் ‘கண்ணான கண்ணே’வின் ஆராரிராரோவில் ஸ்கோர் செய்கிறார். பின்னணி இசை கொஞ்சம் ஓவர் டோஸ்.  வெற்றியின் கேமராவில் காணும் இடங்களெல்லாம் பச்சை மரகத ஜொலிப்பு. சட்சட்டென ஜம்ப் ஆகும் காட்சியமைப்புகள் எடிட்டர் ரூபனை நோக்கிப் புருவம் உயர்த்த வைக்கின்றன. ‘ஜாங்கிரி மாதிரி பாக்காதீங்க, ஆங்கிரியா பாருங்க’ டைப் வசனங்களைப் படம் முழுக்கவா வைப்பது?

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்முதல் பாதி முழுக்க, கதை என்ன என்றே தெரியாமல் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக அலைபாய்கிறது படம். ஒரு பாடல் காட்சி, அதன்பின் சில வசனங்கள், பின் மீண்டும் ஒரு பாடல் என, மெனக்கெடலே இல்லாத திரைக்கதை. அனிகா அறிமுகமான பின்னே படம் வேகமெடுக்கும் என நினைத்தால் அங்கும் ஏமாற்றமே! ஓர் ஆதாம்காலத்து பிளாஷ்பேக்கும், அதைச் சொல்லிக்கொண்டு சுற்றும் வில்லனும் மிகப்பெரிய மைனஸ்.

கடைசி 20 நிமிடங்கள் குடும்பங்களைக் கண்ணீரில் ஆழ்த்தும் காட்சியமைப்புகள். அதற்காக, முதல் 120 நிமிடங்களை தன்போக்கில் சொல்லியவிதத்தில் இயக்குநர் சிவாவின் அலட்சியமே மிஞ்சி நிற்கிறது.

அப்பா - மகள் பாசத்தில் சிக்ஸ் அடிக்கும் விஸ்வாசம் ஏனைய இடங்களில் சறுக்கியிருக்கிறது.

- விகடன் விமர்சனக் குழு