Election bannerElection banner
Published:Updated:

``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்?!" - #10YearChallenge

``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்?!" - #10YearChallenge
``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்?!" - #10YearChallenge

2009- ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் 2019-ல் என்ன செய்கிறார்கள்?! பார்ப்போமா... 

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்... எனத் திரும்பிய பக்கமெல்லாம் #10YearChallenge அலப்பறைகள்தாம். இந்த (#10YearChallenge) ஹேஷ்டேக்கில் இவர்களைப் பொருத்திப் பார்த்தால் என்ன என்று யோசித்தபோது, எட்டிய ஐடியா இது. 2009- ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் 2019-ல் என்ன செய்கிறார்கள்?! பார்ப்போமா... 

சுசீந்திரன்: 
 

தான் பார்த்துப் பழகி தனக்குப் பரிட்சயமான கபடி விளையாட்டையே மையமாக வைத்து, `வெண்ணிலா கபடிகுழு' படத்துடன் களமிறங்கினார். பிறகு இவர் இயக்கிய படங்கள், இவரைக் கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் சேர்த்தது. ஒரு படம் வெளிவருவதற்குள் தன் அடுத்த பட ஷூட்டிங்கின் இறுதிக்கட்டத்தை எட்டுவது, இவரது ஸ்டைல். `அழகர்சாமியின் குதிரை' படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. கிரிக்கெட், கபடி, கால்பந்து என விளையாட்டுகளை மையப்படுத்திய படங்களை எடுப்பதில் இவருக்கு அவ்வளவு பிரியம். `ஏஞ்சலினா', `சாம்பியன்' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடி! இவருக்கும் கபடிக்குமான உறவு, `கென்னடி கிளப்' மூலம் பத்து வருடங்கள் கடந்தும் பயணிக்கிறது. `சுட்டுப் பிடிக்க உத்தரவு' படத்தில் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார். 

எம்.ராஜேஷ்: 
 

சென்டிமென்டில் மூழ்கி கண் கலங்குவதோ, ஒரே அடியில் பத்துப் பேரை ரத்தம் பார்க்க வைப்பதோ இவர் பாணி அல்ல. ஒன்லி ஹியூமர் ஜானர்தான், இவரின் ஏரியா. `மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்...', `உங்களை எப்படி கரெக்ட் பண்றதுனே தெரியலங்க' போன்ற வசனங்கள்தான், ராஜேஷ் ஸ்பெஷல். `சிவா மனசில சக்தி' படம் மூலமாக இயக்குநர் ஆனவர், அடுத்தடுத்து `பாஸ் (எ) பாஸ்கரன்', `ஒரு கல் ஒரு கண்ணாடி', `ஆல் இன் ஆல் அழகுராஜா' என என்டர்டெயின் செய்தார். இப்போது, சிவகார்த்திகேயன் - நயன்தாராவை இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பெயரிலேயே வித்தியாசம் காட்டும் இவரின் இந்தப் பட டைட்டில் என்னவாக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பு.     

பாண்டிராஜ்:
 

முதல் படத்தில் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பது ஒவ்வோர் அறிமுக இயக்குநரின் கனவு. ஆனால், முதல் படத்துக்கே தேசிய விருது கிடைத்தால்... `கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' மொமன்ட்தான்! குட்டிப் பசங்களை வைத்து `பசங்க' படத்தில் அசால்ட் செய்தவர், இன்று ஃபேமிலி ஆடியன்ஸின் ஆல் டைம் ஃபேவரைட் இயக்குநர். நாம் தினமும் சந்திக்கும் நபர்களைத் திரையில் காட்டி அப்ளாஸ் அள்ளுவது இவரது ஸ்டைல். `வம்சம்', `மெரினா', `பசங்க 2', `கேடி பில்லா கில்லாடி ரங்கா' என இவரது ஒவ்வொரு கதையும் நம்மைச் சுற்றியே இருக்கும். விவசாயம், சொந்தபந்தம் இரண்டையும் தொலைத்து நிற்கும் இந்த டிஜிட்டல் உலகில், இவரது `கடைக்குட்டி சிங்கம்' செய்தது மேஜிக் ஆஸம்! இப்போது அடுத்த படத்துக்கான வேலையில் பிஸியாக இருக்கிறார்.    

சக்ரி டோலட்டி:
 

முதல் படத்திலேயே கமல்ஹாசன், மோகன்லால் என இரு உச்ச நட்சத்திரங்களை இயக்கி அசத்தினார். ரீமேக் படமாக இருந்தாலும், சுவாரஸ்யம் குறையாது மேக்கிங்கில் கவர்ந்தார். பிறகு, அஜித்தை வைத்து `பில்லா 2' எடுத்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பாலிவுட்டில் `வெல்கம் டூ நியூயார்க்' என்ற 3டி காமெடிப் படத்தை இயக்கினார். இப்போது நயன்தாராவை வைத்து தமிழில் `கொலையுதிர் காலம்' என்றும், அதை இந்தியில் தமன்னாவை வைத்து `காஷ்மோஷி' என்றும் இயக்கி வருகிறார்.

அறிவழகன்:
 

ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து, `ஈரம்' படம் மூலமாக மக்களை ஈர்த்தார், அறிவழகன். வழக்கமான பழி வாங்குதல் கதையை வித்தியாசமாக எடுத்துச் சொல்லும் விதமே இவரின் விசிட்டிங் கார்டாக அமைந்தது. ஹாரர் (ஈரம்), ஸ்போர்ட்ஸ் (வல்லினம்), க்ரைம் த்ரில்லர் (ஆறாது சினம்), மெடிக்கல் க்ரைம் (குற்றம் 23) என ஒவ்வொரு படத்துக்கும் வெரைட்டி காட்டுவது, இவர் வழக்கம். இப்போது ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நயன்தாராவை இயக்கக் காத்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு