Published:Updated:

"திருமண விழாவாகவே நடந்து முடிந்த, 'திருமணம்' இசை வெளியீடு!"

"திருமண விழாவாகவே நடந்து முடிந்த, 'திருமணம்' இசை வெளியீடு!"
"திருமண விழாவாகவே நடந்து முடிந்த, 'திருமணம்' இசை வெளியீடு!"

"இத்திரைப்படம் பொருளாதாரச் சூழ்நிலைகள் எப்படித் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப்பற்றி அலசும் ஒரு படைப்பாக இருக்கும்."

ஒலிபெருக்கி குழாய்களில் 'அழகிய தமிழ்மகள் இவள்' துவங்கி, 'பூமலர் தூவி' என எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்து இசை முழங்க, பாவாடை தாவணியில் இளம் பெண்கள் பன்னீர் தெளித்து வரவேற்க, பந்தல் போட்டு மறைக்கப்பட்ட கமலா திரையரங்கம்... ஒரு நொடி சென்னையின் வடபழனியில்தான் இருக்கிறோமா, இல்லை ஏதோவொரு கிராமத்துத் தெருவில் நிற்கிறோமா... எனச் சந்தேகப்படும் ஏற்படும் அளவுக்கு மாற்றப்பட்டிருந்தது.

முதல் அறிவிப்பும், டீஸரும் வந்தது முதலே இயக்குநர் சேரனின் அடுத்த படைப்பான `திருமணம் (சில திருத்தங்களுடன்)' ஓர் உண்மையான திருமணத்தைப்போலவே விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ஒரு கல்யாண நிகழ்வுபோலவே காட்சியளித்தது. சொந்தக்காரர்கள் நாற்காலி வரிசையைக் கலைத்து, வட்டமாக அமர்ந்து அரட்டைகள் அடிப்பதும், மணமக்கள் வீட்டார்போலப் படக்குழுவினர் வாசலில் நின்று வரவேற்பதுமாய், விழா அரங்கத்தின் வெளியே ஒரு மினி-கல்யாண வீட்டை உருவாக்கி வைத்திருந்தார், சேரன்.

தன் படத்தின் கேரக்டர்களுக்கிடையில் நிலவும் உணர்வுகளை அவற்றின் உண்மைத் தன்மையோடு திரையிலிருந்து பார்வையாளர்களிடம் கடத்தும் கைதேர்ந்த இயக்குநர்களுள் சேரன் முதன்மையானவர் என்று வந்த அனைவரும் புகழ்ந்து பாராட்டியபடியே, 'திருமணம் (சில திருத்தங்களுடன்)' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.

மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து எனப் பல முன்னணி கலைஞர்கள் இசையை வெளியிட, மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அருண்ராஜா காமராஜ் உட்படப் பல இளம் இயக்குநர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, ``சேரனுக்குப் பாடல் எழுதும் அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். ஆனால், எங்கள் கூட்டணியில் வந்த பாடல் ஒன்று வரலாறு படைத்தது." எனப் `பொற்காலம்' படத்தில் வேலை செய்த அனுபவத்தைப் பகிர்ந்தார்.

``அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலின் சூழலை விளக்கும்போது, ஒரு மண்பாண்டக் கலைஞன், அவன் காதலியைப் பற்றிப் பாடும் பாடல் என்று கூறினார், சேரன். முதல் வரிக்கான ஐடியாவை மட்டும் இசையமைப்பாளர் தேவா, `தஞ்சாவூரு மண்ணு எடுத்து' என்றே பாடிக் காட்டினார். உடனே நான், ``அப்போ எல்லா ஊருல இருந்தும் மண்ணு எடுத்துருவோமா?" எனக் கேட்டு உருவான பாடல், அது" என அந்தப் பாடல் உருவான நினைவுகளை விவரித்தார்.

``இது முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு ஒருமுறை சென்றபோது, அங்கே விமான நிலையத்தில் ஒருவர் என்னைப் பார்த்து நீங்கள் வைரமுத்துதானே என்றார். நானும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும், தன் பூர்வீகம் தமிழகம்தான் எனவும், அந்தப் பாடலைத் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல் எனவும் கூறினார். அதை ஒவ்வொருமுறை கேட்கும்போதும், என் தொலைந்த பூர்வீகத்தை நினைவுபடுத்தும் விதத்தில், அதில் வரும் ஏதோவொரு ஊர்தான் என் சொந்த ஊராக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குப் பிறக்கும்" எனக்கூறி, மேலும் ``அவர் வேறு யாருமல்ல சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன்தான்!" என மேடையிலிருந்த அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

``அதைவிடப் பெரிய பெருமை, அந்தப் பாடலுக்கும் அதில் ஈடுபட்ட சேரன், பாடகர் கிருஷ்ணராஜ், இசையமைப்பாளர் தேவா மற்றும் எனக்கும் என்னவென்றால்... நாதன் இறந்தபின் அவர் இறுதிச் சடங்கில் அந்தப் பாடல் இசைக்கப்பட்டதுதான்!" என வைரமுத்து மேலும் ஆச்சர்யப்படுத்தினார்.

'திருமணம்' படத்தைப்பற்றிப் பேசிய வைரமுத்து, ``இந்தப் படம் ஒரு பத்து வருடத்துக்குத் தாங்கும். ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில் திருமணம் தனக்கான முக்கியத்துவத்தைத் தொலைத்துவிட்டது. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக வழக்கத்திலிருக்கும் தாலி, மெட்டி போன்ற கலாசார அடையாளங்களை உள்ளடக்கிய திருமணம் எனும் அமைப்பு, தனக்கான கடைசி காலத்தில் இருக்கிறது. அந்தக் காலம் முடியும் வரை இந்தப் படம் நிலைத்து நிற்கும்" என வைரமுத்து கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சேரனை தன்னுடைய உதவி இயக்குநர் எனக் கூறுவதே பெருமையாக இருப்பதாகச் சொல்லி ஆரம்பித்தார். ``ஒரு ஆப்பிரிக்கத் தம்பதிக்கு நல்ல சிவப்பாக ஒரு குழந்தை பிறந்தால், `இது உங்க கொழந்ததானா' என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். அதுபோலத்தான் பலர் கேட்கும் கேள்வி, `என்னது, சேரன் உங்ககிட்ட அஸிஸ்டண்டா இருந்தாரா?!' என்பது. நாங்கள் இருவரும் எடுக்கும் படங்கள் வெவ்வேறு வகையானவை. நான் கமர்ஷியல் படங்கள் எடுப்பவன். சேரன் கிளாஸிக் படங்கள் எடுப்பவன். அப்படிப்பட்ட சேரன் என் உதவியாளன் எனக் கூறுவதே எனக்குப் பெருமை. இத்தனை தடைகளுக்குப் பிறகு அவன் ஒரு படம் எடுப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி." எனச் சொல்லி நெகிழ்ந்தார்.

அதைப்போலவே, இயக்குநர் மகேந்திரன், ``சேரனைப் பற்றி நான் நினைக்காத நாளே இல்லை. இத்தனை காலம் ஒரு படம் எடுக்க முடியாத சூழ்நிலைகளில் இருந்தவர், எப்படியாவது மீண்டும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பல நாள்களாக என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது" என உணர்வுபூர்வமாகப் பேசினார். நடிகர் தம்பி ராமையா, ``இவ்வளவு நாள்கள் நாம் ஒரு தங்கக் கலசத்தைத் தொலைத்துவிட்டோம். இப்போது அது கிடைத்துள்ளது" என்ற சொற்களை மேற்கோள்காட்டி, ``தொலைத்த சேரனை மீண்டும் இப்போது கண்டுபிடித்துவிட்டது, இந்தப் படம்." என்றார்.

பிறகு பேசிய இயக்குநர் பாரதிராஜா, ``உணர்வுகளைக் கடத்துவதில் சேரன் ஒரு பெரும் கலைஞன். இப்படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது, திருமணத்தில் சம்பந்தப்படும் இரு வீட்டாருக்கும் இடையில் பொருளாதார அடிப்படையில் நடக்கும் சில சண்டை சச்சரவுகளும், அதைத் தவிர்ப்பதுக்கான திருத்தங்களையும் பகிரும் ஒரு படமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படிப்பட்ட கதைக்களம் இருந்தால், சேரன் கண்டிப்பாகப் பல உணர்வுகளைப் பதிவு செய்திருப்பான் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்." என்றார்.

மேலும், விழாவின் துவக்கத்தில் திரையிடப்பட்ட படத்தின் பாடல் ஒன்றைப் பாராட்டி, ``அந்தப் பாடலில் பார்ப்பதுபோல படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களுக்குள்ளும் ஒருவகையான இசை இணைந்தே இருக்கிறது. இதுவே மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. படைக்கப்பட்ட அனைத்துப் பாத்திரங்களும் கலைநயமிக்கதாக இருப்பதே ஒரு புது முயற்சிதான்" என்றார்.

அவர் பேசியதை வழிமொழிந்த இயக்குநர் சேரன், ``பாரதிராஜா சார் சொன்னதுபோல, இத்திரைப்படம் பொருளாதாரச் சூழ்நிலைகள் எப்படித் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப்பற்றி அலசும் ஒரு படைப்பாக இருக்கும்" என்றார். 

மேலும், விழாவில் பங்கேற்ற கலைஞர்களைப் பற்றி, ``மூத்த இயக்குநர்களை மதிக்கும் கலாசாரம் இங்கே குறைந்து வருகிறது. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் போன்றோரை அழைத்து இங்கே மரியாதை செய்கிறோம். இவர்களைப் போன்ற மூத்தவர்கள் இல்லையென்றால், இன்று தமிழ் சினிமாவே இல்லை. அவர்களையும் அவர்கள் வழிவந்த இளம் தலைமுறை இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, செழியன் போன்றவர்களை இங்கே கௌரவப்படுத்தினாலே அது அடுத்த தலைமுறை இயக்குநர்களாகவிருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தரும்" என்றார், சேரன்.

குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் ஹீரோயினாகவும் நடிக்கும் `திருமணம் (சில திருத்தங்களுடன்)' படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பின் செல்ல