Published:Updated:

'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை

'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை
பிரீமியம் ஸ்டோரி
'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை

என் காதல் சொல்ல வந்தேன்

'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை

என் காதல் சொல்ல வந்தேன்

Published:Updated:
'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை
பிரீமியம் ஸ்டோரி
'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை

ணிரத்னம் சாரோட ரொமான்டிக் மூவியான ‘அலைபாயுதே’ எனக்கு ரொம்பவும் பிடித்த படம். சின்ன வயதில் படமாகப் பார்க்கும்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை... நாளை நாமும் வீட்டை எதிர்த்து ரிஜிஸ்டர் மேரேஜ்தான் செய்யப்போகிறோம் என்று!’’ - கவிதையாக ஆரம்பிக்கிறார் சன் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை. திரைப்பட உதவி நடன இயக்குநர் ஹுசைன் உடனான திருமண வாழ்க்கையில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மணிமேகலை, ‘காதல்’ பற்றிப் பேச ஆரம்பித்தால், ‘நான் ஸ்டாப்' ஸ்வீட்டி!

‘`கோவையில் பிறந்து, சென்னையில் வளர்ந்த பொண்ணு நான். அதிக செல்லம். நான் என்ன கேட்டாலும் உடனே வாங்கித் தந்துவிடுவார் அப்பா. ஆனால், விவரம் தெரிந்து `விஜே' ஆனபின்பு, என் வாழ்க்கைத் துணையை நானே தேர்வு செய்துகொண்டு அவர் முன் நின்றபோதுதான், முதன்முறையாக... என் ஆசைக்கு எதிராக ‘நோ’ சொன்னார். காரணம், நான் இந்து, என்னவர் முஸ்லிம்!''

18 வயதிலேயே டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாள ராகக் களம் இறங்கிய மணிமேகலை, டி.வி வழியாகவே தனக்குக் காதல் அரும்பிய அந்த அழகான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

‘`சின்ன வயதிலிருந்தே எனக்கு டான்ஸ் என்றால் கொள்ளைப் பிரியம். வீட்டிலோ, ‘டான்ஸ் கத்துக்கிட்டு என்ன பண்ணப் போறே... பாட்டு கிளாஸ் வேண்டுமானால் போ’ என்று வலுக்கட்டாயமாகப் பாட்டு வகுப்பில் கோத்து விட்டுவிட்டார்கள்.

'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை

சினிமா பாடல் காட்சிகளில்கூட, ஹீரோ - ஹீரோயினைப் பார்க்காமல், பின்னாடி குரூப்பில் ஆடிக்கொண்டிருக்கும் டான்ஸ் பாய்ஸ்களைத்தான் சைட் அடித்துக் கொண்டிருப்பேன். அப்படி ஒருநாள், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் வரும் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ ரீமிக்ஸ் பாடலை டி.வி-யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில், ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த அந்த மீசை - தாடி பையனின் துறுதுறு நடனம் எனக்குள் மின்னலாக இறங்க... ‘யார்ரா இவன்... இவ்வளவு மேன்லியா... சுறுசுறுனு செமயா ஆடுறான்’ என்று என்னை நானே கேட்டுக்கொள்ளும் அளவுக்கு என் மனதுக்குள்ளும் அவனே இறங்கி குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தான். என்னையுமறியாமல், திரும்பத் திரும்ப அந்தப் பாடலை ஓடவிட்டு பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

ஒருகட்டத்தில், ‘யார் இந்த பையன், இவனைப் பாராட்டியே ஆகணும்’ என்று முடிவெடுத்து பெயர், போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு ட்விட்டர், ஃபேஸ்புக் வழியாக டிடெக்டிவ் போல தேடத் தொடங்கினேன். ‘ஹுசைன்’ என்ற பெயரையும் போன் நம்பரை யும் கண்டுபிடித்தேன். உடனே போன் செய்து, ‘ஹலோ... நான்தான் `விஜே' மணிமேகலை பேசுறேன்...’ என்று கெத்தாக சீன் போட... ‘அப்படி யாரையும் தெரியாது... நான் டி.வி-யெல்லாம் பார்க்கிறதில்லை’ என்று சொல்லி ஒரே நொடியில் கட் செய்துவிட்டார். அவமானமாகப் போச்சு!

ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியாக தொடர்ந்து அவருக்கு போன் செய்து, ‘நீங்க செமயா ஆடுறீங்க... உங்களோட ஸ்டெப்ஸெல்லாம் சான்ஸே இல்ல...’ என்றெல்லாம் லொட லொடவென்று உளறிக் கொட்டுவேன். அப்போதும்கூட, ‘ஓகே தாங்ஸ்’ என்று ஒற்றை வரியோடு சிம்பிளாக முடித்துக்கொள்வார் ஹுசைன். தொடர்ச்சியான இந்த உரையாடலில், இருவருமே ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டோம். ஆனாலும்கூட இருவரும் காதலைச் சொல்லவில்லை.

அவரது பிறந்தநாளின்போது, சென்னையில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஷூட்டிங் ஒன்று திட்ட மிட்டபடி முடியாமல் இழுத்துக்கொண்டு போனதால், அவரால் அன்று சென்னைக்கு வரமுடியவில்லை. முந்தின நாள் இரவு 10 மணிக்குப் போனிலேயே இந்தத் தகவலைச் சொன்னார். எதிர்பார்ப்புடன் இருந்த எனக்கு இது கடும் ஏமாற்றத்தைத் தந்தது.

சட்டென்று அந்த ஐடியா தோன்றியது. ‘காரிலேயே ஹைதராபாத் சென்று, ஹுசைனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் என்ன...’ என்று ஏடாகூடமாக முடிவெடுத்தேன்.

என் வீட்டில் நான்கு கார்கள் உண்டென்றாலும்கூட, அந்த நாள் வரையில் நான் தன்னந்தனியாக டிரைவ் செய்துகொண்டு நெடுந்தொலைவு சென்றதில்லை. அப்பாதான் எப்போதும் கார் ஓட்டுவார். இது காதல் விஷயமாச்சே... யாரையும் துணைக்கு அழைக்கவும் முடியாது. இரவு 10.30 மணிக்குத் தைரியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு காரில் கிளம்பிவிட்டேன்.

பைபாஸில், விர்விர்ரென மரண வேகத்தில் பயணிக்கும், கன்டெய்னர் லாரிகளுக்கு மத்தியில், கைகள் நடுங்க டிரைவ் செய்தேன். 11 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு காலை 9.30 மணிக்கு ஹைதராபாத் போய்ச் சேர்ந்ததும், ஹுசைனுக்குப் போன் செய்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வாழவைக்கும் காதலுக்கு ஜே!’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை

‘நான் ஹைதராபாத் வந்துவிட்டேன். இதோ அரை மணி நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறேன்’ என்று நான் சொல்லவும்.... ஹுசைனுக்கு பயங்கர ஷாக்! ‘நம்மைப் பார்க் கிறதுக்காக ஒரு பொண்ணு தன்னந்தனியா இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கிறாளா?’ என்ற இன்ப அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை!

அரைமணி நேரப் பயணத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹுசைனைச் சந்தித்து என் காதலைச் சொன்னேன்... ‘நமக்காக ஒரு பெண் இத்தனை ரிஸ்க் எடுப்பாளா..?’ என்ற  மீளமுடியாத அதிர்ச்சியினூடாகவே என் காதலை ஏற்றுக்கொண்டார்...’’ என்று படபட பட்டாசாகக் காதல் கதையை ஒப்பித்து முடிக்கிறார் மணிமேகலை.

கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே, திடீர் வாய்ப்பாக, மீடியா உலகத்துக்குள் வந்த மணிமேகலை, காதல் வாழ்க்கையிலும் காதலனைச் சந்திப்பது, காதலைத் தெரிவிப்பது, ஒப்புதல் பெறுவது, கல்யாணம் செய்துகொள்வது... என அடுத்தடுத்த நிலைகளை சில மாத இடைவெளிகளிலேயே எட்டிப்பிடித்தவர். ஆனாலும், காதலைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவர்.

பள்ளிப் பருவத்துக் காதல் குறித்துப் பேசுகிற மணிமேகலை, ‘`ஸ்கூல் படிக்கிற காலத்துல இயல்பாகவே ஆண் பெண் எல்லோருக்கும் எதிர்பாலினத்தவர்மீது ஒருவித அட்ராக்‌ஷன் உருவாகும். எல்லோரையும்போல என் பள்ளிப் பருவத்திலும், ஜாலியான அனுபவங்கள் இருந்தன. நெருக்கமான பெண் தோழிகள் நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அழகான பசங்களை கமென்ட் செய்திருக்கிறோம்; சைட் அடித்திருக்கிறோம்.

சினிமாக்களில் ஹீரோயினைக் கவர் வதற்காக ஹீரோக்கள் செய்கிற அட்ரா சிட்டிகளை யெல்லாம் பார்த்துப் பார்த்து உள்வாங்கியிருந்த ஒரு மாணவன், ‘நம் வகுப்பில் உள்ள கேர்ள் ஒருவரது வீட்டு போன் நம்பரை வாங்கி, போன் செய்து என் காதலைச் சொல்லிக்காட்டுகிறேன் பார்...’ என்று நண்பர்களிடையே சேலஞ்ச் செய்திருக்கிறான்.

அந்தப் பையன், என் வீட்டு போன் நம்பரை எப்படியோ சிரமப்பட்டு தேடியெடுத்து வாங்கி, ஒருநாள் எங்கள் வீட்டுக்கே போன் செய்துவிட்டான். நல்லவேளையாக அந்த அழைப்பை நானே எடுத்துப் பேசும்படியாக அமைந்தது. ‘எப்படி... போன் செய்து விட்டேன் பார்த்தாயா?’ என்று அவன் சிரிக்க... ‘ஏன் எனக்குப் போன் பண்ணினே.... இனிமே பண்ணாதே... பிரச்னையாயிடும்’ என்று எச்சரித்துவிட்டு போனை வைத்துவிட்டேன்.

அவன்தான் ஹீரோவாச்சே...விடாமல் தொடர்ந்து ரிங் கொடுத்துக் கொண்டேயிருந்தான். எரிச்சலான என் அப்பா, அந்த போனை எடுத்துவிட்டார். அவ்வளவுதான்... அடுத்த அரை மணி நேரத்துக்குப் போனிலேயே அர்ச்சனையை வாங்கிக் கட்டிக்கொண்டான் அந்த ஹீரோ. மறுநாள், பள்ளிக்கும் சென்று என் அப்பா புகார் செய்ய, அவனது பெற்றோரைக் கூட்டிவந்து மன்னிப்பு கேட்டு, வேறு வகுப்புக்கே மாறிப்போனான்!

இப்படிக் கடுகு சைஸ் காதலுக்கும் கூட தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டக்கூடியவர்தான் என் அப்பா. அப்படிப்பட்டவரிடம் போய், ‘நான் வேற்றுமதத்தைச் சேர்ந்தவரைக் காதலிக்கிறேன். அவரை தான் கல்யாணம் கட்டிக்கொள்ளப் போகிறேன்’ என்று நானே சொன்னால், என்ன நடக்கும்? ஆனாலும், சொன்னேன்.

பிடிவாதமாக எங்கள் காதலை ஏற்க மறுத்தார். அவருடைய பெண்ணாச்சே... நானும் பிடிவாதமாக ‘ஹுசைனைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன்’ என்ற உறுதியோடு இருந்து திருமணம் செய்துகொண்டேன்.

‘தருகின்ற பொருளாய் காதல் இல்லை...தந்தாலே காதல்... காதல் இல்லை!’ - இந்தப் பாடல் வரிகள் உண்மைக் காதலுக்கும் பொருந்தும்தானே? இதே புரிதலோடுதான் நாங்களும் எங்கள் காதல் பயணத்தில், இரண்டாமாண்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோம். வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது...’’ - முகம் மலர்ந்து சிரிக்கிறார் மணிமேகலை!

பிடித்த நடிகர்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் - இரண்டு பேரையும் எனக்குப் பிடிக்கும்; அதில் கமல் சாரை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகப் பிடிக்கும்!

பிடித்த பாடல் வரி?

‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல... அதையும் தாண்டிப் புனிதமானது!’

ஆண்களுக்கு அழகு?

 மீசையும் தாடியும்தான் ஆண்களின் அழகுக்கு அழகு சேர்க்கிறது!
 நடனம் ஆடக்கூடிய துறுதுறு ஆண்கள் அழகோ அழகு!

ஆண்களிடம் பிடித்தது?

உடற்கட்டுடன் கூடிய துணிச்சலான ஆண்களை ரொம்பப் பிடிக்கும்!

- த.கதிரவன் 

படங்கள் : வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism