Election bannerElection banner
Published:Updated:

சிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து! - அசார் கல்யாண சர்ப்ரைஸ்

சிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து! - அசார் கல்யாண சர்ப்ரைஸ்
சிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து! - அசார் கல்யாண சர்ப்ரைஸ்

"என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிற நண்பர்களை என் திருமணத்தில்தான் பார்த்தேன். நிஜமாகவே நான் கொடுத்து வைத்தவன்தான். சேது அண்ணா கொடுத்த அன்பு பரிசு இதயம் முழுக்க நிற்கிறது. சிவா அண்ணன் கேபிஒய் ஜெயிச்சப்போ ஒரு வாட்ச்சைப் பரிசளிச்சாங்க. என் கல்யாணத்துக்கும் வாட்ச் பரிசளிச்சிருக்காங்க!"

2019 அசாருக்கு நல்ல வருடமாக அமைந்திருக்கிறது. `மச்சானும் செட்டில் ஆகிட்டான்' என அசாரை கலாய்க்கிறார்கள் அவரது நண்பர்கள். மணப்பெண்ணைவிட, மணமகன்தான் அதிகமாக வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம். முகத்தில் அப்படியொரு வெட்கம். ஜனவரி 20ம் தேதி மாலை சென்னை மதுரவாயிலில் அமைந்துள்ள எஸ்.பி.பி கார்டனில்தான் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணி முதலே விஜய் டி.வி பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். 9 மணிக்கு மேல் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சதீஷ் என சினிமா பிரபலங்கள் வந்து மேடையை அலங்கரித்தனர்.

விஜய் சேதுபதி மேடையேறியதும் அசாரை அணைத்து அவரது பாணியில் மூன்று முத்தங்களை வழங்கிவிட்டு, "அவங்கள நல்லாப் பார்த்துக்கடா, நீங்களும் இவனைப் பார்த்துக்கோங்கம்மா, வாழ்த்துக்கள்டா, உன் அன்புக்கு நன்றி" எனத் தன் அன்பைப் பொழிந்துவிட்டுச் சென்றார். சிவகார்த்திகேயன் வாட்சைப் பரிசாக வழங்கினார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இதுகுறித்து புதுமாப்பிள்ளையிடம் கேட்டதும் மெதுவாகப் பேச ஆரம்பித்தார், அசார்.

``கொஞ்ச நாளாகவே கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணிக்கோனு வீட்ல சொல்லிட்டுத்தான் இருந்தாங்க. நான்தான் படத்துக்காகக் காத்திருந்தேன். படம் ரிலீஸ் ஆனதும் ஓ.கே சொல்லிட்டேன். தெரிந்தவர்கள் மூலமாக சிவகங்கையில் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகச் சொன்னாங்க. எதுவும் சொல்லல; போட்டோகூட பார்க்கல. `வீட்ல பார்த்தா சரியாகத்தான் இருப்பாங்க’னு உடனே ஓ.கே சொல்லிட்டேன். எல்லாம் முடிவானதுக்குப் பிறகு சம்பிரதாயத்திற்காகப் போய் பெண்ணைப் பார்த்துட்டு வந்தேன். `எதாவது வாங்கிட்டுப் போனீயா’னு சில பேர் கேட்கிறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி எதாவது வாங்கிக் கொடுத்தா எங்க வீட்ல இருக்கவங்களே என்னை ஓட்டித்தள்ளிடுவாங்க. அதற்கு பயந்துட்டே கல்யாணத்துக்கு முன்னாடி அதிகம் பேசவும் இல்ல, எதுவும் வாங்கிக் கொடுக்கவும் இல்ல. இப்போ கல்யாணம் ஆனதுக்குப் பிறகு ஹேண்ட்பேக், வாட்ச் வாங்கிக் கொடுத்தேன். ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

என்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிற நண்பர்களை என் திருமணத்தில்தான் பார்த்தேன். நிஜமாகவே நான் கொடுத்து வைத்தவன்தான். சேது அண்ணா கொடுத்த அன்பு பரிசு இதயம் முழுக்க நிற்கிறது. சிவா அண்ணன் கேபிஒய் ஜெயிச்சப்போ ஒரு வாட்ச்சைப் பரிசளிச்சாங்க. என் கல்யாணத்துக்கும் வாட்ச் பரிசளிச்சிருக்காங்க'' என்றவர் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொன்னார்.

``என் கல்யாணம் இயற்கையோடு ஒன்றியதாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதே மாதிரி ஒரு இடம் கிடைச்சது. மதுரவாயிலில் உள்ள எஸ்.பி.பி கார்டனில் நிறைய மரங்கள் இருக்கும்; கிரீனிஷா இருக்கும். அந்த கார்டனைப் பார்த்ததும் கல்யாணம் இங்கதான் நடக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். வெஜிடேரியனுக்கு ஏடுபில ஆர்டர் பண்ணிட்டேன். நான்வெஜ்ஜைப் பொறுத்தவரை எங்களுக்கு ரெகுலரா சமைத்துத் தரும் பாய்க்கிட்ட சொல்லிட்டோம். அவர் பிரியாணியில பிண்ணிட்டார். வெட்டிங் போட்டோகிராபரை சல்லடைப் போட்டு தேடிக் கிடைத்ததில் மனதுக்கு திருப்தியான ஒருத்தங்க கிடைச்சாங்க. அவங்க கோவையைச் சேர்ந்த ஐஸ்வர்யா போட்டோகிராபி மகேஷ். சென்னை, நந்தனம் எட்ஜ் கட்ஸ் தீபா பக்காவா மேக்கப் போட்டிருந்தாங்க'' என்றவரிடம் மனைவி பற்றிக் கேட்டால், 

``என் மனைவி ஷாஜிதா மெடிக்கல் (லேப் டெக்னீஷியன்) படிப்பு முடிச்சிருக்காங்க. இனிமே அவங்கதான் எங்கவீட்டு ஹோம் மினிஸ்டர். வேலைக்கு அனுப்புற ஐடியாலாம் இல்ல’’ என்றவரிடம், ஹனிமூன் பிளான் பற்றிக் கேட்க, ``கல்யாணத்துக்கே தலை சுத்திப் போச்சு. அவ்வளவு டென்ஷன், வேலைகள், பர்சேஸ். இனிமேல்தான் ஹனிமூன் பற்றி யோசிக்கணும். இந்தப் பேட்டி மூலமாக என் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும், வர நினைத்தவர்களுக்கும், வாழ்த்துகளைப் பகிர்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்'' என்றார் அசார். அசாரின் திருமணத்திற்கு டிடி, பிரியதர்ஷினி, பிரியங்கா, சுட்டி அரவிந்த், ரோபோ சங்கர் மனைவி, திண்டுக்கல் சரவணன் மற்றும் கேபிஒய் டீமில் எல்லோரும் வந்திருந்து சிறப்பித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு