Published:Updated:

```நடிகைகள் ஹோட்டலில் கும்மாளம்’னு எழுத எப்படி மனசு வரும்..?’’ - நடிகை ராதிகா

"சின்னத்திரையில் 21 வருஷமா மெனக்கெட்டு நடிக்கிறேன். `வாணி ராணி' சீரியல்ல டூயல் ரோல். இப்போ `சந்திரகுமாரி'யில ஏழு ரோல்; சண்டைப் பயிற்சி; குதிரைச் சண்டைனு என் திறமையை வெளிப்படுத்துறேன். நடிகர்களைவிட, நடிகைகள் எந்த வகையிலயும் குறைச்சலில்லை."

```நடிகைகள் ஹோட்டலில் கும்மாளம்’னு எழுத எப்படி மனசு வரும்..?’’ - நடிகை ராதிகா
```நடிகைகள் ஹோட்டலில் கும்மாளம்’னு எழுத எப்படி மனசு வரும்..?’’ - நடிகை ராதிகா

தென்னிந்திய சினிமாவில் முத்திரை பதித்த நாயகி. நடிப்புக்கு மட்டுமல்ல... தைரியத்துக்கும் அடையாளமான ராதிகா, திரைப்பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அவருடனான நேர்காணலில், தன் சினிமா, பர்சனல் உட்பட பல விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.

``நடிக்க வந்த புதுசுல ரொம்ப விளையாட்டுத்தனமா இருப்பேன். பிறகு என்னோட பொறுப்பை உணர்ந்து செயல்பட ஆரம்பிச்சேன். சினிமா தொழிலுக்காக, என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். கமிட்டான படங்கள்ல அர்ப்பணிப்புடன் வேலை செய்வேன். அந்தக் காலத்தில் பெரிசா பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லை. சக நடிகைகள் பலரும் தோழிகளாக இருந்தோம். எங்களுக்கு ஓய்வுநேரம் கிடைச்சா, ஹோட்டல், அவுட்டிங்னு போவோம். `நடிகைகள் ஹோட்டலில் கும்மாளம்'னு நடிகைகளை மட்டும் குறிவெச்சு தவறாக சித்திரிச்சு எழுதுவாங்க. இதனால என் சக சினிமா தோழிகள் ரொம்ப கலங்குவாங்க. ஆனா, நான் எதுக்கும் பயப்படமாட்டேன். தவறான செய்தியை தைரியமா எழுதுறவங்களுக்கு மத்தியில், நான் ஏன் பயப்படணும்? அந்தக் காலகட்டத்திலிருந்து பயம் என்பதே என் வாழ்க்கையில் இல்லை.

ஒரு கட்டத்துல வாழ்க்கையில நடக்கிற எல்லாச் செயல்பாடுகளையும் பாசிட்டிவா எதிர்கொள்கிற தன்மைக்கு மாறிட்டேன். வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ... எந்த புராஜெக்ட்ல கமிட் ஆனாலும், இயக்குநரை முழுமையா நம்புவேன். டேக் முடிஞ்சதும், என் நடிப்பை மானிடர்ல பார்க்கிற பழக்கம் எனக்குக் கிடையாது. இப்படியே பல நூறு படங்கள்ல நடிச்சேன். நடிகைகளுக்கு மட்டும் எப்போதுமே இரண்டாம் பட்சமான மரியாதைதான். இதில் எனக்கு உடன்பாடில்லை. சினிமாவில் ஒரு நடிகையின் திறமையை வெளிப்படுத்தக் குறைவாகவே வாய்ப்பு கொடுக்கப்படுது. அதை மாற்றிக்காட்டவே, சின்னத்திரையில் 21 வருஷமா மெனக்கெட்டு நடிக்கிறேன். `வாணி ராணி' சீரியல்ல டூயல் ரோல். இப்போ `சந்திரகுமாரி'யில ஏழு ரோல்; சண்டைப் பயிற்சி; குதிரைச் சண்டைனு என் திறமையை வெளிப்படுத்துறேன். நடிகர்களைவிட, நடிகைகள் எந்த வகையிலயும் குறைச்சலில்லை." - அழுத்தமாகப் பேசுகிறார், ராதிகா. 

வாழ்நாளில் தன்னைப் பாதித்த நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுபவர், ``நடிகர் சங்கம், மனதளவில் எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப நெருக்கமானது. அதன் வளர்ச்சிக்கு என் கணவர் சரத்குமாரும் நானும் கொடுத்த உழைப்பு அதிகம். எத்தனையோ விஷயத்துக்காக எங்க வீட்டுக்கு நடிகர்கள் உட்பட நிறைய முக்கியமான சினிமா பிரபலங்கள் வந்திருக்காங்க. சந்தோஷமா, கார சாரமாப் பேசியிருக்கிறோம்; விவாதிச்சிருக்கிறோம். அந்தப் பண்பை, கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் எதிரணியினர் கடைப்பிடிக்கலை. தங்களைப் பெரிய ஹீரோவா காட்டிக்க முற்பட்டு, ஆதாரமில்லாம, அனுபவமில்லாம, நாங்க ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினாங்க. ரூ.100 கோடியில ஆரம்பிச்சு, லட்சங்களில் வந்து, இப்போ ஆயிரங்களில் நாங்க ஊழல் செய்ததாச் சொல்லியிருக்காங்க. எங்க மேல குற்றச்சாட்டுச் சொல்லி மூணு வருஷமாகியும், இதுவரை எதையும் நிரூபிக்கலை. இந்தக் குற்றச்சாட்டுதான், வாழ்நாளில் என்னை ரொம்பவே பாதிச்ச நிகழ்வு. அப்போ எங்களை எதிர்த்துப் பேசிய சிலர், சமீபத்தில் தனிப்பட்ட முறையில் எங்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க. அது எனக்கு முக்கியமில்லை. மன்னிப்பு கேட்க வேண்டியவங்க கேட்கும் வரை நான் ஓயமாட்டேன்." - கணீர் குரலில் கூறுகிறார், ராதிகா. 

அப்பா எம்.ஆர்.ராதாவின் அன்பு, ஹாஸ்டல் வாழ்க்கை, எதிர்பாராத சினிமா என்ட்ரி, முன்னணி நாயகியாக உயர்ந்தது, டிசம்பர் 31 மனநிலை உட்பட தன் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறார், நடிகை ராதிகா. இன்று வெளியாகியுள்ள அவள் விகடனில், `எவர்கிரீன் நாயகிகள்' என்ற தொடரில்.