Published:Updated:

``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா

``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா
``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா

குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் இயக்கி ஜீவா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ஜிப்ஸி. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக படத்தின் முதல் சிங்கிள் டிராக் 'வெரி வெரி பேட்' இன்று படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது.

ராஜு முருகனின் வழக்கமான சிந்தனையும், அதிகாரத்துக்கு எதிரான முழக்கமாகப் பாடலாசிரியர் யுகபாரதியால் எழுதப்பட்ட வரிகளும் இருக்கும் காரணத்தினால் இணையத்தில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளேயே இப்பாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இதில் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், நிஜவாழ்வில் களப்போராளிகளாக இருக்கும் நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன், பியூஷ் மனுஷ் உட்பட பலர் இப்பாடலில் தோன்றுகின்றனர். அவர்களுடன் படக்குழுவிலிருந்து, நடிகர் ஜீவா, ராஜு முருகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இன்று இப்பாடலின் வெளியீட்டு விழாவில் பேசிய யுகபாரதி, ``நான் எப்பவும் ராஜு முருகனை ஒரு நல்ல இடத்துல வைக்க ஆசைப்படுவேன். ஆனா அவன் ஒவ்வொரு படத்துலயும் என்ன உள்ள வைக்க ஆசைப்படுறான். இதுவரை வந்த படத்துலயும் சரி, இனி எடுக்கப்போற படத்துலயும் சரி இதுமாதிரி ஏதாவது எழுதவைக்கிறான். கண்டிப்பா ஒரு நாள் உள்ள தள்ளீருவான்" என கிண்டலாகப் பேசினார். மேலும், ஜிப்ஸி படத்தைக்குறித்து பேசிய யுகபாரதி, ``இந்தியா முழுக்க பயணிச்சு இந்தப் படத்தை எடுத்துட்டு வந்திருக்காங்க. கண்டிப்பா இது வெற்றி அடையும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றார். 

அதன் பின் பேசிய ராஜு முருகன், ``இந்தப் பாடலில் தோன்றும் அனைத்துத் தோழர்களும் உண்மையான களப்போராளிகள். நான் என் கலைமூலம் கூறும் கருத்துகளை இவர்கள் வாழ்க்கை முழுதும் பேசுகிறார்கள். நான் அழைத்தவுடன் இப்பாடலில் தோன்ற ஒத்துக்கொண்டது இதுவரை நான் என் கலையில் நேர்த்தியாக இருந்ததற்கான ஒரு சான்றாகவே கருதுகிறேன். இதுதான் என் சினிமா பயணத்தில் எனக்குக் கிடைத்த ஆக பெரும் அங்கீகாரமாக நினைக்கிறேன்" என நெகிழ்ந்து பேசினார்.

படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கும், நாயகன் ஜீவாவுக்கும் நன்றி கூறிய ராஜு முருகன்,  எனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆசை அம்பேத்குமாருக்கு இந்தப்படம் போட்ட பணத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்பதுதான். அதுதான் இதுபோன்று மேலும் பல படங்களைத் தயாரிக்க அவருக்கு நம்பிக்கைக் கொடுக்கும். அதுபோல, ஜீவா இல்லையென்றால், இந்தப் படத்துக்கு இப்படி ஒரு பிராண்ட் கிடைத்திருக்காது. இப்படியொரு பட்ஜெட்டுக்கு ஜீவா போன்ற ஒரு முகம் பெரிய பக்க பலமாக இருக்கிறது என்பதே உண்மை" என்றார்.

பின்னர் பேசிய ஜீவா, ``ஜிப்ஸி படம், நாம் எல்லோருக்கும் ஒரு ரியாலிட்டி செக்காக இருக்கும். இது பேசும் மனிதநேயம், அரசியல், சமூகச் சிக்கல்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் அதனுடன் நம்மை நாமே தொடர்புபடுத்தும் விதத்தில் இருக்கும்" எனப் படத்தின் கருவைப் பற்றிக் கூறினார். மேலும், ``இதுவரை நான் மெனக்கெடல் பட்டு நடித்த படங்களான கற்றது தமிழ், ராம், ஈ, டிஷ்யூமைவிட இந்தப்படத்துக்காக அதிகம் உழைத்திருக்கிறேன். இந்தியாவில் நீங்கள் எந்த ஒரு இடத்தின் பெயரைச் சொன்னாலும் அது இந்தப்படத்தில் ஒரு காட்சியிலாவது வந்திருக்கும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அத்தனை ஊர்களுக்கும் சென்று எல்லா வகையான கிளைமேட்டிலும் காத்திருந்து படம்பிடித்திருக்கிறோம். இவ்வளவு கஷ்டத்துக்கும் விளைவாக இப்படம் கமர்ஷியலான வெற்றி என்பதைத்தாண்டி என் கரியரிலேயே மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்றார்.