Published:Updated:

``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு..!’’ - பிரியா ரோபோ சங்கர்

`ரோபோ சங்கரின் மனைவி பிரியா `கலக்கப்போவது யார் சீசன் 8' பற்றியும், `தளபதி 63' படத்தில் தன்னோட மகள் நடிக்க ஆடிஷனில் கலந்துக்கிட்டது பற்றியும் கூறியுள்ளார்...

``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு..!’’ - பிரியா ரோபோ சங்கர்
``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு..!’’ - பிரியா ரோபோ சங்கர்

``சினிமாக் கனவு என் கணவருக்கு சின்ன வயசிலே இருந்தே இருந்தது. அதுக்காக அவர்பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இன்னைக்கு என் பொண்ணுக்கும் சினிமாக் கனவு வந்திருக்கு; அதுவும் நிறைவேறப்போகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு...'' மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார், பிரியா ரோபோ சங்கர்.

``நடிகரா, மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாதான் ரோபோ சங்கரை எல்லோருக்கும் தெரியும். ஆனா, அடிப்படையில் அவர் ஒரு ஜிம் கோச்சர். ஐந்து முறை மிஸ்டர் மதுரை பட்டம் வாங்கியிருக்கார். மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கார். அவருக்கு நடிப்பு மேல எப்போதுமே ஒரு தீராத காதல் இருந்தது. ஜிம் கோச்சரா வேலை பார்த்துட்டு இருந்தாலும் மேடையில் மிமிக்ரி பண்ணிட்டு இருப்பார். சினிமா வாய்ப்பு தேடி நாங்க குடும்பத்தோட சென்னைக்கு வந்துட்டோம். அப்போ எங்களுடைய குடும்ப நண்பர் பாஸ்கர் அண்ணா, அவரை `கலக்கப்போவது யார்' சீசன் 1 நிகழ்ச்சிகாக அழைச்சிட்டுப் போனார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் நபர்கள் கலந்துகிட்ட ஆடிஷனில் என்னோட கணவர் செலக்ட் ஆகி நிகழ்ச்சியில கலந்துகிட்டு முதல் பரிசு வாங்கினார். அவர் வெற்றிபெற்ற போது நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. 

இப்போ விஜய் டி.வி.யில நடந்திட்டு இருக்கிற `கலக்கப்போவது யார் சீசன் 8'ல நான் ஒரு போட்டியாளரா கலந்துட்டு இருக்கேன். இந்த வாய்ப்பு நிகழ்ச்சியோட டைரக்டர் மூலமாதான் வந்துச்சு. முதலில் என்னோட கணவருக்கு போன் பண்ணி, `உங்க மனைவி இந்த நிகழ்ச்சியில கலந்துக்க முடியுமா'னு விசாரிச்சு இருக்காங்க. அதுக்கு அவர், `பிரியாவுடைய விருப்பம் அது. ஏன்னா, நிகழ்ச்சியில கலந்துக்கப் போறது அவதான். அதனால அவளே சொல்லட்டும்'னு சொல்லிட்டார். விஜய் டி.விதான் என் கணவருக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தது; அதுவும் அதே `கலக்கப்போவது யார்' நிகழ்ச்சி. அதனால முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு இறங்கிட்டேன். அதுமட்டுமல்லாம இந்த நிகழ்ச்சியில என்கூட போட்டியிடுற எல்லோரும் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவங்க. எல்லோரும் எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்காங்க. வெற்றிகரமா முதல் ரவுண்ட் முடிச்சு அடுத்த ரவுண்ட்டுல இறங்கிட்டேன். 

இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்னு நினைக்கிறேன். நிறைய நல்ல விஷயங்கள் ஆரம்பத்துல இருந்தே நடந்துட்டு இருக்கு. முக்கியமா `விஸ்வாசம்' படத்தோட ஷூட்டிங் போயிட்டு இருந்தப்போ அஜித் சாரை சந்திச்சது. அவரை நேரில் சந்திக்குறது இதுதான் முதல் முறை. ஷூட்டிங் பிஸினால அவரால நிறைய நேரம் என்கிட்ட பேச முடியல. அதனால ஒரு நாள் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கார். எங்க பொண்ணு பத்தி நிறைய விசாரிச்சு இருக்கார். `நல்லாப் படிக்க வைங்க. அவங்களுக்குப் படிப்புதான் முக்கியம்’னு சொல்லியிருக்கார். முக்கியமா அஜித் சார் ஒரு நடிகராப் பேசமா, ஒரு மகளுக்கு அப்பாவா இருந்து நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கார். 

அதே மாதிரி இப்போ கோலிவுட் டாக்ல `தளபதி 63' படத்துல `என்னோட பொண்ணு இந்திரஜா இருக்கா’ங்கிற தகவல் வந்துட்டு இருக்கு. என்னோட பொண்ணு அவங்க அப்பா மாதிரியே ரொம்ப திறமைசாலி. ப்ளஸ் 1 படிச்சிட்டு இருக்கா. நல்லா ஆடுவா, பாடுவா, மிமிக்ரி பண்ணுவா, வீணை வாசிப்பா. அவ ஒரு க்ளாசிக்கல் டான்ஸரும்கூட. டிக் டாக்ல நிறைய வீடியோஸ் நடிச்சிப் போடுவா. அதைப் பார்த்துட்டுதான் அட்லி சாருடைய ஆபீஸ்ல இருந்து போன் வந்தது; அதுவும் என் கணவருக்குதான். ` `தளபதி 63' படத்துல நடிக்க தைரியமான பொண்ணு தேவை. படம் முழுக்க வரக்கூடிய கேரக்டர். உங்க பொண்ணோட டிக்டாக் வீடியோ பார்த்தோம். நடிக்க முடியுமா'னு முதலில் கேட்டாங்க. என் பொண்ணுக்கிட்ட கேட்டப்போ அவளும் ரொம்ப விருப்பமா இருந்தா. ஆனா, அப்பாவுடைய விருப்பம்னு சொல்லிட்டா. என் கணவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். ` `தளபதி 63' படத்துல நடிச்சா அவளுக்கு நல்ல அறிமுகமா இருக்கும்'னு அவரும் பீல் பண்ணுனார். அதனால அவருக்கு சம்மதம் இருந்தனால இவளும் சந்தோஷமா ஆடிஷனில் கலந்துக்கிட்டா. நல்லபடியா ஆடிஷன் பண்ணியிருக்கா.. 80 சதவிகிதம் எல்லாம் ஓகே ஆகியிருக்கு. மீதமிருக்கிற 20 சதவிகிதத்துக்காகத்தான் காத்திருக்கோம். பாப்பா நடிச்ச வீடியோ க்ளிப்ஸ் இன்னும் அட்லி சார் பார்க்கலைனு நினைக்கிறேன்; அவர் பார்த்துட்டுச் சொல்லுவார். நல்ல செய்தியா வரும்னு நினைக்கிறோம். 

விஜய் சாரோட படத்துல பாப்பா நடிக்கப் போறாங்கிற தகவல் தெரிஞ்சு பாப்பா ஸ்கூல்ல படிக்கிற பசங்களெல்லாம் சந்தோஷமா விசாரிக்குறாங்க. அவளும் செம ஹாப்பியா இருக்கா. அவகிட்ட எந்தவொரு விஷயத்தையும் நாங்க திணிச்சது இல்லை. அவளுடைய விருப்பத்துக்கு விடுவோம். நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்கோம். படிப்பையும், நடிப்பையும் சமமா மேனேஜ் பண்ணிப்பேன்னு பொண்ணு சொல்லியிருக்கா. நம்பிக்கைதான் வாழ்க்கை''னு சொல்லி சந்தோஷமாக முடித்தார் பிரியா ரோபோ சங்கர்.