Published:Updated:

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

“நான் துறவி அல்ல!” - இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
“நான் துறவி அல்ல!” - இளையராஜா

படங்கள்: கார்த்திக் சீனிவாசன்

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

படங்கள்: கார்த்திக் சீனிவாசன்

Published:Updated:
“நான் துறவி அல்ல!” - இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
“நான் துறவி அல்ல!” - இளையராஜா

சைக்கு ஏழு ஸ்வரங்கள். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை ஐந்து ஸ்வரங்கள்தான். இ....ளை....ய...ரா...ஜா.  மகிழ்ச்சியோ சோகமோ பரவசமோ கண்ணீரோ புன்னகையோ அதை இளையராஜா இசையில் கரைப்பவர்கள் நாம். அத்தகைய மகத்தான கலைஞன் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பிரமாண்ட விழா எடுப்பதற்கான ஆயத்தவேளையில், ராஜாவைச் சந்தித்தோம்...

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

“75 ஆண்டுக்கால வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”

“ஒரு பயணம் என்றால் சென்றுசேரக்கூடிய இடம், இலக்கு வேண்டும்.  அதை அடைவதற்கான குறிக்கோள் வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது பயணமும் இல்லை. எனக்கு இலக்குகளும் இல்லை. எனக்கு நேர்ந்தது எல்லாமே நான் சென்றுசேர்ந்த இடம் என்றுதான் சொல்வேன். சிறுவயதில் இசையமைப்பாளராக வேண்டும், திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையும் குறிக்கோளும் இருந்தது உண்மைதான். அது இல்லையென்றால் நான் சென்னைக்கே வந்திருக்க மாட்டேனே! ஆனால், அதைமட்டுமே இலக்கு என்று சொல்லிவிட முடியாது என்பதால் இதைப் பயணம் என்றும் நான் கருதவில்லை.”

“ஆன்மிகத் தேடல் உங்களுக்கு எப்போது ஆரம்பித்தது?”

“சிறுவயதில் ஊர்த்திருவிழாக்களில் அண்ணன் பாவலர் வரதராஜனின் இசைக்கச்சேரிகள் நடக்கும். அதில் நாங்கள் கலந்துகொண்டோம் என்பதிலிருந்து, அப்போதே எனக்கு ஆன்மிக ஆர்வம் ஆரம்பித்துவிட்டது என்று சொல்லலாம். ஏராளமான இசை ஜாம்பவான்கள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். திருச்சி நவாப்ஜான், திருச்சி சுந்தர்ராஜன், கோவையைச் சேர்ந்த சேகர் என்று ஏராளமானவர்களை நினைவுகூர முடியும். பல இசை ஜாம்பவான்கள் திரை இசையையே மதிக்க மாட்டார்கள். சிலர் சினிமாவுக்கு இசையமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், எல்லோராலும் இந்த இடத்தை அடைய முடியவில்லையே! இந்த இடம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், இந்த விதை எனக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்! நம்மை மீறிய ஒரு சக்தியால்தானே இது சாத்தியம்! மூகாம்பிகை அம்பாள் கோயிலில் அடியெடுத்துவைத்தபோது எனக்குள் பரவச உணர்வு ஏற்பட்டது. ‘எனக்கு ஒரு ஆன்மிக குரு வேண்டும்’ என்று அம்பாளிடம் பிரார்த்தனை செய்தபோது, அவள் எனக்கு ரமணரை அடையாளம் காட்டினாள். ரமணர் என்னை ஆட்கொண்டார்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

“ உங்கள் பேச்சுகளைக் கேட்கும்போது அத்வைதத்தில் ஈடுபாடு கொண்டவர் என்று தெரிகிறது. ஆனால் உருவ வழிபாட்டையும் மேற்கொள்கிறீர்கள். உங்கள் ஆன்மிகம் எது என்று எளிமையாகச் சொல்ல முடியுமா?”

“ஆன்மிகம் என்பதே எளிமையானதுதானே! ‘அனைத்தும் ஒன்றே’ என்பதுதான் ஆன்மிகம். அத்வைதி என்று என்னை முத்திரை குத்த வேண்டாம். இந்தச் சித்தாந்தங்களும் நிலைப்பாடுகளும் மனோமையபுத்தி. இன்றைக்கு இருக்கும் நிலைப்பாடு நாளைக்கு மாறலாம். மனோமையபுத்தியைவைத்து ஆன்மிகத்தை அளக்க முடியாது. இதைச் சொல்வதும் எளிது அல்ல; அதை நீங்கள் முழுமையாக உள்வாங்குவதும் எளிதல்ல!”

“இசையமைப்பாளர் இளையராஜாவைப்போலவே பாடலாசிரியர் இளையராஜாவும் தனித்துவமானவர். பாடலாசிரியர் இளையராஜா பற்றி, இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுபவங்கள்...?”

“எனக்குப் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. ‘மச்சானைப் பார்த்தீங்களா’ போன்று அவ்வப்போது சில வரிகள் தோன்றும். அதைப் பாடலாசிரியர்களிடம் பல்லவியாகச் சொல்லி யிருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன், வாலி சார் போன்றவர்கள்கூட என் வரிகளைப் பல்லவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் முதன்முதலில் பாடல் எழுதியது ‘இதயகோயில்’ படத்துக்காக.

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

தன் காதலியின் திருமணத்தில் பாடகனான காதலன் பாடல் பாட வேண்டும். இயக்குநர் மணிரத்னம் விவரித்த சூழலுக்கு முதலில் எம்.ஜி.வல்லபன்தான் பாடல் எழுதியிருந்தார். ‘ஆடிவரும் தென்னங்கீற்று’ என்பதுபோல வரிகளை எழுதியிருந்தார். ஆனால், எனக்கு அது பொருத்தமாகத் தெரியவில்லை. இருவருக்கு இடையிலான காதலைப் பற்றியும் வரிகளில் சொல்ல வேண்டும். ஆனால், கேட்பவர்களுக்கு அது பொது வான பாடலாகத் தோன்றவும் வேண்டும்.

‘இதயம் ஒரு கோயில் - அதில்
உதயம் ஒரு பாடல்!
இதில் வாழும் தேவி நீ! - இசையை
மலராய் நாளும் சூட்டுவேன்!’


என்று எழுதினேன். அம்பாளான தேவியைப் பாடுவது போலவும் இருக்கும். காதலியைப் பாடுவதாகவும் இருக்கும். இதுதான், நான் முதன்முதலில் பாடல் எழுதிய கதை.”

“குறிப்பிட்ட பாடலை நீங்கள்தான் பாட வேண்டும் என்று எப்போது முடிவு செய்வீர்கள்?”


“(சிரிக்கிறார்) பெரும்பாலும் ஆக்சிடென்டல்தான். அப்போ தெல்லாம் இசைக்கலைஞர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரைதான் வேலை பார்க்க வேண்டும் என்று யூனியன் விதி இருந்தது. அதற்கு மேல் போனால் தனி கால்ஷீட், தனிச்சம்பளம். நான் காலை 7 மணிக்கு இசைக்குறிப்புகள் எழுதிக்கொடுப்பேன். அன்றைய தினம்தான் என்னென்ன வாத்தியங்கள், யார் பின்னணிப் பாடகர் என்பதையும் உதவியாளரிடம் எழுதிக்கொடுப்பேன்.

நான் ஒருவரின் பெயரை எழுதிக்கொடுத்தால், அவரைத் தொடர்புகொண்டுவிட்டு, ‘அந்தப் பாடகருக்கு வேறு பாடல் பதிவு இருக்கிறதாம்’ என்பார்கள். பிறகு இன்னொருவரின் பெயரைச் சொல்வேன். அவரும் கிடைக்கமாட்டார். இப்படி இரண்டு மூன்றுபேரை முயன்றுவிட்டு, கடைசியில் நானே பாடிவிடுவேன். எல்லாப் பாடல்களும் அப்படி நடந்தது அல்ல. சில பாடல்களை நானே விரும்பிப் பாடியிருக்கிறேன். முதல் படமான ‘அன்னக்கிளி’யிலேயே ஒரு பாடல் பாடியிருக்கிறேன். ஆனால் அது சூழலில் எங்கோ தூரத்தில் யாரோ பாடுவதைப்போல ஒலிக்கும்”

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

“சில படங்களில் டைட்டில் பாடல்களைப் பாடியிருப்பீர்கள். ‘படத்தில் முதல் பாடலைப் பாடவைத்து அது நல்ல ராசி என்றார்கள்’ என்று ‘கரகாட்டக்காரன்’ டைட்டில் பாடலிலும் பாடியிருப்பீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்களேன்”

“ ‘16 வயதினிலே’ படத்தில் ‘சோளம் விதைக்கையிலே’ டைட்டில் பாடல் பாடியதிலிருந்து ஆரம்பித்தது அந்த சென்டிமென்ட். அந்தப் படம் நன்றாக ஓடியதால் அதேபோல் பாடவைத்தார்கள். அந்தப் படம் மட்டும் ஓடாமல் இருந்திருந்தால் யாரும் டைட்டில் பாடல் பாடச்சொல்லியிருக்க மாட்டார்கள் (சிரிக்கிறார்)”

“நிறைய சூழல்களைக் கேட்டு மெட்டமைத்திருப்பீர்கள். உண்மையைச் சொன்னால் நடிகர்களைவிட அதிகம் கதை கேட்டது நீங்களாகத்தான் இருக்கும். இவ்வளவு கதைகள் கேட்டவர் என்ற முறையில் உங்கள் மனநிலை என்ன?”

“நிறைய கதைகள், சூழல்கள் கேட்டிருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் நான் கேட்டு ஆச்சர்யப்பட்ட கதைகள் என்பது குறைவு. உலக சினிமாக்களைப் பார்க்கிறோம். ஈரான் படங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. ஒரு ஜோடி ஷூவை வைத்துக் கதை சொன்ன ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ எவ்வளவு நேர்த்தியாக இருந்தது. ஒரு நல்ல கதையைத் தொய்வு ஏற்படாமல் சுவாரஸ்யமாகச் சொன்ன படம் அது. நான் 50 தடவைக்கு மேல் பார்த்த படம் ‘அமேதியஸ்’ (Amadeus). 

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

புகழ்பெற்ற இசைக்கலைஞர் மொஸார்ட்டின் வாழ்க்கை குறித்த படம் என்பதால் மட்டும் அதை நான் ரசிக்கவில்லை. நுட்பமான விவரிப்புகள் நிறைந்த, சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட படம் அது.  ஒரு பீரியட் படம் என்பதால் லைட்டிங் உள்பட பல விஷயங்களுக்கு மெனக்கெட்டிருப்பார்கள். மொஸார்ட்டின் இசைத்துணுக்குகளைத்தான் படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், அதைத் திரைக்கதைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி யிருப்பார்கள். பில்லியர்ட்ஸ் டேபிளில் இசைக்குறிப்புகளை எழுதுவது மொஸார்ட்டின் வழக்கம். அவர் பணம் வாங்கி ஒழுங்காக இசையமைக்கவில்லை, எப்போது பார்த்தாலும் குடித்துக்கொண்டிருக்கிறார் என்று மனைவி திட்டுவாள். ஒருகட்டத்தில் சகித்துக்கொள்ள முடியாமல் மொஸார்ட், ‘Goback to bed’ என்பார். அந்த வசனம் சட்டென்று ஓர் இசைத்துணுக்காக மாறிவிடும். வில்லன் முர்ரே ஆபிரஹாம் சொல்லச் சொல்ல பிளாஷ்பேக்காக கதை விரியும். அவர் கதை சொல்லிக்கொண்டே வருவார். ஒருகட்டத்தில் காட்சி முடிந்து,  மீண்டும் அவர் கதையைத் தொடரும்போது எச்சிலை முழுங்கிவிட்டு, சில வினாடிகள் இடைவெளிவிட்டு, மீண்டும் கதை சொல்லத் தொடங்குவார். எவ்வளவு நுட்பமான காட்சி அது. நானே 20 தடவைக்கு மேல் பார்த்தபிறகுதான்  அந்த நுட்பத்தைக் கவனித்தேன். இதுமாதிரியான நுட்பமான திரைக்கதை கொண்ட படங்கள் தமிழிலும் வர வேண்டும்”

“உங்கள் கற்பனையில் தோன்றிய இசையை எல்லாம் உங்களால் குறிப்புகளாக மாற்ற முடிந்ததா?”


“நிச்சயமாக, அப்படி மாற்ற முடியவில்லை என்றால் என்னால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாதே!”

“அவற்றை இசையமைக்கும்போது தொழில்நுட்பரீதியாகச் சவால்கள் இருக்கின்றனவா?”


“நிச்சயமாக. தொடக்கத்தில் பல திறமையான இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். இப்போது அந்தத் திறமைமிக்க கலைஞர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. பிப்ரவரி 3ஆம் தேதி நான் நடத்தப்போகும் இசை நிகழ்ச்சிக்கே தமிழகத்துக்கு வெளியே இருந்துதான் இசைக்கலைஞர்களை வரவழைக்கப்போகிறேன். நல்ல திறமையான இசைக் கலைஞர்களைத் தமிழகத்தில் ஊக்குவித்து வளர்த்தெடுக்க வேண்டும். ஆனால் அப்படியான வர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பதுதான் குறையாக இருக்கிறது!”

“நீங்கள் துறவு மனநிலை கொண்டவர். ஆனால் உங்கள் இசையோ கேட்பவர்களிடம் திருவிழா மனநிலையை உண்டாக்கிவிடுகிறது. இந்த முரணை எப்படி புரிந்துகொள்வது?”


“விலகியிருப்பது (Detached) என்பது துறவுநிலை அல்ல. மற்றவர்கள் நைட் கிளப்புகளுக்குச் செல்கிறார்கள், மது அருந்து கிறார்கள், மற்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், நான் இவற்றிலிருந்து விலகியிருக்கிறேன். அவர்கள் சில விஷயங்களை ஒதுக்குகிறார்கள். நான் சில விஷயங்களை ஒதுக்குகிறேன். அதனாலேயே நான் துறவி அல்ல. உண்மையைச் சொன்னால் நான் வேலையின்மீது பற்றோடு இருக்கிறேன்”

“சங்க இலக்கியங்களைத் தமிழ் இலக்கியத்தின் சொத்து என்பார்கள். அப்படி தமிழிசையின் சொத்து என்று எதைச் சொல்வீர்கள்?”

“இசையைத் தமிழிசை என்று நான் குறுக்குவதில்லை. நீங்களும் குறுக்காதீர்கள். இசை என்பது ஓசை. அதற்கு மொழி கிடையாது. இனவாதத்துக்குள் இசை சிக்கிவிடக் கூடாது. தமிழிசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் இசை என்பது அடிப்படையில் இசைதான். அதனால்தான் என் ஆல்பத்துக்கு நான் ‘How to name it’ என்று பெயர்வைத்தேன்”

“இது தொடர்பாக இன்னொரு கேள்வி. நீங்கள் எத்தனையோ மொழிகளில் இசையமைத்திருக்கிறீர்கள். அவற்றில் இசைமை கூடுதலான மொழி என்று எதைச் சொல்வீர்கள்?”

“எல்லா மொழிக்கும் தனித்தன்மைகள் உண்டு. ஒரு மொழியை முழுமையாகக் கற்றுக்கொள்ளாமல் நாம் அதைச் சொல்லிவிட முடியாது. அப்போதுதான் ஒவ்வொரு மொழியின் தனித்தன்மை புரியும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தி மொழி இசையின் பல சாத்தியங்களுக்கு நெருக்கமான மொழியாக இருக்கிறது என்று கருதுகிறேன்”

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

“சமூக வலைதளங்களில் உங்களுக்கு அதிதீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிகம் புகழ்பெறாத உங்கள் சிறந்த பாடல்களை அவர்கள் தேடியெடுத்துப் பதிவு செய்கிறார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கவனிக்கிறீர்களா?”

“சமூகவலைதளங்களை நான் கவனிப்பதில்லை என்று உங்களுக்கே தெரியும். ஆனால், நெருக்கமான நண்பர்கள் சிலர் இந்தப் பதிவுகளை என்னிடம் காட்டுவதுண்டு. மகிழ்ச்சியான விஷயம். வெற்றிபெற்ற படங்களில் இடம்பெறாமல் போனதாலோ மக்களைச் சென்றடையாததாலோ பல நல்ல பாடல்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர்கள் கவனப்படுத்துவது நல்ல விஷயம்”

“நகைச்சுவைக் காட்சிகளுக்கான உங்கள் பின்னணி இசையைப் பலரும் தொகுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் எப்படி நகைச்சுவைக் காட்சிகளுக்கு இவ்வளவு விதவிதமாக இசையமைத்திருக்கிறீர்கள்?”

“அடிப்படையில் எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதுதான் இசையாக வருகிறது. நகைச்சுவை உணர்வு இல்லாதது மனிதத்தன்மையே இல்லையே?”

“தற்காலத் தமிழ் சினிமாக்கள் பற்றிய உங்கள் கருத்து...?”

“தற்கால சினிமாக்களை நான் பார்ப்பதே இல்லை. பொதுவாகவே, நான் இசையமைத்த படங்களையே பார்ப்பதில்லை. கமல் சார்கூட, ‘என்ன இது, நீங்கள் இசையமைத்த படத்தையே நீங்கள் பார்ப்பதில்லை?’ என்று கோபிப்பார். என்ன பிரச்னை என்றால், படம் பார்க்கும்போதே இங்கே சவுண்ட் மிக்ஸிங் சரியில்லையே, அது சரியில்லையே, இது சரியில்லையே என்று தோன்ற ஆரம்பித்துவிடும்”

“தமிழர்களின் இரவு என்பது இளையராஜாவின் இசையால் நிரம்பியது. இளையராஜாவின் இரவை நிரப்புவது எது?”

“சைலன்ஸ்.”

சுகுணா திவாகர், வெய்யில் - படங்கள்: கே.ராஜசேகரன்