Published:Updated:

``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு!" - `பிக் பாஸ்' காயத்ரி

வே.கிருஷ்ணவேணி

தயாரித்து நடித்துள்ள படமான `யாதுமாகி நின்றாய்' பட வேலைகள் மற்றும் தன் கரியரில் முழு மூச்சாக இறங்கியிருக்கும் `பிக் பாஸ்' காயத்ரியுடனான உரையாடல்.

``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு!" - `பிக் பாஸ்' காயத்ரி
``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு!" - `பிக் பாஸ்' காயத்ரி

`எங்கிருந்து வந்தது இந்த தைரியம்'

``என் அப்பா, அம்மாவிடம் இருந்துதான். யாரையும் நம்பி இல்லாமல் தனித்து நிற்கணும்னு தைரியம் சொல்லி வளர்த்தார்கள். படிக்கும்போதே சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சம்பாதிக்க வலியுறுத்தியவர்கள். அவங்க இல்லாம நான் இல்லை. அந்த தைரியம்தான், இந்தச் சமூகத்தில் என்னைத் தனி ஆளாகத் தன்னம்பிக்கையோடு நிற்க வைத்திருக்கிறது. எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமா பிடிச்ச துறை. 

அப்பாவும் அதுல இருந்ததால் எனக்குப் பலரும் பரிட்சயம் ஆனாங்க. ஆரம்பத்தில் கலா மாஸ்டர் ட்ரூப்ல அசிஸ்டன்டா வேலை பார்த்தேன். 13 வயசுலேயே மேடை நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கிறேன். 14 வயசுல டான்ஸ் யூனியன்ல கார்டு வாங்கிட்டேன். அப்புறம் பிருந்தா மாஸ்டர்கூடவும், அப்பாகூடவும் நிறைய ஷூட்டிங் போயிருக்கிறேன். எனக்கு முதல் முதலா நடிக்க வாய்ப்பு கிடைத்தது, பிரபுதேவா மாஸ்டர்கூடதான். மூன்று படங்கள்ல அவர்கூட நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் பிளஸ் டூ ஸ்டூடன்ட். படிப்பு கெட்டுடக் கூடாதுனு வீட்ல நோ சொல்லிட்டாங்க. `சார்லி சாப்ளின்' படத்துல நடிக்க ஓகே சொன்னதுக்குக் காரணமே, பிளஸ் டூ பாஸ் பண்ணதுனாலதான். நல்ல கதையம்சம் கொண்ட படம் அது. பொதுவாகவே எனக்கு காமெடி ஸ்கிரிப்ட் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதை அப்படிப்பட்ட கதைக்களம். இப்போது `சார்லி சாப்ளின் 2' வரப்போறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. `என்ன மச்சான்' பாட்டு பட்டி தொட்டியெல்லாம் பரவியிருக்கு. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்." என்றவர், கொஞ்சம் பின்னோக்கிச் செல்கிறார். 

`` `நந்தா' படத்தில் நான்தான் நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களால் அது தவறிடுச்சு. நான் நடிக்கிறது அம்மாவுக்கும் சரி, என்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் சுத்தமாப் பிடிக்கல. அதுக்குக் காரணம், நடிகையாகிட்டா ஏதாவது ஒரு பேச்சு அடிபட்டுக்கிட்டே இருக்கும். அதனால, குடும்பத்துக்குக் கெட்ட பெயர் வந்திடும்னு பயந்தாங்க. மொத்தமாவே தமிழில் ஐந்து படம் முடிச்சிருந்தேன். பிற மொழிகளில் ஐந்து படம் முடிச்சிட்டு, பிறகு வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிட்டேன். எலக்ட்ரானிக் புரடக்‌ஷன் சம்பந்தமான படிப்பை முடிச்சேன். பிறகு கல்யாணம், விவாகரத்து... அப்படி இப்படினு என் வாழ்க்கையில் ஒரு கட்டம் கடகடனு முடிஞ்சிடுச்சி.'' என்றவரிடம், திருமணம் விவாகரத்தை எட்டக் காரணம் என்ன என்றோம்.  

``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு!" - `பிக் பாஸ்' காயத்ரி

``எங்க ரெண்டுபேருக்கும் பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்தான் அது. அப்போ எனக்கு 22 வயசு. ரெண்டுபேருக்குமே மனசு ஒத்து வரல. அந்த நேரத்தில் யாரையும் குறை சொல்ல முடியாத நிலை. கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை நாம ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். ஒருவேளை நாங்க பிரிந்ததால, அவருக்கு இதைவிட நல்லது நடந்திருக்கலாம். அல்லது எனக்கு இதைவிட நல்ல வாழ்க்கை அமைந்திருக்கலாம். அப்படித்தான் நான் எடுத்துக்கிறேன். பல பெண்கள் இரண்டாவது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காங்க. என் திருமணத்திற்கான கதவுகளையும் யாரும் மூடி வைக்கவில்லை. அதுக்காக, அதுதான் முக்கியம்னு நான் முன்னெடுக்கவும் இல்லை. நடந்துச்சுனா சந்தோஷம், அவ்வளவுதான். அது என் அம்மாவோட ஆசை. நான் தனியாக இருப்பதில் சந்தோஷம்தான். எனக்குக் குழந்தை இருக்கணும்னு ஆசை. அதற்காகவாவது திருமணம் நடக்கணும். பார்ப்போம்.'' என்றவர், தொடர்ந்தார். 

``விவாகரத்து ஆன அந்த நாள்கள் எனக்குப் பெரும் வலியைக் கொடுத்திருந்தது. அதிலிருந்து மீண்டுவர ரொம்பவே கஷ்டப்பட்டேன். தற்போது அவருக்குக் கல்யாணம் ஆகி, குழந்தை இருக்குனு நினைக்கிறேன். தவறு என்பது ஒருத்தர் மேலேனு சொல்ல முடியாது. இரண்டு பக்கமும் இருந்திருக்கலாம். ஒருவேளை இங்கு படங்களில் வாய்ப்புகள் அமையாதிருந்தால், ஹாலிவுட்லேயே வேலை பார்த்திருப்பேன். எனக்கு அங்கே நிறைய நண்பர்கள் இருக்காங்க. சென்னை வந்ததும், ஏ.எல்.விஜய் சார் கோரியோகிராஃபராக வொர்க் பண்ண வாய்ப்பு கொடுத்தார். பிறகு, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என 125 படங்கள் முடிச்சிருக்கேன். எனக்கு இந்த ஃபீல்ட்ல இருக்கணும்னு ஆசை. அதுவும் டெக்னீஷியனாக வொர்க் பண்ண ரொம்பவே பிடிக்கும்." என்பவருக்கு, `பிக் பாஸ்' பெரிய அடையாளம். அந்த அனுபவம் குறித்துக் கேட்டேன்.  

``குழந்தை, குடும்பம்னு வாழ ஆசையா இருக்கு!" - `பிக் பாஸ்' காயத்ரி

``டான்ஸர்கள் வாழ்க்கையில இருக்கிற பிரச்னைகளைச் சொல்லக்கூடிய `யாதுமாகி நின்றாய்' படத்தை முடிச்ச சமயம், எனக்கு `பிக் பாஸ்' வாய்ப்பு வந்தது. அப்போ அம்மாவும் ஊரில் இல்லை. வீட்டில் தனியாதானே இருக்கோம்னு ஓகே சொல்லிட்டேன். அமெரிக்காவுல நண்பர்களோட ஹாஸ்டலில் தங்கியிருக்கேன். அதனால, 13 பேர்கூட இருப்பது எனக்கு கஷ்டமாகத் தெரியல. அந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்துக்கும் மேல் செல்ஃப் ரெஸ்பெக்ட் போகுதுனு தெரிய ஆரம்பிச்சதும்தான் என்னை வெளியே கொண்டுவர ஆரம்பிச்சேன். என்னதான் இருந்தாலும், இந்தத் துறையில எவ்வளவோ சாதிச்சிருக்கோம். அதுக்கு ஒரு மரியாதை இல்லையா... என்பதுதான் என் கேள்வி. அதனாலதான், அப்படி நடந்துக்கிட்டேன். என்னைப் பொறுத்தவரை, நான் உண்மையா இருந்தேன். 

வெளியே வந்து பார்க்கும்போதுதான், கன்னாபின்னானு பேசுறாங்கனு புரிஞ்சது. அது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. `பிக் பாஸி'ல் மூன்றாவது வாரத்தில்தான் ஏதோ தப்பா நடக்குதுனு தெரிய ஆரம்பிச்சது. அதுவும் சீர் என்கிற வார்த்தையில் இருந்துதான் புரிய ஆரம்பிச்சது. எனக்கு ஸ்கூல்ல செகண்ட் லாங்குவேஜ் இந்தி. அது சரியா வரலைனு சம்ஸ்கிருதத்தில் போட்டாங்க. தமிழை எழுத்துக் கூட்டித்தான் படிப்பேன். எப்படியோ போராடி, 57 நாள்கள் உள்ளே இருந்துட்டேன்.'' என்கிறார், சிரித்துக்கொண்டே! 

``என் இத்தனை கால வாழ்க்கையில் ஏற்றங்களைவிட, இறக்கங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கேன். என்னால இத்தனையையும் தாங்கிக்கொள்ளமுடியும் என்பதால்தான், கடவுள் இந்த இடத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்னு நினைக்கிறேன். `எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்'னு இன்னும் தைரியமா முன்னேறிப் போய்கிட்டு இருக்கேன்." என்கிறார், காயத்ரி.