Published:Updated:

சினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி? ஒரு ஃப்ளாஷ்பேக் அலசல்

தார்மிக் லீ

அஜித்தின் அறிக்கை ஒன்று பிரேக்கிங் நியூஸாக மாறியது. எங்கிருந்து ஆரம்பமானது இவரின் ஒதுங்கிப்போகும் தன்மை?! இதோ, அஜித்தின் அறிக்கைகளும், ஆஃப் ஸ்கிரீன் செயல்பாடுகளும் குறித்த ஒரு ரீவைண்டு!

சினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி? ஒரு ஃப்ளாஷ்பேக் அலசல்
சினிமாவுக்கு வெளியே அஜித் எப்படி? ஒரு ஃப்ளாஷ்பேக் அலசல்

மிழகத்தில் அறிமுகம் தேவையில்லாத நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவரை அறிமுகப்படுத்தி வைக்க `தல' என்ற ஒரு வார்த்தை போதும். பேட்டிகள் கொடுக்க தவிர்த்ததை ஆரம்பித்து, ரசிகர் மன்றத்தைக் கலைத்தது, சினிமா நிகழ்ச்சிகளைத் தவிர்த்தது... தற்போதுகூட இவரின் அறிக்கை ஒன்று பிரேக்கிங் நியூஸாக மாறியது. எங்கிருந்து ஆரம்பமானது இவரின் ஒதுங்கிப்போகும் தன்மை?! இதோ, அஜித்தின் அறிக்கைகளும், ஆஃப் ஸ்கிரீன் செயல்பாடுகளும் குறித்த ஒரு குட்டி ரீவைண்டு!

அஜித் மீது தனி மரியாதையும், பாசமும் கொண்டவர்கள் திரைத்துறையிலேயே அதிகம் உள்ளனர். ஆனால், ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில்தான், ஷாலினிக்கும் இவருக்கும் திருமணம். அப்போது, `ஜெயலலிதா மேடமுக்கு அழைப்பிதழ் கொடுத்தால் நல்லா இருக்கும்' என யாரோ சொல்லியிருக்கிறார்கள். உடனே அழைப்பிதழை எடுத்துக்கொண்டு ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றிக்கிறார், அஜித். நெகிழ்ந்து பேசும் அளவுக்கு இருந்திருக்கிறது இவர்களின் அப்போதைய உரையாடல். பின், திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ஜெயலலிதா, கன்னிமாராவில் நடந்த திருமண வரவேற்பில் கலந்துகொண்டார். வழக்கமாக ஜெயலலிதாவைப் பார்த்தால் அவரது தொண்டர்கள், கட்சிப் பதவியில் இருப்பவர்கள் எப்படி மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்துவார்கள் என்பது தெரியும். மற்ற பிரபலங்கள் குறைந்தது கரம் கூப்பிக் கும்பிடவாவது செய்வார்கள். ஆனால், அஜித் அவரைப் பார்த்த மறுநிமிடம் அருகே வந்து கை கொடுத்தார். இதைப் பார்த்த ஜெயலலிதாவே திகைத்தார். அதன்பின் இருவரும் சகஜமாகச் சிரித்துப் பேசினர். இதுதான், ஜெயலலிதா இறந்தபோது பல்கேரியாவில் இருந்த அஜித்தை வெவ்வேறு விமானங்களுக்கு மாறி, அடித்துப் பிடித்து ஜெ-வின் சமாதிக்கு வர வைத்திருக்கும். 

ஜெயலலிதாவைப் போல் கருணாநிதியும் அஜித்தின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 2011-ல் ஆனந்த விகடனில் கொடுத்த ஒரு பேட்டியில்கூட நெகிழ்ந்துபோய் இதைக் கூறியிருந்தார். அதேசமயம் 2010-ல் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழா ஒன்றில் அனைவரையும் அசரடிக்கும்படி ஓர் உரையைக் கொடுத்திருந்தார். `சென்சிட்டிவ் சோஷியல் இஷ்யூகளுக்கு எல்லாம் நடிகர்கள் பேசக் கூடாதுனு ஓர் அறிக்கை கொடுங்க ஐயா. யாருடைய ஆட்சியாக இருந்தாலும் சரி, அப்போ ஆட்சி செய்ற முதலமைச்சருக்கு நடிகர்கள் நாங்க எல்லோரும் மரியாதை கொடுப்போம். அதேசமயம் அரசியல் இயக்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் நடிகர்களைப் பங்கேற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துறாங்க. அதை எப்படியாவது நிறுத்துங்க ஐயா' என ஆவேசமாகப் பேச, அதுவும் கருணாநிதியின் முன்பே பேசினார். இதை இவர் பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமுமே அதிர்ந்தது. முக்கியமாக, ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அமர்ந்தார். ரசிகர்களோடு சேர்த்து, திரைத்துறையில் சிலருக்கே அஜித் மீது மரியாதை அதிகமானது. அதற்கு மறுநாளே அஜித், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு அழைக்கப்பட்டார், இவரும் சென்றிருந்தார். `கருணாநிதி அஜித்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்' என்பதுதான் அப்போதைய ஹாட் காசிப்! ஆனால், அவரது அடுத்த படமான 'மங்காத்தா'வை தயாரித்தது கருணாநிதியின் பேரனான தயாநிதி அழகிரி. படத்தை விநியோகம் செய்தது சன் பிக்சர்ஸ். 

2012-ல் `பில்லா 2' படம் வெளியானது. அஜித் கடைசியாகப் பேட்டி கொடுத்ததும் அப்போதுதான். `ஆமாம் நான் சுயநலவாதிதான்' என்ற டைட்டிலில் வெளியான ஆனந்த விகடன் பேட்டிதான், இன்றுவரை வைரல். `மங்காத்தா' பட சமயத்தில் அஜித், ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். காரணம், அஜித் ரசிகர் மன்றங்களை வைத்து செய்யப்பட்ட சில கட்டப் பஞ்சாயத்துகள். பல வன்முறை சம்பவங்கள் செய்தியாக வரும்போது, `அஜித் மற்றும் அஜித்தின் ரசிகர் மன்றம்' என்ற வார்த்தைகளும் கூடவே அடிபட்டது. இதற்காகத்தான் அஜித் ரசிகர் மன்றங்களைக் கலைத்திருக்க வேண்டும் என்ற பேச்சு இன்றுவரை இருக்கிறது. 2012-ல் அவர் கொடுத்த பேட்டியில், `ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகு, ரசிகர்களுடனான உறவு எப்படி இருக்கிறது?' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. `எப்போவுமே நான் ரசிகர்கள் மனசுல இருக்கேன். அவங்க என் மனசுல இருக்காங்க. இதுல எனக்கோ, என் ரசிகர்களுக்கோ எந்தக் குழப்பமும் இல்லை' என்று சிம்பிளாக பதில் சொல்லியிருந்தார். 

அந்தச் சமயத்திலிருந்துதான் வெளியுலகிலிருந்து அஜித் தன்னைத் தவிர்த்துக்கொண்டார். பத்திரிகையாளர் சந்திப்பு, நேர்காணல்கள், ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது... என அனைத்திலும் ஒதுங்கியே இருக்கிறார். இது காலப்போக்கில் விமர்சனமாகக்கூட மாறியது. 2014-ல் பாலசந்தர் இழப்பு, 2015-ல் எம்.எஸ்.வியின் இழப்பு எனத் தமிழ் சினிமா இரு பேரிழப்புகளைச் சந்தித்தது. அதுவரை எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளாத அஜித், இவற்றிலும் கலந்துகொள்ளவில்லை. சினிமாத்துறையில் இருக்கும் சிலர் இவர் மீது விமர்சனங்கள் வைத்தார்கள். பின் மனோரமாவின் இறுதிச்சடங்கு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் எனத் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளில் மட்டும் அஜித் கலந்துகொள்ளத் தொடங்கினார். இது ஜெயலலிதா, கருணாநிதி வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.  

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களை வைத்து மற்ற கட்சிகள் அரசியல் செய்வதும்தான் பல ஆண்டுகளாக இருக்கும் ட்ரெண்ட்!. ஆனால், இந்த அரசியல் வலைக்குள் என்றும் சிக்காமல் இருப்பவர், அஜித். 2012-ல் அஜித்திடம் அவரின் அரசியல் என்ட்ரி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அஜித் சொன்ன குட்டிக் கதை இது. `Too many cooks spoil the Broth-னு ஒரு பழமொழி இருக்கு. சமையல் அறையில் ஒருத்தர் ரெண்டுபேர் சமைச்சா, சாப்பாடு நல்லா இருக்கும். அதே 10 பேர் சேர்ந்து சமைச்சா, அந்தச் சாப்பாடே சாப்பிடுற மாதிரி இருக்காது.' என்பதுதான், அந்தக் கதை. `ஏற்கெனவே தமிழ்நாட்டுல நிறைய அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கிறேன்' என்ற இவரின் பதில், தற்கால சூழலுக்குக்கூட பொருந்தும். 

`வாழு; வாழவிடு!' இதுதான் அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் தாரக மந்திரம். அஜித்தின் வீட்டு வாசலில் இருப்பதுகூட இந்த வாசகம்தான். அஜித்துடன் செல்ஃபி எடுக்க முடியாத பல ரசிகர்கள், இதற்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வார்கள். அவ்வப்போது வைரலாகும் அஜித் புகைப்படங்கள், அவர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டிரெய்லர், படங்கள்... என இவைதாம் அஜித் ரசிகர்களுக்கு இவர் கொடுக்கும் ட்ரீட்!. இவையெல்லாம் போக, சமீபத்தில் இவர் விட்டிருந்த அறிக்கைதான் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் நீந்த வைத்தது. ``நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட எந்த எண்ணமும் இல்லை. தேர்தலின்போது வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே அரசியலில் எனக்கிருக்கும் உச்சகட்ட தொடர்பு'.' என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம். போக ரசிகர்களுக்கும் இதையே வேண்டுகோளாக விடுத்திருந்தார். சமீபத்தில் திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாற்றுக் கட்சியினர் பி.ஜே.பி-யில் சேரும் விழா நடைபெற்றது. அதில் பேசிய தமிழிசை, `அஜித் மிகவும் நேர்மையானவர். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காகச் செலவு செய்ய நினைப்பவர். அவரைப்போல்தான் அவரது ரசிகர்களும்!. அதனால்தான், அஜித் ரசிகர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்' எனக் கூறினார். இதற்குப் பிறகுதான், ஜித்தின் அந்த அறிக்கை வெளியானது

அஜித், எல்லாக் காலகட்டங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார் என்பதற்கு இந்த அறிக்கை சாட்சி. ஏனென்றால், 2012-ல் இவர் கொடுத்த பேட்டியிலும், இப்போது வெளியிட்ட அறிக்கையில் இருப்பதைத்தான் பதிலாகக் கூறியிருந்தார். `நாலு காசு சம்பாதிக்க, நடிக்கத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். கார், பங்களானு வசதியா வாழ்றதுக்குப் பணம் தேவை. அதுக்காகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். மத்தபடி நான் கலைச் சேவையாற்ற சினிமாவுக்கு வந்தேன்னு சொன்னா, அது ரொம்பப் பொய்யா இருக்கும். மக்களுக்கு அறிவுரை சொல்லவும் நான் சினிமாவுக்கு வரலை. ஏன்னா, மக்கள் அதிபுத்திசாலிகள், ரொம்பத் தெளிவா இருக்காங்க!' என்று சொல்லியிருந்தார். 

எப்போதும் ஒரேமாதிரி பேசுவது, சினிமாவை வைத்து அரசியல் செய்யாமல் இருப்பது, எந்த வம்புதும்புக்கும் போகாமல் இருப்பது, சமூக வலைதளங்களிலிருந்து ஒதுங்கியிருப்பது, விருது விழாக்களில் கலந்துகொள்ளாமல் இருப்பது... என அஜித்திடம் சுட்டிக்காட்ட நிறைய இருக்கின்றன. இந்தக் காரணத்தினால்தான் அவரது ரசிகர்களுக்கு அவரைப் பிடித்துப் போயிருக்கும். வாழு; வாழவிடு!