Published:Updated:

ஆக்ஷன் இல்லை, CG இல்லை... இது விநோதமான சூப்பர்ஹீரோக்களின் கதை! #Glass படம் எப்படி?

கார்த்தி
ஆக்ஷன் இல்லை, CG இல்லை... இது விநோதமான சூப்பர்ஹீரோக்களின் கதை! #Glass படம் எப்படி?
ஆக்ஷன் இல்லை, CG இல்லை... இது விநோதமான சூப்பர்ஹீரோக்களின் கதை! #Glass படம் எப்படி?

ஆக்ஷன் இல்லை, CG இல்லை... இது விநோதமான சூப்பர்ஹீரோக்களின் கதை! #Glass படம் எப்படி?

பில்டிங்கை உடைத்து ரயில்களை நிறுத்தும் சாகசமில்லை; ஒரு ஜீவனுக்காக ஊரையே கொன்று மலை போல் குவிக்கும் அதிரடிக் காட்சிகளும் இல்லை. இவை எதுவும் இல்லாத சூப்பர்ஹீரோ படம் இந்த 'கிளாஸ்'.

ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்:

2000-ம் ஆண்டு ப்ரூஸ் வில்லிஸ் நடிப்பில் வெளியான படம் அன்பிரேக்கபிள் (Unbreakable). அதிக பலம் கொண்ட உடையா எலும்புகள்தான் டேவிட் டன்னின் (ப்ரூஸ் வில்லிஸ்) சூப்பர்ஹீரோ பவர். அவருக்கு நேர் எதிராக தன் உடலிலுள்ள எல்லா எலும்புகளும் மெலிதாக இருக்கும் நபர் எலிஜா (சாமுவேல் ஜாக்ஸன்). அதிபுத்திசாலியான அவருக்கு 'Type I osteogenesis imperfecta' குறைபாடு இருக்கிறது. இந்த இரண்டு முரணான கதாபாத்திரங்கள்தான் 'அன்பிரேக்கபிள்' படத்தின் நாயகர்கள். Eastrail 177 ரயிலில் டேவிட் டன் வரும்போது, அந்த ரயில் விபத்துக்குள்ளாகிறது. ஆனால், அதில் இருக்கும் டேவிட் டன்னுக்கு எவ்வித காயங்களும் இல்லை. இதற்கான புதிர்களும், இந்தச் சம்பவத்துக்கும் 2017-ல் வெளிவந்த 'ஸ்ப்ளிட்' (Split) படத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. படத்தில் கெவினாக வரும் ஜேம்ஸ் மெக்காய் உடலுக்குள் 23 நபர்கள் இருப்பார்கள். 24வதாக வரும் பீஸ்ட் கதாபாத்திரம் அந்தப் படத்தின் மைல்கல். அதிலும் பீஸ்ட் எடுக்கும் அந்த முடிவும், அவன் இறுதியாகச் சொல்லும் "You are different from the rest. Your heart is pure! Rejoice! The broken are the more evolved. Rejoice" வசனமும் ஆத்மார்த்தமானவை. அந்தப் படத்தின் இறுதியில் கெவினும், டேவிட் டன்னும் சந்தித்துக்கொள்வது போல் படம் முடியும்.

தற்போது இந்த Eastrail #177 டிரையாலஜியின் மூன்றாம் பாகமான தி கிளாஸ் படத்தை எடுத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன். இந்த முறையும் நான்கு பெண்களைக் கடத்துகிறான் கெவின். 17 ஆண்டு இடைவெளியில், டேவிட் டன் `தீ ஓவர்சீயர்' என்னும் அடைமொழியுடன் ஒரு சூப்பர்ஹீரோவாக ஊரில் நடக்கும் தவறுகளைத் தனது டீனேஜ் மகனின் உதவியுடன் தடுக்கிறார். முதல் பாகத்தில் தவறு செய்த எலிஜா, மருத்துவமனைக்குள் சிறை வைக்கப்படுகிறார். இந்த மூன்று சூப்பர் ஹ்யூமன்களின் மருத்துவராக எல்லி (சாரா பால்சன்). இவர்கள் மூவருக்கும் இருப்பது சூப்பர்ஹீரோ பவர் இல்லை. வெறும் மனநோய் எனத் தீர்க்கமாக நம்புகிறார் எல்லி. அவர்களுக்கு மன ரீதியாக சிகிச்சையும் கொடுக்கிறார். இவர்களைச் சுற்றி நடப்பதுதான் 'கிளாஸ்'.

எக்ஸ் மென் சீரிஸ், மிஸ் பெரிக்ரின்ஸ் ஹோம் ஃபார் பெக்யூலியர் சில்ரன் போன்ற திரைப்படங்களில் வரும் சாராம்சத்தை கிளாஸுடன் தொடர்பு படுத்தலாம். சூப்பர் ஹ்யூமன்கள், அல்லது மேற்சொன்ன திரைப்படங்களில் சொல்வது போல் ம்யூட்டன்ட்கள் இருப்பது மனித குலத்துக்கு எதிரானது. மனிதர்களின் பார்வையிலிருந்து விலகியே இருப்பார்கள். இன்னொரு பக்கம், நமக்கு இருக்கும் சக்திகளுக்கு நாம் ஏன் ஒளிந்து வாழவேண்டும், நாம் மனிதர்களை ஆள வேண்டும் என்கிற ஆன்டகானிஸ்ட் பார்வையிலும் கதை நகரும்.

கிளாஸ் திரைப்படத்தில் டேவிட் டன் ஹீரோவாகவும், கெவின் வில்லனாகவும் சித்திரிக்கப்படுகிறார். கெவினை தன் வசப்படுத்தி கட்டுப்படுத்தும் நபராக அதிபுத்திசாலி எலிஜா. ரொம்பவும் அடக்கிவாசிக்கும் ஸ்மார்ட் வில்லன். இரவு நேரங்களில் பூட்டிய அறையிலிருந்து வெளியே வந்து தனக்குத் தேவையான காரியங்களைச் செய்வது, கிளைமேக்ஸ் காட்சியில் தான் தோல்வி அடைந்ததாய் நம்பவைத்து (நம்மையும்), பின்னர் அப்படி ஒரு ட்விஸ்ட்டுக்கு வழிவகுப்பது என நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார். முதிர்ந்த நடிகர் ப்ரூஸ் வில்லிஸ்க்கு இதில் ஒரு மெச்சூர்டான சூப்பர்ஹீரோ கதாபாத்திரம். தொடுதல் மூலமே மனித மனங்களைப் படிப்பவரின் சூப்பர்ஹீரோ சண்டைக் காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம்.

ஸ்ப்ளிட் படத்தைப் போல், இதில் எந்தவிதமான த்ரில் காட்சிகளும் இல்லை. நான்கு பெண்களின் கடத்தல் நாடகம்கூட சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. ஜேம்ஸ் மெக்காய் தி ஸ்ப்ளிட்டில், காஸ்டியூம் எல்லாம் மாற்றிக்கொண்டு வந்து வெவ்வேறு கதாபாத்திரங்களாக நடித்திருப்பார். இதில் அதற்கெல்லாம் நேரமும் இல்லை. கதாபாத்திர மாற்றங்களை ஒரே ஆடையில், அதுவும் தொடர்ச்சியாக தர வேண்டும். அதகளம் செய்திருக்கிறார். கெவினுக்குள் இருக்கும் நபர்களில் பெட்ரீசியா என்ற பெண்தான் அனைவரையும் வழிநடத்துகிறார். அவளுக்கும், 9 வயதுச் சிறுவனின் மனவோட்டத்தைப் பெற்றிருக்கும் ஹெட்விக் கதாபாத்திரம்தான் பிடித்திருக்கிறது. கெவின் ஹெட்விக்காக இருப்பது மட்டுமே, அனைவருக்கும் பாதுகாப்பானது என உணர்கிறாள் பெட்ரீசியா .இந்தக் கதாபாத்திர உணர்வுகளின் பிரதிகளை இறுதிக்காட்சி வரையிலும் கொண்டு வந்திருப்பார் ஜேம்ஸ் மெக்காய். மனிதர்களை நரமாமிசமாக உண்டு விழுங்கும் தி பீஸ்ட், தன் இறுதிக்காட்சியில் அழும் போதும், நம்மை பரிதாபப்பட வைத்திருப்பதுதான் மெக்காயின் வெற்றி.

அன்பிரேக்கபிள் படத்தில் தலைகாட்டிய மனோஜ் நைட் ஷியாமளான், இதில் சற்று அதிகமாகவே கேமியோ செய்திருக்கிறார். அவரை பெரிதாக யாருக்கும் தெரியாததால், மற்றொரு காட்சியாகவே கடக்க வேண்டியதிருந்தது. பெரிதும் பேசப்பட்ட ஷியாமளானின் தி சிக்ஸ்த் சென்ஸ் படத்திலிருந்தே, இந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் வகை சினிமாக்கள் அவருக்குக் கைகூடி வருகிறது. பேர்ட் பாக்ஸ், கொயட் பிளேஸ் படங்களுக்குக் கிடைத்த வரவேற்புகூட அதற்கெல்லாம் முன் வந்த மனோஜ் நைட் ஷியாமளனின் 'தி ஹேப்பனிங்' படத்துக்குக் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட தி கிளாஸ் படத்துக்கும், பல தளங்களில் சுமார் என்பதுதான் விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது.

இறுதியில் மூன்று சூப்பர் ஹீரோக்களும் கொல்லப்படுகிறார்கள். அட, என்ன இது ஸ்பாய்லர் என முகம் சுளிக்க வேண்டாம். ஏனெனில் அது ஸ்பாய்லர் இல்லை. ஏனெனில் இது வழக்கமான சூப்பர் ஹீரோ படம் இல்லை. பன்னெடுங்காலமாகப் பார்த்துப் பார்த்து, இனியும் பார்த்து கைதட்டப்போகும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு மத்தியில் வந்திருக்கும் இந்த யதார்த்த சூப்பர் ஹீரோ படம் ஈர்ப்பது இந்த இடத்தில்தான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சின்ன சுவாரஸ்யத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்தியிருக்கிறார் ஷியாமளன். டோண்ட் மிஸ்!

அடுத்த கட்டுரைக்கு