Published:Updated:

இசையமைப்பாளர் இமானுக்கு விருது! - கனடாவின் டோராண்டோ பல்கலைக்கழகம் கௌரவம்

இசையமைப்பாளர் இமானுக்கு விருது! - கனடாவின் டோராண்டோ பல்கலைக்கழகம் கௌரவம்
இசையமைப்பாளர் இமானுக்கு விருது! - கனடாவின் டோராண்டோ பல்கலைக்கழகம் கௌரவம்

கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகம் முதன் முறையாக ஜனவரி 21 மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபுத் தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை. 

இதுகுறித்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூறுகையில், ``மரபுத்தினக் கொண்டாட்டத்தின்போது பிரபல இசையமைப்பாளர் டி.இமான் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவிலே அவர் இசையமைத்த டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலை வெளியிட்டார். பாடலை எழுதியவர் கவிஞர் யுகபாரதி; பாடியவர் சூப்பர் சிங்கர் புகழ் திவாகர். அதே பாடலுக்கு நிரோதினி நடனப் பள்ளி மாணவிகள் நடனமாடியது மேலும் சிறப்பாக அமைந்தது. விழாவில், ’அண்ணன்மார் கதை’ வில்லுப்பாட்டும் வேறு நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இமானை வரவேற்று டோரண்டோ பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி  பேசினார். 

மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் கனடாவில் உருவாகும் தமிழ் இருக்கை புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதுடன்  தமிழின் மேன்மையை அனைத்துலக மக்களுக்கும் கொண்டு செல்லும் என்று கூறினார். தொடர்ந்து இமானுடைய இசையையும் தமிழ் சேவையையும் பாராட்டி விருது வழங்கப்பட்டது. ஏற்புரையின்போது இமான், ``தமிழர்கள் பலதேசங்களில் மதம், சாதி, கொள்கை எனப் பிரிந்து கிடந்தாலும் தமிழ் என்னும் ’ஒற்றைச் சொல்’ அவர்களை இணைக்கிறது. தமிழின் முன்னேற்றச் செயல்திட்டங்களுக்கு அவர்கள் ஒன்றாகப் பாடுபட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார். இமான் விழாவுக்கு வருவார் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. விஸ்வாசம் படம் கொடுத்த வெற்றியில் அவர் பல தயாரிப்பாளர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். 

எனினும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவர் விமானத்தில் தன் செலவில் வந்து விழாவைச் சிறப்பாக்கியதற்கு தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர். இமானை நல்லிணக்க தூதுவராக நியமித்து கனடா தமிழ் இருக்கை பெருமை கண்டது. இரண்டு நாள்களுக்கு முன்னர் கனடிய தமிழர் பேரவை ஆயிரம் பேர் கொண்ட சபையில் இமானுக்கு ‘மாற்றத்துக்கான தலைவர்’ விருது வழங்கிக் கௌரவித்ததையும்  நினைவுகூரவேண்டும்.  

பனி அள்ளிக்கொட்டிய விழா நாள் அன்று டோரண்டோவின் கால நிலை -30 செல்சியஸ். கனத்த பனி காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. வானொலிகளும் தொலைக்காட்சியும் மக்களுக்குத் தொடர்ந்து காலநிலை எச்சரிக்கை விடுத்தன. அப்படியிருந்தும் மக்கள் விழா அரங்கத்தை நிறைத்துக் குழுமியிருந்தனர். தமிழ் மக்களுடைய இந்த ஆர்வ வெளிப்பாடு தமிழ் இருக்கையின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது" என்றார்.