Published:Updated:

"கோபத்துல சீப்பைத் தூக்கி எறிஞ்சாங்க ராதிகா!" - 'சந்திரகுமாரி' பானு

"கோபத்துல சீப்பைத் தூக்கி எறிஞ்சாங்க ராதிகா!" - 'சந்திரகுமாரி' பானு
"கோபத்துல சீப்பைத் தூக்கி எறிஞ்சாங்க ராதிகா!" - 'சந்திரகுமாரி' பானு

`தாமிரபரணி' படத்தின் மூலம் `அடுத்த நயன்தாரா' என வர்ணிக்கப்பட்டவர், நடிகை பானு. சில படங்களுக்குப் பிறகு, திருமணம், குடும்பம் என செட்டில் ஆனவர், இப்போதுதான் ஷூட்டிங் செட்டில் எட்டிப் பார்த்திருக்கிறார்.

விஷாலுடன் `தாமிரபரணி' படத்தில் கைக்கோத்தவர், பானு. பிறகு சில படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர், கேரளாவைச் சேர்ந்த பாடகர் ரிங்கு டாமியைக் (Rinku Tomy) காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை, குடும்பம் என செட்டில் ஆனவர், தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் `சந்திரகுமாரி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரிடம் பேசினோம். 

``மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள்... எப்படி இருக்கிறது?"

``நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது முதல் முதலில் மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு படபடப்போடு கேமரா முன் நின்றேன். அதே படபடப்பு இந்தத் தொடரின் முதல்நாள் ஷூட்டிங்கின்போது இருந்தது. நான் பொதுவாகவே சத்தம்போட்டுப் பேசுபவள் கிடையாது. அமைதியாக என் வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு வருவேன். `சந்திரகுமாரி' தொடரிலும் அப்படித்தான். நிரோஷாதான் எப்போவும் என்கூட இருப்பாங்க. அவங்ககூடதான் நிறைய பேசியிருக்கேன்." 

`` `சந்திரகுமாரி' தொடர் அனுபவம்?" 

``இது என் கரியரில் முக்கியமான தொடர். முடிந்தவரை என்னுடைய பெஸ்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நிரோஷாதான் எனக்கு போன் பண்ணி `சரித்திரக் கதையைக் கொண்ட இந்தத் தொடரில் நடிக்க உங்களுக்குச் சம்மதமா'னு கேட்டார். நானும் மூன்று வருடங்களாக நல்ல கதாபாத்திரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். உடனே ஓகே சொல்லிட்டேன். என் கணவருக்கு நான் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் இஷ்டமில்லை. அவருடைய அக்காதான், `அவங்களுக்கும் மனசுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய ஆசை இருக்கும். அதற்கு நீ தடை போடவேண்டாமே?'னு சொன்னாங்க. பிறகுதான் என்னை நடிக்க அனுமதிச்சாங்க. இப்போதும் நான் ஷூட்டிங் போகும்போது எந்த ஹோட்டலில் தங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என யோசித்து யோசித்து அனுப்பி வைப்பார்."

``ஸ்பாட்டில் ராதிகா எப்படி?''

``நிரோஷாவிடம் ஓகே சொன்ன காரணமே, ராதிகா மேடத்தை எப்படியாவது பார்க்கலாம்; பேசலாம் என்கிற ஆசையில்தான். எனக்கு அவங்களை அவ்வளவு பிடிக்கும். அவங்க நடிக்கும்போது நடிக்கிற மாதிரியே தெரியாது. அவ்வளவு நேச்சுரலா இருக்கும். அவங்ககிட்ட நிறைய கத்துக்கலாம். நான் முதலில் இந்தத் தொடரில் கமிட் ஆனதும், `ராதிகா மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்களுக்கு பெர்ஃபெக்‌ஷன் ரொம்ப முக்கியம்' என்றெல்லாம் சொன்னாங்க. நானும் ஏதாவது கேட்கணும்னா அவங்ககிட்ட தயங்கித் தயங்கித்தான் கேட்பேன். ஒருமுறை ஒருவரிடம் கோபத்தில் சீப்பைத் தூக்கி எறிந்திருக்கிறார். ஆனால், உண்மையில் அவரிடம் நெருங்கிப் பேசினால், ரொம்ப ஃப்ரெண்ட்லியானவர்.'' 

``இவ்வளவு வருட இடைவெளிக்குக் காரணம் திருமணமா?''

``அப்படியும் சொல்லலாம். நான் நடிப்பு என வந்தபிறகு ப்ளஸ் டூ படிப்போடு நின்றுவிட்டேன். பிறகு முழுக்க முழுக்க நடிப்பே என்னுடைய தொழிலானது. அதற்குப் பிறகு, காதல், திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிட்டேன். திருமணம் ஆகி மூன்று வருடம் வீட்டில் இருந்த எனக்கு என்னையே பிடிக்காமல் போய்விட்டது. எதையும் சாதிக்காமல் இருக்கிறோமே என்கிற வருத்தம் ஒரு பக்கம் என்னை அழுத்தியது. திரும்பவும் கேமராவுக்கு முன் வந்த பிறகுதான், என் மீதே எனக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கை வந்தது. `சந்திரகுமாரி' தொடர் எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ்!"  

``அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்?''

``இப்போதைக்கு எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் அமையவில்லை. `தாமிரபரணி' மாதிரி வெயிட்டான ஒரு கதாபாத்திரம் அமைந்தால், கண்டிப்பாக என்னை மீண்டும் பழைய பானுவாகப் பார்க்கலாம்.'' 

``பானு அழகுக் கலை பிரியராமே?''

``ஆமாம். அதனால்தான் என் வீட்டிலேயே பியூட்டி பார்லர் வைத்திருக்கிறேன். தெரிந்தவர்களுக்கு நானே ஃபேஷியல், பெடிக்யூர், மெடிக்யூர் என செய்து வருகிறேன். இதுவரை அதற்காக ஒரு அசிஸ்டென்ட்கூட வைத்துக்கொண்டது கிடையாது. நானே எல்லாவற்றையும் செய்வேன். அதில் அப்படியொரு திருப்தி எனக்கு!"  

``விஷாலிடம் பேசுகிறீர்களா?" 

``ரொம்ப நல்ல மனிதர் விஷால். `தாமிரபரணி' படத்தில் நடிக்கும்போது நிறைய பேசியிருக்கிறோம். பிறகு அவ்வளவு பேசியது கிடையாது. என் கேரக்டரைப் பொறுத்தவரை, வேலை முடிந்தால் அதோடு அதை விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். இடைவெளி இல்லாமல் அவர்களோடு தொடர்பில் இருக்கமாட்டேன். இது என்னுடைய மைனஸ் என்றுகூட சொல்வேன். அப்படித்தான், பல வாய்ப்புகளை இழந்துட்டேன்னு நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் விஷாலைச் சந்தித்தேன். நலம் விசாரித்தார். நல்ல வாய்ப்பு வந்தால் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். அவருடைய திருமணத்திற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.'' 

``குடும்பம், குழந்தை பற்றி?''

``மகள் ரிங்குவை (Kiara Rinku Tomy) வீட்டில் பார்த்துக்கிறாங்க. தினமும் ஏதாவது ஒரு புதுப் புது வார்த்தைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறாள். துறுதுறுவென ஓடி ஆடி விளையாடி சேட்டை செய்துகொண்டிருக்கிறாள். ஷூட்டிங் முடிந்து எப்போது நேரம் கிடைத்தாலும், அவளைப் பார்க்க ஓடிடுவேன். இப்போதைக்கு நான் ரொம்ப மிஸ் பண்றது என் குழந்தையைத்தான். கணவர் எனக்கு நல்ல சப்போர்ட்... வேறென்ன வேணும்?!" 

அடுத்த கட்டுரைக்கு