Published:Updated:

திரைப்படமாகும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! - ஸ்விட்சர்லாந்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்

திரைப்படமாகும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! -   ஸ்விட்சர்லாந்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்
திரைப்படமாகும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! - ஸ்விட்சர்லாந்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 99 நாள்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களின் 100-வது நாளான கடந்த மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடச் சென்றனர் போராட்டக்காரர்கள். இதில் ஏற்பட்ட கலவரத்தால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் ஆறாத வடுவாக இந்தச் சம்பவம் மாறியுள்ளது. 13 பேர் தங்கள் உயிரை இழந்தும் பலனில்லாமல்போனது. அரசாங்கத்தின் மெத்தனத்தால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகப் பேசப்பட்டுவருகிறது.  

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாகிறது. ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப் படமாக்கிவரும் இயக்குநர் சந்தோஷ் கோபால் தான் இந்தப் படத்தையும் எடுக்க உள்ளார். இவர், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர். படத்துக்கு "மே 22 - ஒரு சம்பவம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஹிம்சா புரடக் ஷன்ஸ் சார்பில் இரண்டாவது படமாக "மே 22 - ஒரு சம்பவம்" உருவாகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்ஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum - WEF) நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால் பேசுகையில், `சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. தமிழகத்தின் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் காரணம், கார்ப்பரேட். கார்ப்ரேட் அரசியலை மையப்படுத்தி கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மையப்படுத்தி நான் இயக்கியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகும்" என்றார்.