Published:Updated:

தனுஷ் - வெற்றி மாறன் இணையும் அசுரன் படத்தின் மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக்!

தனுஷ் - வெற்றி மாறன் இணையும் அசுரன் படத்தின் மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக்!
தனுஷ் - வெற்றி மாறன் இணையும் அசுரன் படத்தின் மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என மூன்று வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றி மாறனும் நடிகர் தனுஷும் நான்காவது முறையாக இணையும் படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியானது.

நடுத்தர வயதுமிக்க ஒரு தோற்றத்தில் இருக்கும் தனுஷின் வித்தியாசமான லுக்குடன் வெளியான அந்தப் போஸ்டரில் படத்தைப் பற்றி வேறு எந்தத் தகவலும் தரப்படாமல் மிகவும் சிம்பிளாக இருந்தது. இதற்கிடையில் அந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைக்கப்போகிறார் என்றும் ஒரு செய்தி வெளியானது. இது இப்படி இருக்க சில நாள்களுக்கு முன் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் இப்படத்தில் தனுஷின் மனைவியாக நடிக்கிறார் என்றும் ஒரு செய்தி வெளியானது. பிறகு, அது படக்குழுவினரால் உறுதியும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாரபூர்வமாகப் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. மிகவும் ஆக்ரோஷமாக ஈட்டியை யார்மீதோ வீசுவதுபோல் தனுஷ் காட்சியளிக்கும் இந்தப் போஸ்டரில் ஆடுகளம் படத்தைப் போலவே லுங்கியில் இருக்கும் ஒரு கிராமத்து ஆணாக அவர் தெரிகிறார். முதல் படத்திலிருந்தே ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றி வந்த வெற்றிமாறன் வடசென்னையில் சந்தோஷ் நாராயணனுடன் கைகோத்திருந்தார். இப்போது அசுரனில் மீண்டும் பிரகாஷுடன் இணைகிறார். அதுபோல இதுவரை அவருடைய மற்ற எல்லாப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ்தான் அசுரனுக்கும் ஒளிப்பதிவாளராகிறார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புற பகுதிகளில் நாளை முதல் தொடங்குகிறது.