Published:Updated:

``ஆறுதல் பரிசுக்கு ஆசைப்பட்டு...’’ - `மெஹந்தி சர்க்கஸ்’ இயக்குநரை நெகிழவைத்த கரு.பழனியப்பன்

``ஆறுதல் பரிசுக்கு ஆசைப்பட்டு...’’ - `மெஹந்தி சர்க்கஸ்’ இயக்குநரை நெகிழவைத்த கரு.பழனியப்பன்
``ஆறுதல் பரிசுக்கு ஆசைப்பட்டு...’’ - `மெஹந்தி சர்க்கஸ்’ இயக்குநரை நெகிழவைத்த கரு.பழனியப்பன்

`மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்.

``முன்பெல்லாம் 80-களைத்தான் ரெட்ரோ பீரியட் எனக் கூறிக்கொண்டிருந்தனர். இப்போது, 90-களையே ரெட்ரோ எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்’ என சர்க்கஸ் பஃபூன்போல உடையணிந்திருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகர் விக்னேஷ்காந்த்தின் வருத்தத்துடன் ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. இது, 90-களின் கதைக்களத்தில் அமைந்துள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த விழாவும் பழைய நினைவுப் பரிமாற்றங்களாலேயே நிறைந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். உதவி இயக்குநராகப் பல இயக்குநர்களிடம் இருந்துவிட்டு, தன் முதல் படைப்பான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை வெளியிட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். இவர், தேசிய விருது பெற்ற `ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர். ‘ஜோக்கர்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். 

அறிமுக நடிகர் ரங்கராஜ், பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகும் ஸ்வேதா திரிபாதி, நடிகர்கள் விக்னேஷ்காந்த், மாரிமுத்து, சன்னிஜி நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் வெளியாகவிருக்கும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா முழுக்க முழுக்க நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக நடந்து முடிந்தது. 

மூத்த இயக்குநர் பாக்யராஜ், நடிகர் சிவகுமார், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, வினோத், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் செல்வா, இப்படத்துக்குக் கதை, வசனம் எழுதியுள்ள ராஜு முருகன் எனப் படக்குழுவினரும் சரவண ராஜேந்திரனை வாழ்த்தி வரவேற்றனர்.

ராஜுமுருகன், யுகபாரதி, சரவணன் மூவரின் ஆரம்பகால நிகழ்வொன்றை விழாவில் பகிர்ந்த கரு.பழனியப்பன், ``ஒருமுறை கையில் வெறும் 50 ரூபாய் மட்டும் வைத்துக்கொண்டு மாத செலவுக்குக் காசே இல்லாத நிலையில் மூவரும் இருந்தனர். அப்போது நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் ஒரு பேச்சுப்போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றால் முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 2,000, மூன்றாம் பரிசு 1,000, ஆறுதல் பரிசு 750 ரூபாய் என அறிவிக்கப்பட்டது. எப்படியாவது அந்த ஆறுதல் பரிசு 750 ரூபாயைப் பெற்றுவிட்டால், மாதத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் சரவணன் அதில் பங்கேற்றார்.

``முதல் சுற்று, இரண்டாம் சுற்று என வரிசையாக வென்று கடைசியில் இறுதிச் சுற்றுக்கு வந்து, அங்கேயும் தன்னுடைய அசாத்தியமான பேச்சாற்றலை வெளிப்படுத்தினார் சரவணன். அதற்குப் பிறகு பேசிய கமல், இவரது பேச்சை மேற்கோள் காட்டும் அளவுக்கு இருந்தது இவர் திறமை. ஆனால், பரிசு அறிவிக்கப்படும்போது ஆறுதல், மூன்று, இரண்டு என எந்த இடத்தையும் இவர் வெல்லவில்லை. எப்படியாவது போட்டியில் வென்று மாதச்செலவைப் பார்த்துக்கொள்வான் என்று நம்பிய நண்பனை ஏமாற்றிவிட்டோம் என்ற விரக்தியில் வா கிளம்பலாம் என யுகபாரதியை இழுத்துக்கொண்டு வெளிய செல்ல முற்படும்போது, ‘முதல் பரிசு சரவணன்’ என்ற அறிவிப்பு வந்தது. வெறும் 750 ரூபாய் ஆறுதல் பரிசுக்கு ஆசைப்பட்டு முதல் பரிசாக 5,000 ரூபாயை வென்ற ஒரு திறமைசாலிதான், இந்த சரவண ராஜேந்திரன்’’ என்று அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தினார். மேடையின் ஓரமாக நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த சரவணன் நெகிழ்ச்சியில் கண் கலங்கினார். 

ராஜுமுருகன் பேசியபோது, ``பொதுவா சினிமா, அரசியல் என்ற சர்க்கஸ்களில் மாஸ்டர்கள் பின்தங்கிவிட்டு, பஃபூன்கள் முன்னேறிவிடுவதுபோல நான் வந்து முதல்ல படம் பண்ணிட்டேன். எனக்கு முன்னாடியே சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்தவர் சரவணன் அண்ணன். ஆனால், மாஸ்டர்கள் நீடித்து நிற்பார்கள், பஃபூன்கள் சீக்கிரம் காலியாகிவிடுவார்கள். என் அண்ணனும் கண்டிப்பாக நிலைத்து நிற்பார் என நம்புகிறேன்" என்றார் மகிழ்ச்சியுடன்.

பின்னர் பேசிய இயக்குநர் பாக்யராஜ், `எனக்கு இங்கே வரும்வரை சரவணனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் கலை நேர்த்தி, முன்னோட்டம், இசை என எல்லாம் இவர் எப்படிப்பட்ட கலைஞர் என்பதைக் காட்டுகின்றன. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது" எனப் பாராட்டினார்.

மேலும், படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு, ``படத்தில் இசைக்குப் பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் ராஜுமுருகனின் ‘குக்கூ’வைப்போல இதிலும் இளையராஜாவின் இசை ஒரு தனி கதாபாத்திரமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அப்படியென்றால், இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் மட்டுமல்ல, இளையராஜாவும் ஒரு இசையமைப்பாளர்தான்! இன்று வரும் அத்தனை படங்களிலும் இளையராஜா இருக்கிறார் என்பதே உண்மை. எல்லாப் படங்களுக்கும் அவரும் ஒரு இசையமைப்பாளர்தான்" என்றார் பாக்யராஜ்.

அடுத்த கட்டுரைக்கு