Published:Updated:

"அடல்ட் காமெடியா இருந்தா என்ன, நல்ல கேரக்டர்னா நடிக்கலாம்!" - ஆஷ்னா சவேரி

'கன்னித்தீவு' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், நடிகை ஆஷ்னா சவேரி. அந்தப் படம் குறித்தும், சினிமா அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.

"அடல்ட் காமெடியா இருந்தா என்ன, நல்ல கேரக்டர்னா நடிக்கலாம்!" - ஆஷ்னா சவேரி
"அடல்ட் காமெடியா இருந்தா என்ன, நல்ல கேரக்டர்னா நடிக்கலாம்!" - ஆஷ்னா சவேரி

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. 'இனிமே இப்படித்தான்', 'நாகேஷ் திரையரங்கம்', 'பிரம்மா டாட்காம்' படங்களுக்குப் பிறகு தற்போது 'கன்னித்தீவு' எனும் வுமன் சென்ட்ரிக் படத்தில் வரலக்ஷ்மி மற்றும் 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

" 'கன்னித்தீவு' வாய்ப்பு எப்படி வந்துச்சு?"

"இந்தப் படத்தோட ஆடிஷன்காக இயக்குநர் சுந்தர் பாலு சார்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ஆடிஷன் பண்ணி முடிச்சதும், 'உங்க ட்ரீம் ரோல் என்ன?', 'சினிமாவுல நீங்க எப்படிப்பட்ட ஹீரோயினா இருக்க விருப்பப்படுறீங்க'னு கேட்டார். அதுக்கு நான், 'பெண்களை மையப்படுத்தி எடுக்கிற கதைகள்ல நடிக்க விருப்பப்படுறேன். ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக முடியலைனாலும், கதை சார்ந்த பல படங்கள்ல நடிக்கணும்' சொன்னேன். இந்தப் பதில் இயக்குநருக்குப் பிடிச்சிருந்துச்சு. இதுவும் ஒரு வுமன் சென்ட்ரிக் படம்னு தெரிஞ்சதும், ரொம்ப சந்தோஷப்பட்டேன். எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்துறதுக்கு இந்தப் படத்துல அதிக வாய்ப்புகள் கிடைச்சிருக்கு."

"படத்துல உங்க ரோல் என்ன?"

"இது க்ரைம் திரில்லர் படம். பெண்களுக்கு எதிரா நடக்கிற பிரச்னைகளை சமூகத்துக்கு எடுத்துச் சொல்ற மாதிரி இருக்கும். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நடக்கிற அநீதியை மையமா வெச்சு கதை உருவாக்கப்பட்டிருக்கு. படத்துல ஹீரோ கிடையாது. சமூகத்துல பெண்களுக்கு வீட்டுல, வேலை பார்க்கிற இடத்துல பலதரப்பட்ட பிரச்னைகள் நடக்கும். ஆனா, அவங்களுக்கே இப்படியெல்லாம் நடக்கிறது தவறுனு புரியாது. அந்தளவுக்கு அப்பாவியா இருப்பாங்க. பெண் சமூகம் நினைச்சா ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்னு இந்தப் படம் புரியவைக்கும். அப்படி ஒரு கதைதான், 'கன்னித்தீவு' படம்." 

"வரலக்ஷ்மி, ஐஸ்வர்யாகூட நடிச்ச அனுபவம்?" 

"கடந்த சில நாள்களாதான் ஷூட்டிங் போயிட்டு இருக்கு. வரலக்ஷ்மி, ஐஸ்வர்யா ரெண்டுபேருமே செம கூல். நாலு பொண்ணுங்க ஒன்னு சேர்ந்தாலே அந்த இடம் கலகலப்பா இருக்கும்னு சொல்வாங்க. நாங்களும் அப்படித்தான். ஷூட்டிங் ஸ்பாட்ல போற வர்றவங்ககிட்ட வம்பிழுத்துக்கிட்டு ஜாலியா இருப்போம். எனக்குத் தமிழ் புரியும். ஆனா, பேசத் தெரியாது. ஐஸ்வர்யா செமயா தமிழ் பேசுறாங்க. அவங்க ஒரு குழந்தை மாதிரி! வரலக்ஷ்மி ரொம்பப் பக்குவமா நடந்துக்கிற ஆள். அதேசமயம், ரொம்பவே ஃப்ரெண்ட்லி!" 

" 'டைட்டானிக்' படத்துல செகன்ட் ஹீரோயினா நடிச்சிருக்கீங்க. ஹீரோயினா இருக்கும்போது, இது சரினு நினைக்கிறீங்களா?" 

"இது ரோம்-காம் படம். இந்தக் காலத்துக்கு ஏற்ற லவ் ஸ்டோரி. இப்போ ரிலேஷன்ஷிப் ரொம்ப ஈஸியா எல்லோருக்கும் கிடைக்குது. எல்லோரும் லவ் பண்றாங்க. அதுல பலர் வெஸ்டர்ன் கலாசாரத்தைப் பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க. லிவ்-இன் ரிலேஷன்ஷிப், ஃப்ளிங், நோ-ஸ்ட்ரிங்ஸ் அட்டாச் இப்படிப் பல பெயர்கள் இருக்கு. ஆனா, அவங்களுக்குக் கல்யாணம்னு ஒன்னு நடக்கும்போது, ரொம்பவே தடுமாறுறாங்க. 

ஒரு ரொமான்டிக் ரிலேஷன்ஷிப்ல இருக்கிற ரெண்டுபேருக்கு பிரேக்அப் ஆனதுக்கு அப்புறம் எப்படி அவங்க வாழ்க்கை மாறும், எப்படி அந்த வலியை எதிர்கொள்றதுனு சொல்றதோட, பல ரிலேஷன்ஷிப் பிரச்னைகளைப் பற்றி பேசுற படமா 'டைட்டானிக்' இருக்கும். நான் நடிக்கிற படங்கள்ல எனக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்குனு பார்ப்பேனே தவிர, ஹீரோயினா நடிக்கலைனா நம்ம தரம் குறைஞ்சிடும்னு ஒருபோதும் நினைக்கமாட்டேன்." 

"வருடத்துக்கு இரண்டு படம் நடிக்கிறீங்க. ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல என்ன பண்ணுவீங்க?"

"நடிக்கிறது ரெண்டு படமா இருந்தாலும், அதுக்காக வேலை பார்க்கிறது அதிக நாள்களா இருக்கும். அதாவது, ஒரு நடிகைக்கு ஃபிட்னெஸை மெயின்டெய்ன் பண்றது ரொம்ப முக்கியம். சினிமாவுல நமக்கான நெட்வொர்க்கை அமைச்சுக்கிறதும் முக்கியம். அதைப் பண்ணுவேன். சமயத்துல, டிராவல் கிளம்பிடுவேன். சிலசமயம், என் காஸ்டியூம்ஸை நானே டிசைன் பண்ணிக்குவேன். இப்போ, தமிழ் கத்துக்கிறேன். ஒரு ஒரு படத்துக்கும் ஒரு ஒரு ஆள் எனக்கு டப்பிங் பேசுறாங்க. அதனால, நானே எனக்குக் குரல் கொடுத்துக்கணும்னு ஆசை!"    

"மும்பை மாடல் நீங்க. பாலிவுட்ல நடிக்க முயற்சிகள் ஏதும் பண்றீங்களா?" 

"நான் ஒரு  நடிகை ஆகணும்னு ஆசைப்பட்டேனே தவிர, எந்த மொழியில நடிக்கணும்னு ஒருபோதும் யோசிச்சதில்லை. வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்கிறப்போ எனக்கு தமிழ்லதான் முதல் வாய்ப்பு கிடைச்சது. பாலிவுட் வாய்ப்புகள் வந்தாலும் தவிர்க்கமாட்டேன். எனக்கு மாடலிங்ல பெரிய வாய்ப்புகளைக் கொடுத்தது, இந்தி விளம்பரங்கள்தாம். இயக்குநர் பால்கி சாரோட விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். ஷாரூக் கானோட சேர்ந்து விளம்பரத்துல நடிச்சிருக்கேன்." 

"சமீபத்துல நீங்க நடிச்சு வெளியான 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' ஒரு அடல்ட் காமெடிப் படம். இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது என்ன யோசிச்சீங்க?" 

"வீட்டுக்குள்ள உட்கார்ந்து, 'இவங்க என்ன சொல்வாங்க', 'அவங்க என்ன சொல்வாங்க'னு யோசிக்கிறதைவிட, நாம அதை செய்து பார்க்கிறது எவ்வளவோ பெட்டர். இந்த மாதிரிப் படங்களுக்கு கிளாமர், கன்டென்ட் ரெண்டுமே முக்கியம். இந்தப் படத்துல எனக்கு அப்படி ஒரு கேரக்டர் அமையல. நான் கிராமத்துப் பொண்ணாதான் நடிச்சேன். முழுக்க வெஸ்டர்ன் கதாபாத்திரங்களிலேயே நடிச்சுப் பழகிய எனக்கு, இந்தப் படத்தோட கேரக்டர் பிடிச்சிருந்துச்சசு. அடல்ட் காமெடிப் படமா இருந்தா என்ன, நல்ல கேரக்டர் கிடைச்சா நடிக்கலாம்."