Published:Updated:

‘திரும்பச் சொல்றேன் அண்டாவுல பால் ஊத்துங்க ஆனால்...’ - சர்ச்சை வீடியோவுக்கு சிம்பு விளக்கம்

‘திரும்பச் சொல்றேன் அண்டாவுல பால் ஊத்துங்க ஆனால்...’ - சர்ச்சை வீடியோவுக்கு சிம்பு விளக்கம்
‘திரும்பச் சொல்றேன் அண்டாவுல பால் ஊத்துங்க ஆனால்...’ - சர்ச்சை வீடியோவுக்கு சிம்பு விளக்கம்

நெகட்டிவாகப் பேசினால்தான் அதிகம் பேரை சென்றடையும் என்பதால்தான் கிண்டலாகப் பேசினேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

ரசிகர்கள் தன் கட்-அவுட்களுக்குப் பாலபிஷேகம் செய்யக் கூடாது என சமீபத்தில் நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை நெட்டிசன்கள் கிண்டல் செய்யவே, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ``வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பேனர் வைங்க, பால் பாக்கெட்ல ஊத்தாதீங்க அண்டாவுல ஊத்துங்க. எனக்குதான் யாருமே இல்லையே, நானும் பெரிய ஆள் இல்லையே இதெல்லாம் தப்புனு யாரும் சொல்லமாட்டாங்க" என்று கோபத்துடன் பேசினார். 

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் கடந்த வருடம் இறந்த ரசிகரின் வீட்டுக்கு சிம்பு இன்று சென்றார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாலாபிஷேகம் வீடியோ குறித்து விளக்கம் அளித்தார். அதில், ``கட்-அவுட் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் என் ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் இறப்பால் எனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டது. அவர் பாலாபிஷேகம் பண்ணும் போதல்லாம் திட்டி இருக்கிறேன். அவன் கேட்கவில்லை. அப்போதே பாலாபிஷேகம் வேண்டாம் என்று நானும் சில மேடைகளிலும் கூறியுள்ளேன். அந்த நேரத்தில் நான் சொன்னது சரியாக மக்களிடமும் ரசிகர்களிடமும் போய்ச் சேரவில்லை. 

படத்ம் ரிலீஸின்போது கட்-அவுட், பேனர் வைப்பார்கள். அப்போது சொன்னால் ரசிகர்களிடம் சேரும் என்றுதான் வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்தேன். ஆனால், இதுவும் ரசிகர்களிடம் சரியாகச் சேரவில்லை. கஜா புயலின்போதும் இதுபோல கருத்து தெரிவித்தேன். ஒரு நல்ல விஷயம் சொல்லும்போது சரியாகச் சென்று சேராதது கோபத்தை ஏற்படுத்தியது. நெகட்டிவாகப் பேசினால்தான் அதிகம் பேரை சென்றடையும் என்ற ஒரே காரத்தால்தான் அப்படிப் பேசினேன்.

முதலில் நல்ல விஷயம் சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால், நான்கு நாள்களுக்குப் பிறகு, நெகட்டிவாகப் பேசி இன்னொரு வீடியோ வெளியிட்டேன். அதை அனைவரும் பெரிதாகப் பேசிவருகிறார்கள். தயவு செய்து அந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள். பாக்கெட்டில் பால் ஊத்தாதீர்கள் அண்டாவில் ஊத்துங்கள் என்று நான் கூறினேனே தவிர என் கட் அவுட்டுக்கு ஊத்துங்கள் என நான் சொல்லவில்லை. மாறி மாறி பேசும் பழக்கம் எனக்கு இல்லை. நான் மாத்திப் பேசவில்லை அனைவரையும் மாத்த வேண்டும் என்றுதான் பேசுகிறேன். 

முன்னதாக, ஒரு உயிர் போனதால்தான் அதை மீண்டும் யாரும் செய்யக் கூடாது என்பதற்காக ஒரு வீடியோ வெளியிட்டு பலரிடம் இதைக் கொண்டு சேர்த்தேன். ஒரு வேளை நான் சொன்ன விதம் தவறாக இருந்தாலோ நான் தவறாகப் பேசியிருந்தாலோ அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் ஒன்றுதான் சொல்கிறேன் அண்டாவில் பாலை ஊற்றுங்கள். ஆனால், பேசவே முடியாத ஒரு கட் அவுட்டுக்கு பாலை ஊற்றுவதைவிட அண்டா நிறைய பாலை காய்ச்சி அங்கு வரும் ஏழை மக்களுக்கு, வாயில்லாத ஜீவன்களுக்கு கொடுங்கள்” எனக் கூறினார்.

பிறகு, உங்கள் ரசிகர் இறந்து ஒரு வருடத்துக்கு பிறகு தற்போது வந்து அவரது குடும்பத்தினரை சந்திக்கிறீர்கள் இதற்குக் காரணம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சிம்பு, “ என் ரசிகர் இறந்துவிட்டார் என்ற செய்தி வரும் போது நான் சென்னையில் இல்லை.  என் தந்தையும், எனது உடன் இருப்பவர்களையும் ரசிகர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறும்படி நான்தான் அனுப்பிவைத்தேன். மீண்டும் நான் சென்னை வந்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் அப்போது இவரின் இறப்பு தொடர்பாகவும், பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் எனவும் அப்போதே நான் பேசியிருந்தேன். இந்த விஷயம் என்னை அதிகமாக கஷ்டப்படுத்தியது அதனால் தான் முதல் வீடியோவில் என் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் வேண்டாம் அதற்குப் பதிலாக உங்கள் அப்பா, அம்மாவுக்கு ட்ரெஸ் எடுத்துக்கொடுங்கள் எனக் கூறினேன். வீடியோவை வெளியிட்ட பிறகு தன் யோசித்தேன் இந்த வீடியோவுக்கு காரணமாக அந்த ரசிகரின் தாய், தந்தையை நேரில் சந்தித்து புடவை, சட்டை எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று. அதனால் இன்று இங்கு வந்துள்ளேன். 

நான் கூறும் விஷயங்கள் தானாக சர்ச்சையாக மாறவில்லை அதை சர்ச்சையாக மாற்ற வேண்டும் என்று சிலர் வேலை செய்கின்றனர். அதுக்கு யாரும் இடம் அளிக்காதீர்கள் எனதான் நான் கூறுகிறேன். எனக்கு ரசிகர்களின் அன்பு மட்டுமே போதும் வேறு எதுவும் வேண்டாம்.