Published:Updated:

``சின்னத்திரைக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன்... நடந்தது என்ன தெரியுமா?’’ - தேவதர்ஷினி

``சின்னத்திரைக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன்... நடந்தது என்ன தெரியுமா?’’ - தேவதர்ஷினி
``சின்னத்திரைக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன்... நடந்தது என்ன தெரியுமா?’’ - தேவதர்ஷினி

`` `96 கதை கேட்டு முதலில் அழுதுட்டேன். அந்த அளவுக்கு அந்த ஸ்டோரி எனக்குப் பிடிச்சிருந்துச்சு. தொடந்து படத்தில் என் போர்ஷன் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சது. அப்போ என் சின்ன வயசு ரோல்ல நடிக்க, எந்தப் பொண்ணும் செட் ஆகலைனு டைரக்டர் டீம்ல சொன்னாங்க. `நீங்க எதிர்பார்க்கிற மாதிரி, என் பொண்ணுதான் இருக்கா'னு விளையாட்டா சொன்னேன்."

20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பணியாற்றிவருகிறார் நடிகை தேவதர்ஷினி. தற்போது விஜய் டிவி, `MR & MRS சின்னத்திரை' நிகழ்ச்சியில் நடுவராகப் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்...

``புதிய நடுவர் பயணம் பற்றி...’’

``விஜய் டிவியில 10 வருஷம் தொகுப்பாளராக வேலை பார்த்திருக்கேன். மேலும், `ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில நானும் என் கணவர் சேத்தனும் போட்டியாளர்களாகக் கலந்துகிட்டோம். அதனால விஜய் டிவியோடு எனக்கு எப்போதும் நல்ல நட்பு இருக்கு. இப்போ அதே சேனல்ல நடுவராக இருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்பதுல அளவில்லா மகிழ்ச்சி. குறிப்பா, தம்பதியர்கள் போட்டியாளர்களாகக் கலந்துக்கிற நிகழ்ச்சி இது. வாரம் ஒரு வித்தியாசமான டாஸ்க். இந்நிகழ்ச்சியில வேலை செய்றது புது அனுபவமாக இருக்கு."

``சின்னத்திரையில் 20 ஆண்டுக்கும் மேலான பயணத்தை எப்படிப் பார்க்கிறீங்க?"

``சந்தோஷமா இருக்கு! `மர்ம தேசம்'ல தொடங்கி, தொடர்ந்து 15 வருஷம் நிறைய சீரியல்கள்ல நடிச்சேன். ஏழு வருஷத்துக்கு மேல ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல வேலை செய்றேன். இதுக்கிடையே, சினிமாவுலயும் நடிக்கிறேன். சன் டிவி, `சண்டே கலாட்டா' நிகழ்ச்சி பெரிய ஹிட். பிறகு ஒரு மாற்றத்துக்காக, ஜீ தமிழ் `காமெடி கில்லாடிஸ்' நிகழ்ச்சியில நடுவரானேன். அந்நிகழ்ச்சி முடியிற தருணம். `சின்னத்திரையில நீண்டகாலமா வேலை பார்த்துட்டோம். 2019-ம் வருஷம் சின்னத்திரையில வேலை செய்யாம இருக்கலாம்'னு முடிவெடுத்தேன். கடைசி நாள் ஷூட் முடிஞ்சதும், `சின்னத்திரைக்கு சின்ன பிரேக் கொடுக்கப்போறோம்'னு கேரவன்ல உட்கார்ந்து ஒரு செல்ஃபி எடுத்துகிட்டேன். அப்போதான், விஜய் டிவியில இருந்து அழைப்பு வந்துச்சு. `MR & MRS சின்னத்திரை' டீம் என் நீண்டகால நண்பர்கள். அதனால், மறுக்க முடியாமல் என்னோட முடிவை தளர்த்திகிட்டேன்.’’

`` `96 படம் ஹிட். அந்த ஸ்பெஷல் சந்தோஷம் பற்றி...’’

`` `பார்த்திபன் கனவு’, `எனக்கு 20 உனக்கு 18' உட்பட பல படங்கள்ல நடிச்சேன். ஆனா, `காஞ்சனா'வுக்குப் பிறகுதான் என் சினிமா கிராப் உயர ஆரம்பிச்சது. எனக்குப் பிடிச்ச ரோல்கள்ல மட்டும் செலக்டிவா நடிக்கிறேன். `96 படம்... நடிப்புக்குத் தீனி கிடைச்ச மாதிரியான நல்ல ரோல். நிறைய பாராட்டு கிடைச்சுடுச்சு. அந்தப் பட ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, த்ரிஷா கூட அடிக்கடி வாட்ஸ்அப்ல சாட் பண்ணுவேன். எங்க நட்பு தொடருது. படத்தின் வெற்றி விழா நடக்கும்போது மீண்டும் அப்பட மெமரீஸை நாங்க பகிர்ந்துப்போம்.’’ 

``ஜீனியர் தேவதர்ஷினி புது படங்கள்ல கமிட் ஆகிட்டாங்களா?" 

(சிரிக்கிறார்) `` `96 கதை கேட்டு முதலில் அழுதுட்டேன். அந்த அளவுக்கு அந்த ஸ்டோரி எனக்குப் பிடிச்சிருந்துச்சு. தொடந்து படத்தில் என் போர்ஷன் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சது. அப்போ என் சின்ன வயசு ரோல்ல நடிக்க, எந்தப் பொண்ணும் செட் ஆகலைனு டைரக்டர் டீம்ல சொன்னாங்க. `நீங்க எதிர்பார்க்கிற மாதிரி, என் பொண்ணுதான் இருக்கா'னு விளையாட்டா சொன்னேன். பிறகு அவளையே நடிக்கக் கேட்டாங்க. என் கணவரும் ஒப்புக்கிட்டார். அப்போ 9-ம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்த பொண்ணு, அசால்டா படத்துல நடிச்சுட்டாள். அந்தப் படத்தின் வெற்றியின் தாக்கத்தால், அவளுக்கும் நிறைய புது வாய்ப்புகள் வருது. ஆனா, இப்போ 10 வது படிக்கிறதால, அவளுக்கு வரும் பட வாய்ப்புகளை நாங்க ஒப்புக்கிறதில்லை. எக்ஸாம் முடிஞ்ச பிறகு, பார்த்துக்கலாம்னு முடிவெடுத்திருக்கிறோம்.’’ 

 ``எதிர்கால திட்டமிடல் பற்றி...’’

``என் சின்னத்திரை தொடக்கம் முதல் இப்போ வரை, எந்த ஒரு திட்டமிடலும் செய்ததில்லை. தேடி வந்த வாய்ப்புகளால், இத்தனை வருடங்கள் ஓடிடுச்சு. 'காஞ்சனா 3', 'அயோக்யா', `கூர்கா'னு நான் நடிச்ச மூணு படங்கள் ரிலீஸாகப்போகுது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள்ல சினிமா ஷூட்டிங் இருக்கு. அதுக்குப் பிறகு, என்ன வேலைனு எனக்குத் தெரியாது. சொல்லப்போனால், என் மீடியா கரியர் ஒரு ஃப்லோவுலதான் போகுது.’’

அடுத்த கட்டுரைக்கு