Published:Updated:

" 'கூல்ட்ரிங்ஸுக்குத் தாங்காத தொண்டை'... இசைஞானி கொடுத்த அதிர்ச்சி!" - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி #IlayaRaja75

" 'கூல்ட்ரிங்ஸுக்குத் தாங்காத தொண்டை'... இசைஞானி கொடுத்த அதிர்ச்சி!" - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி #IlayaRaja75
" 'கூல்ட்ரிங்ஸுக்குத் தாங்காத தொண்டை'... இசைஞானி கொடுத்த அதிர்ச்சி!" - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி #IlayaRaja75

விஜய் டி.வி `சூப்பர் சிங்கர் சீஸன் 6'ன் வெற்றியாளர் செந்தில்கணேஷ். அவரும், அவரது மனைவியும் இணைந்து சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டது அனைவருக்கும் தெரிந்ததே!. அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள `சார்லி சாப்ளின் 2' படத்தில் `என்ன மச்சான்...' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இளையராஜாவைச் சந்தித்தது பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறது, இந்த ஜோடி.

முதலில் பூரிப்புடன் பேச ஆரம்பித்தவர், செந்தில்கணேஷ். `` `சூப்பர் சிங்கர் சீஸன் 6' டீம் இசைஞானியைச் சந்திக்கப்போறோம். அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்பார். அங்கேயும் போய் வாலுத்தனம் பண்ணாதீங்க"னு அறிவுரை சொல்லிதான் கூட்டிக்கிட்டுப் போனாங்க. மனசு படபடனு அடிக்க, பயத்தோட போய் உட்கார்ந்திருந்தோம். எப்போவும் கலகலனு சத்தத்தோட இருக்கும் அந்த ஸ்டுடியோ. அவர் இருந்ததால ரொம்ப அமைதியா இருந்தது.'' என்றவர்,

" 'கூல்ட்ரிங்ஸுக்குத் தாங்காத தொண்டை'... இசைஞானி கொடுத்த அதிர்ச்சி!" - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி #IlayaRaja75

``இசைஞானி எல்லோரையும் உள்ளே வரச்சொன்னதாச் சொன்னார்கள். ஸ்டுடியோவுக்குள்ளே போனதும், எல்லோருமே சாஸ்டாங்கமா விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டோம். எல்லோரையும் பார்த்துட்டு, `எப்படி இந்தத் துறைக்கு வந்தீங்க'னு விசாரித்தார். ஒவ்வொருத்தரும் அவங்கவங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டோம். எங்க தருணம் வந்தப்போ, `மக்கள் இசையைப் பாடிக்கிட்டு இருக்கிறோம்'னு சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டோம். பிறகு ஒவ்வொருத்தரையும் பல்லவி, சரணம் பாடச் சொன்னார்கள்; பாடினோம். சிலர் ஆர்வமா எக்ஸ்ட்ரா சங்கதிகள் எல்லாம் போட்டாங்க. அவங்களைப் பார்த்துட்டு இசைஞானி சிரிச்சாங்க.'' என்பவரைத் தொடர்ந்து அதே பூரிப்போடு பேசுகிறார், ராஜலட்சுமி. 

``சிலர் எக்ஸ்ட்ரா சங்கதி பாடினதும், `என்னுடைய பாடல்களை எத்தனை முறை கேட்டிருக்கீங்க. அதை அப்படியே பாடுவதுதான் சரியான முறை. அதிக சங்கதிகள் போடத் தேவையில்லையே' எனச் சொன்னார். அப்போ நான் ஒரு கேள்வியைக் கேட்டேன், `இசை கத்துக்கிறதுனா என்னங்கையா? அதற்கு அவர், `நாம நினைக்கிற அளவுகளில் இசையைக் கொண்டுவர முடியாது. இசைக்கு வடிவம் கிடையாது. அதை எதற்குள்ளும் கொண்டுவந்து அளவிடமுடியாது. நானும் இன்னும் கத்துக்கிட்டுத்தான் இருக்கேன்'னு சொன்னார். நாங்க அவங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் மனசுக்குள்ள பதிய வெச்சுக்கிட்டு இருந்தோம். அவருக்கு, பாடகி ஆஷா போஸ்லேவை ரொம்பப் பிடிக்குமாம்.'' என்றவர், தொடர்ந்தார்.

" 'கூல்ட்ரிங்ஸுக்குத் தாங்காத தொண்டை'... இசைஞானி கொடுத்த அதிர்ச்சி!" - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி #IlayaRaja75

``கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, எல்லோருக்கும் கூல்ட்ரிங்ஸ் கொடுத்தாங்க. ஒவ்வொருத்தரையும் எடுத்துக்கச் சொன்னார். எங்க ரெண்டுபேருக்குமே கூல்ட்ரிங்ஸ் குடிக்கிற பழக்கம் கிடையாது. `ஏன் கீழே வெச்சிட்டீங்கனு' கேட்டார். `பாட்டுப் பாடுறதால தொண்டை பிரச்னை வந்திடும்; அதான்யா குடிக்கிறதில்லை'னு சொன்னோம். `இதுக்குக்கூட தாங்காத தொண்டை என்ன தொண்டை'னு கேட்டார். வேறெதுவும் பேசலை, எடுத்துக் குடிச்சுட்டோம்.'' என்பவரைத் தொடர்ந்து, வேறு சில நிகழ்வுகளை விவரித்தார், செந்தில். 

`` `எப்படி இவரால மட்டும் இப்படி டியூன் போட முடியுது'னு எனக்கு ரொம்பநாளா சந்தேகம். சில பாடல்களை விஷூவலா பார்க்கும்போதும், அந்த நடிகர் யாருனே தெரியாது. ஆனா, பாட்டுக் காலம் கடந்தும் நிற்கும். அதேபோல, பெரிய ஹீரோ சின்ன ஹீரோ பாகுபாடே இவர்கிட்ட இருக்காது. எல்லோருக்கும் ஒரே மாதிரி இசையைக் கொடுப்பவர். இது பற்றி அவர்கிட்டயே கேட்டேன்.  `பெரியவங்க, சின்னவங்கனு ஒருபோதும் நினைக்கமாட்டேன். இசை என்பது வேறு, அது ஒரு ஜோதி'னு சொன்னார். அதனால்தான், அந்தப் பாடல்கள் எல்லாமே பிரகாசமா இருக்கு'னு சொன்னார். `தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் `காதலின் தீபம் ஒன்று' பாடலுக்கு டியூன் செய்யும்போது, உடல் நலக்குறைவு காரணமாக இசைஞானி அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்ததாகவும், பாலுவிடம் போன் செய்யச் சொல்லி, போன்லேயே டியூன் போட்டுக் கொடுத்ததாகவும் கேள்விப்பட்டோம். அதையும் அவர்கிட்ட கேட்டேன். `அது உண்மைதான். அந்தப் பாடலையை விசிலேயே சொன்னேன். பாடல் ரெடியானதும் பாலு எனக்கு அதை போனில் பாடிக் காட்டினார்.' என அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.'' என்பவர், தொடர்ந்தார்.

``ஒவ்வொரு படத்தின் பாடல்களுக்கும், ஒரு பாடலுக்கு ஆறு டியூன் போடுவாங்கலாம். அப்படினா, ஒரு  படத்து ஐந்து பாடல்கள் என்றால், 30 பாடல்களுக்கான டியூனைப் போட்டுக் கொடுப்பாராம். அதில் ஒன்றைத்தான் டைரக்டர் தேர்ந்தெடுப்பாராம். தவிர, `டியூன் பண்ணும்போதே, இவங்கதான் பாடுவாங்கனு முடிவு பண்ணிடுவீங்களா'னு கேட்டேன். கதையை மனதில் வைத்து அந்த ஹீரோவுக்காக இவர் பாடினால் நல்லா இருக்கும்னு தோணும். என்னைக்கு டியூன் போடுறோமோ அப்போவே அதை நோட் பண்ணி வெச்சுப்போம். என்றைக்காவது ஒரு பாடல் டியூன் போட்டால், அன்னைக்கு தேதியில யார் இருக்காங்கனு பார்ப்போம். இருந்தா அவரைப் பாடச்சொல்லி கூப்பிடுவோம். இல்லையென்றால் பாலுவைத் தேடுவேன். யாருமே பக்கத்துல இல்லைனா, நானே பாடிடுவேன்'னு சொன்னார். அதேமாதிரி, `ரஜினி சார், கமல் சார் இதில் யாரைப் பிடிக்கும்'னு எங்க டீம்ல ஒருத்தர் கேட்டார். `ரெண்டுபேருமே பிடிக்கும். ரெண்டுபேருக்குமே திறமை இருக்கு. ரஜினிக்கு போன் பண்ணா, `எங்க இருக்கீங்க 20 நிமிடத்துல வரவா'னு கேட்பார். எல்லோருமே பிஸியா இருக்கிறதால, யாரையும் தொந்தரவு பண்றதில்லை'னு பதில் சொன்னார்.  உரையாடிய பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு எல்லோரையும் பாட வெச்சு, அதில் கரெக்‌ஷன் எல்லாம் கொடுத்தார். அந்த நாள் எங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாள்.'' என்று பூரிக்கும் இருவரும், இளையராஜா பாடல்களில் தங்களுக்குப் பிடித்த பாடல்களையும் பாடிக் காட்ட மறக்கவில்லை. 

`` `அன்னக்கிளி' படத்தின் `சுத்தச்சம்பா பச்சநெல்லு குத்தத்தா வேணும்' பாடல் கிராமத்து கல்யாணத்தில் கண்டிப்பா ஒலிக்கும். அதை சின்ன வயசுல இருந்தே கேட்டு வளர்ந்ததால இப்போவும் அந்தப் பாட்டு எனக்கு நெருக்கம். அந்தப் பாடலை எப்போ கேட்டாலும் கிராமத்தில் இருக்கிறமாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். அதேபோல, `மாஞ்சோலைக் கிளிதானோ', `குயில் பாட்டு.. வந்ததென்ன' என எனக்குப் பிடிச்ச பாடல்கள் நிறைய இருக்கு." என்ற செந்திலைத் தொடர்ந்த ராஜலட்சுமி,

``எனக்கு, `காத்திருந்து காத்திருந்து', `ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது', `சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல்கள் மிகவும் பிடிக்கும். `தாரைத் தப்பட்டை' படத்துல வர்ற `என்னுள்ளம் கோயில்', `தகின தகின' பாடல்களும் ரொம்பப் பிடிக்கும். இளையராஜா பாடல்கள்தான் பஸ், லாரி, நெசவு எனத் தனிமையான நேரங்களில் மன அமைதிக்காக அதிகம் கேட்கப்படுபவை. கிட்டத்தட்ட 90% இரவுகளிலும், தனிமைப் பொழுதிலும் கேட்கக்கூடிய பாடல்கள் இசைஞானியின் பாடல்களாகத்தான் இருக்கும். அடுத்த தலைமுறைக்கும் இவரது பாடல்களைக் கொண்டுபோக ஆசை; அது நம்ம கடமையும்கூட!" என்கிறார், ராஜலட்சுமி.

அடுத்த கட்டுரைக்கு